க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே  முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார்.  நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி,  வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. தெய்வ ஜனனம், அழகி, என நிறையவே அவருடைய நாவல்கள் கவிதைகள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன, அவரை விமர்சகராகவே உலகம் சுருக்கி விட்ட காலத்தில். இத்தோடு நான் பார்க்க அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் மிருகங்களின் பண்ணை,, நட் ஹாம்சனின், நிலவளம், பாரபாஸ், ஜாக் லண்டன் உள்ளடக்கிய பலரின் சிறுகதைகள். இவை தவிர தமிழ் எழுத்தாளர் பலரின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். பின் கிறித்துவ மிஷனரிகளைப் பற்றிய ஒரு ஆங்கில புத்தகம், இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் தில்லியில் இருந்த போது அவர் எழுதாத பத்திரிகை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இலக்கிய விமர்சகராக அவர் முத்திரை குத்தப்பட்டு இருந்த காலத்தில் தான், அவர் ஆங்கிலத்தில் பகவத் கீதை பற்றி மிக ஆழமாக Debonair என்ற ஆங்கில பத்திரிகையில், நாம் இதுகாறும் பார்த்திராத பார்வையில் எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளராக நேரு என்றும், ஸோன் ரெக்ஸா என்ற புகைப் படக் கலைஞரைப் பற்றியும், ஆனந்த குமாரசாமி பற்றியும், ருக்மிணி அருண்டேல் பற்றியும், க.நா.சு தன்னை இலக்கியம் தான் எனக்குக் குறி என்று சொன்னவரின் உலகம் எது என்று நாம் வேலி கட்டினோமோ அதையெல்லாம் மீறியது பற்றி யாருக்குத் தெரியும்? யாருக்குத் தான் என்ன கவலை. கிரேக்க தத்துவ விசாரம் பற்றியே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்பது பற்றி யாருக்குத் தெரியும்? யாருக்குத் தான் கவலை?

நம்மவருக்கு வேண்டியது அவர் அவ்வப்போது வெளியிடும் பட்டியலில் அவர்கள் பெயர் சேர வேண்டும். அவ்வளவே.  நேர்ப்பேச்சில் அவர் இலக்கிய, சிந்தனை, கலைத் தளம் அத்தனையையும் ஒர் வேகப் பார்வையில் அதன் மனதில் பட்டதைச் சொல்லிச் செல்வார். யாராவது பேசுகிறார்களா? அவரையே இப்பொது நாம் மறந்தாச்சே!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு முறை (14/28,7,1979 -  From which soil do the Writers emerge?) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் முக்கியத்வம் கருதி அதை யாத்ரா பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

” ஒரு எழுத்தாளனின் பிறப்பு சமூக மூலங்கள், இதற்கு அப்பால் அவன் இயங்கும் சமூகப் பின்னணி, அவனது இளமைக் காலம், வளர்ச்சி, படிப்பு, வேலை மற்றும் அவனது சம்பாத்திய வழிகள், சமூகத்தில் தனது வாழ்க்கை எவ்வகையில் அமைந்துள்ளன என்பன போன்றவை அவன் எழுத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்… ஒரு பரந்த ஆய்வு சாத்தியமாக, நமது எழுத்தாளர்களின் விமர்சன பூர்வமான வாழ்க்கை வரலாறுகள் தேவைப் படுகின்றன. இது இப்போதும் நம்மிடையே கிடையாது. “

இன்னமும் வேண்டுமா? இதோ: “இவர்களிடையே (தாழ்த்தப்பட்டோர் இலக்கியம் எழுதுபவர் களிடையே) எத்தனைபேர் அழுக்குப்படாத உடையணிவோரின் புத்திரர்கள் என்றும், என்ஜினியர், டாக்டர், தொழில் துறை மனிதர் மற்றும் இவர் போன்றோரின் புத்திரர் என்பனவெல்லாம் இந்திய எழுத்தாளர்களின் சமூக மூலங்கள் பற்றிய ஆராய்ச்சி தொடங்கப் பட்டால் மட்டுமே தெரியும். ..இந்தியாவில் பாட்டாளிகள் இலக்கியம் இருந்தும் கூட அது உண்மையில் பாட்டாளிகளால் பாட்டாளிகளுக்காக  எழுதப்பட்டதாக இல்லாமல் பாட்டாளிகளின் ஆதரவாளர்களால் எழுதப்படுபவை. இவ்வாதரவாளர்களோ பெரும்பாலும் தம் எழுத்துக்களில் காட்டும் சித்தாந்தங்களுக்கு எதிராகவே வாழ்க்கை நடத்துபவர்கள்.”

வேறோரிடத்தில் அவர் சொல்கிறார்:

“தொழிலாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பற்றி, கல்லூரி பேராசிரியர்களாகவும், உயர்மட்ட கல்வி அல்லது சர்க்கார் அதிகாரிகளாகவும் இருந்து கொண்டு கீழ்மட்டத் துறையினர் நலம் பற்றிப் பேச, எப்படி இந்த இந்திய முற்போக்கு என்று கூறிக்கொள்கிற நாவலாசிரியர்களுக்கு வாய் இருக்கிறது? சொந்த அனுபவத்திலிருந்து வந்தால் எந்த விஷயத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் சும்மா பேசிவிட்டு மாதா மாதம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு கம்யூனிஸம் பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன லாபம்? (நாவல் கலை ப. 123)

இவையெல்லாம் சொல்லப்பட்டால், பாதிக்கப் படுபவர்கள், இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், இதுக்கும்  எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? இது Personal attack என்றார்கள். ”என் எழுத்தை மட்டும் பார்” என்கிறார்கள். எல்லா வேஷதாரிகளுக்கும் இது சௌகரியம் தான்.   இவை எனக்குத் தெரிய வந்தவை, க.நா.சு இதையெல்லாம் எழுதியிருக்கிறாரா என்று கேட்பவர்கள், எழுதியிருந்தாலும் கண்டு கொள்ளாதிருப்பது சௌகரியம் என நினைப்பவர்கள் உண்டு. இவை நினைவில் இருப்பவை மாத்திரமே. இருப்பினும் இவை எதுவும் யார் கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. விமர்சகராக எத்தனை பேரை நிராகரித்திருக்கிறார்? நிராகரிப்பு என்றால் க.நா.சு. வும் கொஞ்சம் அறியட்டும் என்ற பழி வாங்கும் மனம் செயல்பட்டது போலிருக்கிறது இது. ஆனால் அப்படியல்ல. தமிழனுக்கே ஆன எதற்கும் மௌனம் என்ற பண்பாடு தான். இது பற்றி யாரும் ஒரு கணம் கூட சிந்தித்துப் பார்த்ததில்லை. சிலுவை சுமந்த வாழ்வு என்று தான் சொல்ல வேண்டும். க.நா.சு.வின் சிஷ்யராக தன்னை காட்டிக் கொண்டவரிடமிருந்து  கூட, “க.நா.சு.வாவது நாவல், சிறுகதை என்று சிலது எழுதிப் பார்த்திருக்கிறார்” என்று சொல்லும் சின்னத் தனம் தான் வெளிப்பட்டிருக்கிறது. இவரது அற்ப புத்தியும் விஷமத்தன எழுத்தும் இவரது நண்பர்கள் பாராட்டுக்காரர்களுக்கும் கூட நன்கு தெரியும். எழுதியும் இருக்கிறார்கள். க.நா.சு.வுக்கு என்று ஒரு சிஷ்யர் கூட்டம் கிடைத்திருக்கிறதே, வேதனை தான். யேசுவுக்கு ஜுதாஸ் ஒருத்தன், பன்னிரண்டு பேரில் ஒருத்தன். ஆனால் கநாசு வுக்கு ஜுதாஸ்கள் அதிகம். சரி, வேறு வகைகளும் உண்டு. தாய் என்ற பத்திரிகையை நடத்தி வந்த வலம்புரி ஜான் (புதுமைப் பித்தன் கருத்தரங்குக்கு வலம்புரி ஜானையும் அழைத்திருந்தார் க.நா.சு.) க.நா.சு வை வெகுவாகத் தாக்கி எழுதிக்கொண்டிருந்தவர், என்ன காரணத்தாலோ மனம் மாறி க.நா.சு. வீடு சென்று தம் தவற்றுக்கு வருந்துவதாகச் சொன்னாராம். க.நா.சு. அதற்கு எவ்வித முகச் சலனமுமின்றி, “அட சர்த்தான்யா, விடும் இப்ப என்ன அதுக்கு?”. என்று வெகு அமைதியாக அவருக்கு சமாதானம் சொன்னாராம். பின், க.நா.சு. தாய் பத்திரிகையிலும் எழுதினார் என்று எனக்குச் சொன்னார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டிலாவது தாம் புகழப்படாத எரிச்சலில் பேசுகிறார்கள் அல்லது வாய்மூடி இருக்கிறார்கள் என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட வேண்டும்? இத்தகைய பட்டுப் பீதாம்பர வைர மணிகள் பதித்த கிரீடம் தரித்து ஊர்வலம் வந்தவர் ஏன் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்களும் வசைகளும் நிறைந்த புத்தகம் எழுதி அதை ஏதோ தன் ஆழ்ந்த புலமையின், விமர்சன தீரத்தின் பதிவு என்ற பாவனையில் வைத்துள்ளார்? அந்த பேராசிரியர், அறிஞர், கலாநிதி கைலாசபதி, தன் புத்தகத்தில். நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வில், க.நா.சு.வின் பாத்திரம், க.நா.சு.வும் அவர் சீடர்களும். இது தவிர இன்னொரு கட்டுரையும் நினைவுக்கு வருகிறது. அவர் இது போன்று எழுதிய பலவற்றில்.  க.நா.சு.வும் மைனாரிட்டி கலாசாரமும். கூட ஒன்று.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் முற்போக்குகளுக்கு குருவாகவும் ஒரு மாமேதையாகவும் உலா வந்த இந்த கலாநிதி எத்தனை கடைத்தரமான மனிதர், எத்தனை பொய்யான திரிபு வாதங்களை முன் வைப்பவர் என்பதற்கு ஒரு சில அவரது எழுத்திலிருந்து சில மேற்கோள்கள். இன்னமும் இவர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முற்போக்குகளால் பூஜிக்கப் படுபவர். ”என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சுவிடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகு பாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனை அம்மணமாகக் காட்டிக்கொள்ளாத வகையில் திறனாய்வு முலாம் பூசி மெருகூட்டும் திறனும் அவருக்கு நிரம்ப உண்டு. அடிப்படையில் இது ஒரு வர்க்கப் பிரசினையேயாகும். எனினும் தமிழ் நாட்டு அரங்கின் பரிபாஷையில் கூறுவதானால், நிலை இழந்த பார்ப்பனர்களுக்கு நிலைபேறு தேடும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்திருப்பவர் க.நா.சு”.

(இம்மாதிரியான ஒரு பழியை தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் எவருமோ கூட, மறுபடியும், பாதிக்கப்பட்ட அகிலன் போன்றோருமோ கூட க.நா.சு. மீது சுமத்தியதில்லை. இந்த மாதிரியெல்லாம் பழி சுமத்துவதற்கு மிகவும் கடைத்தரமான குணங்கள் தேவை.) இப்படி நான் போகிற போக்கில் சொல்லக் கூடாது. பின் வரும் மேற்கோளில் க.நா.சு. ந.முத்துசாமியின் கதைகளைப் பற்றி ஒரு சக எழுத்தாளரின் கருத்தைச் சொல்லி பின் வருமாறு அதற்கு பதில் எழுதுகிறார்.

”ந. முத்துசாமியின் கதைகளில் மூத்திர வாடை சற்று அதிகமாகவே தெரிகிறது என்று அடிக்கடி என்னிடம் சொல்லி ஒரு புதுமை எழுத்தாளர் தன் புதுமணத்தையும் பரிசுத்தத்தையும் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார் என்று காணும்பொழுது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தப் புது எழுத்தாளர் எழுத்தில் விபசாரம் சற்று அதிகம். மூத்திர நாற்றமானால் என்ன, விபசார நாற்றமானால் என்ன, இரண்டையும் சகித்துக்கொள்ளத் தானே சமுதாயம் இருக்கிறது? இந்த இரண்டு நாற்றங்களுக்கும் அப்பால் இலக்கியம் எப்படி அமைந்திருக்கிறது என்று காண்பது தான் எனது நோக்கமாக நான் எண்ணுகிறேன்”

இதை மேற்கோள் காட்டி, பர்மிங்ஹாமில் கலாநிதி பட்டம் வாங்கிய, ஜார்ஜ் தாம்ப்ஸனின் கீழ் ஆராய்ச்சி செய்த, தமிழக, இலங்கை முற்போக்குகளுக்கு பிதாமகரான கலாநிதி எம்.ஏ. பி எச் டி. இதற்கு பாஷ்யம் தருகிறார். ”இவ்வாறு தனது எழுத்தில் மணக்கும் சிறுநீர் வாடைக்கு, க.நா.சு.விடமிருந்து இலக்கிய அங்கீகாரமும் பாராட்டும் பெற்றுள்ள ந. முத்துசாமி”

இப்படி ஒருவர் மூளை வேளை செய்யுமானால், இப்படி ஒருவர் காழ்ப்பும் பகையும் கொண்டு சேற்றை வாரி இரைப்பவரானால், அத்தகைய இழி பிறவியை என்ன சொல்ல? நம்மூரில், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் படம் இருக்கும் சுவரொட்டிகளின் மேல் அவர்களிடம் கொண்ட வெறுப்பில் சாணியை எறிந்து தம் ஆத்திரத்தைத் தீர்த்துகொள்ளும் ரசிகர்களின் தரத்திற்கும் இந்த கலாநிதியின் தரத்திற்கும் என்ன வித்தியாசம்? இத்தகைய குணம் கொண்ட ஒருவரை இலக்கிய உலகில் நடமாடும் தகுதியை விடுங்கள், ஒரு சாதாரண மனிதராகக் கூட நம் சமூகத்தில் வாழும் தகுதி கூட உண்டா என்பது கேள்விக்குரிய விஷயம். தனக்குப் பிடிக்காத நடிகரின் சுவரொட்டியில் சாணி எறிபவர்கள் இருக்கிறார்களே, அவர்களோடு இவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சிலர் வாதமிடலாம். சரி நம்மூருக்குத் திரும்பலாம். க.நா.சுவின் சிஷ்ய கோடிகளில் ஒருவர், கைலாசபதியால் இலங்கைக்கு விருந்தினராக அழைக்கப்பட்டு கழுத்தில் அணிந்த மாலையுடன் பேசுகிறார்: ”இவரது (கைலாசபதியினது) பல தனிக்கட்டுரைகள், தொடர்கட்டுரைகளாலும் இலங்கைத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் க.நா.சுவுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. இவருடைய விமர்சனப் பாங்கில் தனி நபர் வசைபாடுதலும் அக்கப் போர்களும் இயல்பாகவே தவிர்த்து விட முடிகிறது”. (விருந்தும், மாலையும் எப்படியும் யாரையும் பேசவைக்கும் போலும். ) ”க.நா.சுவாவது ஏதோ சிறுகதை, நாவல் என்று எழுதிப் பார்த்திருக்கிறார்” என்று சொன்ன வாய் இது. கைலாசபதியாவது விமர்சன தளத்தில் தனக்குப் போட்டி எனத் தான் கருதுபவரை தன் இழிகுணத்துக்கேற்ப எழுதுகிறார் என்று புரிந்து கொள்ளலாம் என்றால், க.நா.சுவின் சிஷ்யருக்கு விருந்தும் மாலையும் போதும். பார்ப்பன நிலைபேற்றுக்காக தரம் பேசுபவர் என்று க.நா.சுவை குற்றம் சாட்டும் கைலாசபதி, கநாசு தரம் கண்ட ஒரு பார்ப்பனர் (ந.மூத்துசாமி) எழுத்தில் மூத்திர வாடையும் நுகர்வும், இன்னொரு பார்ப்பனர் எழுத்துக்கு (அசோகமித்திரன்) இலங்கைக்கு அழைப்பும், மாலையும் விருந்தும். க.நா.சு. வுக்கு பாப்பனர் அடையாளம் தான் தேவை என்றால், இந்த இரண்டு பார்ப்பனரில் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? இது கட்டாயம் ஜார்ஜ் தாம்ப்சனிடம் கற்றதல்ல. “வாருங்கள் நிலவிலே கதைக்கலாம்” என்று தலித் எழுத்தாளரை வீட்டுக்குள் அனுமதிக்காது வெளியே அழைத்துச் செல்லும் முற்[போக்கு. இது யாருடைய நிலைபேற்றுக்கு? யாழ்ப்பாண மண்ணில் நீடிக்கும் சைவவேளாள பிரக்ஞையின் நிலை பேற்றுக்கா? காரணம், க.நா.சு வின் இலக்கிய தரம் எந்த முற்போக்கையும், வணிக எழுத்தையும் நிராகரிப்பதால், இலங்கை முற்போக்கு எம்ஜிஆர் சிவாஜி ரசிகன் செய்யும் காரியத்தை ஒரு கலாநிதி, எம்.ஏ.பி.எச்.டி செய்கிறது. க.நா.சு.வின்  விமர்சன இயக்கம் நீடித்த சுமார் 40 வருட காலம் எத்தகைய கீழ்த்தரமான தாக்குதல்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எடுத்துச் சொல்ல முற்போக்குகளும் இலங்கைத் தமிழரும் இன்னமும் குரு சன்னிதானமாகப் போற்றும் கைலாசபதியின் பேச்சும் எழுத்துமே சான்று சொல்லும். திமுக, திக. கூட இப்படிப் பேசவில்லையே. யாழ்ப்பாண சைவ வேளாள மேலாண்மைச் சாதி உணர்வு வேண்டுமோ அதற்கு? க.நா.சு. தன் கடைசிக் காலங்களில், எண்பதுகளில் என்று வைத்துக் கொள்ளலாம். சென்னைக்கு இடம் பெயர்ந்தார். வாழவேண்டுமே. எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதினார். அந்நாட்களில் அவர் நிறைய எழுதினார். அனேகமாக எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதினார். இத்தனை நாட்களாகக்கண்டு கொள்ளாத க.நா.சு.வை இப்போது எப்படி தமிழ் நாடே ஏதோ ஒட்டு மொத்தமாக கொண்டாட வந்துவிட்டது போல் அல்லவா இருக்கிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. கண் பார்வை அவருக்கு மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. படிக்க வேண்டும். எழுதவும் வேண்டும். அதை நிறுத்த முடியாது. சில சமயங்களில் அவர் ரோடில் விழுந்து விடுவதாகக் கூட எனக்குச் செய்திகள் வந்தன. எனக்கு மிக வருத்தமாக இருந்தது தமிழ் நாட்டு தெருக்களில் விழுந்து கிடப்பது க.நா.சு என்னும் ஒரு வயோதிகர் அல்ல. தமிழ் அறிவுலகம் விழுந்து கிடக்கிறது என்று தான் எனக்குத் தோன்றும். ஆனாலும் தனித்து வாழ, தன் எழுத்தில் வாழ வேண்டும் அந்த மங்கிய கண்களோடும் கிழண்டு விட்ட உடலோடும். அவர் எல்லா பத்திரிகைகளிலும் எழுதியதை கேலியாக, கேவலமாகப் பேசியவர்களின் குரலையும் நான் கேட்டதுண்டு. அதை அவரது சரிவாகப் பார்த்தார்களோ, அல்லது பார்க்க விரும்பினார்களோ தெரியாது. ஆனால், எங்கு எழுதினாலும் அவர் எழுதுவதைத் தான் எழுதி வந்தார். தன் நேர்மையை, தனக்குப் பட்ட உண்மையை அவர் அடகு வைத்துவிடவில்லை, தன் வயோதிக கால ஜீவனத்துக்காக. இது பற்றி, வெகு காலம் கழித்து, நான் சென்னைக்கு வந்த 2000-ல் எனக்குக் கிடைத்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து வேறு எவரையும் விட (இளைய தலமுறையினரில்) க.நா.சு. விடம் அதிகம் நெருங்கிப் பழகியவரும், க.நா.சு.விடம் விசுவாசம் நிறையக் கொண்டவரும், தனி மனிதராக இருந்து கொண்டே எந்த வசதியுமின்றி, க.நா.சு.வின் எழுத்துக்களை தம்மால் இயன்றவரை பிரசுரித்தவருமான தஞ்சை பிரகாஷை அவரது கடைசி காலத்தில் பேட்டி கண்ட தஞ்சை அன்பர்கள் கூடாரம் என்ற இதழில் அவரது பேட்டியைப் பிரசுரித்திருக்கின்றனர். அதிலிருந்து இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பகுதியை மாத்திரம் இங்கு எடுத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது..

”சத்தியமான படைப்புக்கும் வாழ்க்கைக்குமான ஒரு மிகச் சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் (பிரகாஷ்). கலைஞர் கருணாநிதி ஒரு தடவை, “க.நா.சு. மிகப் பெரிய, ஒரு தலை சிறந்த விமர்சகர். அவரை குங்குமத்திலே விமர்சனங்கள் எழுதச் சொல்லுங்க. அவரோட நாவல் கூட ரெண்டு மூணு நம்ப குங்குமத்திலே தொடரா போடலாம். அவர தொடர்ந்து குங்குமத்திலே எழுதச் சொல்லுங்க. அவர நாம ஒரளவுக்கு ஊக்கப் படுத்தலாம்” அப்படீன்னு சொல்லச் சொன்னார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! “என்னடா இது! திடீர்னு க.நா.சுவை இப்படி கௌரவப்படுத்தறாங்களேன்னு” அவரும் குங்குமத்திலே கிட்டத்தட்ட 64 பேரைப்பத்தி விமர்சனம் எழுதினாரு. ஓராண்டு கழிச்சி கருணாநிதிக்கு 61வது நிறைவு விழா வருது. ஒரு ரகசியத் தகவல் பாலசுப்ரமணியம் மூலமா “பிரகாஷைக் கூட்டீட்டு வாங்கன்னு எனக்கு செய்தி வருது. நான் போனேன். மாறன் இருந்தாரு அங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்வாங்க. அத அனுசரிச்சு நீங்க செய்யணும்னு என்னக் கேட்டுக்கிட்டார். பால சுப்பிரமணியம் என்னை வெளீலே அழைச்சிட்டுப் போய், “ஒன்னுமில்ல. தொடர்ந்து நாம க.நா.சுவுக்கு மரியாதை செய்வோம். எந்தப் பத்திரிகையும் தராத அளவுக்கு கௌரவப்படுத்துவோம். தொடர்ந்து ஒவ்வொரு இதழ்லேயும் விமர்சனம் எழுதட்டும்” அப்படீன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்! அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு “அடுத்த மலருக்கு க.நா.சு.வோட கட்டுரை வேணும், இலக்கிய சாதனையாளர்கள்னு 60 பேரைப்பத்தி இது வரைக்கும் க.நா.சு. எழுதியிருக்கார். இந்தப் பட்டியல்லே கலைஞர் இல்ல, இந்தப் பட்டியல்ல மு.க.வோட பேரு இருக்கணும்னு ஆசைப் படறாரு. அதோட க.நா.சு. தன்னைப் பத்தி எழுதணும்னு விரும்பறாரு. அதனாலே ஏதாவது ஒரு நாவலப் பத்தி, எதையாவது பத்தி ஒரு இரண்டு பக்கத்துக்கு இருந்தாக் கூடப் போதும். அவர ஒரு சிறந்த நாவலாசிரியர் அப்படின்னு  அவர கௌரவிக்கணும்னு நாங்க நினைக்கறோம். அவர் சொல்ல நாங்க விரும்பறோம். க.நா.சு.வோட வால் நீங்க. அதுனால நீங்க சொன்னாக் கேப்பாரு” அப்படீன்னாரு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் கஷ்டமா இருந்தது. இன்னொரு பக்கம் சிரிப்பா இருந்தது. இவங்க எவ்வளவு தூரம் வெல கொடுத்து வாங்கறாங்கன்னு. ”இதுலே நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?ன்னு நான் கேட்டேன். ‘நீங்க ஒரு கட்டுரை வாங்கிக்கொடுக்கறது உங்க பொறுப்பு. உங்களோட நாவல் கூட ஒண்ணு போட்டுடலாம். உங்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்துடலாம். கலைஞர் உங்க பேர்ல நல்ல நம்பிக்கை வச்சிருக்காரு. அதனால அது ஒன்னும் சிரமமில்லே” அப்படீன்னாங்க. நான் க.நா.சு. வீட்டுக்குப் போனேன். அப்போ அவருக்கு வயசு எழுபது இருக்கும். மெட்ராசுலே வந்து தங்கியிருக்காரு. அவரு கிட்டே போயி, “ஒரு விஷயம் சொல்லணும். நீங்க ஏன் மு.க. பத்தி இது வர ஒன்னும் எழுதலைன்னு கேட்டேன்.. அதுக்கு அவரு “சொல்றதுக்கு ஒன்னும் இல்லியே. அது தான் ஒன்னும் எழுதலே”ன்னாரு இல்லே. நீங்க அவர் படைப்பப் பத்தி ஒரு விமர்சனம் எழுதினா நிறைய பலன் கிடைக்கற மாதிரி தெரியுது. வாரம் 5000-க்கு மேலே வருமானம் வரும்போல இருக்கு. எழுதுங்களேன்னேன். எழுபது வயசு வரைக்கும் சத்தியத்தத் தவிர வேறு எதையும் எழுதல. இனிப்போய் இந்தக் காரியத்தச் செய்யச் சொல்றியா ன்னாரு. “இல்லே. உங்கள கௌரவப்படுத்தறதாச் சொன்னாங்க” அப்படீன்னேன். என்ன ஒரு மாதிரிப் பாத்தாரு.  “இது வரைக்கும் சுத்தமா இருந்துட்டேன். என்னத்த பெரிசா கட்டிக்காத்த? எழுது ஒன்னும் தப்புல்லேன்னு சொல்லு. நான் எழுதறேன்”னு சொன்னாரு. நான் சுதாரிச்சிட்டேன். ஆகா! நம்ம ஆழம் பாக்கறாருன்னு. நான் சொன்னேன். “எழுதினா எழுதுங்க. இல்ல எழுதாட்டிப் போங்க. அது உங்க விருப்பம். அவங்க சொல்லச் சொன்னாங்க. நான் சொல்லிட்டேன் அவ்வளவு தான் என் வேலை”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுக்கப்பறமா க.நா.சு. வோட விமர்சனக் கட்டுரைகள் குங்குமத்திலே உடனே நிறுத்தப் பட்டது. (கூடாரம், இதழ் 3. தபால் முத்திரை தெளிவில்லை. அனேகமாக செப். 2000)

அவரது கடைசிக் காலத்தில் எழுதிப் பிழைக்க வேண்டிய நெருக்கடியில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியதை கேலி செய்த புண்ணியவான்கள் அந்தப் பாப சிந்தனைக்கு வருந்துவார்களா, தெரியாது. தான் எழுதிய கதையை “விட்டேன் ஒரு குத்து” என்று அவர்களுக்கு கவர்ச்சிகரமாக தோன்றிய ஒரு  தலைப்பில் குமுதம் வெளியிட, நம்ம சிறுகதை ஜாம்பவான் சந்தோஷம் சொல்லத் தாளாது.  ”குமுதம் காரன் நன்னாத் தான் எடிட் பண்ணிப் போடறான்.: என்ற பாராட்டு வர அதிக நிமிடங்கள் ஆகிவிடவில்லை. க.நா.சு.வினால் அதிக காலம் சென்னையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சென்னைக்கும் தில்லிக்குமாக வந்து போய்க் கொண்டிருந்தார். பெண்ணின், மாப்பிள்ளையின் ஆதரவில் இருக்கலாம் தான். ஆனால் தான் எழுத வேண்டும். சம்பாதிக்க வேண்டும். அப்படியே 76 வருட காலம் வாழ்ந்தாயிற்று.

வருடம் 1988. டிஸம்பர் மாதம் ஒரு புதன் கிழமை மதியம் இரண்டரை மணி இருக்கும். நான் கால் எலும்பு முறிந்து ஒரு வருட காலமாக நீண்ட விடுமுறை யில் வீட்டில் இருக்கிறேன். வாசலில் வெளியில் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். அப்போது ஒரு ஆட்டோ வாசல் முன் நிற்கிறது. அதிலிருந்து என்  பத்திரிகைக் கார நண்பன் ஆர். வெங்கட் ராமன் இறங்க, பின் வெங்கட் ராமன் கைபிடித்து உதவ க.நா.சு. இறங்குகிறார். க.நா.சு. தில்லி வந்துள்ளது தெரியாது எனக்கு. அவர் வந்தது எனக்கு திகைப்பாக இருந்தது. அப்போது எஙகளுக்குள் சுமுகமான உறவு இருக்கவில்லை. ஆனால் தொலைபேசியில் அவ்வப்போது வெகு அபூர்வமாகத் தான் பேசுவார். ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் கொண்டு வர மூன்று கதைகள் தேர்ந்து எடுத்து மொழி பெயர்த்துத் தரச் சொன்னது அந்த மாதிரியான மனஸ்தாப காலத்தில் தான். அவ்வப்போது தூறல் விழும். பின் வெயில் அடிக்கும். எதிலும் அதிகம் தாக்கம் இராது. சுட்டெரிக்கும் வெயிலும் இல்லை. குளிர் விக்கும் தூறலும் இல்லை. ஆனால் துணைக்கு ஒரு ஆளைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் எனனைப் பார்க்க வீடு தேடி வருவதென்றால், கண் பார்வை மங்கிய தள்ளாத வயதில்?. வெங்கட ராமன் உள்ளே சென்று நாற்காலிகள் இரண்டைக் கொண்டு வந்த வேளையில் “என்னய்யா மணி ரண்டரைக்கா சாப்பாடு? என்றார் க.நா.சு. அப்படித்தான் பேச்சு தொடங்கியது.

தில்லி வந்துள்ளது தெரியாது என்றேன். “இப்படித்தான அங்கே கொஞ்ச நாள் இங்கே கொஞ்ச நாள்னு போயிண்டிருக்கு” என்றார். கசப்பின் சுவடே இல்லை. “வாய்யா ரொம்ப நாளாச்சு, சாமிநாதனைப் போய்ப் பாத்துட்டு வரலாம். ஏதோ அக்ஸிடெண்ட்லே காலொடிஞ்சு ரொம்ப நாளாக் கிடக்கறதா சொன்னான். வெங்கட்ராமன் தான் அடிக்கடி வந்து பாத்துக்கறானாமே, சொன்னான்.” என்றார். பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் “பழைய ஷண்முக சுந்தரம் புஸ்தகம் ஏதாவது இருக்கா, ரொம்ப நாளா அச்சுக்கு வராமே. இருக்கறது எதாவது இருந்தா கொடும். போடறேங்கறான். “ என்றார். யோசித்துப் பார்த்தேன். ஒரு சின்ன புத்தகம் இருக்கு. பனித்துளி. அது தான் பழசு. இரண்டாம் பதிப்பு கூட இன்னும் வரலை. மத்தது பழசுன்னு ஒண்ணும் என்கிட்ட இல்லியே” என்று சொன்னேன். “சரி அதைத்தான் கொடும். போடறேன்னு ஒத்தன் சொல்றான். வரட்டுமே.” என்றார். அப்போது ஷண்முக சுந்தரம் மறைந்து வருடங்கள் பல கடந்தாயிற்று. பக்கத்திலேயே ட்ராயிங் அறை யிலேயே எல்லாப் புத்தகங்களும் இருந்ததால் தேடி எடுத்துக் கொடுக்க முடிந்தது. “ப்ரிண்ட் ஆனதும் இதுவும் இன்னொரு புது காபியும் அனுப்பச்சொல்றேன்” என்றார். இரண்டு மணி நேரமோ என்னவோ பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அது ஒரு புதன் கிழமை மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணி. அவர் வெங்கட்ராமன் கைபிடித்துப் போததை வாசலிலேயே நாற்காலியில் உட்கார்ந்திருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தேன். அது தான் அவரைக் கடைசியாகப் பார்த்ததும் பேசியதும். வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருக்கும். டாக்டர் ரவீந்திரன், வெங்கட் ராமன் இன்னம் யாரோ, நினைவில் இல்லை ஒரு கார் எடுத்துக்கொண்டு வந்தார்கள். க.நா.சு. இறந்து விட்டார் தொலைபேசியில் சொன்னார்கள். உங்களையும் அழைத்துப் போகலாம் என்று கார் எடுத்து வந்தோம் என்றார்கள். க்ரட்சஸ்ஸோடு தான் நான் நடமாட இயலும் என்பது அவர்களுக்குத் தெரியும். சென்றோம். மாடிப்படி ஏறவேண்டும் க.நா.சு. தங்கியிருந்த மணியின் முதல் மாடி வீட்டை அடைய. க்ரட்சுஸ்ஸோடு படி ஏறிச் சென்றேன். “நீங்க என்னத்துக்கு இப்படி சிரமப் பட்டுக்கொண்டு……? என்றார் மணி. ஹாலில் உயிர் நீத்த க.நா.சு. 76 வருஷ இயக்கம் சலனமிழந்து ஓய்ந்து கண்மூடி அமைதியாகப் படுத்துக் கிடந்த க.நா.சு.வை பார்த்துக்கொண்டே நின்றேன். 35 மணி நேரத்துக்கு முன் ஆர் ஷண்முக சுந்தரம் புஸ்தகம் ஏதாவது இருக்கா, பப்ளிஷ் பண்றதுக்கு ? என்று கேட்ட குரல் மௌனமாய் விட்டது. ஒரு தீவிர தீக்ஷண்ய பார்வையும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட ஒரு மாமேதையின் கூற்றுப் படி நிலை இழந்த பார்ப்பனருக்கு நிலைபேறு தேடித்தரும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்தவர் இவர். நேற்று முந்தின தினம் என் வீடு தேடி, ஆர் ஷண்முகசுந்தரம் புத்தகம் கொடு என்று கேட்டவர்.

,தில்லி சாஹித்ய அகாடமியிலிருந்து ஒருவர் மலர் வளையம் சார்த்தி மரியாதை செலுத்தினார். வீடு அமைதியாக இருந்தது. எந்த சடங்கும் தேவையில்லை என்று முன்னாலேயே எங்களுக்குச் சொல்லியிருக்கார், என்றார் மணி. இது ஆண்டு 2012. இன்று வரை எந்த சடங்கும் நடந்ததில்லை.”

என்ன தான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும் க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று மாமேதை கலாநிதி கைலாசபதி சொன்னதை நினைத்துக் கொண்டேன். அன்று அமைதி கொண்ட குரல் இன்று வரை அமைதி கொண்டு தான் இருக்கிறது. ஒரு விமர்சன மரபைத் தோற்றுவிக்க நாற்பது வருடங்களுக்கும் மேலாக அது இயங்கிய போதும் அந்நீண்ட காலத்தில் படைப்பும் மொழிபெயர்ப்புமாக விமர்சனத்தை விட அதிகம் எழுதிய போதிலும் மற்றது மறக்கப்பட்டு விமர்சனக் குரலாகவே பார்க்கப்பட்டது. இப்போது அந்த விமர்சனக் குரலையும் நினைத்துப் பார்ப்பார் இல்லை. அந்த விமர்சனக் குரலால் அதன் பின் வந்த சீரிய படைப்பிலக்கியும் தன்னை நிறுவிக்கொண்டாலும். இன்றைய இதன் ஜீவிதம் மறக்கப் பட்ட அந்த விமர்சனக் குரல் தந்தது தான் என்பதை அது உணர மறுக்கிறது. க.நா.சு.வா யார் அது? என்று கேட்கிறது.

1. Finanancial Express, New Delhi 23.9.84
2. Hindustan Times, New Delhi 14/28.7.79 From which soil do the writers emerge? (தமிழில், “ஏழுத்தாளர்கள் எம்மண்ணிலிருந்து வருகிறார்கள்? யாத்ரா)
3. கலாநிதி கைலாசபதி: “க.நா.சு.வும் மைனாரிட்டி கலாசாரமும்”
4. கலாநிதி கைலாசபதி: “நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வில் க.நா.சு.வின் பாத்திரம்: க.நா.சு.வும் அவர் சீடர்களும்.
5. காலத்தின் காளான்கள்: விவாதங்கள் சர்ச்சைகள் வெங்கட் சாமிநாதன் அமுத சுரபி பிரசுரம் (ப. 217 – 246)
6. மீண்டும் பிராபல்யம் வேண்டி – வெங்கட் சாமிநாதன், சில இலக்கிய ஆளுமைகள். பிரசுரம் காவ்யா: (ப. 83 -112)
7. கூடாரம்: இதழ் மூன்று. ஜூலை “தஞ்சை பிரகாஷ் அவர்களின் நேர் காணல்.
8. க.நா.சு.வின் நாவல் கலை (ப. 123)   

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R