நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தமிழ்ச் சங்கத்தில் எழுந்த நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம் போன்றவை பரவலாகப் பேசப்படும் பாங்கினைக் காணலாம். இந்நூல்கள் மக்கள் நலன் கருதியே எழுந்தனவாகும். மக்கள் இயற்கையுடன் இணைந்து, பிணைந்து வாழ்பவர்கள். அவர்கள் ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிரினங்கள்வரை அன்பு காட்டி அரவணைத்துத் தம் வாழ்வியலை நடாத்துபவர்கள். அதில் அசைவற்ற, ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்கள் பற்றிய செய்திகளை நம் இலக்கியங்களில் காண்கின்றோம். இவற்றில் விலங்குகள் பற்றியும், பறவைகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.

யானை, சிங்கம், புலி, குதிரை, ஆடு, மாடு, பசு, மான், கரb, முயல், பன்றி, நாய், பூனை, குரங்கு, எருமை, நரி, ஆமை, முதலை, உடும்பு, கழுதை, பாம்பு, எலி, பல்லி போன்ற விலங்கினங்களும், மயில், குயில், அன்னம், கோழி, சேவல், வாத்து, தாரா, கிளி, பருந்து, வல்லூறு, காகம், நீர்க்காகம், நாரை, கழுகு, ஆந்தை, வெளவால், கூகை, புறா, தும்பி, தேனீ, வண்டு போன்ற பறவையினங்களும் மக்களோடு தொடர்புபட்டனவாகும். இனி, விலங்கினங்களும், பறவையினங்களும் சங்க நூல்களிற் பவனி வரும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்

விலங்குகள்:- சங்க இலக்கியங்களில் எமக்குக் கிடைக்கக் கூடிய மூத்த நூலானதும் இடைச் சங்கத்தில் எழுந்ததுமான தொல்காப்பியத்தை யாத்த தொல்காப்பியர் (கி.மு.711) இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்குமுன்பு ஐந்திணைகளின் கருப்பொருள் கூறும் பொழுது குறிஞ்சிக்கு – புலி, கரடி, யானை, சிங்கம் என்றும், முல்லைக்கு – மான் (உழையும், புல்வாயும்), முயல் என்றும், பாலைக்கு – வலியழிந்த யானை, புலி, செந்நாய் என்றும், மருதத்திற்கு – எருமை, நீர்நாய் என்றும், நெய்தலுக்கு – சுறாமீன் என்றும் கூறி ஐந்நிலங்களுக்கும் விலங்கினங்களை வகுத்துள்ளமை போற்றற்பாலதாகும்.

பறவைகள்: தொல்காப்பியர் ஐந்திணைகளின் கருப்பொருள் கூறும் பொழுது குறிஞ்சிக்கு – மயில், கிளி எனவும், முல்லைக்கு – கானாங் கோழி எனவும், பாலைக்கு – பருந்து, எருவை (பருந்து வகை) எனவும், மருதத்திற்கு – அன்னம், அன்றில் எனவும், நெய்தலுக்கு – கடற் காக்கை எனவும் கூறி ஐந்நிலங்களுக்கும் பறவைகளை வகுத்துள்ள சிறப்பினையும் காண்கின்றோம்.

'தானை யானை குதிரை என்ற, நோனார் உட்கும் மூவகை நிலையும்...'- (பொருள் 72) -  பகைவர்கள் அஞ்சும்படியான காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என்னும் முப்படையின் பெருமை பற்றித் தும்பைத் திணையில் தொல்காப்பியர் கூறியுள்ளார். மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்த முப்படைகள் முன்னின்று யுத்தம் புரிந்து வெற்றிவாகை சூட உதவியுள்ளன.

மேலும் தொல்காப்பியர் 'மாவும் புள்ளும் ஐயறி வினவே...'- (பொருள். 576) என்றும், 'நாயே பன்றி புலிமுயல் நான்கும்..'- (பொருள் 552) என்றும், 'ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய்...'- (பொருள். 556) – (ஆடு, குதிரை, புள்ளிமான்,  கலைமான், மான்) என்றும், 'யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானும்..' – (பொருள். 559) என்றும், 'எருமையும் மரையும் ..'- (பொருள். 560) என்றும், 'ஒட்டகம்...'- (பொருள். 562) எனவும் கூறிப் பல விலங்குகளை மரபியற் பகுதியிற் காட்டியுள்ளார்.

புறநானூறு

விலங்குகள்:- கடைச் சங்கத்தில் எழுந்ததும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானதுமான புறம் பாடும் புறநானூற்றில் பற்பல வகையான விலங்கினங்கள் பற்றிய செய்திகளையும் காண்கின்றோம். அவற்றில் யானை – களிறு – வேழம் - பிடி – கைம்மா – கைமான், குதிரை – புரவி – கலிமா – வயமான் - மா – பரி – கலிமான், சிங்கம் - மடங்கல்,  மான் - கவரி – கலை – பிணை – மறி – புல்வாய் - இரலை – கடமான் - நவ்வி – மடமான்,  புலி – உழுவை – குரளை – வரிவயம், பூனை – வெருகு (காட்டுப் பூனை) – வெருக்கு, பாம்பு – அரவம் - நாகம் - அரா, குரங்கு – மந்தி – கடுவன் - கலை, பசு – ஆன் - ஆ – நிரை – கறவை,  நாய் - நீர்நாய் - கதநாய் - ஞமலி, ஆடு – மறி – மடங்கல், நத்தை – நந்து, முதலை – கராம் - கரா, பன்றி – முள்ளம் பன்றி – முளவு – கேழல், எருது – காளை – பகடு – ஏறு, நரி, அணில், உடும்பு, எருமை, எலி,  கழுதை, ஆமை, பல்லி, முயல் ஆகிய விலங்கினங்கள் ஒரு சிலவாகும். இவ்விலங்கினங்களில் யானையைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டுள்ளதையும் புறநானூற்றில் காண்கின்றோம்.

பறவைகள்:- புறநானூற்றில் மயில் - மஞ்ஞை – மாமயில் - பிணிமுகம் - கலிமயில், கோழி – மனைக் கோழி – கானக் கோழி – நீர்க் கோழி – கானவாரணம் (காட்டுக் கோழி), காகம் - கானக் காக்கை (அண்டங் காக்கை), புள் - புள்ளினம் - எருவை – பொகுவல், தேனீ – மிஞிறு – ஞிமிறு, கழுகு – எருவை, ஆந்தை - கூகைக் கோழி, புறா, பருந்து, கிளி, நாரை என்று பறவைகளைப் பற்றிக் கூறப்படும் காட்சிகள் நம் கண்முன் தோற்றமளிக்கின்றன.

கலித்தொகை

விலங்குகள்:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் யானை – வேழம் - பிடி – களிறு – கயந்தலை (யானைக் கன்று) – வாரணம் - கைம்மா, குதிரை – கடுமா – மான் - கலிமான் - பரிமா, மான் - கலை (ஆண் மான்) – மான்பிணை (பெண் மான்) - இரலை – ஏறு, பசு – கோவினம் - ஆ – பொருநாகு – ஆநாகு – கறவை – மரை ஆ (காட்டுப் பசு), சிங்கம் - விலங்கு மான் - அரிமா, புலி - இரும்புலி (பெரிய புலி) – வேங்கை – கொடுவரி, குரங்கு – கடுவன் (ஆண்), எருது – பகடு – ஏறு,  எருமை – நாகு (பெண் எருமை), முதலை – கராம், ஆடு – புல்லினம், நாய் - கதநாய் (வேட்டை நாய்), தேரை, நரி ஆகிய விலங்கினங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.

பறவைகள்:- குயில் - இருங்குயில்,  புறா – புறவு, தேனீ – ஞிமிறு – தேம் - மிஞிறு, தும்பி - இருந்தும்பி – கரியதும்பி – சுரும்பு, புள் - புள்ளினம், நாரை – குருகு (நாரைப் பேடு), கிளி, மயில் போன்ற பறவைகள் பற்றிக் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.

ஐங்குறுநூறு

விலங்குகள்:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானதும் கடைச் சங்க காலத்தில் எழுந்ததுமான ஐங்குறுநூறு எனும் இலக்கிய நூலில் யானை – களிறு – வேழம் - கோட்டுமா – பிடி, குதிரை – கடுமான் - புரவி – வயமான், மான் - மடமான் - மாண்பிணை – நெடுமான் - கணமா – மறி (மான் கன்று), புலி – வயமா – வேங்கை – வயமான், நாய் - நீர் நாய் - செந்நாய், குரங்கு – மந்தி – கடுவன், எருமை – பகடு, முதலை – முதலைப் போத்து (ஆண் முதலை) – பார்ப்பு (குட்டி), நண்டு – களவன் - புள்ளிக் களவன் ஆகிய விலங்கினங்கள் நடமாடுவதையும் காண்கின்றோம்.

பறவைகள்:- புள் - பறவை – போகில் - குருகு – வெள்ளாங்குருவி (ஒரு பறவை) – மகன்றில் (நீர்வாழ் பறவை) – வானம்பாடி, கோழி – கம்புள் (சம்பங்கோழி) – பேடை (பெட்டைக் கோழி), மயில் - தோகை – அணிமயில் - மஞ்சை, கிளி – கிள்ளை – சிறு கிளி – பைங்கிளி, புறா – புன்புறப் பேடை – சேவல், நாரை – மடநடநாரை, அன்னம் - அன்னம்துணை (பெட்டை), காக்கை – சிறுவெண்காக்கை, வெளவால் - வாவல், தும்பி – அஞ்சிறைத் தும்பி, குயில் - பேடை, ஆந்தை – குடிஞை (பேராந்தை), கழுகு – எருவை ஆகிய பறவையினங்கள் ஐங்குறுநூறு எனும் இலக்கிய நூலில் பறந்து திரியும் காட்சி நம்முன் தோன்றுகிறது.
அகநானூறு

விலங்குகள்:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு எனும் அகம் பாடும் இலக்கிய நூலில் குதிரை – புரவி – கலிமா – பரி – நன்மான் - மா – மான் - இவுளி, புலி – ஏற்றை – பிணை - இரும்புலி – வயமான் - வாள்வரி – மடப்பிணை - இரலை – குருளை – உழுவை – போத்து (ஆண் புலி), மான் - பிணை – மான்அதர் - உழைமான் (ஆண் மான்), நாய் - நீர்நாய் - காதநாய் (சினமிக்க நாய்) – செந்நாய் - வயநாய் (வேட்டை நாய்) – ஞாளி – ஞமலி – பிணவு (nபட்டை நாய்), யானை – களிறு – நாகம் - பொங்கடி – ஓய்களிறு (இளைத்த களிறு) – மடப்பிடி – குழவி - இரும்பிடி (பெரிய பிடி யானை) – வயவுப் பிடி (சூல் கொண்ட பிடி யானை), குரங்கு – கடுவன் - முசு – கலை, பசு – ஆ – கறவை – நாகுஆ (கன்றையுடைய பசு), எருமை – பகடு, பன்றி – முளவுமா (முள்ளம் பன்றி) – பிணவல், கரடி – எண்கு, சிங்கம் - உளைமான், கழுதை – அத்திரி (கோவேறு கழுதை), செம்மரிக் கிடாய் - தகா, தேரை – நுணல், எருது - மூதேறு, ஆளி - யாளி (ஒரு விலங்கு), நண்டு – அலவன் - களவன்,     பல்லி,  முதலை ஆகிய விலங்கினங்கள் நடமாடித் திரிவதையும் காணலாம்.

பறவைகள்:- புள் - பறவை – பருந்து - இருதலைப்புள் - வானம் வாழ்த்தி, நாரை – வம்பநாரை (புதிய நாரை) – தண்பறை நாரை – குருகு, வண்டினம் - தாதூண் பறவை – அசை வண்டு, குயில் - இருங்குயில், ஆந்தை – குடிஞை (பேராந்தை), பருந்து – பாறு, கிளி – கிள்ளை, கோழி – கம்புள் (சம்பங்கோழி), அன்னம் ஆகிய பறவைகள் பற்றி அகநானூறு நூலில் பேசப்பட்டுள்ளது.

பதிற்றுப்பத்து

விலங்குகள்:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து எனும் சங்க நூலில் குதிரை – மா – கலிமா – புரவி, யானை – களிறு (ஆண் யானை) – பிடி (பெண் யானை) – மழகளிறு (இளை யானை), மான் - கவரிமான் - இரலை (புள்ளிமான்) – ஏறு (ஆண்மான்), சிங்கம் - அரிமான் - வயமான – ஏறு, பசு - மூதா ஆ (கிழப் பசு) – பல் ஆன் - ஆ கெழு – மரையா (காட்டுப் பசு) – ஆமான் - ஆ – கபிலை (காராம்பசு) – ஆயம் (பசுக்கூட்டம்), எருது – ஏறு – பகடு,  பன்றி – ஏனம், நரி, புலி ஆகிய விலங்கினங்கள் பற்றிப் பேசப்படும் செய்திகளையும் காண்கின்றோம்.

பறவைகள்:- புள் - ஆண்டலை (ஆண்தலைப் பறவை) – குருகு – கானம் - பறவை, பருந்து – அளகு (பெண் பருந்து) – சேவல் (ஆண் பருந்து) – எருவை, கழுகு – பெடை (பெண் கழுகு) – சேவல் (ஆண் கழுகு) – எருவை, வண்டு – ஞிமிறு – மிஞிறு – சிதறி (சிள்வண்டு) – சுரும்பு, கூகை – கோட்டான் - குரால் (பெண்கூகை), நாரை – செவ்வரி – தடந்தாள் நாரை, கொக்கு – குருகு, இராசாளிப் பறவை – எழால், சிச்சிலிப் பறவை – சிரல், மயில் ஆகிய பறவையினங்களைப் பதிற்றுப்பத்து நூலில் பார்க்கின்றோம்.

பரிபாடல்

விலங்குகள்:- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் எனும் கடைச்சங்க நூலில் யானை – களிறு – கயமா – புகர்முகம் - கைம்மான் - பிணிமுகம் - வாரணம் - மடப்பிடி – கைம்மா - இரும்பிடி (கரிய பிடி), குதிரை – பரி – கலிமடமா – மடமா (இளைய குதிரை) – கடுமா – வயமா – கயமா, ஆடு – மறி (குட்டி) – விடை (ஆட்டுக் குட்டி), மான் - மான்மறி (குட்டி), எருது – பாண்டி, கழுதை – அத்திரி (கோவேறு கழுதை), பூனை – பூசை ஆகிய விலங்கினங்கள் கூறப்பட்டுள்ளதையும் பார்க்கின்றோம்.

பறவைகள்:- மயில் - மஞ்ஞை – மடமயில் - ஊர்மயில் - மாமயில் - ஆடுசீர் மஞ்ஞை, சேவல் - கருடச்சேவல் - வாரணம், வண்டு – சுரம்பு – மிஞிறு – அரி – அணிவண்டு, புள் - கருடப்புள் - பறவை, கோழி – சேவற்கோழி, கிளி – வான்கிளி, குயில் - கோகிலம், தும்பி போன்ற பறவையினங்கள் பரிபாடல் எனும் நூலில் பறந்து திரிந்து ரீங்காரம் புரிவது எம் செவிகளுக்கு இன்பத்தையளிக்கின்றது.

சிலப்பதிகாரம்

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான தலைசிறந்த இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில் விலங்கினங்கள் பற்றியும் பறவையினங்கள் பற்றியும் எடுத்தாளப்பட்ட பாங்கினையும் கண்டு மகிழ்வோம்.

விலங்குகள்:- புலி – கொடுவரி – வாள்வரி, சிங்கம் - அரி – அரிமா, யானை – ஆனை – உவா – களிறு – குஞ்சரம் - வேழம் - பிடி (பெண் யானை), மான் - எகினம் - கலை (ஆண் மான்) – காசறை  (கவரிமான்),  எருமை – காரான் - எருமை மாடு,  ஆட்டுக் கடா – ஏழகk;> எருது – ஏறு, குதிரை – புரவி, குரங்கு – ஊகம், ஆடு – தகர் - மறி – யாடு, பசு – ஆன் - கறவை, நண்டு – அலவன், பன்றி – ஏனம், முயல், முதலை ஆகிய விலங்கினங்கள் சிலப்பதிகாரம் முழுவதும் ஓடி, ஆடி, விளையாடும் காட்சிகள் எமக்கு விருந்தாயமைந்துள்ளன.

பறவைகள்:- மயில் - நீலப்பறவை – மஞ்ஞை – பிணிமுகம், அன்னம் - அனம், கோழி – சேவல் - கானக் கோழி, புள் - ஆண்டலை (ஒரு பறவை) – பறவை – கம்புள் (நீர்ப்பறவை) – உள்ளு (உள்ளான் பறவை) – ஊரல் (நீர்ப்பறவை) – குருகு – சிரல் (சிச்சிலிப் பறவை), கரிக்குருவி – காரி,  கிளி – கிள்ளை, ஆந்தை – குடிஞை,  குயில் - குயிலோன், நாரை – குருதி – புதா (பெரிய நாரை),  வண்டு – குறும்பு – தும்பி – மது – கரம், தேனீ – ஞிமிறு, கொக்கு, காக்கை, பருந்து ஆகிய பறவையினங்கள் சிலப்பதிகாரத்தில் பறந்து திரிந்து பாடும் கீதங்கள் நம்மனைவரையும் வியக்க வைக்கின்றன.

தெய்வமும் வாகனமும்

தமிழர் அதிலும் சைவசமயத்தவர்கள் வணங்குவதற்குப் பற்பல தெய்வங்கள் உள்ளன. இத் தெய்வங்கள் பயணிப்பதற்காக அவர்களுக்கு வாகனங்களாகப் பல விலங்குகளையும; பறவைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளனர் அக்காலச் சமயவாதிகள். இனி, எந்தெந்தத் தெய்வங்களுக்கு எந்தெந்த விலங்குகளும், பறவைகளும் வாகனமாக அமர்த்தப்பட்டுள்ள சீரினையும் காண்போம்.

விலங்குகள்:- சிவன் - நந்தி,  விநாயகர் - எலி,  ஐயப்பன் - குதிரை, விஷ்ணு – பாம்பு, அக்னி – ஆட்டுக் கடா, வயிரவர் - நாய், துர்க்கா – புலி, பார்வதி – சிங்கம், இந்திரன் – யானை,  வாயுபகவான் - மான், இயமன் - எருமை,  காளி – கழுதை,  வருணன் - ஆமை,  சுக்கிரன்-  முதலை ஆகிய விலங்கினங்களைத் தெய்வங்களின் வாகனமாக நியமித்த சிறப்பினையும் காண்கின்றோம்.

பறவைகள்:- முருகன் - மயில், மன்மதன் - கிளி,  பிரமன் - கருடன், இலட்சுமி -  ஆந்தை,  கேது – கழுகுக் குஞ்சு,  ரதி – புறா,  சரசுவதி – அன்னம் ஆகிய பறவைகளைத் தெய்வங்களின் வாகனமாக அமைத்துக் கொடுத்த சீரினையும் பார்க்கின்றோம்.

முடிவுரை

மேற்காட்டிய விலங்குகளிலும், பறவைகளிலும் ஒரு சொற்பதத்திற்குப் பற்பல சொற்பதங்கள் பாவனைப் படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தோம். சங்ககாலத்தில் இவ்வாறான சொற்பதங்கள் மலிந்துள்ளதில் ஒரு வியப்பும் இல்லை. அக்காலத்தில் வாழ்ந்த புகழ் பூத்த புலவர்களின் தமிழ் இலக்கண, இலக்கியத் தரம், வளர்ச்சி மிக உச்ச நிலையில் இருந்துள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் அக்காலத்தில் நடைமுறையில் இருந்துள்ள சொற்பதங்கள் நாளடைவில் பாவனை குன்றி இன்று அவற்றின் பொருள் புரியாத நிலைக்கு வந்துள்ளமை மிக்க வேதனைக்குரியதொன்றாகும். இit> அவற்றில் ஒரு சில உதாரணங்களாகும்.

விலங்குகள்:- யானை- கைம்மா, கைம்மான், கயந்தலை, கோட்டுமா, பொங்கடி, புலி- உழுவை, குரளை, வரிவயம், வயமா, எருமை- பகடு, காரான், குதிரை- கலிமா, வயமான், இவுளி, பூனை- வெருகு, வெருக்கு, மான்- உழை, புல்வாய், நவ்வி, இரலை, கடமான், நண்டு- களவன், புள்ளிக் களவன், அலவன், சிங்கம்- மடங்கல், நாய்- ஞமலி, முதலை- கரா, கராம், பன்றி- முளவு, பசு- பொருநாகு, ஆநாகு, என்று இன்று எழுதினால் ஒருவருக்கும் புரியப்போவதில்லை.

பறவைகள்:- மயில்- பிணிமுகம், மஞ்ஞை, கோழி- கம்புள், புள்- எருவை, பொகுவல், போகில், மகன்றில், ஆண்டலை, தேனீ- ஞிமிறு, மிஞிறு, புறா- புறவு, ஆந்தை- குடிஞை, குயில்- கோகிலம், நாரை- புதா, என்று இன்று எழுதினால் எவருக்காவது புரியுமா? மனிதன் இயற்கையோடு சேர்ந்து வாழப் பிறந்தவன். அவ்வண்ணமே இன்றும் வாழ்கின்றான். அவனுக்கு விலங்குகளுடனும் பறவைகளுடனும் நெருங்கிய தொடர்புண்டு. இதனாற்றான் இவற்றுடன் இணைந்த நூல்கள் அவனுக்காக வெளிவருவது வழக்கம். அந்நூல்கள்தான் உயிர் பெற்ற இயற்கை இலக்கியங்களாகும். இவை மனிதனை ஆற்றுப்படுத்தி, அறநெறி புகட்b, மனிதநேயத்துடன் மாண்புற வாழ, அவன் வாழ்வியல் சிறந்து, நாடு செழித்து, மக்கள் ஒன்றிணைந்து, ஓர் ஐக்கிய உலகம் தோன்ற வேண்டும் என்று சிந்தையிற் பதிப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R