ஆய்வு: இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல்! - முனைவர் மூ.சிந்து -
முன்னுரை
பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்தியம்பும் இலக்கியக் காலக் கண்ணாடியாகத் திகழும் இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் மனிதனது வாழ்வின் பல்வேறு நிலையை வெளிக்காட்டுவதாகவும், தனி மனிதன் தன்னுடைய வாழ்விற்குத் தேவையான இனிய, இன்னாத செயல்களை அழகுற எடுத்தியம்பும் உயிரோட்டத்துடன் கூடிய இலக்கியமாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொண்ட இலக்கியமானது மனிதனோடு ஒன்றிணைந்து இயங்கும் நிலையைக் காணலாம். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மக்கள் எல்லோரும் தனக்கென வாழாது பிறர்க்காக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தன்னைத் தேடி வந்த புலவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை உபசரிக்கின்ற முறையையும் இலக்கியங்கள் பறைசாற்றும் நிலையைக் காணலாம். சங்க இலக்கியம் தமிழர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது. அவற்றுள் உணவு முறைகளைப் பற்றிய கருத்தினைத் தொகுக்கும் களமாக அமைகிறது.
தமிழர்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த சிறப்பிற்குரியது தொல்காப்பியம். பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பல் அமைந்தமையை,
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர்மாண்புகள்” (தொல்.1102)
தொல்காப்பியர்சுட்டுகிறார்.
விருந்து
‘விருந்து’ என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகிறது. ‘ஓம்பல்’ என்ற சொல் பாதுகாத்தல், சிறப்புச் செய்தல் முதலிய பொருள்களில் வழங்கப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவு அளித்துச் சிறப்பு செய்த நிலமையைக் குறிக்கும்.