- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன் மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -
1. வீரன் - ஜீவன் கந்தையா
பணிதல் என்பது எந்தக் கிளையிலிருந்து துளிர்த்துத் தொடர்கிறது என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து பணிந்துபோகும் பண்பு, குலவழியாகத் தொடர்ந்து நீளும் சாபமாக வரித்துப் போனதற்கு பிறப்பின் தாழ்ச்சி காரணமேயாகி ரோச நரம்பை அறுத்து எறிந்துவிட்டதா?. பண்புநிலைக்கும், பணிதல் நிலைக்கும் இடையேயான முதுபிரச்சாரத்துள் எங்கோ ஒளிந்திருக்கிறது அடக்குமுறையின் நுண்ணிய சவுக்கு. அது காற்றில் சுழன்று சுழன்று கூனிய முதுகில் ஏற்படுத்திய தொன்மக்காயத்தின் வடுக்கள் இன்று சவுக்கில்லாமலே அதிர்வுகளை உண்டுபண்ணும் மரபுத்துணிக்கையாய் என்னுளத்துளும் மறைந்தியங்குகிறது.
மாநகர வீதிகளில் சிக்னல் லைட் பச்சைக்கு மாறியபின் வீதியைக் கடக்கும் சட்டபூர்வமான இயக்கங்களில் சராலென ஊடறுத்துப் பாயும் சைரன் ஒலித்த பொலிஸ் வாகனங்களின் அருகாமை என் இதயத்தை வேகங்கூட்டுகிறது. நடுமுதுகின் வேர்வைத்துவாரங்களில் ஈரம் பிசுபிசுக்கிறது.
ஓவென்று விரிந்த அரசாங்கக் கட்டடங்களுக்குள் காரணத்துடன் செல்லவேண்டிய பொழுதுகளில் வாசல்கதவைத் திறந்த மறுகணம் பின்னுக்கு இழுக்கிறது ஏதோவொரு வலிய கரம். மிக இயல்பாக நகர்ந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்களுக்குள் என் தடுமாற்றமிக்க மனதுடன் காரியமாற்ற முனையும்போது பயம் தன் நீண்ட தூரிகைகொண்டு முகத்தில் கறுத்த மேகங்களை வரைந்துவிடுகிறது.
“சாக்கடையச் சுத்தம் செய்யடா மனிதா” என ரெஸ்ரோரண்ட முதலாளி கட்டளையிட, நான் அது எனது வேலை இல்லை என மறுத்திருக்கலாம். சோற்றுப்பருக்கைகள் போய் அடைத்து நாறிய சக்கடையை வெம்பி வெதும்பிய மனத்துடன் வேர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்தேன். இன்றிலிருந்து இனிமேல் இந்த ரெஸ்ரோரண்டிற்கே வேலைக்கு வருவதில்லை என சங்கற்பம் பூண்டு கொண்டு வீடு வந்தேன்.
நாளைக்கு வேலை இல்லை என்பது இந்த வாரத்திலிருந்து சம்பளம் இல்லை என்னும் பேரிடி. இதை எப்படி மனைவிக்குச் சொல்வது? அவளது முகத்தைப் பார்க்கவே துணிவற்று வரவேற்பறையில் ஷோபாவின் மீது உடம்பைக் கிடத்தினேன். மனம் புழுங்கி அவிந்து, யோசனைகளும் அறுந்து, உறக்கம் கவ்வியது...
***
இரத்தம் செத்துப்போகவேண்டிய சாபம் ஒன்று தலைமுறை நு¡ல்வழியாக அவனது நடுஉச்சியில் இறங்கி விதியாக உறைந்திருக்க, வேலைக்கு சென்று வீடுதிரும்பிய உழைவு தேகத்தில் பரவி, செற்றியில் கால்நீட்டி படுத்திருந்த அவனை ஒரு கதவுத்தட்டல் உசுப்பியது.