ஆய்வு; விருந்து புறந்தருதல்! - முனைவர் சுப. வேல்முருகன், இளநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம், சென்னை – 100. -
தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பண்பாடு
இலக்கணச் செறிவும் இலக்கியச் செம்மையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி இத்தமிழ்மொழிப் பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது, பண்பாடு உடையது. பண்பாடு உள்ளவர்களாலேதான் இப்பாரதம் வாழ்ந்து வருகிறதென பண்பாட்டின் பெருமைதனை,
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்: 996)
என வள்ளுவம் பேசுகிறது.
தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் இயல்புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு எனப்படும். மனிதனை விலங்கினின்று வேறுபடுத்துவதும் நல்ல பண்பாடுதான். இப்பண்பாடு காலத்திற்குக் காலம்; நாட்டுக்கு நாடு; இனத்திற்கு இனம் வேறுபடும். கரடு முரடான நிலப்பகுதியை வேளாண்மைக்கு ஏற்ப, நிலமாக மாற்றுவது பயன்படுத்துதல் எனப்படும். இதைப் போன்று மனித உள்ளத்தையும் தீய எண்ணங்களில் இருந்து விலக்கி உயர்ந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மனதைப் பயன்படுத்துதல் பண்பாடு என்பர். இதனையே கலித்தொகை,
பண்பெனப் படுவது பாடறிந்து தொழுகுதல் (கலி, பா.133:8) என்கிறது.