ஆய்வு: குடும்ப சூழலில் பெண் அடையாளங்கள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் – 605 602 -
முன்னுரை
தொடக்க காலத்தில் மனித இனம் குழுவாக வாழும் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு வாழ்ந்த மனித இனம் நாகரிகம் பெற்ற நிலை மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். இவ்வின வரலாற்றின் முக்கிய நிகழ்வு இதுவென்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர்.
தந்தை ஆதிக்கச் சமூகம்
உடைமைச் சமூகம் பாலியல் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உயர்வு, தாழ்வு என்பதான கருத்தாக்கத்தினை உருவாக்கியது. இதன் காரணமாக இனக்குழுச் சமூக உட்கட்டமைப்பான தாய்வழிச் சமூக முறை முற்றிலும் அற்று தந்தையாதிக்கச் சமூகம் உருவாகியது. இதன் தொடர்ச்சியாகக் குடும்ப அமைப்பு பெண்ணை இரண்டாம் பாலினமாகவும், ஆணை அதிகார மையமாகவும் நிறுவியது.
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படுதல்
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படும் பெண் இனம் உலக அளவிலான பல்வேறு அறிவுசார் மாற்றங்களின் ஊடாக விழிப்படைந்த நிலையில் கல்வியறிவைப்பெறும் வாய்ப்பினைப் பெற்றது. அதன் விளைவாகத் தன்னைக் குறித்தும் தன்னோடு இணைத்துப் புறச் சூழலையும் உள்ளார்ந்து நோக்கும் விழிப்புநிலையை அடைந்தது.
குடும்ப அமைப்பு
அடுத்தகட்ட வளர்ச்சியாக அறிவார்ந்த சூழலில் பெண்கள் இயங்கத் தொடங்கினர். படைப்புச் சூழலைக் கைக்கொண்டு தன் உணர்வை இயல்புத் தன்மையோடு பதிவு செய்ய முன்வந்தனர். அதன் வெளிப்பாடே குடும்பம்.