* ஓவியம் - AI
மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது.
உலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா? என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது.
ஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.
வெவ்வேறு மொழி பேசுகின்ற பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்யும் போது எமது மொழி வாழும் என்றால், அம்மொழி திருமண பந்தத்தின் போது பகிரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒரு தமிழ்மொழி பேசும் பெண், ஒரு ஆங்கில மொழி பேசும் ஆணைத் திருமணம் செய்கின்றபோது தமிழ்மொழி ஆங்கிலமொழி பேசும் ஆணுக்குக் கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி வளம் பெற சாத்தியம் இருக்கின்றது. மக்களுக்காகவே மொழி. மொழிக்காக மக்கள் இல்லை.
கால ஓட்டத்தில் கலந்து வந்த மொழிச் சேர்க்கை: படையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.
ஆரியம் தமிழ்மொழியில் கலந்திருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் தொல்காப்பியர் காலத்திலும் இக்காலத்திலும் காணப்படுகின்றன.
“வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்தல் சொல்லாகும்'
படையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.
வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். ஆரியத்திற்கு உரிய எழுத்தை விடுத்து ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் சொல் என்று விளக்கியிருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் அதில் வடமொழி தமிழில் கலந்திருந்தமையை இதன் மூலம் அறியக்கிடக்கின்றது.
அதேபோல் நன்னூலில்
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே'
என்று சொல்லப்பட்டிருக்கின்றது .காலமாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. அது ஆரோக்கியமும் கூட. சங்க காலத்திலே யவணர் என்ற சொல் வழக்கில் இருந்தது. வியாபார நோக்கில் அந்நிய நாடுகளில் இருந்து தமிழகம் புகுந்த கடல்வழி பயணிகள் தமது மொழிச் சொற்களை விதைத்தமையுடன் என் மொழிச் சொற்களையும் கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்பது உண்மையே.
மாங்காய் - Mango (ஆங்கிலம்)
மண்வெட்டி - Mametti (ஒல்லாந்தர் மொழி)
தாங்கி - Tank (ஆங்கிலம்)
வெற்றிலை - Betel (ஆங்கிலம்)
ஊர்உலா - Urlaub (ஜேர்மன் மொழி)
அதேபோல் சஙகம் மருவிய காலத்தில் ஏராளமான சொற்கள் தமிழில் வந்து கலந்தன. பல்லவர் காலத்திலே மதங்களின் ஆட்சி மேலோங்கி இருந்த போது ஆரியர் வழிபாட்டுச் சொற்கள், பொருட்கள் தமிழர்களிடையே கலந்தன. வடமொழி கலந்த உரைநடை இக்காலத்திலேயே வந்துவிட்டது. உதாரணமாகக் களவியல் உரையை நோக்கலாம். ஆரியச்சொற்களின் ஆட்சிக்கு எதிரான போக்கிலே தமிழின் மேன்மையை எடுத்துணர நற்றமிழ் ஞானசம்பந்தன், தமிழ் மூவர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
வீரசோழியம் என்னும் வடமொழி நூல் தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. நேமிநாதம், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை, போன்ற நூல்கள் வடமொழி இலக்கணமரபைத் தழுவி எழுதப்பட்டன.
காவ்ய என்னும் வடமொழிச்சொல்லே காப்பியம் என தமிழ்மொழியில் வழங்கப்பட்டது. தண்டியலங்காரத்தில் காவிய மரபு பேசப்பட்டுள்ளது.
நாயக்கர் காலத்தை எடுத்து நோக்கும்போது ஆசானும் அகராதியும் துணை செய்தாலன்றி உட்புக முடியாத இரும்புக்கோட்டையிலானது நாயக்கர்காலப்பாடல்கள் என நாயக்கர் கால இலக்கியப்போக்கு காணப்படுகின்றது. அருணகிரிநாதருடைய பாடல்களில் மணிப்பிரவாளநடையினைக் காணலாம்.
‘’வாலவ்ருத்த குமரனென சில வடிவங்கொண்டு....’’ என்னும் பாடலினை உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம்.
போத்துக்கேய ஒல்லாந்தர் காலங்களில் போத்துக்கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலந்தன. இவ்வாறே பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கில மொழிச்சொற்கள் ஏராளமாகத் தமிழில் வந்து கலந்தன.
‘’நீ எழுதியவற்றை ஆங்கிலம் தெரியாத தமிழனிடம் வாசித்துக்காட்டு அது அவனுக்கு விளங்குமானால், அதுவே சிறந்த உரைநடை’’
என பாரதியார் கூறுகின்றார். அந்தளவிற்கு ஆங்கிலம் தமிழில் கலந்துவிட்டது. இதனாலேதான் 2000ஆம் ஆண்டு விடியலில் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞன் என்று மாற்றினார். மறைமலையடிகளின் பெயர் சுவாமி வேதாசலம். வடமொழி சொற்களான சுவாமி என்பதை அடிகள் என்றும், வேதம் என்பதை மறை என்றும் அசலம் என்பதை மலை என்றும் தமிழுக்கு மாற்றி மறைமலையடிகள் என்று தனக்குப் பெயரிட்டார் இதனால், அவரால் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போய்விட்டது
‘'இராமசாமி சதுக்கத்தில் சர்க்கார் விராந்தையில் காணப்பட்ட பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிஸ்டவசமாக பொலிசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டான்’’
இராமசாமி - வடமொழி
சதுக்கம் - பாளி
சர்க்கார் - போத்துக்கேயம்
திருடிய - தெலுங்கு
ஆசாமி - மலையாளம்
துர்அதிர்ஸ்டம் - வடமொழி
பொலிஸார் - இலத்தீன்
வில்லங்கத்தில் - மராட்டி
மாட்டி - தெலுங்கு
கொண்டான் - மலையாளம்
இங்கு தமிழென்று நாம் கருதுகின்ற ஒரு வாக்கியத்தில் எத்தனை பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
பல மொழிகள் இணைந்தே ஆங்கிலமொழி வியாபார மொழியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே பிற மொழிகளை அங்கீகரிப்பதும் பிறமொழிகளில் எம்மொழி இணைவதும் சாதாரணமாக நடைபெறுகின்றது. ஆனால், பிறமொழிகளைக் கையாளும் போது தமிழ்மொழி ஆளுகைக்குள்ளே அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேவையானபோது மொழிக்கலப்பு அவசியமாகின்றது. ஒலிபெயர்ப்பு செய்யலாம், புதிய சொற்கள் கண்டுபிடிக்கலாம்.
தமிழ்மொழியின் தொன்மை அதன் சிறப்பு என்னும் போது அதன் இலக்கணம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். பேச்சுமொழி எழுத வேண்டிய இடத்தில் மொழியின் அழகு கெட்டுவிடாத படி எழுத வேண்டும். சிறுகதை, நாவல், கவிதை போன்றவற்றில் கதாபாத்திரங்கள் பேசுகின்ற மொழி எதுவாக இருக்கின்றதோ அது எழுதுவதே சிறப்பு. ஏனென்றால், அங்கு எழுத்தோட்டம் சீராக இருக்கும். களம் சீராகக் காட்டப்படும். ஊடகங்களில் மேடைப்பேச்சுகளில் வேற்றுமொழி கலப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். எம்முடைய தமிழ்மொழிச் சொற்களுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. சொல் இல்லாது விட்டால் அவரவர் மொழிகளில் உள்ள சொற்களை பயன்படுத்தலாம். நாகரித்திற்காக எமது மொழியை தவிக்கவிட்டு வேற்று மொழியைக் கையாளுவது. பெற்றபிள்ளையைத் தவிக்கவிட்டு மாற்றான் பிள்ளைக்கு மகுடம் சூட்டுவது போலாகும்.
c.gowry@yahoo.d