
மாலை நேரத்தில் சூரியன் மறைந்து,வெளிச்சம் மெதுவாகக் குறைந்து இருள் படரத் தொடங்கியது.அந்த மாலைக் கருக்கலில் கிணற்றடியில் துலாவில் அள்ளி அள்ளி தண்ணீரை தொட்டிக்குள்ளும், பெரிய வாளிக்குள்ளும் இறைத்துக்கொண்டிருந்தேன்.
அம்மா உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு இப்படியாக ஒத்தாசை செய்வது மட்டுமன்றி,தோய்த்து அலம்பிய துவாய்களைப் பிழிவதென்றாலும்,அங்கே என் கைகளின் பலம் வேண்டும் அம்மாவுக்கு! அம்மாவுக்கும் எனக்குமான அமைதியான சம்பாஷணைகள் இங்குதான் அநேகமாக அரங்கேறும்.அதற்குள் சோகங்களும்,கூடவே சுகங்களும்கலந்திருக்கும். மாறாக எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் கிணத்தடியில்தான் அம்மா ஆரம்பித்துவைத்தார் என்றும் சொல்லலாம்.இல்லத்திற்குள் மட்டும்தானா நம் சுகவாழ்விருந்தது? இல்லையே! வாழ்ந்த காணி, ஆட்டுப்பட்டி, மாட்டுத்தொழுவம், கோடி, மூலை முடக்கென வளவிற்குள் சுற்றிவர இருந்த நம் பாதம் பதித்த எல்லா இடங்களிலும் எமக்கொரு கதையிருந்ததே! மாமரத்தின் நிழலில்,.வேம்பின் கீழே போட்டிருந்த கட்டிலில். வாழை மரங்களிற்காய் வாய்க்கால் வெட்டி, பாத்திகட்டி தண்ணீரை ஓடவிட்டுப்பாத்திருந்த அந்தப்படிகளில்.கிணற்றடியில் நின்ற கமுகு மரங்கள்.எங்கள் வேலிக்கும் அடுத்த வீட்டுப் பூரணம் அக்கா வீட்டுக்குமான குறுக்குவழிப்பொந்து.
மற்றும் போர்டிகோ(Portiko)என எல்லா இடங்களிலும் ஒவ்வொரு கதையுண்டு.இப்போது அப்படிச்சில கதைகளையும் இந்தப்பின்னேரப் பொழுதில் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். கதையோடு பின்னணி இசையை ரசிப்பதுபோல,
அம்மாவின் கண்களும் சிரித்து கதைசொல்லும் பாணியை ரசித்தேன்.விடியற்காலையில் எழும்பி,ஓயாது பணிவிடை செய்யும் என்தாயை ஒருகணமேனும் சிரிக்க வைப்பதே அக்கதைகள்தான்.
அவள் சிரித்தால் நான் இன்னும் உன்னி உன்னி துலாவில் துள்ளிக்குதிப்பேன்.
"என்ர தெய்வமே,போதும் நிற்பாட்டு.எனக்கு முன்னால இப்படியெல்லாம் செய்யாதே"என்று திட்டும் வாங்குவேன்.
" சரிசரி,இனி இருட்டப் போகுது.நீ போய் விளக்கேத்திர வேலையைப் பார்.அரிக்கன் லாம்பை எடுத்து, சிமினியும் புகைப்பிடிச்சிருக்கும். அதையும் கழுவித்துடைத்து, மண்ணெண்ணையும் குறைந்திருந்தா அதையும் நிரம்ப விட்டு,திரியையும் சரிபார்த்து இரண்டு பக்க மூலையையும் பக்கப்பாட்டிற்கு வெட்டிப்போட்டால்தான் சரிசமமா விளக்கு ஒளிவிட்டு எரியும்.தெரியும்தானே?“
"ஓம் அம்மா.எல்லாமே அப்பா எனக்கு காட்டித்தந்தவர்.நான் ஏற்கனவே செய்தனான்தானே!நான் இப்ப போகவா?"
"நீ போ செல்லம்.நானும் முகத்தைக் கழுவிக்கொண்டு வாறன்.முதல்ல சாமிக்கு விளக்கேத்தவேணும்.நீ போய் இன்னும் 2 கைவிளக்குக்களும் இருக்கு.அதுகளையும் சேர்த்து அடுக்குப்பண்ணு.அம்மா இப்ப வந்திடுவன்".
கை,கால்,முகம் கழுவிவிட்டு நானும் வீட்டுக்குள் நுழைந்தேன்.
முதலில் அரிக்கன் லாம்பை எடுத்துப்பார்த்தால்,சிமினி நல்லாப்புகை பிடிச்சு கறுத்திருந்தது.சிமினியைக் கவனமா கழற்றி எடுக்கவேணும்.இடது கையால் லாம்பின் கீழ் பக்கத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு மேல் கொழுக்கிக்குள்ளே வலதுகையின் ஆள்காட்டி விரலை வளைத்து கொழுவிப் பிடித்துக்கொண்டு மேலே இழுக்க,கிரீச்சென்ற சத்தத்துடன் மேலே அப்பாகம் வர,கீழேயுள்ள சிமினியைக் கவனமாகக்கழற்றிக்கழுவலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், கிழமைக்கு ஒன்றை விட்ட ஒரு நாளுக்கு இந்த"கிரீச்சு கிரீச்சு" என்ற சத்தம் கேட்பதற்காகவே விரும்பி சிமினியைச் கழற்றுவேன் நான்.ஆனால் என்ன;அப்பா அதைக் கேட்டால்,"ஏன் அது சத்தம்போடுது,அதுக்கு எண்ணெய்போட்டுத்துடைக்கிறதில்லையா,இப்படியே விட்டால் அரிக்கன் லாம்பு கூடியசீக்கிரம் கரள் பிடிச்சிடும் என்று தெரியாதா?"என்று பேச்சு வாங்கவேண்டும்.அதற்காக அப்பா இல்லாதபோது இப்படியான குறும்பு விளையாட்டுக்கள் வீட்டில நடந்தேறும்.ஆட்டுக்குட்டியைத் துரத்திக்கொண்டு நான் ஓட,அது பிறகு என்னைத் துரத்திக்கொண்டு வீட்டுக்குள்ளே வர,அம்மாவிடமும் பேச்சு வாங்குவேன்.அந்த இளங்கன்று வாழ்க்கை எப்போதும் இனித்தது எனக்கு!
சிமினியைக்கழுவித்துடைத்து,
திரியையும் சரிபார்த்து,
மண்ணெண்ணையையும் புனல்வைத்து நிரப்பிவிட்டு,கைவிளக்குகளையும் தயார்படுத்தினேன். இங்கும் நடைமுறை என்னவென்றால்,பழந்துணியைக்கிளித்து புதுசா நீண்ட திரி திரித்து அளவாக வெட்டி அதனை திரிப்பிடிக்குள் செருகி வெளியே எடுத்து,மேல் நுனியையும் சமமாக வெட்டி,எண்ணெயில் தோய்த்துவிட்டு விளக்கைக் கொளுத்தினால் விளக்கு கூடுப் பத்தாமல் நீண்ட நேரம் நல்ல பிரகாசமாய் எரியும்.
இல்லாவிடில்,இடையிடையே சிகப்புப் பொட்டுப் பொட்டாய் குமிழிகள் சிவந்து பின் கருகி கன்னங்கரியாகிவிடும்.
இதுகளையும் கண்காணித்து அவற்றையும் கவனமாக தீயைத் தணிக்கக்கூடிய கூர்மையானவற்றால் அகற்றிவிடவேண்டும்.
கோட்பாட்டின்படி குமிழிகள் வர பழந்துணி,அல்லது மொத்தமான திரி அன்றி திரியை முட்டாமலிருக்கும் குறைந்தளவு எண்ணெய்
என இன்னும் சில காரணங்களுண்டு.
இப்படியெல்லாம் இவற்றின் ஒளியால் இந்த இரவைக் காட்சிப்படுத்துவதற்குள் அம்மாவும் சாமிக்கு விளக்கேற்றிவிடுவார்.சந்தனக் குச்சியின் வாசமும்,அம்மாவின் தேவாரமும்,கைமணியின் ஓசையும் மனசை ஆசுவாசப் படுத்தும்.இப்போது இருள் ஊருக்கே நல்வரவாக வந்துசேர்ந்துவிடும்.
நானும் அரிக்கென் லாம்பைக் கொளுத்திக் கொண்டு,படிக்க ஆரம்பித்துவிடுவேன். தேவைக்கேற்றாற்போல கைவிளக்குக்களை
அவரவர் பயன்படுத்திக் கொள்வர்.நித்திரைக்குப் போகும் முன்னர் அரிக்கன் லாம்பை மட்டும் மங்கலான சிறு வெளிச்சத்துடன் எரிய விட்டுவிட்டு,அந்த ஒளிப்பதிவிலும் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி நம் கண்கள் உறங்கின.
அரிக்கன் லாம்பில் வாழ்ந்த வாழ்வும்,அதுதந்த அனுபவங்களும் என்னைப்போல இன்னும் எம்மக்கள் அனுபவித்திருப்பார்கள்.
பெற்றோல் மாக்ஸ் உடனும்,அரிக்கன் லாம்புடனும் நடந்த கல்யாணங்களும்,மாட்டு வண்டில் பூட்டி,அரிக்கன் லாம்பின் துணையுடன் வாழைக்குலைகளும்,கிடுகுகளும் ஏற்றி,ஏன் புகையிலை வியாபாரம் செய்து சம்பாதிச்ச எம்மவர்களையும் எப்படி மறப்பது?இருளையும்,அரிக்கன் லாம்பின் ஒளியையும் கிழித்துக்கொண்டு எம்மவரைப் பத்திரமாக வீடு கொண்டுவந்து சேர்த்த பாசமிகு காளைகளையும் எவருமே மறந்திருக்க மாட்டார்கள்.
நினைத்துப் பார்க்கின்றேன். இரவில் வயல்காக்க ஓர் அரிக்கன் லாம்பு. மழைக்கால இருளிற்குள்ளும் ஆடு குட்டிபோடக்காவல் நின்ற அரிக்கன் லாம்பு. வைரவருக்குக் காய்ச்சிப் படைக்கக் காவல் நின்றதும்,இனவழிப்புப் போராட்ட வரலாற்றிலும் எம்மைக்காத்ததும்
இந்த ஒளிபடைத்த கண்களேதான்.
காலத்தைப்பதிவு செய்து எழுதப் புறப்பட்டால்
ஆயிரம் கதைகளுண்டு எழுதுவதற்கு!
அரிக்கன் லாம்பில் ஆரம்பித்த எம் வாழ்வு இப்போது சட்டென்று மின்மாற்றியை அழுத்தினால் மின்சார வெளிச்சங்களாக ஒளி தருகின்றது.எந்த அளவு வேகத்தில் இப்பாய்ச்சல் இருக்கின்றதோ எம் வாழ்வும் அதே வேகத்தில் ஒளிதந்து மங்கி மங்கி இறுதியில் நூந்து போய்விடும்.எம்மோடு வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல,எம்மை வாழவைத்த விளக்குக்களும் எமக்கானவர்களே!அவர்களையும் என்னால் மறக்கமுடியவில்லை..
புளி
ஆல்
வேம்பு
மாவென்று அடுக்கிக்கொண்டு போனால் ரீக்கடை பெட்டிக்கடை பழக்கடையென எங்கெங்கு உன்னைக் கண்டாலும்
"அரிக்கென் லாம்பே" உன்னை விட அழகியை நான் ரசித்ததேயில்லை.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









