முன்னுரைசங்க இலக்கியங்களில் எளிமையான மொழி நடையும், கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் உடைய நூல் குறுந்தொகை. அழகான சொல்லோவியங்களாக அதன் பாடல்கள் இன்றும் படித்து இன்புறத்தக்கன. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பரணர் பாடல்கள்
குறுந்தொகையில் பரணர் 17 பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தையும், தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் அல்ல குறிப்பட்டு தலைவி பெறுவதற்கறியவள் என்று புலம்புவதாகவும் அமைந்துள்ளன. இவரது பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள தன்மையும் அறியமுடிகிறது. குறிப்பாக நன்னன், பாண்டியர்களில் அதிகன், அழிசி மன்னனின் ஆர்க்காடு நகர் பற்றிய குறிப்பு ஆகியவையும் குறிக்கத்தக்கன.
நடை என்பது
நடை என்பதற்குப் பலரும் வரையறை வகுத்துள்ளனர். “எண்ணங்களையும் மனதில் எழும் உணர்ச்சிகளையும் உரிய சொற்களால் வடித்துக் கொடுக்கும் கலைத்திறனையே நடை எனலாம்” என்று இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார்.
நடை என்பது புலவன் தான் சொல்ல வரும் கருத்தைப் புலப்படுத்த பயன்படுத்தும் உத்திகளையும் அதன் மூலம் வெளிப்படும் கவிதையழகுமே நல்ல நடைக்குச் சான்றுகளாகும். அவ்வகையில் பரணர் பாடல்கள் சிறப்புடையன.
உவமை நடை
“அழகுள்ள ஒரு பொருளை மற்றொன்றன் அழகோடு ஒப்பிட்டுக் காணும் இந்த உவமையே கலைகள் பலவற்றிற்கு அடிப்படையாகும்” என்பார் மு.வரதராசனார்.
உவமைகள் கலந்த நடை பாடலுக்குச் சிறப்பினையும் சொல்ல வரும் செய்திக்குச் சுவையையும் கூட்டுவன. பரணர் பாடல்களில் ஏராளமான உவமைகள் இடம்பெற்றுள்ளன.
தலைவி ஊடும் பொழுது வருந்தும் தனது நெஞ்சிற்கு உவமையாகத் தலைவன் கொடை கொடுப்பதில்வல்ல எவ்வி என்ற மன்னனை இழந்த யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத தலை பொலிவிழந்து காணப்படுவது போல எனது மனமும் பொலிவிழந்து விட்டது என வருந்துகிறான். இதனை,
“எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுத்தலை போல” (குறுந். 19:1-2)
என்ற வரிகள் சுட்டுகிறது.
மற்றுமொரு குறுந்தொகைப் பாடலில் தலைவன் தலைவியைப் பற்றி ஊரில் எழும் அலரால் தலைவியின் மனம் படும் துன்பத்தை அத்தி மரத்தின் ஒற்றைப் பழமானது அதை உண்ண விரும்பும் ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்டுக் குழைவது போல என்று உவமிக்கிறார்.
“ஏறு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே” (குறந்.24:4-5)
என்ற பாடல் வரிகள் கருத்துக்கு இனிமை பயக்கின்றன.
தலைவன் பிரிந்தமையால் வருந்தும் தலைவி ஒருத்தி உயர்ந்த தலையிலுள்ள பெரிய தேனடையைக் கண்ட இரு காலும் நில்லாது நிற்கவியலாத முடவன் உள்ளங்கையை குவித்து தேனடையைப் பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல தலைவன் அன்பு செய்யாவிட்டாலும் அவரைப் பலமுறை காண்பதால் இன்புறுகிறேன் என்று கூறுகிறாள்.
“பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழ் இருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்” (குறுந்.60:1-3)
என்ற வரிகள் தலைவியின் நிலையை இவ்வுவமையின் மூலம் விளக்குகின்றன. இவை தவிர,
“திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
ஆயிரை ஆர் இரைக்கு அணவந்தா” (குறுந். 128:2-3)
“அருங்கரை நின்ற உப்பு ஒய்சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந் தாக்கு” (குறுந்.165: 3-4)
“பெண்கொலை புரிந்த நன்னன் போல” (குறுந்.292:5)
ஆகிய உவமைகளையும் காணமுடிகிறது. தலைவன், தலைவியின் நிலைக்கு பண்டைய நகரங்களை ஒப்பிட்டுக் கூறுவது இவரது தனிச்சிறப்பு ஆகும்.
அடைகள்
“சங்கப் பாடல்களில் மிகுதியும் இடம்பெறுவது அடைமொழிகளே. இந்த அடைமொழிகள் அகமாந்தர் புறமாந்தர் இருவரின் பல்வேறுபட்ட பண்பு நலன்களை வெளிப்படுத்தத் திட்டமிட்டுப் படைத்துக் கொள்ளப்பட்டனவாக உள்ளன” என்பார் பெ.மாதையன்.
இவரது பாடல்களில் பெயரடை, வினையடைகள் இடம்பெற்று மிளிர்கின்றன. சான்றாக,
“பல்இருங் கூந்தல்” (குறுந். 19)
“கருங்கால் வேம்பின்” (குறுந். 24)
“வெண்கோட்டு அதவத்து” (குறுந். 24)
“குன்ற நாடன்” (குறுந். 36)
“நெடுவரை பெருந்தேன், இருங்கால் முடவன்” (குறுந்.60)
“வன்கட் சூழ்ச்சி” (குறுந். 73)
“திண் தேர்ப்பொறையன்” (குறுந். 128)
“இரும் பல் கூந்தல்” (குறுந். 165)
“எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்” (குறுந்.199)
“ஒள்நுதல் அரிவை” (குறுந். 292)
“வெண்கடைச் சிறுகோல்” (குறுந்.298)
ஆகிய சொற்கள் பெயரடைகளாக அமைந்து பாடலுக்கு அழகூட்டுகின்றன.
அடுக்குச் சொற்கள்
ஒரு சொல்லை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதன் மூலம் சொல்ல வந்த கருத்து உறுதிப்படும். இதன் மூலம் கருத்துகள் வலிமை பெறும். மொழிநடையின் மிகச்சிறந்த உத்தியாக அடுக்குச் சொற்கள் பயன்படுத்துவதைக் கூறலாம். பரணர் பாடல்களிலும் இவ்வடுக்குச் சொற்களைக் காணமுடிகிறது. சான்றாக,
“தொடுவழித் தொடுவழி நீங்கி,
விடுவழி விடுவழிப் பரத்தலானே” (குறந். 399)
ஆகிய பாடல் வரிகள் அமைகின்றன.
எதுகை நடை
பரணர் பாடல்களில் எதுகை நடை அமைந்து சிறந்த ஓசை நயத்தைத் தருகின்றன. அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருதல் எதுகையாகும்.
“துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களன் ஆக” (குறுந். 36:2,3)
“உட்கைச் சிறுகுடை கோலிக் கீழ் இருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே” (குறுந். 60:3-6)
முதலிய பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கன.
முடிவுரை
பரணர் பாடல்கள் சங்கத் தமிழர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் மொழிநடையில் உவமைகள், அடுக்குச் சொற்கள், அடைகள், எதுகை நடை ஆகிய உத்திகளைப் பயன்படுத்தி பாடலைச் சிறக்கச் செய்துள்ளமையும் அறிய முடிகிறது. பரணர் அதிக அளவில் உவமைகளையும் அடைகளையும் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது பாடல்கள் அவர் காலத்து மன்னர்கள் பற்றிய குறிப்புகளை நமக்குத் தருவதோடு எளிமையான அவரது நடையையும் புலப்படுத்துகின்றன.
துணைநூற் பட்டியல்
1. இரா.மோகன், மு.மணிவேல், கி.நாச்சிமுத்து, தூ.சேதுப் பாண்டியன் (ப.ஆ), ஆய்வுக்கோவை (தொகுதி -3) இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. முதற்பதிப்பு மே 2011.
2. இராம.குருமூர்த்தி, (ப.ஆ), சங்க இலக்கியச் சிந்தனைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் முதற்பதிப்பு திசம்பர் 2009.
3. பெ.மாதையன், தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்(கவிதையியல் சமுதாயவியல் நோக்கு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற் பதிப்பு ஏப்ரல் 2009.
4. குறுந்தொகை -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.