அறிமுகம்தமிழரது அரசியல் சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான முக்கியத்துவம் மிக்க பல நூல்களை வெளியிட்டுவரும் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை, கடந்த வருடம் (2024) ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைச் செம்பதிப்பாக வெளியிட்டது. பதிப்பு வரலாற்றில், இதுவரை எட்டுப் பதிப்புகளைக் கண்ட இந்த நூல், திருத்திய செம்பதிப்பு எனும் புதிய பதிப்போடு ஒன்பதாவது பதிப்பினையும் கண்டுள்ளது. மலையக நூற்பதிப்பு வரலாற்றில் இந்த நூல் மாத்திரமே ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல். இது ஒரு வரலாற்றுச் சாதனை. மகிழ்வு தரும் விடயமுங்கூட.
பலரும் கண்டுகொள்ளாத, மலையகத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்றான இந்த நூலை, கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையினர் தேடிக் கண்டெடுத்து, திருத்திய செம்பதிப்பாக வெளியிட்டமை, மலையக நூற்பதிப்பு வரலாற்றில் முதன்மையான செயற்பாடாக அமைகிறது. இந்த நூலின் பதிப்பு வரலாற்றையும் இதன் மீதான விசாரணையையும் மேற்கொள்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
பதுளை வ. ஞானபண்டிதன்
‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூலின் ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்த, பதுளை வ.ஞானபண்டிதன் அவர்கள். அவர், பதுளை சமத்துவ சங்கத் தலைவர் பதவியிலிருந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிரான பிரசாரகராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர். சமூக சமத்துவப் போராளியாகத் திகழ்ந்தவர். சாதிய அடக்குமுறைக்கு எதிராக, அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களும் நிகழ்த்திய பிரசங்கங்களும் அவருக்கு எதிர்ப்பினை ஏற்படுத்தின. எனினும், சமூக மற்றும் சமயப் பணிகள் குறித்துத் தான்கொண்ட இலட்சியத்தில் அவர் பின்வாங்கியதில்லை. இதனை, அவரது வாழ்வு குறித்த பதிவுகள் காட்டிநிற்கின்றன.
“முப்பதுகளில் தீவிர சாதிய மறுப்பைப் பிரசங்கித்து, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கருத்தோட்டங்களை மலையக மக்கள் மத்தியில் ஊன்றச் செய்தவர்களில், பதுளை வ.ஞானபண்டிதனின் பங்கு முக்கியமானது” என்று மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்’ (2023:142) என்னும் நூலில் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத் தக்கது.
ஞானபண்டிதன், பதுளையின் லோவர் வீதியில், பத்துக்கும் மேற்பட்ட வர்த்தகக் கடைகளின் உரிமையாளராக இருந்தாலும், சமூக மற்றும் சமயப் பணிகளில் முன்னின்று உழைத்தவர். தேசபக்தர் கோ. நடேசையர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர். நடேசையர் தஞ்சையில் இருந்தபோது வெளியிட்ட ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகையில், ஞானபண்டிதன் அவர்களின் வர்த்தக விளம்பரங்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத் தக்கது.
கதிர்காம ஆசையும் ஆராய்ச்சியும்
கதிர்காமத் தலத்திற்குத் தொண்டுசெய் உளம் பூண்டிருந்த ஞானபண்டிதன், பதுளையில் 500 பேரைத் திரட்டி, கதிர்காமத் தொண்டர் படை அமைத்துச் செயலாற்றியவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கதிர்காமம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கதிர்காமம் குறித்த இந்த முக்கியமான நூலை எழுதியவர்.
காலனிய அறிக்கைகள், ஆங்கிலக் கட்டுரைகள், தொன்மக் கதைகள், செவிவழிச் செய்திகள், நீதிமன்ற வழக்குப் பதிவுகள், நேர்காணல்கள் ஆகிய அனைத்தையும் நுட்பமாக ஆராய்ந்து, கதிர்காமம் குறித்த தனது நூலில் வெளிப்படுத்தியவர்.
கதிர்காமத்தில் இந்துக்களின் நலன்காக்க, பதுளை நீதிமன்றத்தில், தனது சொந்தச் செலவில் வழக்காடி, உயர்நீதிமன்றம்வரை சென்று, நேரிய தீர்ப்பைப்பெற்று வெற்றி கண்டவர். சிங்களவர் கைப்பிடிக்குள் பௌத்தத் தோரணை பெற்றிருக்கும் இக்காலக் கதிர்காமத்திலிருந்து வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், ஞானபண்டிதன் அவர்களது பணிகளின் முக்கியத்துவம் புலனாகும். அவர் எழுதிய நூல், எத்தகையதொரு வரலாற்றுப் பொக்கிசம் என்பதும் தெளிவாகும்.
கதிர்காமம் குறித்து ஞானபண்டிதன் எழுதிய ஆராய்ச்சி நூல், கதிர்காமத் தலத்தின் கடந்த காலத்தையும் அவர் வாழ்ந்த சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டுவது. பலரும் ஆராய்ந்து அறியத் தயங்கும் சட்ட மூலங்களில் கைவைத்து ஆராய்ந்து வெளிப்படுத்துவது. தலத்தின் தொன்மை வரலாற்றையும், காலனிய கால நிலவரங்களையும், அவர் எழுதிய கால நிலவரங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது. ஆராய்ச்சிப் பண்புடையது. சமய பண்பாட்டுத் தளத்தில் தனித்து உணரப்பட வேண்டியது. வரலாற்று வரைஞர்களுக்கு வழிகாட்டியாய் அமைவது. விவாதத்திற்கும் உரியது. இவற்றினால், சமய பண்பாட்டு அரசியல் வெளியில் அவரது நூல் அதிக கவனத்திற்கும் உரையாடலுக்கும் உள்ளானது. அந்த நூல் கால ஓட்டத்தில் மறைக்கப்பட்டும் கருத்தியல் முரண்பாட்டால் மறுக்கப்பட்டும் போனமை, துயரமானது.
பருத்தித்துறைச் சைவப்பிரகாச சபையின் ‘சைவபோதினி’
சைவசமய வளர்ச்சி கருதி, பருத்தித்துறைச் சைவப் பிரகாச சபை வெளியிட்ட மாதாந்தப் பத்திரிகையே, ‘சைவ போதினி’. இப்பத்திரிகை, ‘மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்’, ‘அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே’ ஆகிய மகுட வாசகங்களைத் தாங்கி வெளிவந்தது.
இப்பத்திரிகை, 1939ஆம் ஆண்டிலிருந்து, பருத்தித்துறையில் அமைந்த சைவபோதினி யந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியாகியது. பதுளையிலிருந்த ஞானபண்டிதன் அவர்கள், பருத்தித்துறையில் இருந்து வெளிவந்த, ‘சைவபோதினி’ என்ற சைவ சமயப் பத்திரிகையில், கதிர்காமக் கந்தன் பற்றிய தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை, தொடராக எழுதினார்.
‘சைவபோதினி’ அளித்த கௌரவம்
தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வ.கணபதிப்பிள்ளை முதலாய அறிஞர்களின் கட்டுரைகளையும் மேலைப்புலோலி மகாவித்வான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் நூல்கள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் ‘சைவ போதினி’ தாங்கி வெளிவந்தது.
வித்வான்கள் பலரது வியாசங்களை வெளியிட்ட இந்தப் பத்திரிகை, ஞானபண்டிதன் அவர்கள் எழுதிய கதிர்காமக் கந்தன் தொடர்பான கட்டுரைகளை உவந்தேற்றுப் பிரசுரித்தமையானது, ஞானபண்டிதன் அவர்களின் புலமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்பட வேண்டியது. புலமையாளர் ஒருவருக்கு, ‘சைவபோதினி’ வழங்கிய கௌரவமே இதுவெனில் மிகையாகாது.
‘கதிர்காம முருகன்’ - முதலாம் பதிப்பு
சைவபோதினி சந்தாதாரர்கள் மாத்திரமே வாசித்துப் பயன் பெற்றுவந்த ஞானபண்டிதனின் கட்டுரைகளைத் தொகுத்து, ‘கதிர்காம முருகன்’ என்ற தலைப்பில், பருத்தித்துறைச் சைவப்பிரகாச சபையினர் தங்களின் பிரசுரமாகவே, பிரபாதி வருடம் (1940) சித்திரை மாதம் இந்நூலை வெளியிட்டனர். இதுவே இந்நூலின் முதற் பதிப்பு ஆகும். இந்நூலின் முன் அட்டையில், “வதுளை திரு. வ.ஞானபண்டிதன் அவர்களால் ‘சைவபோதினிக்கு’ எழுதியுதவியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்பதிப்பான இந்நூலில், எவருடைய முன்னுரையோ அணிந்துரையோ இடம்பெறவில்லை. இந்த முதற் பதிப்பில், 2000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
இரண்டாம் மூன்றாம் பதிப்புகள்
இந்த நூலின் இரண்டாம், மூன்றாம் பதிப்புகள், ஈழத்திலும் தமிழகத்திலும் இதுவரை தேடியும் கிடைக்கப்பெறவில்லை. எனவே அவை பற்றிய விரிவான செய்திகள் எவற்றையும் கூறமுடியாது. ஆனால், அவை வெளிவந்துள்ளன என்பதை, கிடைக்கப் பெற்ற நான்காம் பதிப்பில் வரும் ஒரு குறிப்பை வைத்து, உறுதிசெய்ய மாத்திரமே முடிகிறது.
அந்தக் குறிப்பானது, ‘இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்புகளின்போது, ஒவ்வொரு பதிப்பிலும் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன’ என்ற செய்தியைத் தருகிறது. அக்காலத்தில் 100 பிரதிகள் அச்சிடும் செலவு மூன்று ரூபாய் என்பது ஆச்சரியமானது. அவ்வாறாயின், பிரதி ஒன்றின் அடக்க விலை மூன்று சதம் என்பதாக இருந்திருக்கிறது. வியப்புக்குரியதுதான்!
இத்தகைய விபரங்களைத்தான், நான்காம் பதிப்பில் உள்ள குறிப்பின் துணைக்கொண்டு இப்போது கூறமுடியும்.
நான்காம் பதிப்பு
இந்நூலின் நான்காம் பதிப்பு 1941ஆம் ஆண்டு வெளிவந்தது. முதற் பதிப்பில், ‘கதிர்காம முருகன்’ என்றிருந்த தலைப்பு, ‘ஸ்ரீ கதிர்காம முருகன் - கதிர்காமம் கந்தசுவாமி கோயில்’ என இப்பதிப்பில் மாற்றம் பெற்றுள்ளது.
‘பதுளை சமத்துவ சங்கத் தலைவர் திரு. வ. ஞானபண்டிதன் அவர்;கள் எழுதியது’, என்றும் ‘கோட்டாறு மதுரகவி எஸ்.எஸ். நாதன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது’ என்றும் இப்பதிப்பின் முன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிப்பில், ‘ஆர். எம். கே. அச்சியந்திரசாலை, பழனி’ என்ற குறிப்பு இருப்பதால், இப்பதிப்பு தமிழ்நாட்டில் அச்சிடப்பட்டது எனத் துணிய முடிகிறது.
இந்நூலின் நான்காம் பதிப்பான இந்தப் பதிப்புவரையும், ‘நூலாசிரியர் திரு. வ. ஞானபண்டிதன்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கு பதிப்புகள் வெளிவந்த காலகட்டத்தில், ஞானபண்டிதன் அவர்கள் உயிரோடிருந்ததால், நான்கு பதிப்புகளிலும் ‘எஸ். எஸ். நாதன் வெளியீட்டாளர்’ என்ற நிலையிலேயே இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.
ஐந்தாம் பதிப்பு
இந்த நூலின் ஐந்தாம் பதிப்புத் தொடர்பான குழறுபடிகள் ஆய்வுக்கு உரியவை. எஸ். எஸ். நாதன் அவர்கள், இந்த நூலின் பதிப்பு ஒன்றை 1965ஆம் ஆண்டு வெளிக்கொண்டு வந்தார். இதன் முதலாவது பக்கத்தில், ஐந்தாம் பதிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறான பதிவு என்பது எமது கருத்து. 1965ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு பதிப்பு வந்திருக்கிறது. ஆனால், அப்பதிப்பில் வெளிவந்த ஆண்டு குறித்த விபரம் தெளிவாகப் பதிவாகவில்லை. எனவே, அது பற்றிச் சிறிது அலச வேண்டும்.
கலண்டர் விளம்பரம்
1965ஆம் ஆண்டுக்கு முன்னரான பதிப்பின் இறுதிப் பக்கத்தில், “ஒவ்வொரு வருடமும் பிற்பகுதியில் தவறாது வெளிவருகின்றது - லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர் - உங்கள் அபிமானத்தைப் பெற்றுள்ள அறிவுக் களஞ்சியம் - 1965-ம் ஆண்டுக் கலண்டருக்கு இன்றே ஆடர் செய்யுங்கள்” என ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
இந்த விளம்பரத்தைக் கூர்ந்து அவதானித்தால், 1965ஆம் ஆண்டுக் கலண்டருக்கான விளம்பரம் ஒன்று, அதற்கு முந்திய வருடமான 1964ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதைப் புரிந்துகொள்ள இயலும். எனவே, 1964ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பே, இந்த நூலின் ஐந்தாம் பதிப்பு எனத் துணிந்து கூறமுடியும்.
சாந்திக் குறிப்பு
1964ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பே ஐந்தாவது பதிப்பு என இன்னொரு விடயத்தாலும் உறுதிசெய்யலாம். அதாவது, 1964ஆம் வெளிவந்த இப்பதிப்பின் இரண்டாவது பக்கத்தில், ‘சாந்தி’ என்ற தலைப்பில், எஸ். எஸ். நாதன் எழுதிய பின்வரும் குறிப்பினூடாகவும் அதை உறுதி செய்யலாம்.
“இப்புத்தகம் எழுதி முடிந்தபோது, எனது அரசியல் தந்தையும், பதுளை சமத்துவ சங்க ஸ்தாபகரும், தமிழறிஞருமான தலைவர் வ. ஞானபண்டிதன் அவர்கள் இறையடி எய்தினார்கள். இக்கருமத்தை நிறைவேற்றினாலொழிய மனச்சாந்தி அடையாது என இதனைப் பிரசுரித்துள்ளேன். அவர்களின் ஆத்மா சாந்தியில் நிலவட்டும்”
மேற்குறித்த குறிப்பு, ஞானபண்டிதன் அவர்கள் காலமாகிய பின்னரேயே அவரது நினைவாக ஐந்தாவது பதிப்பு 1964ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதைத் தெரிவிக்கிறது. ஞானபண்டிதன் அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளின்படி, அவர் 1964ஆம் ஆண்டு காலமானார். நான்காம் பதிப்பு வரையும் அவர் உயிருடன் இருந்தார். நான்காவது பதிப்புக்கும் ஐந்தாவது பதிப்புக்கும் 23 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த ஐந்தாவது பதிப்பும் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் பெயர் நீக்கம்
‘ஸ்ரீ கதிர்காம முருகன்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த ஐந்தாவது பதிப்பில் ‘வ. ஞானபண்டிதன்’ என்ற பெயர் நீக்கப்பட்டு, ‘தொண்டன் ஆசிரியர் திரு. எஸ். எஸ். நாதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பதிப்பில், ‘ஈழமேகம்’ ஆசிரியர் எம். ஐ. எல். பக்கீர்தம்பி அவர்களது அணிந்துரை இடம்பெற்றுள்ளது. அந்த அணிந்துரையில், “திரு. நாதன் அவர்களின் பன்நெடுங்கால அயார உழைப்பின் பயனாய் ஆய்ந்தளிக்கப்பட்ட ஸ்ரீ கதிர்காம முருகன் என்னும் சரித்திரப் பொதிகையாய் அமைந்த நூலை என் சிற்றறிவுக்கியைய நனி நுணுகி ஆராய்வு செய்தேன்” என அமையும் பதிவு ஆச்சரியமளிக்கிறது.
எஸ். எஸ். நாதன் அவர்கள் தாமே வாங்கி உள்ளடக்கிய மேற்குறித்த அணிந்துரையில், அவரே ஆசிரியர் எனும் தகுதியைப் பெறும் வரிகளை அச்சிட உவந்தமை, எற்புடையதோ என எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் அது எதற்காக என்ற என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
“கொழும்பு. லீலா ஸ்டோர்ஸ், நியூ லீலா அச்சக அதிபர், லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர் உற்பத்தியாளர் உயர்திரு. ச. த. சின்னத்துரை அவர்களின் பேராதரவால் அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது” என்ற குறிப்போடு வெளிவந்தது இந்த ஐந்தாவது பதிப்பு.
ஐந்து இரண்டான சித்து
இந்த ஐந்தாவது பதிப்பில், இறுதிக்கு முன்னரான பக்கத்தில், “முதற் பதிப்பு முற்றாக முடிந்துவிட்டது. இது இரண்டாம் பதிப்பு. முதற் பதிப்பைப் பாராட்டி இலங்கையின் பிரபல தமிழ் தினசரியான வீரகேசரி நல்ல கண்ணோட்டத்தில் கணித்து அபிப்பிராயம் வெளியிட்டது. பண்டிதர்களும். ஆசிரியர்களும் தங்களின் உள்ளக் கருத்தை, நன்றியறிதலுடன் எழுதிப் பாராட்டியுள்ளார்கள். அன்பளிப்பாகக் கொடுத்துவருகிறோமாயினும் பிரதிகள் தபாலில் வேண்டுவோர் 15 சதமுத்திரை அனுப்பிவைத்து ஆதரிக்கவேண்டும்” என்ற குறிப்பு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
‘முதற் பதிப்பு முற்றாக முடிந்துவிட்டது. இது இரண்டாம் பதிப்பு’ என்று எஸ். எஸ். நாதன் எழுதியிருப்பதைக் கூர்ந்து அவதானித்தால்தான், அதற்கு விளக்கம் காணமுடியும்.
ஞானபண்டிதன் மறைவுக்குப் பின்னர், நியூ லீலா அச்சக அதிபர் திரு. ச. த. சின்னத்துரை அவர்களின் ஆதரவில் நாதன் இதனை வெளியிட்டார். தான் வெளியிட்ட இந்தப் பதிப்பை, ‘ஐந்தாவது பதிப்பு’ என்றே அவர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் இரண்டாவது பதிப்பு என்று ஏன் பதிவு செய்தார்?
தொகுத்தோன் ஆசிரியனாதல்
ஞானபண்டிதன் அவர்களின் மறைவின் பின்னர், எஸ். எஸ். நாதன், தான் வெளியிட்ட பதிப்புகளில், நூலை எழுதிய ஞானபண்டிதனின் பெயரை நீக்கி, ‘எஸ். எஸ் .நாதன் தொகுத்தது’ என்றே குறிப்பிட்டுள்ளார். அதனால்தான், இப்போது தன் பெயரை ஆக்கியோனின் இடத்தில் வைக்க முனைந்து, இந்த ஐந்தாவது பதிப்பை, ‘இரண்டாம் பதிப்பு’ என்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆறாம் பதிப்பு
இந்த நூலின் ஆறாவது பதிப்பு 1965ஆம் ஆண்டு வெளியானது. 1965ஆம் ஆண்டு வெளியான இந்த நூலின் முதலாவது பக்கத்தில், ஐந்தாம் பதிப்பு எனக் குறிப்பிட்டிருத்தல் தவறு என்பது முன்னரே கூறப்பட்டது.
வரலாற்று ஆய்வு ஒழுங்கில் அது ஐந்தாவது பதிப்பல்ல. அது, ஆறாவது பதிப்பே. பதிப்பு வரலாற்றின் செம்மை கருதுவோர் இந்தத் திருத்தத்தை ஏற்று உவப்பர்.
பெயர் மாறிய முருகன்
இந்த ஆறாவது பதிப்பில், ‘கதிர்காமத் திருமுருகன்’ என்று இந்த நூற்பெயர் மாறியுள்ளது.
“இச்சுவடியின் பெயர் ‘கதிர்காமத் திருமுருகன்’ என்றாவது ‘திருக்கதிர்காம முருகன்’ என்றாவது இருத்தல் வேண்டும் என்பது என் விழைவு” என்று தமிழறிஞர் கந்தமுருகேசனார் அவர்கள், இப்பதிப்பிற்கு நல்கிய ஆசியுரையில், ஆலோசனையாகக் கருத்துக் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்தை ஏற்று, இந்தப் பதிப்பில், நூலின் தலைப்பை எஸ்.எஸ். நாதன் மாற்றியிருக்க வேண்டும்.
காணாமல் போன ஆசிரியர்
இந்தப் பதிப்பில் ‘ஆசிரியர் வ. ஞானபண்டிதன்’ என்பது நீக்கப்பட்டுள்ளது. ‘தொண்டன் ஆசிரியர் திரு. எஸ். எஸ். நாதன் அவர்கள் தொகுத்தது’ என்றே முதலாவது பக்கப் பதிவு தெரிவிக்கிறது.
“இப்புத்தகம் எழுதி முடித்தபோது, எனது அரசியல் தந்தையும், பதுளை சமத்துவ சங்க ஸ்தாபகரும் தமிழறிஞருமான தலைவர் வ. ஞானபண்டிதன் அவர்கள் இறையடி எய்தினார்கள். இக்கருமத்தை நிறைவேற்றினாலொழிய மனச்சாந்தி அடையாது என இதனைப் பிரசுரித்துள்ளேன். அவர்களின் ஆத்மா சாந்தியில் நிலவட்டும்” என்று எஸ். எஸ். நாதன் அவர்கள், தான் ஐந்தாவது பதிப்பில் குறிப்பிட்டதை மீளவும் ‘சாந்தி’ என்ற தலைப்பில் இப்பதிப்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
‘வ. ஞானபண்டிதன் எழுதியது’ என்று ஐந்து பதிப்புகள் கண்ட அதே பிரதியே, ஆறாவது பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ‘இப்புத்தகம் எழுதி முடித்தபோது’ என்ற எஸ். எஸ். நாதனின் குறிப்பு மேலதிக விளக்கத்தைக் கோரி நிற்கிறது. இந்த ஆறாம் பதிப்பில், எம். ஐ. எல். பக்கீர்த்தம்பி அவர்களின் உரை, ஐந்தாம் பதிப்பில் இடம்பெற்றுள்ளவாறே, மீளவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சி.அ.இராமச்சந்திரன், கந்தமுருகேசனார் ஆகியோரின் உரைகள் இந்த ஆறாம் பதிப்பில் முதன்முதலாக இடம்பெற்றுள்ளன. இப்பதிப்பு யு.ஆ.P.ளு. செல்லச்சாமிநாடார் அன்ட் பிரதர்ஸ் அனுசரணையில் வெளிவந்துள்ளது.
தெரிந்து செயல்
சி. அ. இராமச்சந்திரன் அவர்கள் இந்த ஆறாம் பதிப்புக்கு வழங்கிய மதிப்புரையில், “ஸ்ரீ எஸ். எஸ். நாதன் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ கதிர்காம முருகன் என்ற புத்தகம் எனது பார்வைக்காக இலவசமாக அனுப்பப்பட்டது” என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் பதிப்பில் ‘இவ்வெளியீடு’ என்ற தலைப்பில் யு.ஆ.P.ளு. செல்லச்சாமிநாடார் அன்ட் பிரதர்ஸ் வழங்கிய உரையில், “கதிர்காமத் திருமுருகன் 5-ம் பதிப்பாக வெளிவருகிறது. இந்நூலாசிரியர் திரு. எஸ். எஸ். நாதன் அவர்களின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறோம்” என்று கூறுவது அதைவிடவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஐந்தாவது பதிப்பை, அணிந்துரை மற்றும் மதிப்புரைகளுக்காகக் கொடுத்து, அவற்றை வாங்கிய நாதன் அவர்கள், அவற்றினைச் சீர்தூக்கி ஆராயாமல் தானே பதிப்பித்த இப்பதிப்பில் அடக்கியிருக்கமாட்டார் எனக் கூறவியலாது. காரணம், நூலாசிரியர் பெயரில் ஏற்பட்ட மாற்றமே.
ஏழாம் பதிப்பு
‘தொண்டன்’ ஆசிரியரும், பதுளை சமத்துவ சங்கத்தினதும் கதிர்காமத் தொண்டர் படையதும் காரியதரிசியுமான எஸ். எஸ். நாதன் அவர்கள் 1973ஆம் ஆண்டு காலமானார்.
அவரது மகன் திரு. சி. சிவகுருநாதன், 2012ஆம் ஆண்டு, இந்நூலின் ஏழாவது பதிப்பை வெளிக்கொண்டு வந்தார். ‘கதிர்காமத் திருமுருகன்’ என்று தலைப்பிட்டு, அடைப்புக் குறிக்குள் ‘வரலாற்று ஆய்வு நூல்’ என்று துணைத் தலைப்பிட்டு, ‘ஆக்கியோன் மதுரகவி எஸ். எஸ். நாதன்’ என்று அச்சிட்டு அவர் அதனை வெளிக்கொண்டு வந்தார்.
கூடிவாழ்ந்து ஆசிரியர் ஆதல்
முன்னைய இரண்டு பதிப்புகளில் ‘தொகுத்தவர்’ என்று குறிப்பிடப்பட்ட எஸ்.எஸ். நாதன், இப்பதிப்பில் ‘ஆசிரியர்’ என்ற நிலைக்கு மாற்றப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமரர் எஸ். எஸ். நாதன் அவர்களின் புதல்வர் திரு. சி. சிவகுருநாதன் அவர்கள், தான் வெளிக்கொண்டு வந்த பதிப்பில், தனது உரையில், “மேலும் அவரால் (எஸ்.எஸ்.நாதனால்) ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள ‘கதிர்காமத் திருமுருகன்’ என்னும் ஆய்வு நூலை, அவரோடு கூடிவாழ்ந்த ஒருவரும், அவரின் அரசியல் தந்தையும் பதுளை சமத்துவ சங்க ஸ்தாபகரும் தலைவருமான அறிஞர் பெருமகனார் வ. ஞானபண்டிதன் அவர்கள் இறையடி எய்தியதையிட்டு அன்னாரின் ஞாபகார்த்தமாய் 1964ஆம் ஆண்டு மூன்றாவது பதிப்பாய் வெளியிட்டிருந்தார்” என்று எழுதும்போது, இந்நூலை ஆக்கிய ஞானபண்டிதன் அவர்கள், எஸ். எஸ். நாதன் அவர்களுடன் கூடிவாழ்ந்த ஒருவராக நிறுத்தப்பட்டிருப்பது வியப்பை அளிக்கிறது.
‘என்னுரை’ என்ற தலைப்பில் ‘கதிர்காமத் திருமுருகன்’ நூலின் பதிப்புகள் பற்றி, சி.சிவகுருநாதன் தந்திருக்கும் தரவுகள் மிகவும் தவறானவை. ‘கதிர்காமத் திருமுருகன்’ நூலின் பதிப்பு வரலாற்றை அவர் முறையாக அறிந்திருக்கவில்லை என்பதை அவரது ‘என்னுரை’ தெளிவாகக் காட்டிநிற்கிறது.
வளரும் நூல்
முதல் பதிப்பு 23 பக்கங்களிலும், நான்காம் பதிப்பு 14 பக்கங்களிலும், ஐந்தாம் பதிப்பு 56 பக்கங்களிலும் வெளியாகியுள்ளன. முதலாம் பதிப்பில் காணப்படாத சில வாக்கியங்கள் நான்காம் பதிப்பில் காணப்படுகின்றன. உதாரணமாக, “இன்றைய சிங்கள மந்திரிமார் திரு. பண்டாரநாயக்கா, சேனநாயக்க ஆகியவர்கள் ஆதாரமின்றி, ஆராய்ச்சியின்றி, உண்மையறியாமல் அர்த்தமற்ற முறையில் இலங்கை சிங்களவருக்கே என்று பறைசாற்றுகிறார்கள்” என்ற பகுதியைக் குறிப்பிடலாம்.
ஞாபண்டிதன் எழுதிய நூலை, அவர் இறக்கும் வரையிலும் சேகரித்த குறிப்புகளை வைத்து, பின்னாளில், எஸ். எஸ். நாதன் அவர்கள் தனது பதிப்புகளில் சிறிது விரித்து எழுதியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.
‘விபூதிமலை’ பற்றிய சேர்க்கை ஞானபண்டிதன் சேகரித்த குறிப்புகளை வைத்து, நாதன் எழுதிய சேர்க்கையாக இருக்கலாம். ஞானபண்டிதனின் மொழிநடையிலும், நாதன் சிறிது மாற்றம் செய்தே இதைச் சாதித்துள்ளார் எனலாம்.
எட்டாம் பதிப்பு
ஞானபண்டிதன் ஆக்கிய ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூல் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எட்டாவது பதிப்பைக் கண்டது. தமிழக அரசு பழநியில் நடாத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் முதலரங்கில், முதல் நிகழ்வாக எட்டாவது பதிப்பான செம்பதிப்பு வெளியிடப்பட்டது. இப்பதிப்பின்போது 1000 பிரதிகள் அச்சிடப்பட்டன.
ஞானபண்டிதனின் ஆய்வுக்கட்டுரையின் உபதலைப்புகளுக்கு ஆதாரம் காட்டும் புகைப் படங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகளையும் இந்தப் பதிப்புத் தாங்கி வெளிவந்தது. இதனைத் தமிழக ஆய்வாளர்கள் மத்தியில் இந்தப் பதிப்பு கவனிப்புக்கு உரியதாகியது.
ஒன்பதாவது பதிப்பு - திருத்திய செம்பதிப்பு
திருத்திப் புதுக்கிய செம்பதிப்பாக, ஒன்பதாவது பதிப்பு 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் வெளியானது. யாழ்ப்பாணத்தில் உள்ள குரு பதிப்பகத்தில் இது அச்சிடப்பட்டது.
எட்டு மற்றும் ஒன்பது ஆகிய இவ்விரு பதிப்புகளையும், ஈழத்தில் மலையக நூல்களை வெளியிடுவதில் புகழ்பெற்ற கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை வெளியிட்டது.
அறிஞர் மு. நித்தியானந்தன், வெளியீட்டாளர் எச். எச். விக்கிரமசிங்க ஆகியோரின் அரிய முயற்சியில் இந்த இரு பதிப்புகளும் வெளியாகின. ஈழத்தின் சிறந்த நூல் வடிவமைப்புக் கலைஞர் ஆறு. பிரசாத் அவர்கள்; வரலாறு பேசும் புகைப்படங்கள் பக்கங்கள் எங்கும் விரவிவரச் சிறப்புற இப்பதிப்புகளை வடிவமைத்துள்ளார்.
இருவேறு முகப்புகள்
ஒன்பதாவது பதிப்பில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் எனத் தனித்தனியான இருவேறு முகப்பு அட்டைகள் வடிவமைப்பட்டு வெளியிடப்பட்டன.
இலங்கைக்கான பதிப்பின் நூல் முகப்பைக் காலனிய ஆட்சிச் சின்னத்துடன்கூடிய கதிர்காமம் பெரிய கோயில் நுழைவாயிற் கோபுரப் புகைப்படம் கொண்டும், மலேசியாவுக்கான நூல் முகப்பை, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கதிர்காம யாத்திரை ஒன்றின்போது, ஜூலியா மார்கரெட் கெமரூன் என்ற பெண் புகைப்படக் கலைஞர் 1875 - 1879 என்ற காலகட்டப் பகுதிக்குள் எடுத்த புகைப்படம் கொண்டும் ஆறு. பிரசாத் அழகுற வடிவமைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு இரு மாதங்களுக்குள் (ஆகஸ்ட் - செப்டம்பர்) இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுத் தீர்ந்தமையும் இந்த நூலின் ஒரு வரலாற்றுச் சாதனை எனலாம்.
நிறைவாக
இந்த நூல் இன்னும் பல பதிப்புகளைக் காணும் வாய்ப்புத் தெரிகிறது. இன்னும் பல்லாயிரம் பிரதிகள் அச்சேறி உலாவரும் காட்சி, காலத்தால் கனிந்திருக்கிறது. ஈழத்தின் பல்லின பல் பண்பாட்டு வெளியில், தொடர் உரையாடலுக்கான பொருளாகக் கதிர்காமம் அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.
உசாத்துணை நூல்கள்
ஞானபண்டிதன், பதுளை வ. (1940 - முதல் பதிப்பு) கதிர்காம முருகன் - வதுளை திரு. வ.ஞானபண்டிதன் அவர்களால் ‘சைவபோதினிக்கு’ எழுதியுதவியது, பருத்தித்துறை: சைவப் பிரகாச சபை.
ஞானபண்டிதன், பதுளை வ. (1941 - நான்காம் பதிப்பு) ஸ்ரீ கதிர்காம முருகன் - கதிர்காமம் கந்தசுவாமி கோயில், (கோட்டாறு மதுரகவி எஸ்.எஸ். நாதன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது), பழனி: ஆர். எம். கே. அச்சியந்திரசாலை.
ஞானபண்டிதன், பதுளை வ. (1965 - ஐந்தாம் பதிப்பு) கதிர்காமத் திருமுருகன், (தொண்டன் ஆசிரியர் திரு. எஸ். எஸ். நாதன் தொகுத்தது) கொழும்பு: நியூ லீலா அச்சகம்.
நாதன், எஸ், எஸ். (தொ.ஆ) (1964 - ஆறாம் பதிப்பு) ஸ்ரீ கதிர்காம முருகன், கொழும்பு: லீலா அச்சகம்.
நாதன், எஸ், எஸ். மதுரகவி. (2012 - ஏழாம் பதிப்பு) கதிர்காமத் திருமுருகன் (வரலாற்று ஆய்வு நூல்), சி. சிவகுருநாதன் வெளியீடு.
நித்தியானந்தன், மு. (2023) மலையகம்: சிறுமை கண்டு பொங்குதல், கொழும்பு: கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை.
ஞானபண்டிதன், பதுளை வ. (2024 ஆகஸ்ட் - எட்டாம் பதிப்பு - சென்னை) கதிர்காமத் திருமுருகன், (செல்லத்துரை சுதர்சன் பதிப்பு), கொழும்பு: கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை.
ஞானபண்டிதன், பதுளை வ. (2024 செப்டம்பர் - ஒன்பதாம் பதிப்பு) கதிர்காமத் திருமுருகன், (செல்லத்துரை சுதர்சன் பதிப்பு), கொழும்பு: கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை.
கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை பொன்விழா மலர் (1975) கொழும்பு - நியூ லீலா அச்சகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.