*ஓவியம் AI
முன்னுரைபுலவி என்பது காதலில் ஏற்படும் ஊடல் அல்லது செல்லக் கோபம் ஆகும். இது தம்பதியரிடையே தோன்றும் ஒரு குறுகிய காலப் பிரிவைக் குறிக்கிறது. இந்த ஊடல், கூடலின்பத்தை அதிகரிக்கவும், காதலின் ஆழத்தை மேலும் சிறப்பிக்கவும் உதவுகிறது. திருவள்ளுவர், காமத்துப்பால் கற்பியலில் உள்ள 'புலவி' அதிகாரத்தில், இந்த ஊடலின் நுணுக்கங்களை விவரித்துள்ளார்.
கம்பரும் தம் இராமாயணத்தில் புலவி நுணுக்கம் குறித்து நூலின் சில இடங்களில் கூறிச்சென்றுள்ளார்.அவற்றைக்குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
ஊடல்
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் காதல் வாழ்க்கையில் பெண், ஆண் தனக்கு மட்டுமே உரியவன் என எண்ணுவாள். இத்தகைய மனநிலை ஆணுக்கும் இருக்கலாம். பெண் இப்படி எண்ணும்போது, ஆண் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என தெரிய வரும்போது, அவள் அவனிடம் ஊடுவாள். அதாவது சிறு சண்டை இடுவாள்.
பரத்தை ஒழுக்கம் புரிந்து தலைவன் மீண்டும் வந்து இல்லம் புகுகையில் அவனோடு தலைவி வேறுபடும் பிணக்கு நிலை ஊடல் எனப்படும். காதல் வாழ்வில் ஊடல் இன்றியமையாத சிறப்புடையது. பரத்தை ஒழுக்கம் புரிந்து சென்றானோ என்று தலைவி எண்ணும் போதும், தலைவனுடன் ஊடுவாள்.
ஊடலினுடைய பண்பு
ஊடல், புலவி ,துனி,என்னும் சொற்கள் அகப்பாடலில் ஊடலின் பண்பை விரித்துரைக்கும்.
புலவி என்பது மன வேறுபாடு, (பொய் சினம்)
ஊடல் என்பது புலவி நீட்டம்
துனி என்பது ஊடல் நீட்டம்.
புலவியின் முதிர்ச்சி ஊடல்
ஊடலின் முதிர்ச்சி துனி
திருக்குறளில் புலவி நுணுக்கம்
புலவி நுணுக்கம் என்பது திருக்குறளின் காமத்துப்பால், கற்பியலில் வரும் அதிகாரமாகும். இது காதலிக்கும் இருவருக்கும் இடையில் நிகழும் ஊடல் அல்லது சண்டையை, அதாவது "போலிச் சண்டை" அல்லது "காதல் பிணக்கத்தின் நுட்பமான அம்சங்களை" விவரிக்கும் அதிகாரமாகும். இங்கு புலவி என்பது அன்பில் வெளிப்படும் சிறு சண்டையையும், நுணுக்கம் என்பது அதற்குரிய காரணத்தின் அல்லது காதலின் மறைமுகமான நுட்பங்களையும் குறிக்கிறது.
புலவி:
காதலர் இருவரும் பிணங்கிக் கொள்வதையே ’புலவி’ என்கிறோம். இது காதல் மிகுதியால் ஏற்படும் ஒருவிதமான பிணக்கு.
நுணுக்கம்:
புலவிக்கான காரணம் மிகச் சிறியதாக இருக்கும். அந்தச் சிறிய காரணத்தை பெரிதாக்கி, காதலர் இருவரும் தங்கள் அன்பையும், பரஸ்பர ஆதரவையும் வெளிப்படுத்தும் ஒரு நுட்பமான முறையே ’நுணுக்கம்’ ஆகும்.
திருக்குறளின் 132-வது அதிகாரமான புலவி நுணுக்கம், காதலர் இருவரும் ஊடும்போதும், சண்டையிடும்போதும், அவர்களின் உண்மையான காதல் உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையும், அந்தப் பிணக்கத்தின் நுட்பமான கூறுகளையும் விளக்குகிறது.
செல்லக் கோபம்:
இது உண்மையான வெறுப்பைக் குறிப்பதில்லை; மாறாக, அன்பின் காரணமாக ஏற்படும் விளையாட்டுத்தனமான கோபம்.
ஊடலின் இன்பம்:
புலவி, அதாவது ஊடல், காதலர்களின் இன்பத்தை அதிகரிக்கும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
கம்பராமாயணத்தில் புலவி நுணுக்கம்
காதல் கொண்ட தலைமக்களிடையே ஊடல், புலவி, புலவி நுணுக்கம் எல்லாம் ஏற்படும் என்று கம்பரும் தம் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊடல் குறித்துக் கூறும்போது மானிடப்பிறவி மட்டுமல்லாத தேவமகளிர், அரக்கமகளிர்,வித்தியாதர மகளிர் என அனைத்து மகளிரும்,தம் கணவர் மீது ஊடல் கொண்டனர் என்பதையும்,ஆறறிவு பெற்ற தலைவி மட்டுமல்லாது, அஃறிணை உயிர்களாகிய யானை, புறா,அன்னம், மயில், மான் போன்றவைகளும் தன்னுடைய துணையிடம் அன்பு மிகுதலால் ஊடல் கொண்டன என்றும் கம்பர் தன் நூலில் பாடியுள்ளார். (கம்பராமாயணத்தில் ஊடல் Link: https://doi.org/10.5281/zenodo.16950857)
வெப்பமாக பெருமூச்சு சொறிந்தாள்.
ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தின் இளநீர்களைப் பார்த்து ஓர் ஆடவன், இந்த இளநீர்கள் மங்கையர்கள் கொங்கைகள் போல உள்ளன என்ன வியப்பு என்று கூறினான். அதைக் கேட்ட அவன் மனைவி, எந்த மங்கையின் கொங்கைக்கு இவை ஒப்பாக உள்ளன என்று கேட்டு மனம் கொதித்து முகம் வியர்த்து வெப்பமாக பெருமூச்சு சொறிந்தாள்.
“செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
அம்மா இவை மங்கையர் கொங்கையின் ஆய என்ன
எம் மாதர்கொங்கைக்கு இவை ஒப்பனை என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயராமுகம் வெய்துயிர் த்தாள்”
(பூக்கொய் படலம் 855)
தலைவன் இளநீரைக் கண்டவுடன் மங்கையின் கொங்கையே அவனது நினைவிற்கு வந்தது என்பதைப் பொதுவாகக் கூறினான். வேறு எந்த பெண் நினைப்பிலும் அவன் கூறவில்லை. அதுவும் தலைவிக்கும் தெரியும் இருப்பினும் அன்பின் மிகுதியால் அவன்மீது புலவி கொண்டாள்.
சினம் கொண்டாள்
போர் என்ற சொல்லை கேட்டே பூரித்து போகின்ற மலையைப் போன்ற அங்குள்ள வலிமையான தோள்களை உடைய மன்மதனைப் போன்ற ஒரு இளைஞன், மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி பின்னை வந்து, அவனுடைய கண்களைப் பொத்தினாள். அப்போது அவன் யார் என்று கேட்டான். யார் என கேட்குமளவு பலரை அவன் அறிவான் போலும் என்று ஊடல் கொண்ட மனைவி நெருப்பு போல பெருமூச்செறிந்து சினம் கொண்டாள்.
“போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்கொள் திண் தோள்
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர்
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள்”
(பூக்கொய் படலம் 856)
பொதுவாகவே யாராவது கண்களைப் பொத்தினால் அதுயார் என்பதை அறியும் ஆவலில் யார் என்பது கேட்பது இயற்கை.அதுவும் தலைவிக்கு தெரியும். இருப்பினும் நான் தான் அவன் கண்ணைப் பொத்தினேன் என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று தலைவி நினைத்தாள். தன்னை மட்டுமே தலைவனுக்குத் தெரியவேண்டும் என்றும், தன்னையே அவன் அடையாளம் காணவேண்டும் என்ற அவளுடைய ஆசையே.கண்ணைப் பொத்தியபோது அவன் தன் பெயரையேக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கவேண்டும் என்பதே அவளுடைய விருப்பம். அது நடக்காததால் தலைவன்மேல் அவள் கொண்ட காதல், கோபமாக வெளிப்பட்டதுபோல் அவள் காட்டிக்கொண்டாள்.
கண் சிவந்து போனார்
குறை காண முடியாத உருவம் கொண்ட ஓர் அரசன் சந்தியா காலத்தை தோன்றும் சில கலைகளை மட்டுமே பெற்ற வெண்ணிறமுள்ள பிறை நிலா போன்ற நெற்றியை உடைய ஒரு மனைவிக்கும், அந்த மனைவியும் வழங்கத்தக்க பேரழகியான மற்றொரு மனைவிக்கும், தான் பறித்த மலர்களைச் சமமாக பங்கிட்டு அளித்தான். தன்னையே அதிகம் விரும்புகிறான் என்ற நம்பி இருந்த இருவரும், அந்த சம பங்கைக் கண்டு கோபத்தால் கண் சிவந்து அவன் அளித்த மெல்லிய மலரைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றனர்.
“சந்திக் கலா வெண் மதிவாள் நுதலாள் தனக்கும்
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி
நிந்திக்கல் ஆகா உருவத்தின் நிற்க மென் பூச்
சிந்து கலாப மயிலின் கண் சிவந்து போனார்”
(பூக்கொய் படலம் 860)
தலைவன் தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என்று தலைவி எண்ணுவாள். அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதையே தலைவியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.அவன் தன்னையே அதிகமாக விரும்பவேண்டும் என்ற எண்ணத்திலும், அதை மற்றவள் முன் தலைவன் தன்மேல் கொண்டவிருப்பம் அதிகம் என்பதைக்காட்டிக் கொள்ளவேண்டும் என்று எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அவன் இருவருக்கும் சமமாகப் பங்கீட்டுக் கொடுத்ததை அவர்கள் இருவராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதையே காட்டுகிறது.
மற்றவள் பெயரை கணவன் சொல்லக் கேட்ட பெண்ணின் வருத்தம்
பாயும் வேலைப் போலப் பார்க்கின்றவளான ஒரு பெண்ணை அவளுடைய உயிரை ஒத்தவனான தலைவன், எதிரே நின்று வாய் தவறி தன்னுடைய மற்றொரு மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்தான். அதை கேட்ட மைப்பூசிய கண்ணை உடைய அவள் தன்னிடம் உள்ள தன்மானம் மேலோங்க, மனம் நொந்து அதை மறைப்பதற்காக ஒரு மெல்லிய பூவைக் கையில் எடுத்து மோர்ந்து பார்த்தாள். அவளது வெம்மையான மூச்சுப் பட்டு அம்மலர் கருகிப் போனது.
“தைக்கின்ற வேல் நோக்கினள் தன்னுயிர் அன்ன மன்னன்
மைக் கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப
மெய்க் கொண்ட சீற்றம், தலைக் கொண்டிட விம்மிமென்பூக்
கைக் கொண்டு மோந்தாள் உயிர்ப்புண்டு கரிந்தது அன்றே”
(பூக்கொய் படலம் 858)
நான் உன்னை மட்டுமே விரும்புகிறேன். உன் ஒருவனையே திருமணமும் செய்து கொண்டுள்ளேன். நீயும் என்னை மட்டுமே விரும்பவேண்டும் என்னை மட்டுமே மணம் புரிந்திருக்கவேண்டும். இன்னொரு பெண்ணை நீ பார்க்கவும் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, அவன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு, அவளுடனும் வாழ்ந்து வருவதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இதிலும் அவன் தன் பெயரையே மறந்துவிட்டு, இவளிடமே அவள் பெயரைச் சொல்லி அழைத்ததை எப்படி அவளால் பொறுத்துக் கொள்ளமுடியும்.
வராததால் மனம் வாடினாள்
கணவனிடம் தான் ஊடல் கொண்டதால், அதை நீக்க அவன் முயல்வதை காணும் ஆசை கொண்ட ஒருத்தி, கணவன் செய்யாத ஒரு குற்றத்தைத் தானே முயன்று உண்டாக்கிக்கொண்டு, ஊடல் கொண்டாள் அதைத் தீர்க்க கணவன் வேண்டிய போதும், கோபம் குறையாதவளானாள். அதே நிலையில் வெகு நேரம் நிற்காதவளாகி, பல இடங்களில் தேடிச் சேர்ந்த சிறந்த பூக்களாலான மாலையை, பல வகையில் அணிந்து, அந்த அழகைக் கண்ணாடியில் பார்த்தாள். தனது ஊடலால் பிரிந்து சென்ற கணவன் தனது அழகைக் கண்டு அனுபவிக்க வராததால் மனம் வாடினாள்.
“நாடிக்கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள்
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்
தேடித்தேடிச் சேர்ந்த நறும் பூஞ்செழு மாலை
சூடிச் சூடி கண்ணாடி நோக்கித் துவள்வாளும்”
(பூக்கொய் படலம் 364)
தலைவன் மேல் கொண்ட அதிகமான அன்பில் அவள் வேண்டுமென்றே அவனிடம் ஊடினாள். இருப்பினும் அவள் அழகை அவன் கண்டு ரசிக்கவேண்டும் என்றே விரும்பினாள். அதைக்கூட புரியாத தலைவன் அவளைக்காணவரவில்லை என்பதால் தலைவி அதற்கும் மனம் வாடினாள். தான் அவன்மேல் கொண்டது பொய்க்கோபம் என்பதைக்கூட இன்னும் அவன் அறியாமல் இருக்கிறானே என்று மனம் வாடினாள்.
கோபித்து கொதித்து நின்றாள்
உண்டாட்டுப் படலத்தில் உயிர்களைக் கொள்ளை கொள்ளும் போரிலே வல்ல வாளைப் போன்ற கண்ணைப் பெற்ற பெண்ணொருத்தி, ஊடல் கொண்டு கணவன்மார்பில் உதைக்க முயன்றாள். அப்போது ஒப்பற்ற முருகனைப் போன்றவனான அவள் கணவன் வளமையான மாலை அணியப்பட்ட தனது மார்பினில் அவள் கால் படாமல் தாமரை மலர் போன்ற தனது கையால் மார்பை மறைத்துக் கொண்டான். அதைக் கண்ட அவள் உன் மனதுக்குள்ளே நிறைந்திருக்கும் உன் உயிரைப் போன்றவளான மற்றொருத்தியின் மீது என் உதைபடும் என்று கருதி, உமது வஞ்சனையால் கையைக் கொண்டு மறைத்தீர் என்று உரைத்து, முன்னிலும் பன்மடங்கு கோபித்துக் கொதித்து நின்றாள்.
“கொள்ளைப்போர் வாட்கணால் அங்கு ஒருத்தி ஓர் குமரன் அன்னான்
வள்ளத்தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர் அன்னாள்மேல் உதைபடும் என்றும் நீர்நும்
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள்”
(உண்டாட்டுப் படலம் 969)
எதையோ நினைத்துக் கொண்டு அவன்மேல் கோபப்படவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாள். என்ன காரணத்திற்காக கோபப்பட என்று எண்ணியிருந்தாள்.அவன் செயலையே தன் கோபத்திற்குக் காரணமாக்கி அவனிடம் பொய்யாக கோபம் கொள்வாள்.
அவனது முதுகைப் பார்த்தாள்
கொலைத்தொழில் ஓர் உருவம் கொண்டது போன்ற கொடிய கண்களையும், ஆடையையும் ஊடுருவி தோன்றும் அல்குலையும் உடைய ஒருத்தி, தன் கணவனை இறுகத் தழுவினாள். மலையின் அழகும் தோற்கும்படி திண்மை பெற்ற அக்கணவன் மார்பில் தம்முலைகள் அழுத்தி ஊடுருவிச் சென்றனவோ என்று நினைத்த அவள், அவனது முதுகைப் பார்த்தாள்.
“கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள் கணவற் புல்குவாள்
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள்”
(உண்டாட்டுப் படலம் 972)
கையில் ஏந்திய மலருடனே மயங்கி நின்றாள்
தனது உடல் அழகினால் லட்சுமிக்கு ஆபரணம் போன்றவளான ஒருத்தி வெண்மையான பளிங்கிலே ஒரு கையில் மலர் ஏந்தியபடி நின்ற தனது பிரதிபம்பமான நிழல் உருவத்தைக் கண்டாள். அந்நிழல் பெண் தன் இருப்பிடத்திற்குள்ளே வந்த இன்னொரு பெண் எனக் கருதி, இந்தப் பெண் என் கணவனுக்கு உயிரைப் போன்றவள் என்று நினைத்து தன் நீண்ட கண்களிலே நீர்ப் பெறுக, கையில் ஏந்திய மலருடனே மயங்கிநின்றாள் (பூக்கொய் படலம் 851)
தான் மட்டுமல்ல தன் தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும்போல என்று அவளே கற்பனையாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அவனுடன் ஊடுவாள். காரணம் அவள், அவன்மேல் கொண்ட அதிகமான அன்பே தான்.
கண்ணீர் சொரிய கலங்கி நின்றாள்.
நிலவைப் போன்ற முகத்தை உடைய ஒரு பெண்மணி, ஒரு மன்னன் தனது தோளிலே அணிந்த மாலையைத் தனக்குரிய மயில் போன்ற ஒரு மங்கைக்குச் சூட்டுவதைக் கண்டாள். கண்டதும் முடித்துக் கொண்ட கச்சியினால் கட்டப்பட்டிருக்கும் தன் முலைகளின் மேலே தனது வாள்போலும் கண்ணிலிருந்து பெருகிய மழை போன்ற கண்ணீர் சொரிய கலங்கி நின்றாள். (பூக்கொய் படலம் 852)
தலைவன் தனக்கு மட்டுமை உரிமைஉடையவனாக இருக்கவேண்டும் என்றே ஒவ்வொரு தலைவியும் விரும்புவாள். அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பவும் அவள் பொறுக்கமாட்டாள். தலைவன் வேறொரு பெண்ணை விரும்பியது மட்டுமல்ல அன்பின் அடையாளமாக விருப்பத்துடன் அவள் கூந்தலில் அவனே, அவன் கையால் ஆசைக் காதலிக்குப் பூச் சூட்டியதைத் தன் கண்களால் நேரடியாகத் தானே கண்டதால் அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
முடிவுரை
புலவி என்பது அன்பில் வெளிப்படும் சிறு சண்டையையும், நுணுக்கம் என்பது அதற்குரிய காரணத்தின் அல்லது காதலின் மறைமுகமான நுட்பங்களையும் குறிக்கிறது. காதலர் இருவரும் ஊடும்போதும், சண்டையிடும்போதும், அவர்களின் உண்மையான காதல் உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையும், அந்தப் பிணக்கத்தின் நுட்பமான கூறுகளையும் விளக்குகிறது.கம்பராமாயணத்திலும் தலைவி, தலைவன்மேல் கொண்ட அதிகமான அன்பின் காரணமாகவும் தலைவன் தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என்றும், தன்னைவிட வேறு யாரையாவது அதிகம் விரும்புகிறானோ என்ற சந்தேகத்திலும் அவள், அவனிடம் பொய்க் கோபத்துடன் ஊடல், புலவி நுணுக்கம் செய்கிறாள் என்பதை நாம் கம்பராமாயணத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.