* கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.

முன்னுரை

பத்துப்பாட்டு என்ற பெயரில் இன்று வழங்கப்படும் நூல்களுள் முதலில் இடம்பெற்றுள்ளது திருமுருகாற்றுப்படை. முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்று கூறும் நச்சினார்க்கினியர் உரையுடன் நமக்குக் கிடைத்துள்ளது. இத்திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவர் நெடுநல்வாடை மற்றும் எட்டுத்தொகையிலுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர் என்றும், இவர் பிற்காலத்தவர் என்றும் நிறுவியுள்ளார் பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை1.

எனில் பிற்காலத்தில் பாடப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை எவ்வாறு பத்துப்பாட்டில் ஒன்றாகச் சேர்ந்தது? பத்துப்பாட்டில் இத்திருமுருகாற்றுப்படைக்கு உரிய இடம் என்ன? என்பதனைப் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. மேலும் பத்துப்பாட்டிலுள்ள மற்ற ஆற்றுப்பாடல்களுடன் இது கொண்டுள்ள உறவு என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றிற்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.

திருமுருகாற்றுப்படையும் தொல்காப்பிய விளக்கமும்

கூத்தர், பொருநர், பாணர், விறலி” ஆகிய நால்வர் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவர்கள் என்கிறது தொல்காப்பியம்2. ஆனால் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க” எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்கிறார். ஆனால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கண நூலாக ஆய்வாளர்களால் கருதப்பெறும் தொல்காப்பியத்தில் ‘அடியவர்’ ஆற்றுப்படுத்த உரியவர் என்ற குறிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமுருகாற்றுப்படை பற்றிய தற்கால ஆய்வாளர்களின் கருத்துக்கள்

“திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் கூறாத ஒன்றாகும்” என்கிறார் டாக்டர்.மா.இராசமாணிக்கனார்3. அன்பரை ஆண்டவனிடத்தே ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பிய இலக்கணத்திற்கு வேறானது என்கிறார் டாக்டர்.மு.கோவிந்தசாமி4. “....சென்று பயனெதிர ஆற்றுப்படுத்தற்குரியார் கூத்தர் முதலிய நாற்பாலரேயன்றி வேறு யாருமிலர் என்று தொல்காப்பியர் வரையறுத்து ஓதாமையானும், பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறுத்தலே அந்நூற்பா பகுதியிற் சிறப்புடைத்தாகலானும், பேரின்ப வீட்டினும் சிறந்த பெருவளம் பிறிதின்மையானும், புதிது புனையப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை முன்னை நூல் வழக்கொடு மேற் கூறியாங்கு சற்றே வேறுபாடுடையதாயினும் மற்று மாறுபாடுடைய தன்று”5 எனத் தெளிவுபடுத்துகிறார் புலவர் இலக்குவனார். இவரது கருத்திற்கு ஏற்பவே க.வெள்ளைவாரணரும் திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்கிறார்6.

மேற்கண்ட விளக்கங்களை நோக்க திருமுருகாற்றுப்படைக்கு ஏற்ற வரையறையைத் தொல்காப்பியர் கூறவில்லை என்பதும், ஆனால் அதேநேரம் சில அறிஞர்கள் கூறுவது போல் இத்திருமுருகாற்றுப்படை தொல்காப்பியர் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது.

திருமுருகாற்றுப்படையும் - எட்டுத்தொகைப் பாடல்களும்

எட்டுத்தொகையில் உள்ள பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றுப் பாடல்களில் பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, மற்றும் புலவராற்றுப்படையில் அமைந்த பாடல்கள் பல காணப்படுகின்றன. ஆனால் அடியவரை இறைவன்பால் அவன் அருள் வேண்டி ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை போன்ற பாடல் எதுவும் இல்லை.

திருமுருகாற்றுப்படையும் - பத்துப்பாட்டிலுள்ள பிற ஆற்றுப்படைப் பாடல்களும்

திருமுருகாற்றுப்படையைச் சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய பாடல்களுடன் பகுப்பாய்வு செய்து ஒப்பிட்டு ஆராய்ந்ததில், 1.காலம் பற்றிய குறிப்பு, 2.விளித்தல், 3.ஆற்றுப்படுத்துதல், 4.அரசனின் சிறப்புகள், 5.அரசன் அளிக்கும் பரிசில், 6.அரசனை வாழ்த்திப்பாடுமாறு கூறல், 7.வழிவருணனை, 8.மலைவளம், 9.விறலி வருணனை, 10.அரசனின் விருந்தோம்பல், 11. யாழ் வருணனை, 12. அரசனிடம் தான் பெற்றுவந்த பரிசில் பற்றிக் கூறுதல் என்று மொத்தம் 12 பொதுக் கூறுகள் கிடைக்கின்றன7 .

வ எ

பொதுக்கூறுகள்

பொருநர்

சிறுபாண்

திருமுருகு

பெரும்பாண்

கூத்தர்

1

காலம் பற்றிக் கூறல்

1-3

6-12

7-11

1-3

14-20

2

யாழ் வருணனை

4-22

34-35 221-227

 

4-16

21-37

3

விறலி வருணனை

23-47

12-33

12-41

-

41-46

4

விளித்தல்

1-3,48-60

34-40

62-64

17-22

47-50

5

ஆற்றுப்படுத்துதல்

48-248

34-145

62-66

17-38

47-66

6

இரவலன் பெற்று வந்த பரிசில்

61-129

127-143

-

27-28

51-53

7

அரசனின் சிறப்பு

129-148

83-126

1-11,42-46 56-61

30-37, 412-435

54-94

8

அரசன் நாட்டிற்குச் செல்லும் வழி

-

143-206

67-249

39-411

95-529

9

அரசனை வாழ்த்திப் பாடுமாறு கூறல்

151-152

229-235

250-286

448-464

530-546

10

அரசனின் உபசரிப்பு

149-162

235-245

-

464-479

561-567

11

அரசன் பரிசளிக்கும் விதம்

163-177

246-261

287-295

480-493

568-581

12

அரசனின் மலை வளம்

178-248

261-269

295-317

493-500

581-583


    
அந்தப் பன்னிரண்டு கூறுகளில் ஏழு கூறுகளை ஐந்து ஆற்றுப்படைப் பாடல்களும் பொதுவாகப் பெற்றுள்ளன8.

.

பொதுக்கூறுகள்

திருமுருகு

சிறுபாண்

பெரும்பாண்

பொருநர்

கூத்தர்

1

காலம் பற்றிய வருணனை

7-11

6-12

1-3

1-3

14-20

2

விளித்தல்

62- 64

34- 40

17- 22

1-3, 48-60

50

3

ஆற்றுப்படுத்து தல்

62-66

34-145

17-38

53-248

47-66

4

அரசனின் சிறப்புகள்

1-11, 42-46 56-61

83-126, 207-220

412-447

129-148

54-94, 547-560

5

அரசனை வாழ்த்திப் பாடுமாறு கூறல்

250-281

229-235

448-464

151-152

530-546

6

அரசன் நல்கும் பரிசில்

287-295

246-261

480-493

163-177

568-581

7

அரசனின் மலை வளம்

295-317

261-269

493-500

178-248

581-5


ஐந்து ஆற்றுப்படைப் பாடல்களின் தொடக்கத்திலும் காலம் பற்றிய வருணனை இடம் பெற்றுள்ளது. இது பாடலின் தொடக்கத்தில் முதல் இருபது வரிகளுக்குள் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை கார் காலத்தைப் பற்றிக் கூற, பிற நான்கு பாடல்களும் வேனிற் காலம் பற்றிக் கூறியுள்ளன. ஆனால் பாடலின் இறுதி திருமுருகாற்றுப்படையில் முருகனை,

“பழம் முதிர் சோலைமலை கிழவோனே!” (திருமுருகு.317) என்றும்,

பொருநராற்றுப்படையில் கரிகால்வளவனை, “காவிரி புரக்கு நாடு கிழவோனே!” (பொருநர்.248) என்றும்,

சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனை,

“குறிஞ்சிக்கோமான் .. .. .. ..
நல்லியக் கோடனை நயந்து செலினே!” (சிறுபாண்.267-269) என்றும்,

பெரும்பாணாற்றுப்படையில் தொண்டைமான் இளந்திரையனை, “ஒளிறு இலங்கு அருவி மலைகிழவோனே!” (பெரும்பாண்.500) என்றும்,

கூத்தராற்றுப்படையில் நன்னனை, “குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோனே!”(கூத்தர்.583) என்று ஐந்து பாடல்களிலும் அப்பாடல்களின் பாட்டுடைத் தலைவர்களை விளிப்பதாகவே முடிவடைந்துள்ளன. அதாவது, காலம் பற்றிய குறிப்புடன் ஒரேவிதமாகத் தொடங்கியுள்ள இப்பாடல்கள், இறுதியில் அரசனை விளிப்பதாக ஒரேவிதமாகவே முடிவடைந்துள்ளன. அம்முடிவில் மலையின் சிறப்பு அனைத்திலும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த ஆற்றுப்படைப் பாடல்களில்,

    ஐந்து ஆற்றுப்படைப் பாடல்களிலும் நூலின் தொடக்கம் காலத்தைக் குறித்தல், விளி, ஆற்றுப்படுத்தல், அரசனின் சிறப்பு, அரசனை வாழ்த்திப்பாடுதல், அரசன் நல்கும் பரிசில், அரசனின் நாட்டுவளம் (மலை) கூறி நூல் நிறைவு செய்தல் என்ற ஏழு பொருட்கூறுகள் இடம்பெற்றுள்ளன.

    திருமுருகாற்றுப்படை நீங்கலான நான்கு ஆற்றுப்படைப் பாடல்களிலும் மேற்கண்ட கூறுகளுடன் யாழ்வருணனை, இரவலன் தான் பெற்று வந்த பரிசிலின் தன்மையைப் பற்றிக் கூறல், அரசனின் உபசரிப்பு ஆகிய மூன்று பொருட்கூறுகள் சேர்ந்து அமைந்துள்ளன.

    பெரும்பாணாற்றுப்படை நீங்கலான பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் விறலி வருணனை என்ற கூறு அமைந்துள்ளது.

    பொருநராற்றுப்படை நீங்கலான திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களிலும் மேற்கண்ட கூறுகளுடன் அரசன் நாட்டிற்குச் செல்லும் வழிகள் பற்றிய வருணனை என்ற ஒரு கூறு சேர்ந்து அமைந்துள்ளது.

    கிடைக்கும் பனிரெண்டு கூறுகளில் பனிரெண்டு கூறுகளையும் பெற்ற பாடல்களாகச் சிறுபாணாற்றுப்படை மற்றும் கூத்தராற்றுப்படை திகழ்கின்றன.

    இதனை அடுத்து பதினோரு கூறுகள் பெற்ற பாடல்களாக பொருநராற்றுப்படை மற்றும் பெரும்பாணாற்றுப்படை திகழ்கின்றன.

    திருமுருகாற்றுப்படை ஒன்பது பொதுக்கூறுகளைப் பெற்றுத் திகழ்கின்றது.

    திருமுருகாற்றுப்படை நீங்கலாக மற்ற நான்கு ஆற்றுப்படைப் பாடல்களும் பத்துக் கூறுகளைப் பொதுவாகப் பெற்றுத் திகழ்கின்றன.

உருவத்தில் திருமுருகாற்றுப்படையிலுள்ள கூறுகள் மற்ற ஆற்றுப்படைப் பாடல்களை ஒத்திருக்கின்றன. ஆனால், உள்ளடக்கத்தில் மற்ற ஆற்றுப்படைப் பாடல்களிலிருந்து வேறுபடுகின்றன. .அதன் விவரம் வருமாறு.

.

பொருட் கூறுகள்

திருமுருகாற்றுப்படை

பத்துப் பாட்டிலுள்ள பிற நான்கு ஆற்றுப்படைப் பாடல்கள்

1.

காலம்

கார் காலம்

வேனிற்காலம்

2.

விளி

அடியார்

கூத்தர், பொருநர், பாணர்

3.

ஆற்றுப்படுத்துதல்

ஆடியாரை

கூத்தர், பொருநர், பாணர் (தம்மை ஒத்த பிறரை)

4.

அரசனின் சிறப்புகள்

முருகன் (கடவுள்)

அரசர்கள்

5.

அரசன் அளிக்கும் பரிசில்

வீடுபேறு

பரிசில் பொருட்கள்

6.

அரசனை வாழ்த்திப் பாடுமாறு கூறல்

முருகன் (கடவுள்)

அரசர்கள்

-

-

-

(பிற மூன்று அற்றுப்படைப் பாடல்கள்)

7.

விறலி வருணனை

சூரர மகளிர் வருணனை (பதிலி)

பாடினி, விறலி வருணனைகள் (பெரும்பாணாற்றுப்படை நீங்கலாக)

8.

வழிவருணனை

முருகன் இருக்கும் திருத்தலங்கள் மட்டும்.

அரசர்களின் நாட்டிற்குச் செல்லும் முழு வழி வருணனை (பொருநராற்றுப்படை நீங்கலாக)

இப்படிப் பார்ப்பதற்கு ஒன்று போல் உருவத்தில் தோன்றினாலும் உள்ளடக்கத்தில் மற்ற ஆற்றுப்படைப் பாடல்களில் இருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடுகிறது. அதற்கான காரணம் அது மற்ற பாடல்களைப் பார்த்துப் ‘போலச் செய்தல்’ என்ற முறையில் பாடப்பட்டிருந்தல் வேண்டும். அதனால்தான் அதன் உள்ளடக்கம் வேறாகவும் மற்ற பாடல்களின் உள்ளடக்கம் வேறாகவும் உள்ளது.

திருமுருகாற்றுப்படை ‘போலச்செய்தல்’ முறையில் பாடப்பட்டது எனில் நான்கு ஆற்றப்படைப் பாடல்களில் உள்ள கருத்துக்களைப் பொதுவாக உள்வாங்கிப் பாடப்பட்டுள்ளதா? அல்லது ஏதாவது ஒரு பாடலை ஒட்டி அல்லது ஒரு பாடலுடன் நெருக்கமான உறவைக் கொண்டதாக உள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயலும்போது நமக்கு இரண்டு விதமான உறவும் உள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. அதாவது மற்ற நான்கு பாடல்களில் உள்ள கூறுகளை இந்தப்பாடல் பெற்றுள்ளன. அதே வேளை சிறுபாணாற்றுப்படையுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அதன் விவரங்கள் குறித்து இனிக் காணலாம்.

திருமுருகாற்றுப்படையும் - சிறுபாணாற்றுப்படையும்

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையின் சாயல்கள் சிலவற்றுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. அதாவது, சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடனைப் புகழும் புலவர், அவன் அளிக்கும் பரிசிலானது வஞ்சி, மதுரை உறந்தை ஆகிய மூன்று தலைநகரங்களில் அரசாளும் மூவேந்தர்கள் அளிக்கும் பரிசிலைவிட சிறந்தது என்றும், அத்துடன் அவன் பேகன், பாரி, காரி, ஆய், அதியன், நள்ளி, ஓரி ஆகிய கடையெழு வள்ளல்களைவிட கொடையில் சிறந்தவன் என்றும் கூறியுள்ளார் (சிறுபாண்.41-115). இவ்வாறு பிற மன்னர்களை ஒப்பிட்டுப் பிற ஆற்றுப்படைப் பாடல்களில் கூறப்படவில்லை. ஆனால் திருமுருகாற்றுப்படையில் திருமால், சிவன், இந்திரன் முதலிய முப்பத்து மூன்று தேவர்களும் தம்முடைய குறையினை நீக்குமாறு முருகனிடம் வேண்டி அவன் அருளைப் பெற்று முன்பு போல் வாழ்ந்தனர் (முருகு.148-176)” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்விரு நூல்களில் இடம்பெற்றுள்ள ஒப்புமைக் கூறான இதில், ‘அதாஅன்று’ என்ற சொல்லாட்சியும் ஒரேவிதமாக இடம்பெற்றுள்ளது.

சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனைப் புகழ வஞ்சிமாநகரின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் (சிறுபாண்.41-50) கூறி இறுதியில்,

“வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே- அதாஅன்று”

என்றும், மதுரை மாநகரின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் (சிறுபாண்.50-67) கூறி

“.. .. .. .. .. .. ..மதுரையும் வறிதே- அதாஅன்று”

என்றும், உறந்தை மாநகரின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் (சிறுபாண்.67-83) கூறி

“.. .. .. .. .. .. ..உறந்தையும் வறிதே- அதாஅன்று”

என்றும் “அதாஅன்று” என்ற ‘சொல்லாட்சி’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருமுருகாற்றுப்படையில் முருகனின் இருப்பிடங்களைக் கூறுமுகமாக,

“அலைவாய்ச் சேரலும் நிலைஇய பண்பே - அதாஅன்று” (திருமுருகு.125) என்றும்,

“ஆவினன்குடி அசைதலும் உரியன் - அதாஅன்று” (திருமுருகு.176) என்றும்,

“ஏரகத்து உறைதலும் உரியன் - அதாஅன்று” (திருமுருகு.189) என்றும்,

“குன்றுதொரு ஆடலும் நின்றதன் பண்பே - அதாஅன்று” (திருமுருகு.217)

என்றும் முருகனின் இருப்பிடங்களைப் பற்றிக் கூறும் போது “அதாஅன்று” என்ற ‘சொல்லாட்சி’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய ஒருமுறை பிற ஆற்றுப்படைப் பாடல்களில் இல்லை. சிறுபாணாற்றுப்படையின் மேற்கண்ட கூறுகளின் சாயல் திருமுருகாற்றுப்படையில் காணப்படுவதால் இப்பாடல் சிறுபாணாற்றுப்படையை அடியொற்றிப் பாடப்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

பாட்டு – பத்தா? ஒன்பதா?

திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியப் பாடல்களுள் ஒன்றாகவே வைத்து வாசிக்கப்பட்டு வருகின்றது. என்றாலும், இப்பாடல் சங்க காலத்திற்குப் பிற்பட்ட ஒன்று என்பது தற்கால ஆய்வுகளின் முடிவாகும். அப்படியிருக்க இப்பாடல் சங்கப் பாடல்களுள் ஒன்றாக (பத்துப்பாட்டுள்) எவ்வாறு சேர்ந்தது என்று அறியமுடியவில்லை. அதற்குக் காரணம் இப்பாடல்களின் தொகுப்பு எப்போது நிகழ்ந்தது. இப்பாடல்களைத் தொகுத்தவர் யார்? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போனதே ஆகும்.

அத்துடன் பத்துப்பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையைத் தவிர பிற ஒன்பது பாடல்களும் எட்டுத்தொகைப் பாடல்களுடன் ஒப்பிட அவை அளவில் மட்டுமல்ல பொருள் நிலையிலும் மாற்றமடைந்துள்ளதை அறியமுடிகிறது. அதாவது, அவை அகம் - புறம் என்ற இரண்டினையும் பிரிக்க இயலாத ஒரு நிலைக்குச் செல்கிறதே ஒழிய, திருமுருகாற்றுப்படையைப் போல் பக்தி நிலைக்கு அவை செல்லவில்லை. அப்படியிருக்க இத்திருமுருகாற்றுப்படையை எப்படி இப்பாட்டுகளுள் ஒன்றாக நம் முன்னோர் சேர்த்தனர் என்பது புரியவில்லை. பத்துப்பாட்டினை ஆராய்ந்த பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை9, க.கைலாசபதி10, டாக்டர்.மு.கோவிந்தசாமி11 ஆகியோர் திருமுருகாற்றுப்படையானது, எட்டுத்தொகையிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் போல் தொகுத்தவர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இக்கருத்து பொருந்தாது என்று மறுக்கும் மு.பெரி.மு.ராமசாமி12, “நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்களை நீக்கியே பாடல்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுகிறது. அவ்வாறு நோக்க ஒன்பது பாடல்களே உள்ள நூலிற்குப் பத்துப்பாட்டு என்னும் பெயர் எங்ஙனம் பொருந்தும்” என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் கூறியுள்ளதைப் பார்க்க ‘ஒன்பது பாட்டு என்று தானே’ கூறப்பட்டிருக்க வேண்டும். பிறகு எப்படி பத்துப்பாட்டு என்ற பெயரில் அத்தொகுப்பு அழைக்கப்படுகின்றது? என்ற அவரது கேள்வி சரியான ஒன்றுதான் என்று எண்ணத் தோன்றுகின்றது. அது குறித்த விளக்கங்களை இனிக் காண்போம்.

பத்துப்பாட்டுப் பாடல்களைத் தொகுத்தோர் தொகுப்பித்தோர், தொகுக்கப்பட்ட காலம் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்காமல் போனாலும், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் ஒருவரான பேராசிரியரின் உரையில்தான் முதன் முதலில் பத்துப்பாட்டுப் பாடல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அத்துடன், அதில் பத்துப்பாட்டு என்று கூறப்படாமல் “பாட்டு” என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

சங்கம் பற்றியும் அதில் இடம் பெற்றிருந்த நூல்கள் பற்றியும் கூறும் களவியல் உரையில் பத்துப்பாட்டிலுள்ள பாடல்களில் ஒன்றைப் பற்றிக் கூட கூறப்படவில்லை.

கி.பி 13 -14 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நன்னூல் மயிலைநாதர் விளக்க உரையில்தான் முதன் முதலில் ‘பத்துப்பாட்டு’ என்று இன்று அழைக்கப்படும் பெயர் முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. அத்துடன்,

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத் தொடும் பத்து”

என்ற ஒரு பழம் பாடல் ஒன்று இந்த தொகுப்பில் உள்ள பாடல்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை பற்றிய செய்தியைத் தருகின்றது.

அந்தப் பாடலில் ‘முருகு’ என்றே (திரு)முருகாற்றப்படை என்ற நூலைக் குறுப்பிட்டுள்ளது. மற்ற தொகுப்பு நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் பாடல் போன்றே அமைந்துள்ள இந்தப் பாடலில் கூறப்படுள்ள அக்குறிப்பு கவனிக்கத்தக்கது. அதிலிருந்து முருகாற்றுப்படை என்ற பாடல் ‘திரு’ என்ற அடையுடன் ‘திருமுருகாற்றுப்படை’ என்றழைக்கப்பட்டுள்ளதும் தெரிகிறது. அதாவது, முருகாற்றுப்படை என்றுதான் அப்பாடல் பாடப்பட்டபோது அழைக்கப்பட்டுள்ளது. பின்னர்தான் ‘திரு’ என்ற முன்னொட்டு சேர்த்துத் திருமுருகாற்றுப்படை என அழைக்கபட்டுள்ளது.

அதை, ‘’இனித் திருமுருகாற்றுப்படை என்பது என்ன? திரு முருகனிடத்து ஆற்றுப்படுதலை உடையது என்பதுபொருள். ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; இது இந்த நூலுக்குக் காரணப்பெயராகும். திரு என்பது வடமொழியின் 'ஸ்ரீ' போன்று மேன்மையையுடைய பொருட்கெல்லாம் அடைமொழியாகும், மகிமையை உணர்த்தா நிற்கும். முருகு - இளமை, மணம், அழகு, கடவுட்டன்மை; இவற்றையுடைய முருகனுக்காகும். அன் விகுதி குன்றி முருகு எனப் பண்புப்பெயராய் நிற்பினும் அப்பண்பிப் பொருளையே தந்து நிற்கின்றது. எனின் திருமுருகாற்றுப்படை என்பது திருமுருகனிடத்து வீடுபேற்றினை எய்துதற்கு ஒருவனை வழிப்படுத்தியது என விரியும். வீடுபேற்றினைப் பெற்றவன் ஒருவன் பெறுதற்குப் பக்குவம் உடைய ஓர் இரவலனைப் பெறும் பொருட்டு முருகனிடத்தே வழிப்படுத்துதலை உடைய பிரபந்தம் என விரித்துக்கொள்க’’13 என்பதிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு நோக்க, பத்துப்பாட்டிலுள்ள பாடல்களின் தொகுப்பு முதலில் ‘பாட்டு’ என்றே அழைக்கப்பட்டுள்ளமையும், அதன் பிறகே ‘பத்துப்பாட்டு’ என்ற பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது. எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நம்மை அப்படிச் சிந்திக்க வைக்கின்றன.

எட்டுத்தொகையிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

எட்டுத்தொகையிலுள்ள பரிபாடல், பதிற்றுப்பத்து நீங்கலாக பிற ஆறு பாடல்களிலும் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது. அது,.

 

நூல்

கடவுள்

வரிகள்

பா வகை

பாடியவர்

1.

நற்றிணை

திருமால்

7

ஆசிரியம்

பாரதம் பாடிய பெருந்தேவனார்

2.

குறுந்தொகை

முருகன்

6

ஆசிரியம்

‘’

3.

ஐங்குறுநூறு

சிவன்

3

‘’

‘’

4.

அகநானூறு

சிவன்

16

‘’

‘’

5.

புறநானூறு

சிவன்

13

‘’

‘’

6.

கலித்தொகை

சிவன்

17

கலிப்பா

‘’

என்று அத்தொகுப்பிலுள்ள பாடல்களின் அமைப்பினை ஒத்துள்ளது. அதாவது பாடல்களின் அளவிலும், பா வகையிலும் அவை அத்தொகுப்பில் உள்ள பாடல்களைப் போல் உள்ளன.

திருமுருகாற்றுப்படையும் பாட்டு என்ற தொகுப்பில் உள்ள மற்ற ஒன்பது பாட்டிலுள்ள பாடல்களின் அமைப்பினை (அளவிலும், பா வகையிலும்) ஒத்தே அமைந்துள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்க, திருமுருகாற்றுப்படையைப் பொருநராற்றுப்படை முதலிய பாடல்களுக்குக் கடவுள் வாழ்த்தாக நூல் தொகுத்தோரால் முதலில் சேர்க்கப்பட்டிருக்கும். பின்னர் அப்பாடல்களின் சாயலைக் கொண்டிருப்பதால் இது அப்பாடல்களுள் ஒன்றாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை அறியமுடிகிறது.

சங்கப் படல்களின் தொகுப்பு ‘பாட்டும் தொகையும்’ என்றும் பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்றும் இருவிதமாக இன்றும் கூறப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதை சாதாரணமான ஒன்றாக கருதி கடந்துவிட முடியாது. ஏனெனில் தொகை என்பது எட்டு என்ற எண்ணுடன் சேர்த்து எட்டுத்தொகை என்றும் அதுபோல் பாட்டு என்பது பத்து என்ற எண்ணுடன் இணைத்துப் பத்துப்பாட்டு என்று அழைக்கப்பட்டதற்கும் இடையில் ‘கால இடைவெளி’ இருந்துள்ளதை நமக்குக் இடைக்கும் சான்றுகள் உறுதுபடுத்துகின்றன. இந்தக் ‘கால இடைவெளி’யில் வாசிப்பு முறையில் உண்டான மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய மாற்றம் எப்பொழுது நிகழ்த்து என்று துள்ளியமாக அறிய இயலவில்லை. என்றாலும், இன்று கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அந்த மாற்றம் களவியல் உரைக்கும் நன்னூல் மயிலைநாதர் உரை காலத்திற்கும் இடையே நடைபெற்றிருக்கும் என்று துணிந்து கூறலாம். இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது. பாடல்கள் தொகுக்கப்பட்டதால் தொகை என்ற பெயரைப் பெறுகின்றது. எனில் பாட்டு என்ற பெயர் பத்துப்பாட்டிற்கு வரக் கரணம் என்ன? என்ற வினா தவிர்க்க இயலாத ஒன்றாகின்றது. அது குறித்து அறிய பாட்டு என்பதன் பொருள் குறித்து அறிவது அவசியமாகிறது.

பா- பாட்டு - செய்யுள் உறவு

பாட்டு என்பது பா, செய்யுள் என்ற பொருள்களிலும் அழைக்கப்படுகின்றன. அதாவது பா, பாட்டு, செய்யுள் என்பன பல பொருள்களைத் தரக்கூடிய சொற்களாகும். எனவே இவை மூன்றிற்கிடையே உள்ள உறவினை அல்லது இவை மூன்றிற்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய தெளிவினை நாம் முதற்கண் அறிதல் அவசியமாகும்.

பா- பொருள் விளக்கம்

பா- என்பது நிகண்டுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகண்டுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் ‘பா’என்பதற்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி இனிக் காண்போம்.

“தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும்
பாட்டும் கவிதையும் பா எனப்படும்”14

தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, கவிதை ஆகியவை பா என்ற பொருளில் அழைக்கப்படும் என்று கூறுகிறது திவாகரம் நிகண்டு.

“பா என்ப பனுவல்”15 இதன் விளக்கமாவது - பா என்பது நூற்பாவைக் குறிக்கும். இது வெண்பா முதலிய பாக்களாகும். மேலும்; ‘இசைப்பாட்டும்’என்ற பொருளையும் தரும். அது அராகம், இசை, தூக்கு, பண், வரி என்ற சொற்களாலும் அழைக்கப்படும் என்று பாவிற்கு விளக்கமளிக்கிறது சூடாமணி நிகண்டு.

இலக்கியங்களில் பா என்பது ‘பகுத்தல்16’ ‘ஆடைநெய் பாவு17‘‘கைம்மரம்18’ ‘பரந்த19’ ‘பரவு20‘ ‘பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை’21 என்ற பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செய்யுள்களின் உறுப்புகளைப் பற்றிக் கூறும் தொல்காப்பியம் செய்யுளியலின் முதல் நூற்பா, செய்யுள் உறுப்புகள் முப்பத்தினான்கு என்றும், அம்முப்பத்தினான்கினுள் ஒன்று பா என்றும் கூறுகின்றது. இதற்கு உரை எழுதிய பேராசிரியர், “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்வதற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை”22 ஆகும் என்று விளக்கமளித்துள்ளார்.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து பா என்பதற்குப் பல பொருட்கள் இருப்பினும், தொலைவிலிருந்து பாடப்படும் ஒரு பாடலின் எழுத்தையும், சொல்லையும் கேட்க இயலாவிடினும் அந்த ஓசையை மட்டுமே உணர்ந்த நிலையிலேயே அது இன்ன ஓசை என்று வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய ஓசையே பா எனப் பொருள்படும் என்பது புலனாகிறது.

பாட்டு - பொருள் விளக்கம்

பாவினைப் போன்றே பாட்டு என்பதற்கும் அகராதிகளிலும், இலக்கணங்களிலும், இலக்கியங்களிலும் பல பொருட்கள் கூறப்பட்டுள்ளன.

1. பாட்டு என்பதற்கு – “பாடுகை, இசைப்பாடல், சொல், வசைமொழி”23 என்ற பல பொருள்களைத் தருகிறது தமிழ் லெக்சிகன். “இசைப்பாட்டு, செய்யுள், சொல், வசைமொழி”24 என்ற பல பொருள்களைத் தருகிறது கழகத் தமிழ் அகராதி. இசைப்பாட்டு என்பது அராகம், இசை, பண், வரி என்ற பல பொருள்களைத் தருகிறது சூடாமணி நிகண்டு. பாட்டு என்பதற்கு- “பாடுவது, இசை, செய்யுள், வசைமொழி, சொல்”25 என்ற பல பொருள்களைத் தருகிறது திருமகள் அகராதி.

இலக்கியங்களில் பாட்டு என்பது பாடல் (குறு.23.3), ஒலி (நற்.25.1), போக்கு (பதி.46.9), இசை (மணி.46.9), தோத்திரம் (சம்ப.தேவா.1:7.5), பாட (கலி.15:17-18), பாட்டைப்பாட (கல்.7:32), இசையொடு பாடி (ஒள.நல்.19), பாட்டு எழுதல் (நக்.2.22), இயற்பாவும் இசைப்பாவும் (திரு.மூ.56) என்ற பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.

“அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே” (தொ.செ.34)

என்று தொல்காப்பியம் பாட்டிற்கு விளக்கம் கூறுகிறது. இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் “அடியின் சிறப்பினானே பாட்டென்று கொள்ளப்படு மென்றவாறு எனவே பாட்டென்னுஞ் செய்யுட்கு அடியின்றியமையாதென்று கொள்க”26 என்று விளக்கம் கூறியுள்ளார். மேலும் இவர் “பல சொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீஇயற்றைப் பாடடென்கிறார்” என்றும் விளக்கமளித்துள்ளார். எனவே பாட்டிற்கு ஓசை, அடியளவு என்பவை முக்கியமான கூறுகள் என்பதை அறியமுடிகிறது.

செய்யுள் - விளக்கம்

“மாத்திரை யெழுத்தியல் அசை வகை எனாஅ’’ என்ற தொல்காப்பியம் செய்யுளியலின் முதல் நூற்பா செய்யுள் உறுப்புகளைப் பற்றிக் கூறுகிறது. இதற்கு உரையெழுதிய இளம்பூரணர் “இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் செய்யுளென்னும் பெயர்த்து”27 என்று விளக்கம் கூறியுள்ளார்.

“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்” (தொ.பொ.செ.75)

மற்றும்,

“எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை இல்லன ஆறுஎன மொழிப” (தொ.பொ.செ.157)

என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் செய்யுள் என்பது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என ஏழு பெயர்களில் அமையும் என்கிறது.

இவற்றை அகம் - புறம் எனப் பிரித்து ஏழு நிலத்தினரும் செய்யுள் செய்தனர். இதனை “பாட்டும், உரையும், நூலும், வாய்மொழியும், பிசியும், அங்கதமும், சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்வேழ் நிலத்தும் நாட்டார் நடத்துகின்ற செய்யுள்களின் பெயரே”28 என்ற பேராசிரியரின் கூற்று உறுதிபடுத்துகிறது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து பண்டைத் தமிழர்கள் மேற்கண்ட ஏழு வகையான இலக்கியங்களைப் படைத்துள்ளனர் என்பது புலனாகிறது. அத்துடன் செய்யுளின் அடிச்சொல்லான ‘செய்’ என்பது செய்க, செய்கு, செய்ய, செய்தல், செய்யப்படுவது என்ற பல சொற்களுக்கான அடிச்சொற்களாக அமைவதும் இங்கு நினைக்கத் தக்கது. எனவே செய்யுள் என்பது செய்யப்படுவது எனப் பொருள்படும்.

இவ்வாறு புலவனால் பாடப்படுகின்ற பாடல்கள் செய்யுள் என்றும் அழைக்கப்படுகின்றது. பாட்டு செய்யுளுக்கு மாறானது அன்று. உணர்ச்சியும் கற்பனையும் பொருந்திய செய்யுள் (verse) எல்லாம் பாட்டு (poetry)) எனத்தகும். உணர்ச்சியும் கற்பனையும் இல்லாமல் சோதிடம், மருத்துவம், நீதி முதலியவற்றை எடுத்துரைக்கும் செய்யுள் எல்லாம் பாட்டு அல்ல29 .

மேற்கண்ட விளக்கங்களிலுருந்து பா- பாட்டு - செய்யுள் போன்றன ஒன்றுள் ஒன்று உறழந்து அமைந்துள்ளதை அறியமுடிகிறது. எனினும் அவை பின்வரும் உண்மை பொருளில் அமைந்துள்ளதையும் அறியமுடிகிறது. அவை,

பா - என்பது பிரித்தறிய கூடிய ஓசை

பாட்டு - பாடப்படுவது, ஓர் இலக்கியவகை (ஏழு வகை செய்யுளுள் ஒன்று)

செய்யுள் - பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்ற ஏழு வகையான இலக்கியங்களைக் குறிக்கும் பொதுச் சொல்.

அதாவது, பாட்டு என்பது பா என்ற பிரித்தறியக் கூடிய ஓசையைக் கொண்டதாகும். அத்துடன் இது ஏழு வகையான செய்யுள்களில் ஒன்றாகும்.

பாட்டு - கூறுகள்

பாட்டு - என்பதற்கான விளக்கங்களை இதுவரை கண்டோம். பாட்டு என்பது செய்யுள் உறுப்புகளான மாத்திரை, எழுத்தியல்… முதலிய 26 உறுப்புகளைக் கொண்டமையும். இவ்வுறுப்புகளில் ஓசை மற்றும் அடியளவு என்பதே ‘பாட்டு’ எனும் அமைப்பிற்கு மிகவும் இன்றியமையாததாகும். இதனை,

“அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே” (தொ.செ.34)

மற்றும்,

“அவ்வியல் அல்லது பாட்டாங்குக் கிளவார்” (தொ.செ.85)

என்ற தொல்காப்பிய நூற்பாக்களும், “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துங் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்வதற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை” (பேராசிரியர்) மற்றும், “பல சொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீயவற்றைப் பாட்டென்றார்” (இளம்பூரணர்) என்ற தொல்காப்பிய உரையாசிரியர்களின் விளக்கங்களும் உறுதிபடுத்துகின்றன.

அகவல், செப்பல், (அகவல் அல்லாதது) துள்ளல், தூங்கல் என்று ‘பா’ நான்கு வகைப்படும் என்று கூறும் தொல்காப்பியம் (தொ.செ.77-80), அவ்வோசைகளினால் பாடப்படும் பாடல்கள் முறையே ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றும் வரையறுத்துக் கூறுகின்றது. இவை அமையும் முறைகளைப் பற்றித் தொல்காப்பிய உரையாசிரியர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

மேலும் நான்கு வகை பாக்களைப் பற்றிக் கூறும் தொல்காப்பியம்,

“பரிபாடல்லே தொகை நிலை வகையின்
இது பா என்னும் இயல் நெறியன்றிப்
பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப” (தொ.செ.106)

என்று ‘பரிபாடல்’ என்ற ஒரு பா வகையினைப் பற்றியும் கூறுகின்றது. “பரிபாடலுக்கான விளக்கத்தைக் கூறுகின்ற தொல்காப்பியர் தன் கூற்றாகக் கூறாமல் ‘மொழிப’என்று தன் முன்னோர் இவ்வாறு வழங்குவர் எனக்கூறியுள்ளார். எனவே இந்த பா மேற்கண்ட நான்கு பாக்களுக்கு முன்னர் இருந்த ஒரு பா ஆகும்” என்று கூறும் சி.மெய்யப்பன் “ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்று நான்கு வகைப்பாக்களின் தன்மையும் கொண்ட பொதுப்பாவாய் இங்குச் சுட்டப் பெறும் இவ்வகை பரிபாடலே ஆதிப்பா எனல் வேண்டும். இது ஆசிரியமா? வஞ்சியா? கலியா? எனப் பிரித்தறிய முடியாத வண்ணம் நால்வகைப் பாக்களின் எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு பொதுவாய் நிற்கும். இதுவே மூலப்பா என்பதாம்30 என்கிறார்.

மேற்கண்ட விளக்கங்களின்படி பார்த்தோமேயானால் தொல்காப்பியர் காலத்தில் ஓசையைப் பிரித்தறிய கூடிய பாக்களாக ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாக்கள் மட்டுமே இருந்துள்ளமை புலனாகிறது.

தொல்காப்பியத்தைத் தொடர்ந்து கி.பி 10-ம் நூற்றாண்டளவில் தோன்றிய யாப்பருங்கலம் என்ற நூலும் பாக்களின் வகைகளைப் பற்றிக் கூறியுள்ளது. தொல்காப்பியம் பா என்ற ஒன்றினை மட்டுமே கூற இந்நூல்,

“செய்யுட்டாமே மெய்பெற விரிப்பின்
பாவே பாவினம் என விரண்டாகும்” (யா.வி.54)

என்று தன் காலத்தில் வளர்ந்த வளர்ச்சியைப் பற்றியும் கூறியுள்ளது. இந்நூற்பாவின் கருத்துப்படி பா என்பது, பா- பாவினம் என இரண்டு வகைப்படும். அதாவது, “அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் பா என்பதூஉம் காரணக்குறி, ஒரு புடையார் பாவினொடு ஒத்த இனத்தவாய் நடத்தலின் பாவினம் என்பதூஉம் காரணக்குறி இவற்றை இடுகுறி எனினும் இழுக்காகாது”31 என்கிறது.

இதே நூல் ‘பா’வைப் பற்றி இன்னும் கூறும்போது

“வெண்பா ஆசிரியப்பா கலியே வஞ்சியெனப்
பண்பாய்ந்து துரைத்த பா நான்காகும்” (யா.வி.55)

நான்கு வகைப்படும் என்ற தொல்காப்பியத்தின் விளக்கத்தினையே இது வழி மொழிவதாகவே அமைந்துள்ளது.

மேற்கண்ட பாக்களுடன் பாவினம் என்ற ஒன்றைப் பற்றிய செய்தியையும் இந்நூல் கூறுகிறது.

“தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொடு பாற்பாட்டியலும்” (யா.வி.56)

இச் சூத்திரத்தின் கருத்துப்படி “தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும் பாவினம் எனப்படும். இவை பாவினோடும் கூடி பெயர் பெற்று நடக்கும்”32 என்பதை அறிய முடிகிறது. அத்துடன் தாழிசை, துறை, விருத்தம் என்ற இம்மூன்று ஓசைகளும் மேற்சொல்லப்பட்ட நான்கு ‘பா’வகைகளுடன் இணைந்து வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் எனவும், ஆசிரியத்தாழிசை ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் எனவும், வஞ்சித்தாழிசை வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் எனவும் வழங்கப்படும்33 என்கிறது யாப்பருங்கலம்.

இந்நூலைத் தொடர்ந்து காக்கைப் பாடினியார், சிறு காக்கைப் பாடினியார், அவிநயனார், மியேச்சுரர் போன்றோரும் பாவினங்களை மேற்கண்டவாறே கூறியுள்ளனர். பாவினங்கள் இவர்கள் கால வளர்ச்சி என்று கொண்டாலும் இவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகை பாக்களில் அடங்கும் என்பது புலனாகின்றது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தொல்காப்பியர் காலம் முதல் உரையாசிரியர்களின் காலம் வரையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு மட்டுமே பா - (ஓசை) என்று அழைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

அடி அளவு

பாட்டிற்குப் பா - (ஓசை)வுடன் அவ்வோசைக்குரிய அடி அளவும் இன்றியமையாததாகும். இதனை “அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படுமென்றவாறு. எனவே பாட்டென்னுஞ் செய்யுட்கு அடியின்றியமையாதென்று கொள்க”34 என்ற பேராசிரியரின் தொல்காப்பியத்திற்கான உரை உறுதிப்படுத்துகிறது. இப்பாக்களுக்கான அளவுகள் குறித்து தொல்காப்பியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

“ஆசிரியப்பாட்டின் அளவிற்கெல்லை
ஆயிரமாகும் இழிபு மூன்றடி” (தொ.செ.50)

என்ற தொல்காப்பிய நூற்பா “ஆசிரியப்பா என்பது மூன்றடி முதல் ஆயிரம் அடி வரை நீண்டு அமையும் என்று அடி எல்லையை வரையறுத்துக் கூறுகிறது. இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் “பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும், சிலப்பதிகாரத்தினுள்ளும், மணிமேகலையினுள்ளும் கண்டு கொள்க. ஆசிரிய நடைத்தே வஞ்சி என்றதனான் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமையாகக் கொள்க”35 என்று விளக்கமளித்துள்ளார். இவரது கூற்றின்படி ஆசிரியப்பாவின் அளவு வஞ்சிப்பாவிற்கும் பொருந்தும் என்பதாகும். எனவே வஞ்சிப்பாவிற்கும் எல்லை ஆயிரம் அடியாகும் என்பதும் புலனாகிறது.

குறுவெண்பாவிற்கான அளவு இரண்டடியும், நெடுவெண்பாட்டிற்கான அளவு பன்னிரண்டடியாகும் (தொ.செ.151) என்று தொல்காப்பியம் வெண்பாவிற்கான அடி அளவினைப் பற்றியும் கூறுகிறது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து பாட்டு என்பதற்கு ஓசை, அடியளவு என்ற கூறுகள் இன்றியமையாதது என்பதை அறியமுடிகிறது. ஓசை என்ற கூறின் அடிப்படையில் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு பாக்கள் உள்ளன. அடி அளவு என்ற கூறின் அடிப்படையில் அவற்றின் அளவு இரண்டடியிலிருந்து ஆயிரம் அடிக்குள் அமையும் என்பது புலனாகிறது.

பாட்டு எனக் கொள்ளத்தக்கன

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து பாட்டு - பத்துப்பாட்டு என்ற சொல்வழக்கு ஏற்பட்ட காலத்தில் பத்துப்பாட்டுடன் கீழ்கண்ட பாடல்களும் பாட்டு என்று அழைக்கத்தக்க தகுதியைப் பெற்றிருந்துள்ளன என்பது புலனாகிறது. அவை,

எட்டுத்தொகைப் பாடல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, (பரிபாடல் நீங்கலாக) கலித்தொகை, புறநானூறு மற்றும் பதினெண்கீழ்கணக்கு நூலிலுள்ள பாடல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, களவழி நாற்பது என்பனவாகும்.

இவ்வாறு பாட்டு என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்ற பல பாடல்கள் இருக்கும் பொழுது பத்துப்பாட்டினை மட்டும் பாட்டு என்று அழைக்கக் காரணம் என்ன? என்பது தொக்கியே நிற்கிறது. அது குறித்து இனிப் பார்போம்

அதற்கு முதற்கண் பத்துப்பாட்டு என்ற சொல்வழக்கு எப்போது ஏற்பட்டது என்பதைப் பற்றி அறிவது அவசியமாகும்.

பத்துப்பாட்டு - பற்றிய சொல்வழக்கு

மூன்று சங்கங்களைப் பற்றியும் அதில் இருந்த புலவர்கள் மற்றும் அவர்களால் பாடப்பட்ட பாடல்கள் பற்றிய செய்திகளும் இறையனார் களவியல் உரையில் கூறுப்பட்டுள்ளன. அதில் கடைச் சங்க நூல்களாக.... நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலித்தொகை, எழுபது பரிபாடல்.... என்று எட்டுத்தொகைப் பாடல்களைப் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளன. அதில் பத்துப்பாட்டிலுள்ள பாடல்கள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே பத்துப்பாட்டு என்ற சொல்வழக்கு அக்காலத்தில் ஏற்படவில்லை என்பதை அறியமுடிகிறது.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் ஒருவரான பேராசிரியர், தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா36 மற்றும்37 ஆகியவற்றிற்கான உரையில் ‘பாட்டினுந் தொகையினும்’ என்று பத்துப்பாட்டினைப் பற்றி கூறியுள்ளார். எனவே பேராசிரியர்தான் முதன் முதலில் ‘பத்துப்பாட்டு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. வையாபுரிபிள்ளை38 மற்றும் டாக்டர் மா.இராசமாணிக்கனார்39 இக்கருத்துடையவர்களே என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

நன்னூல் நூற்பா 387 -ற்கு உரை எழுதிய மயிலைநாதர், “ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்கணககென்னும்....”40 என்று பத்துப்பாட்டுடன் பிற பாடல்களின் தொகுப்பு பற்றிய செய்தியைக் கூறியுள்ளார்.

“நூறு அடிச்சிறுமை நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈர்ஐம் பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே” (சூ.384)

அதுவே

“அகவலின் வரும் என அறைகுவர் புலவர்” (சூ.385)

என்று பன்னிருபடலத்தில் பத்துப்பாட்டினைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட இரு சூத்திரங்களும் பத்துப்பாட்டு என்னும் வழக்குப் பெருகிய கால கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பன்னிரு படலம் என்பது ஒரு தொகை நூல். இந்நூல் இதுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை. இதன் ஆசிரியர் யார்? இது எந்த கால கட்டத்தில் பாடப்பட்டது என்ற செய்திகள் ஏதும் அறியப்படவில்லை. “இப்படி ஒரு நூல் இருந்தமை பற்றி இறையனார் அகப்பொருள் உரை, புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கல விருத்தியுரை, தொல்காப்பியம்-இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பேராசிரியர் உரை, தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை, மதுரைக்காஞ்சி நச்சினார்க்கினியர் உரை, மாறனலங்கார உரை, இலக்கண விளக்க உரை, சிவஞான முனிவரின் தொல்காப்பியப் பாயிரவிருத்தியுரை முதலியவற்றினால் அறியப்படுகிறது”41

திருவெள்ளறைக் கல்லெழுத்தில்,

“வெறிஆர் தளவத் தொடைச் செயமாறன் வெகுண்டது ஒன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமித்துப்
பரியாத தூண் இல்லை கண்ணன் செய்பட்டினப்பாலைக்கு அன்று
நெறியில் விடும் தூண் பதினாறுமே அங்கு நின்றனவே”

என்று பட்டினப்பாலையின் சிறப்பினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

“தத்துநீர் வரால் குரமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்”(கலிங்.199)

என்ற கலிங்கத்துப்பரணி பாடல் பட்டினப்பாலை பாடலைப் பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு அரசன் பதினாறாயிரம் பொன் கொடுத்தான் என்று கூறுகின்றது. இச்செய்தியை,

“பாடிய பாக்கொண்டு பதினாறு
கோடி பசும்பொன் கொடுத் தோனும்”
என்ற சங்கரன் சோழன் உலாவும்,
“பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே”

என்ற தமிழ் விடுதூதும் கூறுகின்றன.

இந்தக் குறிப்புகள் மூலம் பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள் 11-13- ஆம் நூற்றாண்டுகிடையிலான காலகட்டத்தில் சிறந்த பாடல்களாக அக்கால மக்களால் கருதப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. என்றாலும், அப்பாடல்களின் சிறப்பிற்குக் காரணம் அப்பாடல்களின் ‘அடியளவு’ (நீண்ட பாடல்) என்ற கூறுதான் காரணம் எனபதைத் தெளிவாக அறியமுடிகின்றது.

திருமுருகாற்றுபடைக் கூறும் முருகனின் இருப்பிடங்கள்?

முருகனிடம் ஆற்றுப்படுத்தும் அடியார் (புலவர்) முருகன் வீற்றிருக்கும் இடங்கள் இவை என்று ஒரு பட்டியலைத் தருகின்றார். அப்பட்டியலில் கூறப்படுள்ள இடங்கள் வருமாறு.

திருப்பரங் குன்றத்தில் - முருகன் (67-77) மதுரையின் மேற்கே உள்ளது. திருச்சீர் அலைவாயில் இருக்கும் முருகன் (78 - 82) களிற்றின் மீது ஏறி அமர்ந்துள்ள முருகனின் திருமுகமும் (திருமுருகச் செயல்கள் 91-103), பன்னிருகைகளும் (பன்னிருகைகளின் செயல்கள் 104 -118) அவனுடைய குறிப்பிற்கு ஏற்ப செயல்படுகின்றன. திரு ஆவினன் குடி (126-176)யில் எக்காலத்தும் அழுக்கற விளங்கும் சிறந்த மரவுரியை உடையாக உடுத்திய, முனிவர்கள் முன்னே செல்லவும், (126 -137) புகையை முகந்து கொண்டது ஒத்த மென்மையான ஆடை அணிந்தவரும், மொட்டுக்கள் அவிழ்ந்த மலர்களாலான மாலையை மார்பில் அணிந்தவருமாகிய கந்தர்வர்கள் குற்றமின்றித் தொழுது நிற்கவும், (138-147) திருமால், சிவன், இந்திரன் முதலியோரும், ஆதித்தன், உருத்திரன், வசு மருத்துவன் என்னும் நான்கு வேறுபட்ட முப்பத்து மூவரும் பதினெண்வகை உயர்ந்த நிலையையுடைய தேவர்களும், விண்ணில் மீன்கள் பூத்தாற் போன்று பொலிவுறத் தோன்றித் தம் வறுமையாகிய குறையைப் போக்குமாறு வேண்டி நிற்பார்.

திருஏரகம் (177-189) முப்புரி நூலையும், உலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேல் குவித்த கையினராய்த் தன்னைப் புகழ்ந்து ஆறெழுத்தாகிய (சரவணபவ) மந்திரத்தை உச்சரிப்பர். குன்று தோறும் ஆடல் (190 -217) சந்தனக் குழம்பை மார்பிலே பூசி வில்லால், கொடிய தொழிலாகிய கொல்லுதலைச் செய்யும் குறவர்கள் மூங்கில் குழாயினில் தேனைப் பொய்து முற்றும்படி செய்த கள்ளை மலைப் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையை முழக்கி அதற்கேற்ப குரவைக் கூத்து ஆடுவர். அத்தகைய கூத்தாடுவோருடன் மலைகளில் சென்று விளையாடுவதை தனக்கு நிலையான குணமாகக் கொண்டவன்.

பிற இடங்கள் (பழம் முதிர்சோலை) (218-249) - விழாக்களில் கிடா வெட்டும் இடங்களிலும், வேலன் அமைத்த வெறியாடு களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறையிடங்களிலும், ஆறு குளம் மற்றுமுள்ள வேறு பல இடங்களிலும், நாற்சந்திகளிலும், கடம்ப மரத்திலும், ஊர் நடுவே மக்கள் கூடும் மன்றத்து மரத்திலும், மக்கள் வாழும் அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண் இவ்வாறு வேலன் வெறியாட்டு அயரும் களம் ஆரவாரிக்கும் படி, ஊதுகொம்புகள் பலவற்றையும் ஒரு சேர ஊதி மணியை ஒலித்து அப்பெருமானின் யானையை வாழ்த்திக் குறைகள் தீர வேண்டினோர், தாம் வேண்டியவற்றைப் பெற்றோர் போன்று நின்று வழிபாடு செய்ய அவ்விடங்களில் தங்குதல் உரியன்.

இவ்வாறு, முருகன் தங்கி இருக்கும் இடங்களைப் பற்றிக் கூறிப் புலவர், அடியாரை ஆற்றுப்படுத்தியுள்ளார். “இதில் முருகன் கோயில் கொண்டுள்ளனவாகச் சிறப்பித்துக் கூறப்படும் இடங்கள் பரங்குன்றம், அலைவாய், ஆவிநன்குடி, ஏரகம் ஆகிய நான்கேயாகும். அத்துடன் முருகன் குன்றுதோறும் ஆடல் புரிகின்றான் என்றும், ஊர் மன்றங்களிலும், நீர் துறைகளிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் அவன் தோன்றுவான்” என்றும் கூறி முடித்துள்ளார் புலவர். இவ்விவரங்களை நோக்க, ஆற்றுப்படுத்திய அடியவர் முருகன் எங்கும் இருப்பவன் என்பதைப் புதியவனுக்கு அறிவுறுத்தி, அக்காலத்தில் சிறப்புற்றிருந்த முருகனுக்குரிய இடங்கள் நான்கை மட்டும் விளக்கமாகக் கூறி ஆற்றுப்படுத்தினான் என்று கொள்வதே பொருத்தமாகும்39 என்று நிலவியல் பின்புலத்தில் ஆராய்ந்து கூறும் டாக்டர் மா.இராசமாணிக்கனார், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய மூன்று பாடல்களிலும் கூறப்பட்டுள்ள வழிவருணனை புவியியல் அமைப்பில் உள்ளது போன்றே முறையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படையில் மட்டும் வழிக் கூறலில் முரண் உள்ளது என்கிறார். அதாவது, “திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் வழியே புதியவன் அத்தலங்களைக் காணவேண்டுமாயின் முதலில் திருப்பரங்குன்றத்தை வழிபட்டு, பின்பு ஏறத்தாழ நூறுகல் தூரம் தெற்கே சென்று அலைவாயை அடைய வேண்டும். அங்குள்ள முருகனை வழிபட்ட பின் அவன் மீண்டும் மதுரை மாவட்டத்திலுள்ள பழனியை அடைய வேண்டும். பின்பு அப்புதியவன் தென் கன்னட மாவட்டத்திலுள்ள ஏரகத்தை அடைய வேண்டும். ஆற்றுப்படுத்திய அடியவன் பரங்குன்றத்தை அடுத்து ஆவிநன்குடியைக் கூறியிருத்தல் வேண்டும். அதுவே முறையாகும். அவன் எக்காரணங்கொண்டோ அங்ஙனம் கூறாமல், இரண்டாவதாகக் குறிக்க வேண்டிய இடத்தை மூன்றாவதாகக் கூறிவிட்டான்43 என்கிறார்.

திருமுருகாற்றுப்படையில் முருகன் கோயில் கொண்டுள்ள இடங்கள் என்று நான்கு மற்றும் பிற இடங்கள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க இன்று முருகனின் ‘அறுபடை வீடுகள்’ என்று ஒரு பட்டியல் உள்ளது.

‘’இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடை வீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை: திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) (பாண்டிய நாடு) திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்) (பாண்டிய நாடு), திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்) (கொங்கு நாடு), திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்) (சோழ நாடு), திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்) (தொண்டை நாடு), பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்) (பாண்டிய நாடு)44 என்பனவாகும்.

இவற்றில்,

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம், இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர், மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி), நான்காம் படைவீடு : திருவேரகம், (சுவாமிமலை), ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்), ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)45 என ஒரு வரிசைமுறையும் இன்று நிலைபெற்றுள்ளது. இது எந்த ஆதாரங்களின் பின்னணியில் உருவது எனத் தெரியவில்லை. ஆனால் இன்று பரவலாகத் தமிழ்ச் சூழலில் இந்தப் பட்டியில் நிலை கொண்டுவிட்டது.

இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் முதல் மூன்று மட்டுமே திருமுருகாற்றுப்படைப் பாடலில் சொல்லப்பட இடங்களாக உள்ளன. எஞ்சியவற்றில் நான்காவதும் மற்றும் ஆறாவதுமாகச் சுட்டப்படுபவை தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ளது46 என்று மா.இராசமாணிக்கனார் உரிய சான்றுகளுடன் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

ஐந்தாம் படை வீடாக இன்று சுட்டபெறும் திருத்தணி (குன்றுதோராடல்) குறவர்கள் கள்ளுண்டு மலைப் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழும் தம் சுற்றத்தாருடன் மகிழ்ந்து தொண்டகப் பறையை முழக்கி அதற்கேற்ப குரவைக் கூத்து ஆடும் இயல்பில் உள்ளதா? என்பது கேள்வி குறியாகும்.

மேலும், கிடா வெட்டும் இடங்களிலும், வேலன் அமைத்த வெறியாடு களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறையிடங்களிலும், ஆறு குளம் மற்றுமுள்ள வேறு பல இடங்களிலும், நாற்சந்திகளிலும், கடம்ப மரத்திலும், ஊர் நடுவே மக்கள் கூடும் மன்றத்து மரத்திலும் முருகன் இருப்பான் என்பது குறித்து நாம் கவனிப்பதில்லை.

கிடாய் வெட்டி படையல் போடுதல் என்பது தமிழ் மரபில் அதுவும் நாட்டார் மரபில் தொடர்ந்து பின்பற்றி வரப்படும் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும. அந்த வழிபாடு பல்வேறு நாட்டார் தெய்வங்களுக்கு இன்றும் செய்யப்பட்டு வருகிறது. அப்படிப்பட வழிபாடு முருகனுக்கு படலில் சொல்லப்பட்டவாறு இன்றும் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் என்ற ஊரில் முருகனுக்கு அவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட வழிபாடு வேறெங்கேனும் செய்யபடுகின்றதா? என்று நாம் ஆராயவேண்டியுள்ளது. அப்படி ஆராய புதிய கருத்தியலை நோக்கி நாம் நகர வாய்ப்புள்ளது.

முடிவுரை

இதுவரை கண்ட விளக்கங்களினல் இருந்து பின்வரும் முடிவுகள் கிடைக்கின்றன.

    பாட்டு என்பதற்கு அடியளவு (நீண்ட பாடல்கள்) என்பதுதான் காரணம் என்பது தெளிவாகிறது.

    பத்துப்பாட்டிலுள்ள முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை (வஞ்சி நெடும்பாட்டு) ஆகின ‘பாட்டு’ என்றே அழைக்கப்பட்டுள்ளன.

    தொகுக்கப்பட்ட காலத்தில் இப்பாடல்களைப் பிற பாடல்களைவிட சிறந்த பாடல்களாக அக்கால அறிஞர்கள் கருதியிருக்கின்றனர். அதற்குக் காரணம் ஆசிரியப்பாவினால் பாடப்பட்ட பெரிய பாட்டு என்பதே. எனவே பாட்டு என்பது காரணப் பெயராகும்.

    பாட்டு என்று அழைக்கத் தொடங்கிய காலத்திற்கும் பத்து + பாட்டு = பத்துப்பாட்டு என்ற எண்ணிக்கையைச் சேர்த்து வழங்கத் தொடங்கிய காலத்திற்கும் இடையே சில நூற்றாண்டு இடைவெளி இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

    இந்தக் கால இடைவெளியில்தான் பாட்டு என்பது ஒன்பது (ஒன்பது பாட்டு) என்ற எண்ணிக்கையில் இருந்து பத்து (பத்துப்பாட்டு) என்ற எண்ணிக்கைக்கு மாறியுள்ளது.

    திருமுருகாற்றுப்படையைப் போன்ற அமைப்பினைக் கொண்ட பாடல்கள் எதுவும் எட்டுத்தொகைப் பாடல்களில் இல்லை. இப்பாடல் பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படைப் பாடல்களின் சாயலைக் கொண்டுள்ளது. எனவே, இப்பாடல் பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப்படை முதலிய பாடல்களுக்குக் கடவுள் வாழ்த்தாக நூல் தொகுத்தோரால் முதலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். பின்னர் அப்பாடல்களின் சாயலைக் கொண்டிருப்பதால் அது அப்பாடல்களுள் ஒன்றாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய மாற்றம் களவியல் உரைக்கும் நன்னூல் மயிலைநாதர் உரை காலத்திற்கும் இடையே நடைபெற்றிருக்க வேண்டும்.

    முருகாற்றுப்படை என்பது பின்னாளில்தான் ‘திரு’ என்ற முன்னொட்டுடன் திருமுருகாற்றுப்படை என்று வழங்கப்பட்டுள்ளது.

    முருகனின் இருப்பிடங்கள் மூன்று தமிழ் நாட்டிலும், இரண்டு தமிழ் நாட்டிற்கு வெளியிலும் உள்ளது.

    இன்று வணங்கப்படும் அறுபடை வீடுகளில் முதல் மூன்று மட்டுமே திருமுருகாற்றுப்படையில் கூறப்படுள்ளவை.

    முருகனுக்குக் ‘கிடாய் வெட்டி படையல் போடும்’ வழக்கம் பற்றித் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

குறிப்பு விளக்கம்

    வையாபுரிபிள்ளை, பேராசிரியர் எஸ்., வையாபுரிபிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, இலக்கியச் சிந்தனைகள், நூற்றாண்டு நினைவு வெளியீடு, 1989, பக்.142-183.

    தொல்காப்பியம் எச்சவியல், நூற்பா.88.

    இராசமாணிக்கனார், டாக்டர் மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1970, பக்.38-47.

    கோவிந்தசாமி, டாக்டர்.மு., தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, ப.61.

    இலக்குவனார், புலவர்., ஆற்றுப்படையும் ஆறுபடைவீடும், செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 53, பரல் 12, ஆகஸ்ட் 1979, ப.579.

    வெள்ளைவாரணன், க., பன்னிரு திருமுறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ப.671.

    சந்திரன், முனைவர். ஆ., பத்துப்பாட்டு அமைப்புமுறை, சீதை பதிப்பகம், திருச்சி, 2025, ப.94.

    மேலது, ப.53

    வையாபுரிபிள்ளை, பேராசிரியர்.எஸ்., வையாபுரி நூற்களஞ்சியம், முதல் தொகுதி, இலக்கியச் சிந்தனைகள், நூற்றாண்டு நினைவு வெளியீடு, சென்னை, 1989, பக்.142-183.

    கைலாசபதி, க., தமிழ் வீரநிலைக் கவிதைகள், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2006, ப.54.

    கோவிந்தசாமி, டாக்டர்.மு., தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, ப.61.

    இராமசாமி, மு.பெரி.மு., நக்கீரர் ஓர் ஆய்வு, பாரி நிலையம், சென்னை, 1983, ப.87.

    திருமுருகாற்றுப்படை பொருள் விளக்கமும் விருத்தியுரையும் சென்னை : இரத்தின நாயகர் ஸன்ஸ், வெளியிட்டது. பக். 12_13 (இதில் ஆண்டு முதலிய குறிப்பகள் இல்லை).

    திவாரகம் நிகண்டு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1993, ப.84.

    சூடாமணி நிகண்டு, முதல் பதிப்பு, 11-ம் தொகுதி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998, ப.155.

    கலித்தொகை, பா.17:1.

    பெருங்கதைப் பாடல், பா.103:39.

    கலிங்கத்துப் பரணி, பா.4, 5.

    பெரும்பாணாற்றுப்படை, பா.190.

    குறுந்தொகை, பா.89:1.

    சம்பந்தர் தேவாரம், பா.1.8:4.

    பேராசிரியர் உரை, தொல்காப்பியம் செய்யுளியல், (உரைவளம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989, ப.5.

    தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982, பகுதி-5, பாகம் - 2 ப.2590.

    கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூல் பதிப்புக் கழகம், சென்னை, 1964, ப.669.

    திருமகள் அகராதி, திருமகள் நிலையம், தி.நகர், சென்னை, 2001, ப.169.

    இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் செய்யுளியல், (உரைவளம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989, ப.233.

    மேலது , ப.1

    ’’ ‘’ ப.358

    வரதராசனார், மு., இலக்கியத் திறனாய்வு, சென்னை, ப.63

    மெய்கண்டன், சி., தொல்காப்பிய பாவியல் கோட்பாடு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999, ப.26.

    அமிர்தசாகரனார், யாப்பருங்கலம் விருத்தியுரை, மறுபதிப்பு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998, ப.223.

    மேலது.

    ’’ “

    பேராசிரியர் உரை, தொல்காப்பியம் செய்யுளியல், (உரைவளம்) மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989, ப.358.

    இளம்பூரணர் உரை, மேலது, ப.816.

    பேராசிரியர் உரை, தொல்காப்பியம் செய்யுளியல், (உரைவளம்) மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989, ப.233.

    மேலது, ப.365.

    வையாபுரிபிள்ளை, எஸ்., இலக்கியச் சிந்தனைகள், முதல் தொகுதி, சென்னை, 1989, பக்.163-164.

    இராசமாணிக்கனார், டாக்டர்.மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1970, ப.33.

    நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், மூன்றாம் பதிப்பு, உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, 1995, ப.212.

    சுந்தர சண்முகனார், புலவர்., தமிழ் நூல் தொகுப்புக் கலை, பாரி நிலையம், சென்னை, 1972, ப.147.

    இராசமாணிக்கனார், டாக்டர் மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், 1970, சென்னை, பக். 55-59.

    மேலது. ‘’ ‘’

   அறுபடை வீடுகள்

   முருகனின் அறுபடை வீடுகள் -

    இராசமாணிக்கனார், டாக்டர் மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகம், 1970, சென்னை, பக். 201- 213.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்