
[எழுத்தாளர் முல்லை அமுதன் ]
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.
முல்லை அமுதன் பிறப்பு
இலங்கையின் யாழ்ப்பாணம் கல்லியங்காட்டில் 27.08.1954ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை இரத்தினசபாபதி. தாய் வேதவல்லி. இவர் திருகோணமலை மெதடிஸ்ற் தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். மகேந்திரன் அவர்கள் எழுத ஆரம்பிக்கும்போது புனைபெயராக முல்லை அமுதன் என்ற பெயரை வைத்துக்கொண்டார். காலப்போக்கில் அப்பெயரே நிலைபெற்றுவிட்டது.
முல்லை அமுதன் அவர்களின் படைப்புகள்
முல்லை அமுதன் அவர்கள் நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத்தொடும், யுத்த காண்டம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இன்று என் வீடு அழகாய் இல்லை ஆகிய கவிதை நூல்களையும் விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், ஆத்மா, சிநேகம், யாகம் ஆகிய நாவல்களையும் இலக்கியப்பூக்கள் என்னும் இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு நூல்கள் இரண்டையும், எழுத்தாளர் விபரத்திரட்டு என்ற ஆவண நூலையும் தாமரைத்தீவானின் மொழிநூறு, சுதந்திரன் கவிதைகள் உள்ளிட்ட பிற நூல்களையும் வெளியிட்டுள்ளார். வாழு வாழவிடு, சந்தியில் நில்லாதே, சந்தி சிரிக்கிறது, நல்லமுடிவு, மலராத வாழ்வு ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களுக்கான நூல் கண்காட்சியை நடத்துவதோடு, காற்றுவெளி இதழையும் வெளியிட்டு வருகின்றார். ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருகின்றார்.
புலம்பெயர் எழுத்தாளராக எழுத்துப் பயணம்
ஈழத்திலிருந்து இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்த இவர் இலங்கையின் நாட்டுச்சூழல் காரணமாகவே புலம்பெயர்ந்திருக்கின்றார். தான் வாழ்ந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்தல் என்பது எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்பதை இவரது வார்த்தைகளில் அறியமுடிகின்றது. ஒரு நேர்காணலில்,
“ என்னை நான் வேர் அறுத்து எறியப்பட்டவனாகவே கருதுகிறேன். சூழலுடன் ஒத்துப் போகமுடியாத என்னிடமிருந்து வேரடி மண் தொட்டு எழுதும் எழுத்தாளனாகவே வலம் வருகின்றேன். இதுவரை 13 நூல்கள் வரை எழுதினாலும் மண்ணின் வலி பற்றி எழுதாதவரை இலக்கை இன்னும் தொடாதவனாகத்தான் எழுதுகிறேன்” 1
என்கின்றார். தனது நாட்டிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட எழுத்தாளன் என்ற வாக்கியம் அவரது மனதின் வலியையும் மண்ணின் வலியை எழுதாதவரை எனது இலக்கை அடையவில்லை என்பதையும் தனது வார்த்தைகளில் பதிவு செய்கின்றார். இவரது தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவினாலேயே முதன் முதலில் எழுத ஆரம்பித்ததை, ‘என் தந்தை தீவிர வாசகன். அந்நாட்களில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் அவர் வாங்கி வாசித்ததன் விளைவு வீட்டில் எல்லோரும் வாசிக்கப் பழகினார்கள். நான் எழுதப் பழகினேன்’2 என்று குறிப்பிடுகின்றார்.
1980க்குப் பிறகே தனது எழுத்துப் பயணம் தொடங்கியதாகக் கூறுகின்றார். சிரித்திரன் இதழின் ஆசிரியரின் ஊக்கத்தினால் கவிதை, நாடகங்கள் எழுதிய இவர் நித்திய கல்யாணி கவிதை நூலை 1981ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிட்டதாகக் கூறுகின்றார்.
பெற்ற விருதுகள்
இங்கிலாந்தின் டூட்டிங்க் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் 2012ஆம் ஆண்டு பைந்தமிழ்க் காவலர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டுப் பாராட்டப்பெற்றார். 2013ஆம் ஆண்டு தமிழினி விருது பெற்றவர்.
இவரது கவிதைகள்
முல்லை அமுதன் அவரது கவிதைகள் யதார்த்த வாழ்வியலைச் சொல்வதாக அமைந்துள்ளன. பெண்களின் துயரங்களையும் அவரது கவிதைகளில் காணமுடிகின்றது. இவரது கவிதைகள் தான் முதன்முதலில் எல்லோரையும் வாசிக்க வைத்ததாகக் கூறுகின்றார். ‘நாளை வரும் அக்குயில்’ தலைப்பிலான கவிதை என்னை ஈர்த்தது.
“முன்னம் ஒரு நாள்
ஏவாள்
கதைசொன்ன அக்
குயில்-
பின்னே- மேரி
கதை சொல்லவும்
சீதை-அகலிகை
மாதவி- கண்ணகி
கதைகளை-
சொல்லியபின்
இப்போ-
வாழ் வின்றி
பாழாகிப்போன புனிதாக்கள்
கதை கூறிச்சென்றது...
மீண்டும் அக்குயில்
நாளை வரும்...
எந்த புனிதாக்கள்
கதை சொல்லுமோ...
நாளை காத்திருக்கிறது...”3
இந்தக் கவிதை சொல்லும் சேதி எப்போதும் பெண்கள் புனிதாக்களாகவே இருக்கிறார்கள் ஆண்கள் அப்படி இருப்பதில்லை என்பதைப் பதிவிடுகின்றது. மனிதனுடைய ஏக்கங்கள், வேதனைகள், சமுதாயச் சிக்கல்களைத் தனது கவிதைகளில் மிகுதியாக நவில்கின்றார். இவரது கவிதைகளில் புராணக் கதைகளை தற்காலச் சூழலில் ஒப்பிட்டுக் கவிதையாக்கி வடித்துள்ளார். பெண்கள் இவரது கவிதைகளில் முதிர்கன்னிகளாக, ஆண்களால் கைவிடப்பட்ட பாஞ்சாலிகளாக, விலைமாதுக்களாக இருக்கும் துயரங்களைப் பெரும்பான்மையாக ஓவியமாக்கியுள்ளார். ஆண்களின் துயரங்களையும் சில கவிதைகளில் பதிவிடுகின்றார். சான்றாக சுமைகள் தலைப்பிலான கவிதையில்,
யேசுநாதர்தான்
சிலுவை சுமந்தார்
என்பதல்ல...
நாங்களும்தான்
ஏழைத்தங்கைகளை
கரைசேர்க்க-
பாலைவனத்தில் பொதி
சுமக்கின்றோம்
என்று ஆண்களின் குடும்பச்சுமையைக் காட்டுகின்றார். இவை யாவும் யுத்தகாண்டம் நூலில் வந்த கவிதைகளாகும். சொந்த நாட்டின் காயங்கள் ஏற்படுத்திய வடு இவரது கவிதைகளில் மிளிர்கிறது.
“வெள்ளையனே வெளியேறு”
கோஷங்கள் தொடர்ந்தன
இன்று-
சிறிது மாற்றம்தான்,
எனினும்
எல்லாம் நமக்கு ஒன்றுதான்
“தமிழனே வெளியேறு”
என்று மாற்றமில்லா…! தலைப்பிலான கவிதை தமிழனை வெளியேற்றும் சிங்களர்களின் எண்ணங்களைக் காட்டுகின்றது.
இதழாளர்
இவர் காற்றுவெளி இதழை 2002ஆம் ஆண்டு ஷோபா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டு வருகின்றார். 23 ஆண்டுகளாக வெளிவரும் காற்றுவெளி இதழைத் தன்னார்வ அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார். முல்லை அமுதன் அவர்கள் படைப்பதோடு மட்டுமல்லாது இதழாளராகத் தொடர்ந்து தனது பங்களிப்பினைச் செய்து வருகின்றார். நெய்தல் என்ற கவிதை இதழையும் வெளியிட்டுள்ளார். “ஈழத்து இலக்கியங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவேண்டுமெனில் சக எழுத்தாளர்களை நேசிக்கவேண்டும்”4என்பதைத் தனது நேர்காணல் ஒன்றில் பதிவிடுகின்றார்.
நிறைவுரை
ஈழத்தில் பிறந்து இலண்டனில் இதழாளராக, படைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தமிழ் இலக்கியங்களைக் காட்சிப்படுத்தி, சேகரித்து வரும் பன்முகத் திறமைகள் பெற்ற முல்லை அமுதன் அவர்களின் பணி மேன்மேலும் சிறந்து விளங்கட்டும். அதன்மூலம் படைப்பாளர்கள் பயன்பெற்று நிறைவடையட்டும்!
துணைநின்ற நூல்கள்
!. tamilathours.com வலைத்தளப்பக்கம்- எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
2. tamilathours.com வலைத்தளப்பக்கம்- எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
3. முல்லைஅமுதன், யுத்தகாண்டம், காவ்யா புக்ஸ் வெளியீடு, பெங்களூர்
4. tamilathours.com வலைத்தளப்பக்கம்- எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









