எல்லோரையும் ஆகர்ஷிக்கக்கூடிய இலக்கிய வடிவம் கவிதை, தமிழில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. கவிதையாகவன்றி அர்த்த புஷ்டியுள்ள சமூக, தனிமனித பிரக்ஞையுள்ள ஒன்றாகவே கவிதை ஆரம்பத்தில் இருந்து வந்தாலும் காலதேச வர்த்த மானத்திற்கேற்ப அது தன்னைப் படிமலர்ச்சி செய்து கொள்கிறது. அறமாய், தத்துவமாய், பிரசார மொழியாய் கற்பனை யதீதமாய், உணர்வுகளின் குழம்பாய், வித்துவச் செருக்காய் எனப் பல்ரூப சுந்தரமாய் காட்சியளிக்கின்றது.
தமிழ்க் கவிதையை அழகுபடுத்தியதில் ஈழத்தவர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. திருகோணமலையில் பிறந்து தமிழகத்தை வாழ்விடமாகக் கொண்டு கவிஞனாகவே வாழ்ந்து மறைந்து போன ஒருவரே பிரமிள் என்கின்ற தர்மு சிவராம். அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்களோ அநேகம் மரபில் காலூன்றி புதிய முன்னகர்வுகளையும் புதுக்கவிதையாக்கத்தில் புதிய பாய்ச்சலையும் தந்தவர் பிரமிள். படிமங்களை அதிகம் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்ட சிலர் கருத்தியலையும் படிமங்களாக்கியவர். தனக்கேயான நவீன கவிதா மொழியையும் கவிதா வடிவத்தையும் உருவாக்கி சிறப்பாகப் பயன்படுத்தியவராவார். அவருடைய கவிதைகள் பெரும் பாலும் அகப்பிரக்ஞையின் வழி உருவான அதிதீவிரமான தூண்டுதலுக்கு ஏற்ப துலங்கலாக சொற்கள் வழி பயணித்து தன்னை யாவுமாக (சாங்கிய தரிசனத்தின் பிரக்கிருதி போல) விரித்துக் கொள்கின்றது. ஒளிச் சிதறல்களாய் எங்கும் பரவித் தன்னைக் கட்டவிழ்த்து கட்டவிழ்த்து விரிவும் ஆழமும் தேடிப் பயணிக்கிறது. அந்தப் பயணம் தான் பிரமிளின் அடையாளம் என்றாகிவிட்டது. தன் வாசகர்களாலும் ஏன் எதிர்ப் பாசறையாளர்களாலும் "கவிஞன்" என அங்கீகரிக்கப் பட்ட பிரமிளின் கவிதைகளை ஈழக்கவி நுண்ணிய உசாவல் செய்கிறார்.
யார் இந்த ஈழக்கவி? ஏ.எச்.எம் நவாஷ் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈழக்கவி எண்பதுகளில் இருந்து கவிதை எழுதி வருகிறார். "ஏவாளின் புன்னகை, இரவின் மழையில்" எனும் இரு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அதே வேளை பேராதனை பல்கலைக்கழகத்தில் மெய்யியல் கற்று ஐந்து வருடங்கள் விரிவுரையாளராக பணியாற்றியவர். கல்வியலாளர், அது மட்டுமல்லாது ஆய்வாளராக, விமர்சகராக பன்முகம் காட்டி வருகின்ற ஒருவர் எனும் அடையாளம் இவருக்குண்டு. பிரமிள் பற்றிய கட்டுரை ஒன்று முன்னர் ஜீவநதியில் வெளிவந்தது. பின் இவரது சிறுநூலாக விருப்பமும் முயற்சியும் க. பரணிதரனின் சிறு நூல் வெளியீடு திட்டத்தின் வழி விரிவாக்கமுற்று சிறப்பாக வெளிவந்துள்ளது.
பிரமிள் பற்றி தமிழகத்தில் பேசப்பட்ட எழுதப்பட்ட அளவுக்கு ஈழத்துச் சூழலில் அடையாளமுற வில்லை. அந்த வகையில் இந்த நூலுக்கு தனித்த - முக்கியத்துவம் உண்டு. ஈழக்கவியின் உள்ளத்தில் பிரமிள் பற்றிய எண்ணம் எவ்வளவு உயர்வானது என்பதை நூலின் முதற்பந்தியை சம்பவ சித்திரிப்பின் வழி தொடங்குவதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாரதியாரென்றே அறியாது பாரதியின் பெயர் சொல்லி உண்டியல் குலுக்கிப் பணம் சேர்ப்பவரிடம் பிரமிள் கொண்ட கோபத்தினூடாக எடுத்துரைத்து "தன் கவிதைகள்" மூலமாக மட்டுமல்லாது செயல்களாலும் கவிஞனாக வாழ்ந்தவர் பிரமிள் எனவுரைத்திருப்பது இதற்குத் தக்க சான்றாகும்.
பிரமிளின் கவிதா மேதா விலாசம், அதன் வழி அவருக்கு இருக்கும் தன் முனைப்பு - அகங்காரம் என்பதை ஈழக்கவி நாசூக்காக அதேவேளை தெளிவாக அவர் "மொழி வழி" புலப்படுத்துகின்றார். பல்வேறு தமிழக புனைவு - புனைவு சாரா எழுத்தாளர்களின் கூற்று வழி அதனை நிரூபணம் செய்கிறார். பிரமிளினுடைய கவிதை - கவிதை கோட்பாடு - விமர்சனம் என்பவற்றை அவரது கூற்றுக்களின் வழி எடுத்துரைப்பதோடு அதனை தற்கூற்று வழியாகவும் விரித்துரைக்கின்றார்.
பிரமிளின் கவிதைகளை அதன் பரிணாமத்தை தமிழ்மொழி வழிச் சிறுவட்டத்தினுள் அடக்கி விட முடியாது என்கின்றார். இது கவித்துவத்தின் அடையாளம் மட்டுமல்ல பிரமிளின் கருத்தியலின் அடையாளமும் எனலாம். ஏனெனில் அவரின் கருத்தியல் மற்றும் புலப்பாடு என்பது பௌதீகவதீதத்தை முன்னிறுத்திய தாகும். அதன் விகசிப்பை நவீன கவிஞர்கள் யாரேனும் இவரளவுக்குக் கையாளவில்லை. அது போலவே அவரது ஆன்மீகத்தளமும் அகலமும் ஆழமும் நிறைந்தது. இந்து ஞானமரபின் துலங்கல்களை இவரது கவிதைகள் அதிகம் புலப்படுத்தி நிற்கின்றன. மெய்யியலைத் தன் கற்கைப்புலமாகக் கொண்ட ஈழக்கவியை இந்த மெய்யியல் மரபே ஆகர்ஷித்திருக்க வேண்டும். ஏனெனில் பிரமிளை, அவரது கவிதையை ஈழக்கவி புரிந்து கொள்ளும் முறையும் எடுத்து விமர்சிக்கும் தன்மையும் மெய்யியலின் பாற்பட்ட கட்டமைப்பை உடையதாகவே இருக்கின்றது.
"மனதை சிலுவையில் அறையும் பிரமிளின் பிம்பங்கள்" எனக் கூறும் ஈழக்கவி ஆறு வரிகளில் ஒரு காவியத்தை பிரசன்னமாக்கும் எழுத்து, பிரமிளின் எழுத்து என பரவசமுற்று நிற்கிறார். பிரமிளின் கவிதைகள் பற்றிய ஈழக்கவியின் கருத்து நிலையை "வாழ்வின் நொடிகளுக்குள் காலாதீதம் காண வல்ல கண்ணும் மனமும் மொழியும் பிரமிளின் பெருமித வரங்கள். அணுவிற்குள் இரகசியமாய் உடைந்து கிடக்கும் ஆற்றலைப் போல் சொற்களுக்குள் உயிர்த் திருக்கும் ஜீவச் சிறகுகள் பிரமிளின் கவிதைகளில் விதையுறக்கம் கொள்கின்றன” எனும் வரிகளின் வழி புரிந்து கொள்ள முடியும். ஈழக்கவியின் எழுத்து பிரமிளைப் பற்றிய மதிப்பீட்டில் பரவசமுற்ற பக்தனின் பக்தி மொழியால் கரைந்துருகியோடும் நெகிழ்வில் அதன் சுவை முயக்கங்களின் ஒலி - வரி வடிவங்களாய்ப் பெய்யப்பட்டு இருக்கின்றன. பல இடங்களில் பிரமிள் ஈழக்கவியின் எழுத்தில் பயணிக்கிறார். அத்துவிதமாகிய ரூபமாய் துலங்குகிறார்.
அணு பற்றிய கருத்தியலை ஈழக்கவி விளக்கி நிற்கும் திறன் அலாதியானது. பிரமிளின் பல்வேறு விதமான கவிதைகளை, அவை தரும் தாக்கங்களை, தர்க்கங்களை, வியாக்கியானப்படுத்தி இரசித்து, வியந்து, மகிழ்ந்து நிற்கிறார் ஈழக்கவி. பிரமிளின் ரம்மியமான மாய உலகம் இவரைச் இழுத்து அதனுள் வாழவும் இரசித்து ருசித்து படிமங்களாலான காட்சி ரூபங்களுள் அடர்த்தியும் இறுக்கமும் நிறைந்த மென்னிசையில் மெய்மறந்து மீள மீள சுகித்துக் கிறங்கிக் கிடக்கின்ற அனுபவமாக இந்த நூல் அமைத்திருக்கிறது. பிரமிளின் கவிதைகளில் கருகிப்போன விரியாத சொற்செட்டாக நிற்கிற கவிதைகளை ஈழக்கவி கண்டு கொள்ள வில்லை. அவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை. பிரளின் கவிதா நர்த்தனத்தில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகளை தாளக்கட்டுத் தவறுகளை, உடைப்புகனை ஈழக்கவியின் மனம் கண்டுகொள்ளவில்லை. ஒருவித பரவசத்தில் ஆன்ம லயிப்பில் ஈடுபட்ட விசுவாசம் மிக்க பக்தி யாளனின் ஆனந்தக் களிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
ஈழக்கவியிடம் இயல்பாகவே இருக்கின்ற மெய்யியல் மனம் கவிதா ஈடுபாடு, பௌதீகவதீத -ஆன்மிக நாட்டம் கவிஞர்களுக்கு இயல்பாகவே இருக்கும் தன்முனைப்பு எனும் பன்முகக் கூட்டு இயல்பு பிரமிளின் கவிதைகளில் இவை பரிணமித்து பிரவாகிக்கும்போது இயல்பாகவே இணைந்து கொள்கிறது என்றே கருத முடிகிறது. காதலரிருவர் கருத்தொருமித்த இன்ப சுகிப்பாக அவர் மனம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் கிடக்க மொழி - அவரது எழுத்து அதன் பிரதிபலிப்பாக அமைந்து விடுகின்றது. ஒரு கவிஞன் மெய்யியலாளனாகவும் இரசனையாளனாகவும் இருத்தலின் பேறு இந்த நூல் என்று கூற முடியும். இந்த இரசனை முறை ஆய்வியல் இன்று தமிழில் அருகி வரும் வடிவம் என்பது கவனத்திற்குரியது.