
பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம்.
அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது.
பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மரக் கிளையில் ஏறியிருந்து, லேசாக மேலும் கீழுமாய் அசைந்தபடி வாசித்துக்கொண்டிருப்பார். அவ்வேளை தாயார் செய்யும் எந்த அழைப்புக் குரலும் அவர் செவியில் விழுந்ததேயில்லை. அதுவும் எனக்கு வியப்புத் தந்த இன்னொரு விஷயம்.
அவ்வாறு, அண்ணன்போல் நடந்துகொண்டும், மலரக்காபோல் மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிப்பதற்காகவே எனக்குள்ளும் வாசிக்கும் எண்ணம் தோன்றியிருக்கலாம்தான். ஆனாலும் புத்தகமொன்று என் வசமாகியபொழுது நடந்துகொண்டும், மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிக்க நானெடுத்த முயற்சிகளெதுவும் எனக்கு பொசிப்பாய் அமையவில்லை.
நானும் பள்ளி நாட்களின் மாலைநேரங்களிலும், சனி ஞாயிறுகளிலும், தவணை விடுதலை நாட்களிலும் அந்தப் புத்தகத்தை எடுத்து கையில் சுருட்டி வைத்துக்கொண்டு வீட்டுச் சுவரோடு, வீட்டுப் பின்புற மாமரத்தோடு சாய்ந்தென பலவிடங்களிலும் பலநிலைகளிலும் இருந்து புத்தகத்தை வாசிக்க முனைந்தேன். எனக்கு வசதி பிடிபடவேயில்லை.
ஆனால் ஒருநாள் வீட்டுத் திண்ணையில் குப்புறப் படுத்துக்கொண்டு வாசிக்க முனைந்தபோது அது வசதியாக அமைந்துபோனது. நான் முதன்முதலாக வெளிவாசிப்பில் காலூன்றினேன்.
காலம் நகர்ந்துகொண்டிருந்தது.
ஆண்டு வகுப்பேற்றப் பரீட்சை முடிந்து விடுதலையும் வந்தது.
ஆனால் வாசிப்பதற்கு புத்தகங்கள் கிடைப்பது சுலபமாக இருக்கவில்லை. நானும் மலரக்கா மற்றும் சந்திரனண்ணை போன்றவர்களிடம் கெஞ்சிக் கெஞ்சி அவர்களுக்கு அவசியம் தேவை வராத சில புத்தகங்களை என் வசத்திலாக்கிக்கொண்டேன்.
ஒருநாள் வாசித்துக்கொண்டு திண்ணையில் நான் குப்புறக் கிடந்திருந்த நேரம், யாரோ என்னை உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்பதான உணர்வு உண்டாயிற்று. நான் சுழன்று பார்த்தேன். எங்கள் பள்ளியில் படித்த பெரிய வகுப்பு அண்ணனின் முகம் வேலிக்கு மேலாகத் தெரிந்தது. என் பார்வையைச் சந்தித்ததும் சிரித்தார். அதனால் எனக்கு திகைப்பெதுவும் தோன்றாவிடினும், மனத்துள் கொஞ்சம் பதற்றத்துடன் புத்தகத்தை மறைத்துக்கொண்டே எழுந்து சென்றேன்.
‘என்ன புத்தகம் படிக்கிறாய்?’ என்று கேட்டார். நான் பதிலளிப்பதற்கு முன்னதாகவே, ‘கதைப் புத்தகம்தான?’ என்றார். ‘இந்த வயசில கதைப் புத்தகம் வாசிச்சா, உங்கட காலமெங்க நேரமெங்க…? பொழுதுபோறதுக்கு கதைப் புத்தகம் படிச்சியெண்டாலும், உந்தமாதிரி பக்கப்பாட்டில பச்சை, மஞ்சள், சிவப்பெண்டு எதாவது கலர் அடிச்சிருக்கிற புத்தகம் வாசிக்காத, என்ன? அதுகளெல்லாம் துப்பறியும் கதை, மர்மக் கதையெண்டு பிள்ளையளக் கெடுக்கிற புத்தகம்.’
அந்த அண்ணன் சென்ற பின்னால் அந்தப் புத்தகத்தை நான் களவாகத்தான் வாசித்து முடித்தேன். வேறு சில புத்தகங்களையும் அந்தமாதிரியே வாசிக்க நேர்ந்தது.
ஒன்று எனக்கு நிச்சயமானது. என்னால் இனி வாசிப்பதை நிறுத்த முடியாது. வாசிப்பதற்கு நல்ல புத்தகங்கள் இல்லையேல் துப்பறியும் நாவல்களையோ, மர்மக் கதைப் புத்தகங்களையோதான் நான் வாசிக்கவேண்டியிருக்கும்.
ஒருநாள் நான் பள்ளியிலிருந்து வீடு வந்தபோது திண்ணையில் நான்கு புத்தகங்கள் இருந்தன. ஓடிப்போய் எடுத்துப் பார்த்தேன். கதைப் புத்தகங்கள்தான். மு.வரதராசன் எழுதியிருந்தார். அந்தப் பெயரை என்றும் எங்கும் நான் கேள்வியில் பட்டதுகூட இல்லை. ஆனால் புத்தகங்களின் தோற்றமே ஒரு கம்பீரம், ஒரு நேர்த்தி கொண்டவையாய் இருந்தன. மனத்துள் மகிழ்வு சுரந்தது. யார் தந்ததென அம்மாவைக் கேட்க, எங்கள் பள்ளியின் பெரிய வகுப்பு அண்ணன் தந்ததாகச் சொன்னார்.
ஒரு சனிக்கிழமை மாலை வீட்டு விறாந்தையில் குப்புறக் கிடந்து, ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பு ஒழுங்காகவும், இதமாகவும் செல்லவில்லை. அடுத்த புத்தகத்தை எடுத்து விரித்தேன். அதுவும் அப்படியாயிற்று. மொத்தத்தில் நான்கு புத்தகங்களுமே என் வாசிப்பு முதிர்ச்சியைக் கோரிக்கொண்டு இருந்தன.
ஏமாற்றத்துடன் இருந்தவேளை, எதிர்பாராதவிதமாக ஒரு தடிமனான ஆனால் அட்டைகள் கிழிந்து, முன்பகுதியில் முப்பத்திரண்டு பக்கங்களுமில்லாதிருந்த ஒரு பழையதும் பெரியதுமான புத்தகம் கிடைத்தது. மிகுந்த சோர்வோடு அதையாவது வாசிக்கலாமேயெனத் தொடங்கினேன்.
நான் ஒரு புதிய உலகத்தின் பிரவேசம் கொண்டேன்.
அந்த நூலிலுள்ள சில கதைகளை என் அம்மா சொல்ல முன்பு நான் கேட்டிருக்கிறேன்.
அந்த நூலையும், ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’ என்கிற பாரதக் கதைப் புத்தகமென மிகப் பின்னால்தான் அறிந்தேன்.
என் ஆசிரியர்களும் சஞ்சீவி, சிரஞ்சீவி, மாயாவி, பி.எஸ்.ஆர். போன்றவர்களிலிருந்து கல்கி ரா.கி., அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், அரு.ராமநாதன் போன்றோராக உருவெடுத்தார்கள்.
இப்போது நினைக்கத் தோன்றுகிறது, நான் படித்த பள்ளியில் பெரிய வகுப்பு படித்த அந்த அண்ணனின் தலையீடும், அறிவுரையும் இல்லாதிருந்தால், எனது பல வளர்ச்சிகள் தடைப்பட்டுப் போயிருக்குமென்று; இல்லையேல், தாமதப்பட்டாவது போயிருக்கும்தான். அதனால், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னால், 1967ஆம் ஆண்டு என் முதல் சிறுகதையை நான் எழுதாமலும் போயிருக்கலாம்.
வீட்டில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணாவென வாசிப்பதற்கு யாருமில்லையென்றால், அந்தக் காலத்தில் நூல்கள் கிடைப்பது சிறுவர்களுக்கு மிக மிகக் கஷ்ரமானது. அதனால் தேடலுக்கு இடமின்றி கிடைப்பதையே வாசிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதனால் நான் புதுமைப்பித்தனை எனது ஏ/ எல் காலத்தில்தான் நான் வாசிக்க முடிந்திருந்தேன். அதே காலமளவில்தான் நான் எஸ்.பொன்னுத்துரையையும், தி.ஜானகிராமனையும், கே.டானியலையும் வந்தடைந்திருந்தேன்.
அவர்களை எனக்கு அறிமுகப் படுத்தியதில் இன்னொருவருக்குப் பங்குண்டு. ஆனால் அந்தப் பெயர்மட்டும் எவ்வளவு முயற்சியிலும் என் ஞாபகத்தில் வருவதாயில்லை. என் வாசிப்பை முதன் முதலில் நேர்படுத்திய அந்த அண்ணனின் பெயரும் நானறிந்திருக்கவில்லை.
இதெல்லாம் என் அலட்சியத்தின் விளைவோவென பலமுறையும் எண்ணிப்பார்த்திருக்கிறேன்.
இல்லை, இல்லை, அது அப்படியல்ல; அதுதான் அமைவு.
அப்போதெல்லாம் அதிகமாகவும் சஞ்சிகைகளில், வார பத்திரிகைகளில் பேனா நண்பர்களாக விரும்புபவர்களின் முகவரிகள் வெளிவந்திருக்கும். பேனா நண்பர்களை பலபேர் அப்போது வெளிநாட்டு முத்திரைகளின் சேகரிப்புக்காகவே தொடர்பில் வைத்திருந்தார்கள். நான் அவர்களிடமிருந்து நல்ல சஞ்சிகைகளுக்காகவும் நூல்களுக்காகவும் தொடர்புகொள்ள முயன்றேன்.
இந்தியாவில் சென்னையிலிருந்த ஒருவர் முகவரி கிடைக்க அவருக்கு எழுதினேன். வெளிப்படையாகவே எனக்கு சஞ்சிகைகள் அனுப்பமுடியுமாவெனக் கேட்க நான் தயங்கவில்லை.
அவரும் அதுபோலவே இலங்கையில் வெளிவரும் சஞ்சிகைகளை வாசிக்க விரும்புவதாக எழுதினார். கண்ணதாசன், எழுத்து, கலைமகள், உண்மைபோன்ற சஞ்சிகைகளை அவர் அனுப்ப, நானும் சுதந்திரன், வீரகேசரி, தினகரன்போன்றவற்றின் வார இதழ்களை அனுப்பினேன்.
எழுத்துபோன்ற சஞ்சிகைகளின் தொடர்பே, என்னையொரு தீவிர வாசகனாக்கியதென இப்போதும் நான் நம்புகிறேன்.
அந்தத் தீவிரம், எல்லாத் தீவிரங்கள் அடங்கிய பின்னரும், தான் தீவிரம் மாறாமல் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறது.
இலங்கையில் ஒரு வீட்டு நூலகம் வைத்திருந்தேன். புலப்பெயர்வில் அதை இழந்தேன். இந்தியா வந்ததன் பின்னர் ஒரு நூலகம் உருவாக்கினேன். அதை கனடா வருவதற்காக விட்டுவர நேர்ந்தது. இங்கு வந்த பிறகு ஒரு நூலகத்தை அமைத்தேன். அடிக்கடியான வீடு மாற்றங்களால் இன்று அதை என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இவ்வாறாக அகலித்தும், ஆழ்ந்தும் வந்த என் வாசிப்புப் பழக்கமானது, காலப்போக்கில் சுயாதீனமான எண்ணங்கள் மனத்தில் கிளர்ந்தபோது, அவற்றை எழுதவேண்டுமென்ற எழுச்சியை என்னில் ஏற்படுத்தியது. எழுதுவதற்காகவே நான் வாசகனாக ஆகியிருக்காவிட்டாலும், எழுதுகின்ற ஒரு விருப்பம் மனத்துள் இருந்துகொண்டுதான் இருந்தது.
அதை உந்திக்கொண்டிருந்த விசையாக வாசிப்பினை மட்டுமில்லை, அதன் துணை உந்திகளாகயிருந்த மற்றைய அம்சங்களையும் இங்கே முழு நேர்மை கருதி நான் குறிப்பிட்;டே ஆகவேண்டும்.
அக் கால வடபிரதேச கல்விச் சபையின் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த பாடத் திட்டங்கள் மிகச் சிறப்பாக இருந்ததை நான் மறந்துவிடக்கூடாது. பாடத் திட்ட நூல்கள் எழுதுவது ஒரு வருமானம் மிக்க தொழிலாகியிருந்ததென விமர்சகர்கள் சிலரின் புகார் இருந்தபோதும், தமிழைப் பொறுத்தவரை பாடத் திட்ட வரைவும், பாடத் திட்ட நூல்களும் மிக்க கவனங்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தனவென இன்று யோசிக்கும்போதும் என்னால் நம்பமுடிகிறது.
வெளிவாரியான வாசிப்புப் பழக்கமில்லாத மாணவர்களும் பிற்காலத்திலே தேவை கருதி தமக்கும் இலக்கியம் தெரியுமென்று சொல்லும்படியாக, இலக்கியத்தின் பன்முக அறிவை அளித்ததில் பாடசாலையின் அன்றைய கல்வித் திட்டம் முக்கியமான பங்கினை ஆற்றியிருந்தது. பாலபாடம், பாலபோதினி, இலக்கிய மஞ்சரியென பாட நூல்கள் பெரிய இலக்கிய அறிவை, கவிதை இன்பத்தை மாணவர்களுக்கு அளவின்றிக் கொடுத்திருந்தன.
ஜே.எஸ்.சி. எனப்பட்ட எட்டாம் வகுப்புவரை இவ்வாறான கல்வி இருந்ததென்றால், மேலே எஸ்.எஸ்.சி. / ஜி.சி.இ. சாதாரண வகுப்புக்குமிருந்த மொழிக்கும், இலக்கியத்துக்குமான பாடத் திட்டம் இன்னும் சிறப்பாக இருந்ததென்பேன்.
நான் ஜி.சி.இ. சாதாரணம் படித்தபோது தமிழிலக்கிய பாட நூலாக இருந்தது, கம்பராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் காட்சிப் படலம். பரீட்சைக்காக சிலர் படித்திருந்தாலும், பலர் தமிழிலக்கிய நயமருந்தவே அதைப் படித்தார்களென்பதை என்னால் துணிந்து சொல்ல முடியும். கற்பித்த ஆசிரியர்களும் வித்துவான்களாக பண்டிதர்களாக இருந்ததோடு, மிக்க ஈடுபாட்டோடும் பாடம் சொல்லித் தந்தார்கள்.
மேலும் ஜி.சி.இ. சாதாரணத்தில் மொழிப் பாடத்தில் முதல் பகுதியில் கட்டுரை எழுதுதல் வரும். இன்னொரு பகுதி சுருக்கி எழுதுதல். அதாவது 100/ 150 சொற்களாலான ஒரு பத்தியைத் தந்து, அதை மூன்றில் ஒன்றாக சுருக்கியெழுதக் கேட்பார்கள். கட்டுரை எழுதுதலுக்கு அடுத்தபடியாக அதிக புள்ளிகள் கிடைக்கிற பகுதியது.
விரிவைக் கேட்டு நிற்கும் கட்டுரையெழுதுதல், விஷயத்தை அடர்த்தியாக்கி விரிவை அகற்றும் சுருக்கியெழுதுதல் இரண்டும் மொழியை மாணவர்களிடத்தில் அவர்கள் அறிந்துகொள்ளாமலே புனைவின் வழியில் வளர்த்துச் செல்ல உதவியிருக்கின்றன என நான் சொன்னால் பிழையென்பீர்களா?
அது எவ்வாறோ, ஆனால், நான் அவற்றால் நிறைபலன் அடைந்ததாகவே கருதுகிறேன்.
எழுத உந்துணர்வு பெற்றவர்கள் மாணவர்களாக இருக்கும்போதே அக் காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த மாணவர் மன்றங்களில் அங்கத்தவர்களாய் இணைந்து கடற்கரைக் காட்சி, மாலைக் காட்சி, காலைக் காட்சிகள் போன்றன எழுதி அப் பத்திரிகையின் மாணவர் பக்கங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
அது வாசிப்புடன் கூடி, புனைவெழுத்துக்கள் பிறக்கும் வாசலைத் திறந்ததாக ஆக்கிற்று.
நான் ஏதோவொரு பத்திரிகையின் மாணவர் மன்றத்தில் அங்கத்தவரானது ஞாபகமுண்டு. என் அங்கத்துவ விண்ணப்பத்தை அங்கீகரித்து அது என் பெயரை வெளியிட்டபோது, அதை எத்தனை தடவைகள் பார்த்துப் பார்த்தும், தெரிந்தவர்களுக்குக் காட்டிக் காட்டியும் குதூகலித்தேனென்பது எனக்குமட்டும்தான் தெரியும்.
அப்படியான நான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தபோது, பெயர்ப் பிரபலத்தின் ஆசையொன்று என்னில் இருக்கவில்லையென சொன்னால் நம்பவாபோகிறீர்கள்?
ஆனால் இலட்சிய வேகம் அவற்றில் இல்லவேயில்லையென கண்டிப்பாய்ச் சொல்வதும் முடியாதல்லவா?
000
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









