‘தாயொடு செல்வம் போம், தந்தையொடு கல்வி போம்’ என ஒரு பழம் பாடல் சொல்கிறது. என் ஒன்பதாவது வயதில் என் தந்தையை நான் இழந்தபோதும், என் கல்விக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. அதற்காக எந்தளவு சிரமத்தை என் தாய் உத்தரித்திருப்பார் என்று உணர்கிற வயதும் அப்போது எனக்கில்லை. ஆனால் வாழ்க்கைச் சாகரத்தில் நான் அடியெடுத்து வைத்த பிறகு, ஒவ்வொரு சிரமங்களையும் சாதுர்யமாய்க் கடந்திருந்த காலங்களில், கல்வியின் அவசியத்தையும் அதை எனக்களித்த தெய்வம் அதற்காய்ப் பட்ட சிரமங்களையும் எண்ணிப்பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் சமகாலத்தின் எந்தக் கரிசனமும் இல்லாமலேதான் அந்தக் காலம் கழிந்து சென்றதாக இப்போது படுகிறது.

மாணவ நிலையின் அந்தப் பருவம் முக்கியமானது. அது, படிப்பு கைகூடாவிட்டாலும்கூட, விளையாட்டு அல்லது சங்கீதம் அல்லது சித்திரமென ஏதோவொரு துறையில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டு தன்னை உயர்த்தும் சுயசிந்தனையின் உந்துதலின்றியே மேலே பறக்கக் கிளம்பிவிடுகிறது. இந்தத் துறைகளுக்குள் அமைக்க முடியாவிட்டாலும், அது இயன்றவொரு வெளியில் தன்னை நிறுவுவதில் எத்தனம் செய்யத் தவறுவதில்லை. அதிலொன்று கையெழுத்து. அதற்காக சிலர் அளவுக்கதிகமாகவும் கஷ்ரப்படுவார்கள். நான் என் கையெழுத்துக்காகப் பட்ட கஷ்டங்களும் கரிசனங்களும் அளப்பரியவை. அந்த அளவுக்கு பாடங்களில்கூட நான் கவனம் செலுத்தியதில்லை. அதை நினைத்தால் இப்போதும் சிரிக்கமுடியும். ஆனால் அந்த வயதில் நானொரு யுத்தம் நடத்திக்கொண்டிருந்தேன் என்பதுமட்டும் உண்மை.

மாணவர்களின் அழகிய தெளிவான கையெழுத்துக்காகவே புள்ளிகள் அதிகம் கொடுக்கும் ஆசிரியர்கள் அப்போது இருந்திருந்தார்கள். இந்த விஷயத்தை மீறியும்கூட கையெழுத்தானது முக்கியமான அம்சம்தான். அதுவொரு மனநிலைப் பிரதிபலிப்பாகவும் மனோவியல் ரீதியில் கணிக்கப்பட்டிருந்தது. அக் காலத்து எழுத்துபகரணங்களின் படிமுறை வளர்ச்சிகளை இக் காலத்தில் நினைப்பதுகூட சுவாரஸ்யமாகவே இருக்கும். ஒருவரது கையெழுத்து அமைவதற்கும் இந்த எழுது சாதனங்களுக்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அனேகமாக பாலர் வகுப்பெனப்படும் அரிவரியிலிருந்து முதலாம் வகுப்பு முடிகிற வரையில் சிலேற்றும், கற்பென்சிலும்தான் எழுதும் உபகரணங்களாகயிருந்தன.

சிலேற் கீழே விழுந்தால் உடைந்துவிடக் கூடியது. அதுபோல கற்பென்சிலும் உடைந்துவிடக் கூடியதுதான். சிலேற்றை உடைத்ததற்காக வீட்டிலே தாய் தந்தையரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அயல் மாணவர்களை நானறிவேன். அந்தமாதிரி அடிகளை நான் பட்டுக்கொள்ளவில்லை. எனினும் நிறையத் தடவைகள் சிலேற்றை உடைக்கச் செய்திருக்கிறேன்தான். அதற்காக அம்மாவிடமிருந்து எரிச்சலான பேச்சுக்களைத்தான் காது புளித்துப்போகுமளவு வாங்கிக்கட்டியிருக்கிறேன். அப்போதெல்லாம் உடையாத சிலேற்றுகள்பற்றிய கற்பனையை நான் கொண்டிருக்கிறேன்.

அப்போது மாணவர்களிடையே கற்பென்சில் யானை லத்தியில் செய்யப்படுவதென்ற ஒரு கதை உலாவிக்கொண்டிருந்தது. கற்பென்சில்களை நினைவோடோ பராக்காகவோ கடித்துத் தின்றுவிடுகிற சில மாணவர்களின் பழக்கத்தைத் தடுப்பதற்காக ஒரு புத்திசாலியான அம்மா வார்த்த கதையாக அது இருக்கலாமென்பது வளர்ந்த பின்தான் என் யோசனையில் பட்டது. இந்த வகையாக ஆரம்பிக்கும் பள்ளிக்கூட எழுத்துலகம், இரண்டாம் வகுப்புடன் ஒரு மாணவனுக்கு அடுத்த கட்டத்தை அடைகிறதென கருதுகிறேன். இரண்டாம் வகுப்பிலிருந்து அவன் கொப்பியும், பென்சிலுமாக அந்த எழுத்துலகத்துள் நுழைகிறான்.

அப்போதெல்லாம் கொப்பிகளுக்குக்கூட உறைபோட்டு அழுக்கடைந்துவிடாமலோ, கிழிந்துபோகாமலோ பாவிக்க நாம் கவனப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பின் ஆரம்பத்தில் பிறவுண் பேப்பரால் உறைபோட்டுத் தருவார்கள். பின்னால் அது பழைய பத்திரிகையில் போடப்படுகிற உறையாகிவிடும். பல மாணவர்கள் உறையே போடுவதில்லையென்பதும் நிஜம்தான்.

கொப்பி – பென்சில் பாவனையில் பெரிய விக்னமேதும் நிகழ்வதில்லையாயினும், என்னமாதிரியோ, எவ்வளவு அவதானமாக இருந்தாலும் பென்சில் மட்டும் பலவேளைகளில் காணாமல் போய்விடுகிறது. விளையாடுகிறபோது விழுந்து தொலைந்து போகும் சமயங்களாக ஒரு பங்கு இருக்குமென்றால், களவில் போவது இரண்டு பங்காக இருந்துவிடுகிறது. அதனால் யாராவது மாணவன் எமது மேசைக்கு அண்மையில் வந்துபோகிற சமயங்களில் கண்களில் ஒரு எச்சரிக்கைத் தனத்தை எந்த மாணவனும் தவிர்க்கவியலாதபடி கொண்டுவிடுகிறான்.

என் போன்றவர்களுக்குத்தான் இந்த பென்சில் காணாமல் போகிறதாவென, ஆட்டுப் புழுக்கையளவு நீளத்தில் பென்சில் வைத்துக்கொண்டு எழுதும் மாணவர்களைக் காணும் வேளையிலெல்லாம் நான் நினைத்ததுண்டு.

ஒரு மாணவன் இந்த எழுத்துபகரணங்களில் கூடுதலான அக்கறை கொள்ளும் வகுப்பு ஐந்தாம் வகுப்பாகும். அந்த வகுப்புக்குப் பிரவேசத்துக்கு நடைபெறும் நாலாம் வகுப்புத் தேர்வின் சித்தியானது எனக்கு ஒரு கனவாகவே இருந்தது. ஏனெனில் அந்த வகுப்பில்தான் பேனைத் தடிகொண்டு மையில் தொட்டெழுதும் பயிற்சி ஆரம்பிக்கிறது. அதுதான் ஒரு மாணவனின் கையெழுத்தை வடிவமைக்கிற காலம். வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ சரித்து அல்லது நெடுப்பமாக ஒரு வசதியான வடிவத்தில் தன் கையெழுத்தை அமைக்கும் பயிற்சியை ஒரு மாணவன் தொடங்குகிறான்.

கையெழுத்து, பயிற்சியால் வருவதென்றாலும், சிலபேருக்கு வெகு பிரயத்தனமின்றி அவர்களது கையெழுத்து அழகாகவும் தெளிவானதாகவும் அமைந்துபோய்விடுகிறது. இந்த விஷயத்தில் அநேகமாக என் வகுப்பில் படித்த எல்லா மாணவிகளுமே தங்கள் கையெழுத்தை அழகாகக் கொண்டிருந்ததில் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தார்களென்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். பெண்களின், அநாவசியமாக எதற்கும் அவசரப்படாததும் நிதானமானதுமான போக்கு அவர்களது எழுத்தை ஆகக் குறைந்தளவுக்கு மிகத் தெளிவானதாகவாவது வைத்திருக்க உதவிவிடுகிறது. ஆனால் எனக்கு எட்டாம் வகுப்பைத் தாண்டும்வரை கையெழுத்து அழகானதாக மட்டுமல்ல, தெளிவானதாகவும் அமையவில்லை.

அவ்வளவற்றோடு இருந்திருந்தாலாவது எனக்குள் ஓரளவு திருப்பி விளைந்திருக்கும். ஆனால் நானோ ஒரு மூன்று வருஷங்களாக அழகற்றதும் தெளிவற்றதுமான கையெழுத்தோடு, பேனைத் தடியுடனும் மைக் கூட்டுடனும்கூட, கூடுதலான கஷ்ரங்களை அடைந்துகொண்டிருந்தேன். மைக் கூட்டை திறந்து வைத்துக்கொண்டு பேனைத் தடியால் குச்சியை நனைத்து, குச்சி (Nip) யிலிருந்து உதிரக்கூடிய கடைசி மைத் துளியும் உதிரும்வரை காத்திருந்து, கொப்பித் தாளில் நான் எழுத ஆரம்பிக்கும்போதுதான், அதுவரை எங்கோ மறைந்திருந்த மைத் துளியொன்று எழுத்துக்குப் பதிலாக துளிப் பருமனில் தாளில் உதிர்ந்து பெருவட்டமாய் ஊறிப் படரும்.

துடித்துப் பதைத்து, அதைச் சோக்குக் கட்டிகொண்டோ அல்லது ஒற்றுத் தாள்கொண்டோ ஒற்றியெடுக்க முனையும்போது, நீல மேகமாய் தாளில் அது இழுபட்டுப்போகும். இந்தத் தடுமாற்றத்தில், அந்த நாள் துரதிர்ஷ்டம் பிடித்த நாளாய் இருந்தால், மைக்கூடு இடறுப்பட்டு கொப்பி முழுவதும், மேசையின் முன் அந்தலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றைய புத்தகம் கொப்பிகளிலும் மை கறையாக அப்பிவிடும்.
மேசைகள் சாய்வாக இருப்பதினால் சிலவேளை கொட்டுப்பட்ட மை சர்ரென சறுக்கிவந்து காக்கிக் கழிசானின் முன் பகுதியில் புள்ளி வட்டங்களாய்ப் படிந்துவிடுவதுமுண்டு. மனம் அந்த நேரத்திலிருந்து வீடு போய்ச் சேரும்வரை பிற மாணவரின், குறிப்பாக மாணவிகளின், நகைப்பைத் தாங்கி பெரும் சித்திரவதையை அனுபவிக்கும்.

நான்மட்டும்தான் இவ்வளவு கஷ்ரங்களை அனுபவிக்கிறேனா? பக்கத்து மேசைக்காரன் கந்தசாமியின் கைவிரல்களைப் பார்ப்பேன். அவனது கைவிரல்கள் கொஞ்சம் மனத்துக்குத் தெம்பு தரும்படி என் கைவிரல்களைவிட மோசமாகவே மைக் கறையோடிருக்கும். திருப்திப் படாத நான் மாணவிகள் பகுதியில் எனக்குச் சமீபமாக இருக்கும் கலாவதியின் கைவிரல்களைப் பார்க்க எத்தனப் படுவேன். காணமுடியாது போய்விடும்.

ஒருநாள் என் முயற்சியில் மனம் தளராத நான் அவ்வாறு அவளது கையைப் பார்க்க எத்தனித்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக அதைக் கண்டுகொண்ட கலாவதி, நான் எதைப் பார்க்க நினைத்தேனென எண்ணினாளோ, ஒரு கணம் திகைத்து சட்டென முகம் சிவந்துபோனாலும், மறுகணம் தெளிந்துகொண்டு வெட்கமாய்ச் சிரித்தாள். இந்தக் கஷ்ரம் நான் க.பொ.த. முன்னாயத்த வகுப்பு (அப்போது அதை Prep. SSC என்பார்கள்) வரும்வரை குறையவே இல்லை. அதன் பின்னாலும் பெரிதளவு இந் நிலை மாறிவிட்டதாக நான் சொல்லமாட்டேன்.

க.பொ.த. முன்னாயத்த வகுப்பு வந்ததும் ஈரோஸ் என்றும் பைலற் என்றும் பெயர்கள் கொண்ட இரண்டு கொம்பனிகள் சாதாரண விலையில் ஊற்றுப் பேனைகளை விற்பனைக்கு விட்டிருந்தன. ஈரோஸ் மூன்று ரூபாய்க்கும், பைலற் பேனை நாலரை ரூபாவுக்கும் விற்றதாக ஞாபகம். நான் பைலற் பேனாவொன்று வாங்கிக்கொண்டேன். பெரிய எதிர்பார்ப்புகளோடுதான், ஊற்றுப் பேனையை பாவிக்கத் தொடங்கினேன். பேனைத் தடியால் எழுத ஆரம்பித்தபோது என் கையெழுத்து அழகாக வருமென்ற என் எதிர்பார்ப்பு எப்படிச் சரிந்ததோ, அதுபோல ஊற்றுப் பேனை பாவிக்கத் தொடங்கும்போதிருந்த எதிர்பார்ப்பும் பெரியளவில்லாவிட்டாலும் ஏமாற்றமாகவே முடிந்தது. எப்போதாவது அதிலிருந்தும்கூட மை கசிந்து கைவிரல்கள் கறையாகிப்போவேன்.

அதனால் இந்தியன் கறுப்பு மையானது, பார்க்கர் மைபோல பேனையின் ஊற்றை அடைக்காது என பலதுமறிந்த ஒரு ஞானியென நாம் நம்பிய கடைக்காரரின் பேச்சில் எடுபட்டு, ஐந்து சதம் கொடுத்து ஒரு பேனையை நிரப்புமளவான இந்தியன் மை வாங்கிப் பாவித்தேன். பேனையின் ஊற்று அடைபடுவதற்கும், மைக் கசிவு ஏற்படுவதற்கும் எந்தத் தொடர்புமில்லையென்பதை அறிய புத்தி போதவில்லை. அப்போதும் மைக் கசிவு ஏற்படவே செய்தது.

பேனையின் கழுத்தைத் திருகித் திறந்து, மையை விட்ட பின் மறுபடி பூட்டும்போது புரிமாறி இறுக்கமாகப் பூட்டப்பட முடியாது போகையிலோ, அவதானக் குறைவில் இறுக்கமாகப் பூட்ட மறந்துவிடும்போதோ பைலற் பேனையும் கசிந்து என் கைவிரல்களை கறையாக்கவே செய்தது.

இதைவிட மோசமான விஷயம், திறந்த பேனையின் மூடியை பின்னாலே கொளுவிக்கொண்டு, மூடிவிட்டதா நினைத்து பொக்கற்றில் பேனையைச் செருகி வைத்துக்கொள்வது. அந்தக் காலத்தில், சேர்ட் பொக்கற்றின் அடிப்பாகம் மைக் கறை படாததாய் எந்த மாணவனுக்கு இருந்திருக்கிறது? ஆனாலும் காலப் போக்கில் இவற்றில் கவனமாயிருத்தல் ஒரு மாணவனுக்கு இயல்பாகிப் போகிறதுதான். எனக்கும் கஷ்ரங்கள் குறையவே செய்தன. ஆனாலும் என் எழுத்து பிறர் வடிவாயிருக்கு எனச் சொல்லும்படி எப்போதும் ஆகவேயில்லை.

நான் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதும்வரை என்னிடத்தில் எழுத்தின் வடிவுபற்றிய பிரக்ஞை இருந்துகொண்டே இருந்தது. வலப் பக்கம் சாய்த்து அல்லது இடப் பக்கம் சாய்த்து அல்லது நெடுப்பமாகவோ, காணி உறுதியிலுள்ள எழுத்துப்போல் எழுத்துக்களைச் சுருட்டிச் சுருட்டியும், உகரம் மற்றும் டகர எழுத்துக்களை அசாதாரண நீளத்துக்கு நீட்டியும் எழுதிக்கொண்டிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

வடிவைக் கவனிக்கத் தேவையில்லை, தெளிவாக எழுத்திருந்தால்போதுமென்ற ஞானம் நான் க.பொ.த. உயர்தரம் வந்த பின்தான் கிடைத்தது. அந்தளவில் அந்த ஞான சித்திக்கு உதவுமுகமாக வோல் பொயின்ற் (Ball Point) என்கிற களி மைப் பேனாவும் விற்பனைக்கு வந்துவிட்டது. எனக்கு மூத்தவும் என் வயதிலுள்ளவுமான பலர் இந்த அனுபவத்தை அடைவதிலிருந்து தவறியிருக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்