கிட்டத்தட்ட தனது 46வது வயதில் அசோகமித்திரன், இந்நாவலை எழுதியுள்ளார் (1977). இந்நாவலானது, வண்ணதாசன் முதல் பல்வேறு இலக்கிய கர்த்தாக்களாலாலும், விதந்துரைக்கப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்நாவல் பொறுத்து வண்ணதாசன் கூறுவார்: ‘இப்போது நினைத்தாலும் இதனை அசோகமித்திரனால் எழுதமுடியாது’.
நாவல் முகிழ்த்த காலப்பகுதி
இந்தியா சுதந்திரமடைந்து, ஆங்கிலேய ஆசிர்வாதங்களுடனும், பாகிஸ்தானின் ரகசிய உறவுகளுடனும் ஆட்சிப்புரிந்துவரும் நிசாம் மன்னருக்கு எதிராக, இந்திய துருப்புகள் ஐதராபாத்துக்குள் நுழைவது வரையிலான காலப்பகுதியில், மக்கள் அனுபவிக்கும் சிக்கல்களைத் தனது பார்வையில், பரிசீலிக்கும் விதமாக, இந்நாவலை அசோகமித்திரன் கட்டமைத்துள்ளார். இதன்போது, இரண்டாம் உலகப்போர் நடக்கின்றது என்பதும், அதன் தாக்கமானது உலகம் முழுவதும் அனுபவிக்கப்படுகின்றது என்பதும் இணைந்த விடயம்தான் - இவையும், நாவலில் இரண்டொரு வரிகளில் வந்துபோகின்றன.
ஐதரபாத்தின் முக்கியத்துவம்
நிசாம் மன்னரின் ஆட்சி, பாகிஸ்தானின் ஆட்சியைப்போலவே ஆங்கிலேய பின்னணியால் ஆசிர்வதிக்கப்படுகிறது. இதன்போது நாவலின் கதாநாயகனான, சந்திரசேகரின் தந்தையும் ஒரு வெள்ளைக் குமாஸ்தாவாக ரயில்வே சேவையில் பணிபுரிகின்றார். ஆங்கிலேயரைப் பொருத்தமட்டில் அக்குமாஸ்தா, பறங்கியராக இருந்தால் என்ன, தமிழராக இருந்தால் என்ன, இஸ்லாமியராக இருந்தால் என்ன - லாபத்தை ஈட்டித்தந்தால் சரி. ஆனால், இக்காலப்பகுதியிலேதான் ஒரு மத்தியதர வர்க்கத்தினரின் எழுச்சியும் இந்தியாவில் கிரமமாக நடந்தேறுகின்றது என்பதும் இதன் வளர்ச்சியும் செயற்பாடுகளும் இந்தியாவைச் சுதந்திரம்வரை இட்டுச்செல்கின்றன (ஏனைய சக்திகளுடன்) என்பதும் வேறு கதை. ஆனால், நாவல் முன்வைக்கும் கதையானது வித்தியாசமானது. இக்காலப்பகுதியில் இவ்விடயங்களின் மத்தியில், இங்கே வாழக்கூடிய ஒரு வித்தியாசமான இளைஞனை, இது எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் அது. அவனில் எத்தகைய விளைவினை இது உண்டு பண்ணுகிறது என்பதுதான் கதையாகின்றது.
சந்திரசேகரனுக்கு வயது 17. கல்லூரியில், விஞ்ஞானப்பிரிவு. கிரிக்கெட் அவனது அரசியல், கூடவே, வீட்டில் வளர்க்கப்படும் மாட்டையும் இவன் பார்த்துக்கொள்வான். இவற்றுடன் நாவல் நகரத்தொடங்குகிறது.
சந்திரசேகரன்
ஒரு பதின்வயது இளைஞனுக்கு ஏற்படும் அனைத்து ஆசாபாசங்களும், விரகதாபங்களும் சந்திரசேகரனுக்கும் ஏற்படுகின்றது. இருந்தும், ‘மற்றவர்கள் அவன் விஷயத்தில் தலையிடக்கூடாது’ என்பதில், இவன் கண்ணும் கருத்துமாக, கறாராக இருக்கிறான் (பக்கம் 145). இதற்கேற்றாற்போல், அவனைச் சுற்றியிருக்கும் அனைத்து விடயங்களையும் அவன் தனது தனித்துவமான பார்வையின் அடிப்படையில், விமர்சனத்துக்கு உள்ளாக்கி, வகுத்து வைத்துக்கொள்கின்றான். உண்மையில், இப்படி இவன் முன்வைக்கும் விமர்சனமானது, நாவலாசிரியரான, அசோகமித்திரன், சந்திரசேகரன் வாயிலாக முன்வைக்கும் விமர்சனமே என்றாகின்றது.
அதாவது, சந்திரசேகரன் யாரென்ற கேள்வியும் இவன் உண்மையில், அசோகமித்திரனின் நகல்தானா என்பதும் கேள்விகளாகின்றன. கிரிகெட், கல்லூரி, வீடு என விரியும் சந்திரசேகரனின் வாழ்வானது, அன்றைய ஐதராபாத்தில் நடந்தேறும் அனைத்து சமுக - அரசியல் விடயங்களினாலும் ஆழமாய்ப் பாதிக்கப்படுகின்றது. இவற்றை, இவ்விளைஞன், தனது பார்வையில், சிக்கெடுத்துக் கொள்வதும் நடந்தேறுகிறது.
அன்றைய ஐதராபாத்தில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே தீவிர முறுகல்நிலை காணப்படுகின்றது. இது ஆங்கிலேய ஆட்சிமுறையின் ஒன்றிணைந்த பண்பு, என்பதைத் தனித்து கூறவேண்டிய அவசியமில்லை. இத்தகைய ஆங்கிலேயப் பாரம்பரிய சொத்துக்களுடன்தான், அன்றைய இந்தியா முன்னேற வேண்டியிருந்தது.
இளைஞன் சந்திரசேகரனின் காலப்பகுதியிலேயே இந்தியா சுதந்திரம் அடைவதும், நிசாம் மன்னர், இந்திய ஆட்சியிலிருந்து விலகி தனித்து ஆட்சிச்செய்வதும், பாகிஸ்தானுடன் அவர் ரகசிய ஒட்டுறவினைப் பேணுவதும் நடந்தேறுகின்றன. இச்சூழலில்தான் காந்தி இறக்கின்றார். தொடர்ந்து ஏழெட்டு மாதங்களில் ஜின்னாவும் இறக்கின்றார். தொடர்ந்து இந்தியத் துருப்புகள், 'ஒப்பரேசன் பவான்', என்ற பெயரில் ஐதரபாத்துக்குள் நுழைகின்றார்கள். இவை வரலாறு. இவற்றின் இடை, சந்திரசேகரன் வளர்வதும் தன் விமர்சனங்களை அவன் தனக்கேற்ற வகையில் கட்டமைத்துக் கொள்வதும், இப்பின்னணியில் நடந்தேறுகின்றன.
இதற்கிடை, வேர்க்கடலை சாப்பிடுவது, மாட்டைத்துரத்துவது, ஆலம் விழுதுகளில் ஆ…ஆ வென்று தொங்கி, டார்ஜானைப்போன்று சாகசங்களைச் செய்துகாட்டுவது, இவை இவ்விளைஞனில் நடந்தேறவே செய்கின்றன. இருந்தும், நாம் வாதிக்கவிருக்கும் விடயங்கள் வருமாறு:
நாவல், இதுவரை நிலைநிறுத்தப்பட்ட இலக்கியச் சிறப்புகளை எவ்வாறு பரிசீலிக்கின்றது.
தேசபக்தி அல்லது நாட்டுப்பற்று போன்ற மனித மேம்பாட்டு இலட்சியங்களை அது எப்படி கையாள்கின்றது, இது தொடர்பில் நாவல் கூறவரும் சேதி என்ன?
இனமுறுகல்களை, இன முரண்பாடுகளை நாவல் எப்படி கையாள்கின்றது?
அடித்தட்டு மக்கள் தொடர்பில் நாவலின் அணுகுமுறை யாது?
மேற்குறித்த கையாள்கையின் போது, எவ் அடித்தளத்திலிருந்து, நாவல் மேற்படி விடயங்களை அலசுகின்றது அல்லது தன் விமர்சனங்களை முன்வைக்கின்றது?
ஷேக்ஸ்பியர்
கல்லூரி மாணவன், சந்திரசேகரனுக்குச் ஷேக்ஸ்பியரை அறிமுகம் செய்து வைப்பது புரொபஸர் ரங்கா என்பவர் ஆவார். ஷேக்ஸ்பியரின் 'இரண்டாவது ரிச்சட்' என்னும் நாடகமே இதற்கான நுழைவாயிலாக அமைகின்றது: “கடைசி வரிசைகளில் சிலர் மேசை மீது சாய்ந்து தூங்க ஆரம்பித்துவிடுகின்றார்கள்… ஆறு வகுப்புகளாக முதலாவது அங்கமே நடக்கிறது… ஒவ்வொரு நாளும் முதலில் இருந்து படிப்பார்…” ‘ஜான் ஆஃப் காண்ட்' … தலைசிறந்த நாட்டுப்பற்றுடையவனாக ஷேக்ஸ்பியர் நாடகத்தில் மிளிர்கின்றான்…’ அவனுடைய இறுதி மூச்சு இங்கிலாந்துக்கா, அவனுடைய அன்பு மகனுக்கா என்ற ஐயம் தோன்றுகின்றது. (பக்கங்கள் 122 - 124)
இவ்வருணனை எள்ளலை உருவாக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ் எள்ளல், புரொபஸர் ரங்காவுடன் மட்டுப்படுத்தப்படுகின்றதா அல்லது ஷேக்ஸ்பியர் வரை, விஸ்தரிக்கப்படுகின்றதா என்பதே கேள்வியாகின்றது.
இல்லை. இவ் எள்ளல் புரொபஸர் ரங்காவுக்கு மாத்திரம்தான். இல்லையில்லை, இது ஷேக்ஸ்பியருக்கு மாத்திரம் உரித்தாகிறது, என்பதுப்போல், இரண்டறக்கலந்து எழுதுவது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதானது அல்ல. அதாவது பாம்பும் சாகாமல், தடிக்கும் நோகாமல் அடி கொடுப்பது என்பது தமிழ் மரபில் இருந்து வந்துள்ள ஒன்றே ஆகும்.
பின்வரும் பகுதிகளைப் பார்க்கலாம்
'நேரிடையாக பேசுவதுப்போல ரங்கா வகுப்பை நடத்துவார். போலிங்க்புரூக்கும் மோப்ரேயும் அவர் வாயிலாக… சில மாணவர்களைத் தத்தளிக்க வைப்பார்கள்… நடிப்பு சாயல் தோன்றப் படித்துக்கொண்டு போவார்' (பக்கம் 122).
“ரங்கா ஷேக்ஸ்பியர் நாடக உத்தியில், தூக்கலாயுள்ள ‘டிரமாடிக் ஐரனி’ பற்றி பேசிக்கொண்டிருந்தார்”.
‘அவன் புலம்பல் (ரிச்சட்டின் புலம்பல்) ஜானின் புலம்பலுக்கு எவ்விதத்திலும் குறைந்ததாக இல்லை இவர்கள் இருவருக்கும் மேலாக ரங்கா புலம்புகின்றார்’ (பக்கம் 123).
தமது பாத்திரத்தெரிவில், வேண்டுமென்றே, ஒரு சோடைப்போன, பாத்திரத்தைத் தெரிந்தெடுத்து அல்லது தமக்குத் தோதான ஓர் அற்ப நிகழ்ச்சியை, ஒரு வரலாற்று புதினம்போல் தெரிந்துகொண்டு வடித்துத்தள்ளி, இதற்கூடாக, தோதான, வாளிப்பான தாக்கு மையங்களை உருவாக்கிக் கொள்வது - இவை, அனைத்தும் தமிழ் இலக்கியத்தில், அவ்வப்போது பரிசிலிக்கப்பட்டே வந்துள்ளது. ஆங்கிலத்தில் இவ்வகை உத்திகள் அனந்தம் எனலாம். இதே உத்தியானது, அசோகமித்திரனுக்கு கைகொடுக்கவில்லை, எனக்கருதுவது சற்றே சிரமமான செயலே.
மொத்தத்தில், இருவரையுமே, அதாவது ரங்கவையும், ஷேக்ஸ்பியரையும் ஒருங்கே கேலிசெய்யும் முறைமையையே அசோகமித்திரன் இங்கு தோற்றுவிக்கின்றார் எனக் கருத இடமுண்டு.
“ஜான் ஆஃப் கான்ட், ஒரு தலைசிறந்த நாட்டுப்பற்றுடையவனாக சேக்ஸ்பியர் நாடகத்தில் மிளிர்கின்றான். வயோதிபன். மதிப்பிழந்து ஒதுக்கப்படுபவன். ஆனால் அவன் சீரிய தேசபக்தனாக உயருகின்றான்” (பக்கம் 124). இது ரங்கா கூறுவதுப்போல், நாவலில் இடம்பெற்றிருந்தாலும் இது அசோகமித்திரனின் கூற்றாகவே இருக்கும் என்றாலும், ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. காரணம், இங்கு அவரது கண்ணை உறுத்துவது ‘தேசபக்தி’ என்ற விடயம்தான்.
இந்தியாவில் தோன்றியிருந்த ‘தேசபக்தியானது’ இரண்டு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஒன்று, ஜாலியன் வாலாபாக் கொலைகளை எதிர்க்கையில், மறுபுறமாய், பகவத்சிங் போன்றோரின் கொலைகளை, ஆமோதிக்க வைப்பது. இதைவிட, ஆங்கிலேய ஆட்சியில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கிலான அடிவருடி தாசர்களின் நலன்களும் இப்போக்குக்குப் பலம் சேர்க்க வல்லன. இதனுடன், சாதிப்பிளவுகள் என்பதும், இந்து–முஸ்லீம் மத சண்டைகள் என்பதும் - தனித்துவமான ஓர் அரசியலைக் கட்டமைத்து விடுகின்றன. இதனிடை, ஷேக்ஸ்பியரையும் ஓர் பிடி பிடித்தாக வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறையில் இருந்தேதான் அசோகமித்திரனின் எழுத்துக்கள் கிளைப்பிரிவதாயுள்ளன.
டாஸ்டாவாஸ்கியின் திறன் குறித்து, கதைக்கவரும் கார்க்கி, டாஸ்டாவாஸ்கியின் ‘சித்தரித்துக் காட்டும் திறமையை’, ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாகவே நிறுத்துகின்றார்.
மறுபுறத்தில், ஷேக்ஸ்பியர், ஏற்படுத்தித்தரும் எழுத்துக்களின் வன்மையை, அது தர்க்கிக்கும் மனித மேம்பாட்டை அல்லது மனித மேன்மையை அல்லது மனித கீழ்மைகளை அது தோலுரித்துக் காட்டும் முறைமைகளை, முக்கியமாக ஓர் ‘அந்நியப்பட்ட’ மனிதன் தோற்றுவிக்ககூடிய நச்சுமூச்சுகளை வடிவமைத்துக்காட்டும் திறமைகளுக்காக - அவர் பல்வேறு - சிறப்பம்சங்களுடன், போற்றப்படுகின்றார்.
உண்மைதான். நாட்டுப்பற்றை அல்லது தேசபிமானத்தை - இன்னும் சரியாகச் சொன்னால் ஓர் இலட்சிய வாழ்வைத் தூக்கி வீசிவிடுவது, அசோகமித்திரனின் வாழ்வுக்கு, உவப்பானதாகவே அமைந்து விடுகின்றது. இந்திய விடுதலை இயக்கப்போரில், ஆகுதி ஆன பலரது வாழ்வும், இப்படி தூக்கி வீசப்பட்டு, எப்படியும் வாழலாம் என்ற திரிபுற்ற சித்தாந்தம், இங்கே தூக்கிப்பிடிக்கப்படுவது இயல்பான ஒன்றாகின்றது. மனித வாழ்வைத் தூக்கி நிறுத்துவதும், அதைப்போற்றிப்பிடிப்பதும் இவ்வகை எழுத்துக்கு, ஓர் ஆகாத அம்சமாகின்றது. இது இந்நாவலின் முக்கியமான ஒரு அடிப்படை.
II
அடித்தட்டு மக்கள் தொடர்பிலான அணுகுமுறை
அடித்தட்டு மக்கள் தொடர்பிலான அசோகமித்திரனின் அணுகுமுறையும், தமிழ் இலக்கியத்திற்குப் பரிச்சயமான ஒன்றே. ஆனால், இவற்றிற்கு எதிரான இலக்கியப்போக்குகளும் தமிழ் இலக்கியத்தில் காணப்படவே, செய்கின்றன. முதலில் உலக இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.
உதாரணமாக, கார்க்கியின் முதலாவது கதையான ‘மக்கர் சூத்ரா’, பின்வரும் பகுதியை உள்ளடக்குகின்றது.
“ஜிப்சிகளின் குதிரைகளைக் காவல்காக்கும் அக்கிழவன் மக்கர் சூத்ரா, அந்த இலையுதிர் காலத்தில், கார்க்கிக்கு அருகே, நிலத்தில் படுத்துகிடந்தான்”;. ‘நல்லது. உலகைப்பார்த்துவர கிளப்பி விட்டாயாக்கும். நல்ல முடிவுதான், நண்பனே. சிறு கழுகே, அது அப்படித்தான் இருக்க வேண்டும். சரி பார். உலகத்தை ஒருமுறை, சுற்றிவா. பார்த்து முடித்துவிடு. இறக்கைகளை விரி. பின் படு. இறந்து போ’.
“ஒருமுறை, ஒரு நிதானமிக்க மனிதன் என்னிடம் வந்தான். கடவுளுக்கு எவனொருவன் அடிப்பணிந்து நடக்கின்றானோ, அவனுக்கு, அவன் கேட்கும் அனைத்தையும் கடவுள் தந்திடுவார் என்றான்” அவனோ வெறும் கந்தை உடையில்தான் இருந்தான். “அவனிடம், சிறிது நல்ல உடைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு, கடவுளிடம் கேட்டுக்கொள்ளும்படி யோசனை கூறினேன். அவனுக்கு வந்ததே கோபம். என்னை தூற்றி, துரத்தியும் விட்டான்…”.
“அவனது அழகிய மகள், அற்புதமான ஓர் சுரத்தில் மிக அழகாக, அந்த இரவில் பாடிக்கொண்டிருந்தாள்”
“எனது மகள்தான். நன்றாகப்பாடுகிறாள், இல்லை. நீ காதல் வயப்பட மாட்டாயோ? நல்லது. பெண்களிடம் நெருங்காதே. தூர விலகிப்போ. ஒருத்தியை நீ முத்தமிடலாம். ஆனால் அக்கணமே உன் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும். கண்ணுக்கு தெரியாத சங்கிலிகளால், அவள் உன்னைக் கொழுக்கிப்போட்டு, கட்டிப்போட்டு விடுவாள்”.
“ராதாவின் கதைகளை நீ கேட்டதுண்டா? ஓ… அவளது அழகை எழுத்துக்களால் வர்ணிக்க முடியாது… பலர், அவளுக்கு அடிமை சேவகம் செல்ல அணிவகுத்து நின்றனர்…”
“ஒரு முறை ‘போரொவாவில்’ ஒரு பணக்கார செல்வந்த கிழவன் அவளது அழகைக்கண்டு ஏங்கி, அப்படியே திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான். அவனது ஆடையில் நெய்யப்பட்டிருந்த தங்க நார்களும், தங்க கரைகளும் மின்னின. அவனது நெடிய வாள், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட உறையினுள், மின்னியப்படி தொங்கியது. கல்லாய் சமைந்தவனாய், குதிரையின் மேல் இருந்தான் அவன், ராதாவை வெறித்தவாறே. இறுதியில் பெருமூச்சை விட்டுவிட்டு கூறினான்: “ஓர் பைநிறைய தங்க நாணயங்களை தருகிறேன். ஒரே ஒரு முத்தம்…”
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் - யாதொன்றையும் கேளாதவள் போல.
அவன், அடுத்த தினம், தனது தடித்தப் பணப்பையை அவள் காலடியில் விட்டெறிந்தான். அவள் அதை புழுதியில் சேர்த்து மிதித்தாள்…
‘கடவுளே எத்தகைய பெண்…”
‘மறுநாள் அவன் வந்தான். யார் அவனது தந்தை’ - இடி முழக்கம் செய்தான் அவன். ‘இவளை எனக்கு விற்றுவிடு. உனது விலையை, நீயே குறி’.
‘கனவான்கள்தான், பன்றிகளில் இருந்தும் மனசாட்சிவரை, விலை பேசுபவர்கள். நான் யுத்தத்தில் பங்கேற்றவன். வர்த்தகத்திலில்லை…’
செல்வந்தருக்கு வந்ததே கோபம். அவனை அறியாமல், அவனது கை அவனது வாளை உருவியது. யாரோ ஒருவன், அவனது குதிரையின் காதில் எரியும் சுள்ளியை நுழைத்துவிட்டான். அது எஜமானை சுமந்தவாரே பிடித்ததே ஓட்டம். ‘மறுநாள் வந்தான். நல்லது, எனது மகளிடம் நீயாகவே கேட்டுக்கொள்" என ராதாவின் தந்தை கூறிவிட்டான்.’
‘கழுகுகள், காக்கைகளுடன் உறவு பூணுவதை நீ எவ்விதத்தில் புரிந்துக்கொள்வாய்’ – அவள்.
தனது தொப்பியை பூமியில் கசக்கி எறிந்துவிட்டு, கடுங்கோபத்துடன் முழு வேகத்தில் தன் குதிரையை விரட்ட துவங்கினான் அவன். – குதிரையின் குளம்புகள் பூமியை அதிரவைக்க.
இது ஓர் அடித்தள நாடோடி கிழவன் கூறும் கதை. கந்தல்களுக்குள் மக்களின் கூட்டு வாழ்க்கை, உருவாக்கும் நாகரீகத்தைப் புரிந்து கொண்ட ஒருவனின் எழுத்துக்கள் இவை. இவ்வித மனிதர்கள், அம்மக்களை ஆன்ம பலமும் வைராக்கியமும் கொண்டோராய் படைத்தனர். பாரதி, மாக்ஸ், கைலாசபதி என விரியக்கூடிய இந்தப் பாரம்பரியம், மனித வரலாறுகளின் நாகரீகங்களின் சிறுமைகளை இகழவும், சமூக நீதிகளை உயர்த்தவும், முன் நிற்றல் காலத்தின் பிரதிபலிப்பே எனக் கருதவும் இடமுண்டு. ஒருமுறை, இன்குலாப், இதே அடிதட்டு மக்கள் பொருத்து, (உண்மையில் நாடோடிகள் ஜிப்ஸிகள்) பொறுத்து கூற நேரிட்டது :
“அது என்னை கவர்ந்தது. அதாவது, இந்த குறவர்கள் ஊரின் கோடியில், நிலவு எரிகையில், சின்ன கம்புகளை வைத்து, துள்ளலும் பம்பலுமாய் சிலம்பு விளையாடுகிறார்களே: அதற்கு குறவஞ்சி என்று பெயர் - இவற்றை எல்லாம் மனம்விட்டு ரசித்தேன். மனதுக்குள்ளாக அவர்களுடன் சேர்ந்து நானும் ஆர்பரித்தேன்” (நந்தலாலா: செப்டம்பர் 95).
இதேவேளை, மனம்விட்டு மகிழ்ச்சி கொள்ளும் இதே மனிதர்கள்தான், இவர்களின் துயர் பார்த்து, ‘ஏழைகள் அழுத கண்ணீர் - கூறியவாள் எனக்கூறுவோர் பெரியார்’ எனப் பொங்கிவிடுவதும் இவர்களின் இன்னும் ஒரு பக்கமாயிற்று.
இருந்தும் பாலகுமாரனாகட்டும், ஜெயமோகனாகட்டும் அல்லது அசோகமித்திரனாகட்டும், இம்மக்கள் தொடர்பிலான இவர்களின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது.
ஜெயமோகனின் அணுகுமுறையை நோக்குவோம் : ‘பொன்னுமணி வீட்டுக்கு வந்தபோது பேச்சி இல்லை… குடிசைக்குள்ளும், திண்ணை மேலும், அழுகலில் புழுக்கள் போல் குழந்தைகள் நெளிந்துக் கொண்டிருந்தன. கைகள் சூம்பிப்போன இரண்டு குழந்தைகள் தவழ்ந்து தவழ்ந்து தரையிலிருந்து எதையோ பொறுக்கி தின்றுக்கொண்டிருந்தன. சில குடிசைக்கு வெளியே, ஈரப்புழுதியில் அளைந்தன. குடிசைக்குள், சுவரோரமாய் விறகு குவியல் போலக், காசநோயாளி தலைமேல் குச்சி கைகளை வைத்து மடங்கி அமர்ந்திருந்தான். அவன் உடலெங்கும் எச்சில் வடிந்தது. அவனைச்சுற்றி மூத்திரவாடை… ஒரு சிறுபையன் வந்து குரோதத்துடன் பார்த்தப்படி நின்றான். ஒரு குழந்தை சட்டென்று இரண்டு வெண்பற்கள் மட்டும் தெரியும் வண்ணமாக வாயைத்திறந்து வீறிடத்தொடங்கியது. அவன் காலருகே மலத்தின் மீது அமர்ந்து, தவழ்ந்து அழுதுகொண்டிருந்த, பெரிய வயிறும் சூம்பிய கை, கால்களும் கொண்ட குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு மூக்கை உறிஞ்சி முகத்தைப் பிதுக்கியவாறு அவனைப்பார்த்தது…” (ரப்பர் : பக்கம் 58-59).
இவ்வகை எழுத்து ஜெமோகனுக்கு கைவந்த கலை என்பதில் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை. இது, அவரது அலாதியான அணுகுமுறை என்பதைவிட அவரது அலாதியான அரசியல் என வரையறுப்பதே பொருத்தமானது. ஏனெனில் அவரது எழுத்தின் பண்பே அவரது அரசியலில் தங்கியுள்ளது.
மேலும் ஓர் உதாரணமாக, அவரது அண்மித்த நாவலான வெள்ளை யானையை பார்க்கலாம்: அங்கும் ஓர் குடிசை! “இங்கே இருந்தவர்களின் குழந்தைகளை நான் அருகே உள்ள குடிசையில் உள்ள கிழவனிடம் ஒப்படைத்திருக்கின்றேன்”.
“குடிசையின் கதவு கோரப்புல்லைக்கொண்டு செய்யப்பட்டிருந்தது. அதை மெல்லத்தள்ளி திறந்தப்போது இருண்டகுழிக்குள் பல பெருச்சாளிகள் தெரிவதுப்போல, பல மனித முகங்கள் மின்னும் கண்களுடன் தெரிந்தன. தாழ்ந்த ஆனால் அதிகாரமான குரலில் காத்தவராயன் விசாரித்தான். அவர்களில் ஒருவன், கோவணம் மட்டும் அணிந்து கை கூப்பியப்படி வெளியே வந்தான். கிழவன். நடமாடும் எலும்புக்கூடு. நரம்புகளால் கட்டப்பட்ட எலும்புகள், புண்படிந்த சாம்பல் நிறத்தோலுக்குள் அசைந்தன. சீழ்கட்டிகள் போல பழுத்த கண்கள்…”
எய்டன் பெரும் மூச்சுடன் “ஜீஸஸ்” என்றான். கிழவன் உள்ளிருந்து இரண்டு குழந்தைகளை அழைத்து வந்தான். அவற்றின் மூத்தக் குழந்தைச் சருகால் ஆன கோவணம் அணிந்திருந்தது. இன்னொருக் குழந்தை முழு நிர்வணம். உடம்பெங்கும் சொறி அடர்ந்து சாம்பல் நிறமாக இருந்தன. கைவிரல்களும் காது மடல்களும் மூக்கும் பழுத்துப்பெருகி ரணமாக இருந்தன. அவை கிழவனை இறுகப்பிடித்தப்படி கண்களை மூடி நடுங்கிக்கொண்டிருந்தன. புண்கள் அழுகும் மனித உடலின் நெடி, போர்களங்களை அவனுக்கு நினைவூட்டியது (பக்கம் 116-117). ஜெயமோகனது முதலாவது நாவல் வெளிவந்தது (ரப்பர்) 1990 வெள்ளை யானை – 2014.
இவ்வகை வர்ணனைகள் ஜெயமோகனது எழுத்துக்கள் முழுவதுமாய், குறையில்லாமல் நிரம்பி இருக்கின்றன. இது தற்செயல் எனக் கூறுவதைவிட அவரது அரசியலின் அடிவேர் எனக் கொள்வதே சரியானது.
இதேபோன்ற ஓர் சூழலை வர்ணிக்கும் பாரதியையும் நாம் காணலாம்.
‘கன்னமுலர்ந்துபோய்க் கண்கள் குழிவிழுந்து, எண்ணெய் அறியாது, புதர்பட்ட தலையும், ஸ்நாநமறியாத உடலும், கிழிந்த கந்தையுடுத்த அரையுமாகி சோறு வேண்டுமென்று கேட்கவுமெண்ணாமல், மூலையில் இரு குமாரத்திகள் படுத்திருக்க, நோயிலே வருந்தி வாயினால் நலிவு கூறிக் கண்ணால் பழி கூறிக்கொண்டு மனைவியொரு பக்கத்தில் விழுந்திருக்க, வெளியே பிச்சைக்கென்று போனப்பிள்ளைகள் எப்போது வருவார்களென்று அவர்களடிச்சத்தம் கேட்கும் பொருட்டு மேலெல்லாஞ் செவிகளாக் காத்திருக்கும், வாதநோய் கொண்ட கிழவனொருவன், மக்கள் வருகிறார்களா என்று பார்க்கும் பொருட்டு நகர்ந்து வெளியே வந்து நோக்கும்போது, அங்கே ஓர் பசித்த நாயிருப்பது கண்டு, திரும்பவும் நகர்ந்து உள்ளே சென்று எந்த ஆச்சரியத்தாலோ தாங்களுண்ணாமல் வைத்திருந்த சிறிது பழஞ்சோற்றைக் கொண்டுவந்து அந்நாய்க்குப் போடுவதை நான் பார்த்திருக்கின்றேன். இது உயர்தர அன்பு, இது காருணியம்…’ (பக்கம் 29-30 : கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொகுதி 1- சீனி விசுவநாதன்).
இதனை, சந்தேகக் கண்கொண்டுப்பார்ப்பது கடினம். ஏனெனில், பாரதியே இதற்கு சாட்சியாக இருந்திருக்கக்கூடும், என்பதைவிட மேற்படிப் பந்தியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விதிவிலக்குகளை நாம் கவனிக்காமல் இருக்கமுடியாது.
மறுபுறம் விபசாரிகள் முதல் மிகுந்த ஏழ்மைப்பட்ட தொழிலாளர், விவசாயிகள், ஊர்ச்சுற்றிகள், பிச்சைக்காரர்கள் என ஊடாடி ஜீவித்துப்பார்த்திருக்கக் கூடிய கார்க்கி, தன் பரிசோதனைக் களமாக தன் வாழ்க்கையை வாழ்ந்தப்பின், பின்வரும் பொருள்பட கூறுவான்: ‘மன்னிக்கவும் கனவான்களே. நீங்கள் அனைவரும் பார்த்திருக்கக்கூடிய, வாழ்வின் அருவருப்புக்களை விட அளவுக்கதிகமாக பார்த்தவன் நான். அந்நசிவுகளை சித்தரிப்பது எனது பணி அல்ல. ஆனால் இந் நசிவில் இருந்து மனிதரை எவ்வாறு மேல்தூக்கிவிடுவது என்பதே எனது குறிக்கோளாகும்’. (அவனது தாய், அடிமட்டத்து மக்களின் வாழ்வை அணுகியது.)
உண்மையில் அவர்களின் துன்பத்திற்கு காரணம்தான் என்ன என்பது கேள்வியானது. இதனாலோ என்னவோ, ‘சொத்து என்பது திருட்டு’ எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் விடயம் இவற்றுடன் முடிந்ததாகவும் இல்லை. ஏனெனில் இவ்வகை மனிதர்களின் உள்ளிருந்து இயங்கும் பண்புகள் வித்தியாசமுற்றனவாக காணப்படுகின்றன. “எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்” எனப் பாரதி 1921ல் எழுதியபோது அவனுக்கு சரியாக உணவிருந்ததா என்பதெல்லாம் கேள்விக்குறியனதான்.
அதாவது, நிலவு எரிகையில், பந்தம் கட்டி ஆடும் மக்களோடு ஆனந்தித்த மனிதனும், இவற்றுடன் இணைந்து, முகிழ்க்கவே செய்தான். இத்தகைய மனிதர்களின் பார்வை குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில், ஜெயமோனின் எழுத்துக்களில் நெளியும் புழுக்குள், புண்கள்,சேறு, மலம் -இவை அனைத்தின் ஆழத்திலும் வீற்றிருக்கும் அரசியலும் குறிக்கத்தக்கதே.
இவ்வகையில் அசோகமித்திரனின் வர்ணனையும் இதுபோன்றே, குறைவுப்படாமல் இருக்கின்றது: “சந்திரசேகரன் குசினி பறச்சேரியையும் கடந்து சென்றான். அவன் சிறுவனாக இருந்து முதலில் அப்பெயரைக்கேட்டபோது ஏதோ வசவு போலத்தான் தோன்றிற்று. ஆனால், அங்கே வசிப்பவர்களே அந்த இடத்தை அப்படித்தான் குறிப்பிட்டார்கள்…”
“அவர்கள் சண்டையை ஓர் உச்சக்கட்டத்தில் ஆனால் கைகலப்பு இல்லாமல் மணிக்கணக்கில் நடத்துவார்கள். இவ்வளவு சண்டைக்கும் அருகிலேயே ஆண்கள் பீடி குடித்தபடி அமர்ந்திருப்பார்கள். அப்படியே தூங்கியும் விடுவார்கள். அவர்கள் விழித்து எழுந்திருக்கும் போதும் சண்டை ஓயாமல் தொடர்ந்துக்கொண்டிருந்தால் ஒன்றுக்கு இரண்டாகக் கொட்டாவி விடுவார்கள்”.
அதாவது, அசோகமித்திரன், மணிக்கணக்காக இம்மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்திருக்கக்கூடிய அனுபவம் இப்படியாய் தொகுத்தளிக்கப்படுகின்றது.
“ஆனால் அந்த இடத்தில்தான் சேறும் சகதியும் வெங்காயத்தோலும், கோழி எலும்புகளும், நாயும் பன்றியும் இறைச்சி சுடும் நாற்றமும், சண்டையும், காது கொடுத்துக் கேட்க முடியாத வசைச்சொற்களும் சாபங்களும் நிறைந்திருக்கும். அந்தச்சேரியில் கூட சந்திரசேகரின் மனத்திற்கு உபாதை அளிக்கும் மூன்று, நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருத்தியின் பெயர் புஸ்பா…” (பக்கம் 74).
சுருக்கமாக கூறுவோமெனில், ஜெயமோகனின் வேர் இங்கே, அசோகமித்திரனில் இருந்து கிளம்பி வருவதும், இக்கலைஞர்களின் பார்வை, அணுகுமுறை என்பன இன்குலாப் போன்றோரின் உளப்பாட்டுடன் பொருந்தி வருவதில்லை என்பதும், பாரதி போன்ற கலைஞர்கள் நின்ற புள்ளி வித்தியாசமுற்ற ஒன்று என்பதையும் தெளிவுறுத்தி கூறுவதாக அமைகின்றது.
அசோகமித்திரன், மேற்படி நாவலில், மேலும் கூறுவார் : “பிற்பகலில் சினிமா பார்க்க வருபவர்கள்… ஒருதனி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்… சினிமாவில் நாற்காலிகள் மீதேறியே நடந்து போவார்கள். கொட்டகை உள்ளே பீடி குடிப்பார்கள். சொறிந்து கொண்டே இருப்பார்கள். எல்லா இடத்திலும் எச்சில் துப்புவார்கள். படம் ஓடுவது தடைபட்டால் வெவ்வேறு விதமாகச் சீட்டி அடிப்பார்கள்…” (பக்கம் 125-126).
இது, அசோகமித்திரன், இவ்அடித்தட்டு மக்களை அணுகும் முறைமையாகும்.
அவர்களது வெளித்தோற்றத்துடன், தன் அணுகலை அசோமித்திரன் நிறைவு செய்துகொள்கின்றார். அவர்களது, வெளி உலகை அவர் தீண்டுகிறாரே தவிர அவர்களது அக உலகுக்குள் பிரவேசிக்கவே இல்லை என்பது தெளிவு. அது அவருக்கு சம்பந்தமில்லாமல், அந்நியப்பட்டதாகவே இருக்கின்றது. அவரது வெளி உலகின் தீண்டல் கூட, யாரினது பிரதியாக இருந்து - செயற்பட்டுள்ளார் என்பது கேள்வியே. ஜெயமோகனது அல்லது பாலகுமாரனது போல இத்தீண்டல் மோடியுடையதா அல்லது காந்தியினுடையதா என்பதெல்லாம் தொடர்ந்துவரும் வினாக்களாகின்றன.
ஆனால், சதா எச்சில் துப்பி, பின் அதனைக் கால்களைக்கொண்டு, மண்ணைத்தள்ளி, மூடும் மக்கள் குறித்து ஜெயகாந்தனும் ஒரு கதையில் எழுதாமல் இல்லை.
மறுபுறத்தில், ஏழ்மையை இவர்கள் வர்ணிக்கும் முகமாக, ஏழ்மைப்பொருத்து எழுதக்கூடிய ஏனைய கலைஞர்களிடமிருந்து வித்தியாசம் பெறுகின்றது. இதற்கூடு, சில வரலாற்று வினாக்கள் முன்னிருத்தப்படுகின்றன :
இவ்வாழ்வு (உலகு), மாற்றமடைய முடியாததா? நிரந்தரமானதா? வரலாறு, இதனை, எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.
இம்மக்களிடை நாகரிகம் என ஒன்று நிலவுகின்றதா? கந்தையைக் கசக்கிக் கட்டும் மனிதர்களும் இவர்களிடை இருக்கின்றனரா?
இதனுடன், இருள் கவியும் இச்சூழலுக்கு யார், யார் பொறுப்பு என்பதெல்லாம் இணைந்துவரும் வினாக்களாகுகின்றன.
“… ஒரு சாக்குத்திரை பின்னால் இருந்த கதவைச் சந்திரசேகரன மெதுவாகத தள்ளினான். அது திறந்து கொண்டது… பரம ஏழ்மையான மண் வீடானாலும் வாசல் கதவைத் திறந்தவுடனேயே ஒரு சிறு முற்றம்”.
“முற்றத்தில் பழைய, நசுங்கிய, கரியேறிய அலுமினியப் பாத்திரங்கள். சாக்கடைத் துவாரத்தின் அருகே தேங்கி ஈ மொய்த்துக் கொண்டிருக்கும் அசுத்தத்தண்ணீர்.. இரு கோழிக்குஞ்சுகள் பட படவென்று சிறகடித்துக்கொண்டு ஓடின”.
“வீட்டின் உள்ளே ஒரே ஒரு உருவம் - எலும்பும் தோலுமாக ஒரு கிழவி. அழுக்கும் கரியும் இனியும் படிய முடியாது என்று நினைக்ககூடிய துணி உடுத்தி கொண்டிருந்தாள்”.
“அவள் வாயைத் திறந்தாள். மேல் வரிசையில் முன் பற்கள் விழுந்திருந்தன. மற்றைய பற்கள் கரையேறிப் பெருத்து மிகுந்தன…”
“ரங்கா ஷேக்ஸ்பியரைக் பிய்த்து வாங்கிக்கொண்டிருந்தார். ஜான் ஆஃப் காண்ட்டின் விவேகம் : பொறுமை : சகித்திருத்தல் : நாட்டுப்பற்று…” (பக்கம் 130-131).
ஷேக்ஸ்பியரும், அவர் முன்வைக்கக்கூடிய நாட்டுப்பற்றும் இங்கே இணைக்கப்பட்டு இரண்டுமே எள்ளல் கொள்ள வைக்கின்றன. இதற்கூடாகத்தான் அசோகமித்திரனின் அரசியல் மௌனமாய் இயங்குகிறது.
“சந்திரசேகரன் ஏறி குதித்திருந்த வீட்டில் எல்லோரும் விழித்துக்கொண்டிருந்தார்கள்… அது… சிகந்தராபாத்தில், சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் வீடுகளில் ஒன்று… அவர்கள் இருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கைகளாக இருந்தார்கள்… அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. நாங்கள் பிச்சை கேட்கிறோம்… எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள் (என்றவாறே) கமீஸைக் கழட்டினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவளுடையவிலா எலும்புகளைத் தனித்தனியாக எண்ணி எடுக்கும் வகையில் நிர்வாணமாக நின்றாள்… சந்திரசேகரனுக்கு வாந்தி வந்தது… தெருவில் குதித்து வெறி பிடித்தவன் போல் ஓடினான்…” (பக்கம் 217-218).
இப்படியாக இனமுறுகல் படைத்துக் காட்டப்படுகின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.