அமெரிக்கா நினைத்தால் எதனையும் செய்யலாம். உற்பத்தி சங்கிலிகளையும், விநியோக பாதைகளையும் ஒருங்கே சிதைத்து மூடலாம். பொருளாதார தடைகளை விதிக்கலாம். முழு உலகத்தையும் பட்டினி போட்டு அலைய செய்யலாம். கடற் பாதைகளை, கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யலாம்.

காரணம்: பதினொரு பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பல்களை அது வரிசையாக சொந்தம் கொண்டாடுகின்றது. மேலும், 80 நாடுகளில், கிட்டத்தட்ட 750-800 படைத்தளங்கள். 1.33 மில்லியன் யுத்த துருப்பினர். பின், 11,000 விண்வெளி செய்மதிகள். ஆனால், இவை அனைத்தும் நேற்றைய செய்தியானது. இன்று உலகம் மாறி வருகின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு கடன் 38 ட்ரில்லியன் டாலரை தாண்டி உள்ளது என்பதும், தொழிநுட்பங்களில், சீனா-ரஷ்யா-இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவை விஞ்சி உள்ளது என்பதும், டாலரின் சரிவும், BRICS  போன்ற அமைப்புகளின் உதயமும் இன்றைய உலகின் முகத்தை புதிதாய் வரைவதாய் இருக்கின்றன. இச்சூழ்நிலையிலேயே, ஈரானிய போரும் தோன்றியுள்ளது.

தனது மூன்று விமானம்தாங்கி கப்பல்களை, ஈரான் நோக்கி திசை திருப்பியும், இஸ்ரேல் என்ற மத்திய கிழக்கின், பெயர் போன காட்டுமிராண்டி நாட்டை (காசா புகழ் இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்துமாறும், மக்களை குண்டு வீசி கொலை செய்யுமாறும், ஊக்குவித்தும் அதே பாணியில், தானே முன்நின்று தாக்குதல்களை தனிப்பட நடத்தி, கொமெய்னி உள்ளிட்ட 40 முக்கியஸ்தர்களை கொன்றொழித்தும், 600க்கும் மேற்பட்ட பிஞ்சு பள்ளி சிறார்களை குண்டெறிந்து அழித்தும் - அது ஆட்டம் காட்டினாலும், ஈரான், இன்னும் அமெரிக்காவிடம் மண்டியிட்டதாக தெரியவில்லை.

ஈரான் மீதான தாக்குதலானது, பல இலக்குகளை உள்ளடக்கியது என நம்பப்படுகின்றது. உற்பத்தி-விநியோக வலைபின்னல்களை சிதைப்பது, சீனா உள்ளிட்ட உலக நாடுகளை தன்னிடம் மண்டியிட வைப்பது என்பன இவற்றில் பிரதானமானவை.

கொமெய்னி உட்பட முக்கிய நபர்களை ஈரானில் கொன்ற கையுடன் சீனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ட்ரம்ப் துடியாய் துடித்தார் (பல துருப்பு சீட்டுக்களை கைக்கொண்டுள்ள நம்பிக்கையில்). ஆனால், ஈரானின் பதிலடிகளோ, ட்ரம்ப் நினைத்தவாறு இல்லாமல் எதிர்மாறாய், அமைந்தன. இதனால், மார்ச் 31இல், இடம்பெற இருந்த ட்ரம்பின் சீன விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மார்ச் 17இல் வெள்ளை மாளிகை அறிவித்தது. தான் எதிர்ப்பார்த்த ஈரானிய வெற்றி, மார்ச் 17க்கு முன் வந்து சேர்ந்ததாக தெரியவில்லை. வரக்கூடும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஈரானின், பலம் வாய்ந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் அழிக்கப்பட முடியாதபடி, நிலத்துக்கடியில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதே போன்று, ஈரானியர் தமது இரண்டாம் நிலை நிர்வாக கட்டமைப்பை எழுப்புவதிலும் வெற்றி கண்டு இருந்தனர். நிலத்தடியில் பெரிய பெரிய நகரங்களையே அவர்கள் அமைத்தனர் என கூறுவது இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஸ்டாலின் அமைத்த போர் தந்திரங்களை நினைவூட்டுகின்றது. இவ்வகை, திட்டமிடல் ஒன்றை, கடந்த 25 வருடங்களாக ஈரான் செயல்படுத்தியதாக ஆய்வாளர்கள் சுட்டி காட்டுவர். இதுபோல, அருகாமையில் காட்டுமிராண்டி இஸ்ரேல் இருந்ததும், ஈரான் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதின் பிரதான காரணமாகிறது.

இதுபோலவே, ரஷ்ய-சீனாவின் நிலைப்பாடும், ஈரானுக்கு ஒத்திசைவாக இருந்தது.

ட்ரம்ப், இங்கே, ஈரானில் புதைப்படாவிட்டால், கட்டுக்கடங்காமல், உலகில் எங்கேயும் காலடி வைக்க துணிவார் என இவ்விரு நாடுகளும் ஒரே தீர்மானத்திற்கு வந்திருக்கலாம். ஏனெனில், ஈரான் விடயம் தொடர்பில், ஐ.நா பாதுகாப்பு சபையில், கடந்த காலங்களில், இவை, வாக்களித்துள்ள விதங்களை நாம் பார்ப்போமானால், மார்ச் 11இல், ஈரானை கண்டிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது, இவ்விரு நாடுகளுமே வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல், வெளிநடப்பு செய்திருந்தன. இப்பிரேரணையை, அப்போதும், அவர்கள் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்திருந்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாது, அவர்கள் வெளிநடப்பு மாத்திரம் செய்தமை, அமெரிக்காவை யுத்தத்தை நோக்கி முடுக்கிவிட, அசைத்த பச்சைக்கொடி என விளங்கிக் கொள்ளப்பட்டு, யுத்தம் மேலும் தீவிரமாக கொண்டு நடத்தப்பட காரணமாயிற்று. ஆனால், இதேபோன்ற மற்றுமொரு பிரேரணையை, இதற்கு அடுத்ததாக, 07.04.2026 அன்று கொண்டு வந்தபோது, இவ்விரு நாடுகளும் ஒன்று சேர்ந்து தம் வீட்டோ அதிகாரத்தை பாவித்து பிரேரணையை தடை செய்தன.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, தொட முடியாது என்று கணிக்கப்பட்டிருந்த, அமெரிக்க விமானம்தாங்கி கப்பல்களும், கண்ணுக்கு புலப்படாத அதன் நவீன விமானங்களும், ஈரானால் தாக்கப்பட்டு, அமெரிக்க விமானி ஒருவரும் சிறைப்பிடிக்கபட்டதன் பின்னால் (ஒருவரே மீட்கப்பட்டவர்) ரஷ்யா-சீனாவின் விஷமத்தனங்கள் உண்டு என ட்ரம்ப் அறிக்கை விட்டிருந்தார். ரஷ்;யா-சீனா ஆகிய நாடுகளே ஈரானுக்கு உளவு அறிக்கைகளை வழங்கியதாகவும் இதனாலேயே ஈரான், அமெரிக்காவை தாக்கக்கூடிய வலு கொண்டதாக இன்று இருக்கின்றது என்றும் அமெரிக்கா குறைப்பட்டுக் கொண்டது. ஆனால், யதார்த்தத்தில், விடயங்கள் இதைவிட பாரதூரமாகவே அமைந்திருந்தன. முழு விண்வெளி ஆதிக்கத்தையும், ஈரான் சார்பாக திருப்பி (தமது செய்மதிகளை பாவித்து) அமெரிக்கா விமானம்தாங்கி கப்பல்கள்-விமானங்கள் ஆகியன தாக்குதலுக்கு உள்ளாக இந்நாடுகளே வழி வகுத்தன.

இன்று, ஈரானின், இரண்டாம் நிலை நிர்வாகத்துக்கு, இந்நாடுகள் கொடுக்கும் ஆதரவும் எம் கண் முன்னே காட்சி அளிக்கின்றது.
இக்கடின சூழ்நிலையில்தான், அமெரிக்கா, இனி, ஓர் பேச்சுவார்த்தை மூலம், ஈரானை மண்டியிட செய்யலாம் என கருதிற்று. ஆனால், ஈரானோ விடாப்பிடியாக சாதித்தது: யுத்தத்தின் மூலமாக சாதிக்க முடியாதவற்றை பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்கா சாதிக்க முனைவது மடமை என. இருந்தும், அமெரிக்கா தனது பங்காளியான, நம்பத்தகுந்த, பாகிஸ்தானின் மூலம் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவே செய்தது. பேச்சுவார்த்தையானது, ஒரு  21 மணிநேரம் இழுத்தடிக்கப்பட்டபின். இறுதியில் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணம், ஈரான், ஹோமூஸ் நீரிணையை மூடியதே என அமெரிக்காவால் வாதிடப்பட்டது.

மறுபுறத்தில், ஹோமூஸ் நீரிணையானது, தனது பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இப்போது, தான் அதை முற்றுகையிட்டுள்ளதாகவும், ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அறிவித்தார். இம்முரண்பட்ட கூற்றுக்களில், எதனை நம்புவது என உலக நாடுகள் திண்டாடின. இதுவரையில், முற்றுகையினால் 45 வணிக கப்பல்களை திருப்பி அனுப்பி விட்டதாக அமெரிக்கா மார்தட்டியது (02.05.2026). மேலும், மாதம் 3000 கப்பல்கள் இந்நீரிணை வழியாக செல்லும் என்பது பதிவு). ஆனால், வழமையாக, ஹோமூஸ் நீரிணையை அமெரிக்கா என்றுமே கட்டுப்படுத்தியதாக இல்லை. இது, நேற்றும் இன்றும் நடக்கும் நிகழ்ச்சியாகும்.

உதாரணமாக, ஹோமூஸ் நீரிணைக்கு மேலாக, பறந்த அமெரிக்காவின் அதிநவீன ஆளற்ற விமானம் கூட, (50,000 அடி: MQ9) இன்று, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற செய்தி உலகறிந்தது. இதுபோன்ற, மேலும், இரண்டு MQ9 ட்ரோன்கள், ஈரானால், அழிப்பட்டதாகவும் ஈரான் கூறியது (07.04.2026:Times of India). இதுபோக, இதுவரை, இந்த போரில், இதுவரையில், அமெரிக்காவின் 140 ட்ரோன்கள் ஈரானால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதாக புள்ளிவிபரங்கள் கூறின. (விமானங்கள் அழிபட்டது வேறு கதை).

ஹோமூஸ் நீரிணை Choking Point  என்பது, சடுதியான ஒரு வளைவையும், மிக கூர்மையான ஒரு கடற்பரப்பையும் கொண்ட  ஒரு  குறுகிய பரப்பினையே சுட்டி காட்டுகின்றது. கிட்டத்தட்ட 174 கி.மீ நீளமும் 31-39 கி.மீ அகலமும் கொண்ட இவ்வளைவு பகுதியானது, முற்றுமுழுதாய் ஈரானின் கரைகளில் அமைந்திருப்பது அதனை தனது கட்டுப்பாட்டில் கொள்ள ஈரானுக்கு வசதியாகிறது.

ஹோமூஸ் வளைவின் இருபுறமாய், இருவேறு கடல்கள் உண்டு. ஓமானிய கடலும் மறுபுறம் பர்சியன் கடலுமாய் இருக்கின்றன.
ஹோமூஸ் நீரிணை  என்பது தனக்கு என்றுமே பாதகமாய் அமையக்கூடியதுதான் என்பதை சீனம் ஏற்கனவே அறிந்திருந்தது என்பது சீனாவுக்கு இந்நீரிணை எவ்வளவு முக்கியத்துவப்படுகிறது, என்பதை சுட்டிக்காட்டும் உண்மையாகும். தனது மசகு எண்ணையில் 12-15 சதவீதத்தை, சீனம் ஈரானிடம் இருந்தே பெற்றுக் கொள்கின்றது. (2025இல் மாத்திரம் சீனம் ஈரானிடம், இவ்வழியாக பெற்றுக் கொண்ட, மசகு எண்ணையின் அளவு, நாளொன்றுக்கு 1.48-.1.4 மில்லியன் பீப்பாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது).

எனவே, ஹோமூஸ் நீரிணையும், மலாகா நீரிணையும் பாதகமான சூழல்கள் எழும்போது, தனக்கு என்றுமே அபாயகரமாக அமையக்கூடிய ஒன்றே என்று கணித்திருந்த சீனம், பாகிஸ்தானின் குவாட்டர் துறைமுகத்தை, 2015-2017இல் ஒரு 40-43 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டு, இதற்கான நிலவழி பாதையையும் பாகிஸ்தானின் ஊடாக அமைத்துக் கொண்டது.

குவாட்டர் துறைமுகத்துக்குள், நேரடியாக திறவும் பாகிஸ்தானிய இந்நிலவழி பாதை, சீனத்தை நேரடியாகவே, அரேபியன் கடலுக்குள், (அதாவது ஓமானிய கடலுக்குள்) பிரவேசிக்க வழி செய்கின்றது. இந்நகர்வுக்கூடாக, ஒருபுறத்தில், சீனம், என்றுமே தனக்கு சோதனையாக அமையக்கூடிய, மலாகா நீரிணையை கடப்பதாகின்றது. மறுபுறத்தில், இதுபோலவே, ஹோமூஸ் நீரிணையை, அணுகாமலும், சீனா ஓமானிய கடல் பரப்பில் இருந்தே, ஈரானிய எண்ணை குதங்களை (Pander-E-Jask  போன்ற), நேரடியாக அணுகிக் கொள்ளவும் வழிபிறக்கிறது. (இப்படி, Pander-E-Jask  என்ற ஈரானிய எண்ணை குதத்திலிருந்து, சீனா பெற்ற எண்ணையின் அளவு, நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் வீதம்).

Pander-E-Jask இல் இருந்து, இவ்வகையில் பெற்றுக் கொள்ளப்படும், மசகு எண்ணையானது, குவாட்டர் துறைமுகத்தை அமைத்து, நிலவழியாக, சீனத்துக்கு வந்து சேர்கின்றது. ஆகவே, மேலே குறிப்பிட்டவாறு, இது ஹோமூஸ் நீரிணையை அல்லது மலாகா நீரிணையை தவிர்க்கும் நகர்வுகள் ஆகின்றன.

இக்காரணத்தினாலேயே, அமெரிக்காவானது, ஹோமூஸ் நீரிணையை மாத்திரமல்லாது, ஈரான் அனைத்து துறைமுகங்களையும், தனது முற்றுகையில் உள்ளடக்கி இருப்பதாக அறிவித்தது. ஆனால், இவ்அறிவிப்பு, வெறுமனே அறிவிப்பாக மாத்திரமே நடைமுறையில் இருப்பதாய் தெரிகிறது. ஏனெனில், ரஷ்ய-சீன நகர்வுகள் அமெரிக்காவின் இவ்வார்த்தைகளை பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

இவ்விரு நாட்டின் கப்பல்களும், ஹோமூஸ் நீரிணையில் பயணிப்பதை, தமது உரிமையாக கருதி செயற்பட்டன. ஆக, தடையால் மாட்டுப்பட்டதென்னவோ, உலகின் ஏனைய நாடுகள்தாம். (மிக அண்மையில், கிளிண்டன் இது குறித்து தெரிவிக்கையில், 26 ரஷ்ய கப்பல்கள், அமெரிக்காவின் முற்றுகையை உடைத்து ஈரானிடம் எண்ணையை கொள்வனவு செய்தன என கூறினார் (20.04.2026).

இச்சூழ்நிலையில், உலகின் ஏனைய நாடுகளின் வாழ்க்கை செலவு, அதி உச்சத்தை தொட்டது போல் அமெரிக்காவையும் தாக்கி, அங்கேயும் சாதாரண மக்கள் தள்ளாடி, போக்கற்றவர்களாக வழி செய்தது. ஆனால், இதேவேளை, அமெரிக்காவின் எண்ணை கம்பனிகள் பெற்ற மொத்த லாபமோ, செக்கனுக்கு 3000 டாலராக உயர்ந்தது. 2025உடன் ஒப்பிடும் போது, இக் கம்பனிகள் பெற்ற லாபம் நாளொன்றுக்கு 37 மில்லியன் டாலர்களை கடப்பதாக இருந்தது என கணிப்பிடப்பட்டது. (Times of India: 26.04.2026).

இவை, ட்ரம்ப் கொண்டு நடத்தும் அரசியல் பேராசை யுத்தத்தின் ஒரு துளியே ஆகும். ஆனால், ரஷ்யாவின் அறிவிப்போ, தீர்க்கமாய் இருந்தது: “கொமெய்னியின் கொலை என்பதை நாம் ஒரு சிறிதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்வதென்பதும் அந்நாட்டின் மேல் சட்ட விரோதமாக போர் தொடுப்பதென்பதும், காலப்போக்கில், நிரந்தர விளைவுகளையும், வடுக்களையும் தோற்றுவிக்கவே செய்யும்”. ரஷ்யாவின் முன்னைநாள் ஜனாதிபதியின் கூற்று: “ஈரானிடம் தற்போது ஹோமூஸ் நீரிணை என்ற அணு ஆயுதம் இருக்கவே இருக்கின்றது”.

உண்மையாக இருக்கலாம். முழு உலகையும் ஏதோ ஒரு வழியில், நேரடியாக பாதிக்கக்கூடிய, இந்நீரிணை ஒருபோதும், கடந்த காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததில்லை. சுதந்திர கடல்பயணத்துக்கு பாதுகாப்பாய் இருந்த இவ் ஹோமூஸ் நீரிணையானது, இனியும் இவ்வாறு தொடர்வதற்கு இல்லை. ஏனெனில், நிலைமை, இப்போது மாறி உள்ளது. இந்நீரிணையில் பயணிக்கும் கப்பல்கள், இனி தமக்கு வரிகளை செலுத்த வேண்டுமென்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அதிலும், தமக்கு செலுத்தும் இந்த வரிப்பணமானது யுவானில் (சீன பணம்) அல்லது கிரிப்டோ கரண்சியில் வழங்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது (டாலரை புறக்கணிப்பதற்காய்).

கிரிப்டோ கரண்சியை, ரஷ்யா பாவணையில் கொண்டுவந்ததின் முக்கிய காரணம், மேற்கத்தைய தடைகளில் இருந்து தப்ப இது ஒரு ஏற்ற நடைமுறை எனவும் வாதிடப்பட்டது. (இதேவேளை, வரியானது, கப்பலொன்றுக்கு, அதில் ஏற்றப்பட்டுள்ள பண்டங்களின் பெறுமதியை பொறுத்து, சமயங்களில் ஒரு மில்லியன் டாலரை தாண்டுவதாயும் இருந்தது. ஆனால், அண்மித்த அறிக்கைகளின் பிரகாரம், ஈரானுக்கு வரிகளை செலுத்தும் கப்பல்கள் மீது, தான் தடைகளை விதிக்க இருப்பதாக, ட்ரம்ப் அறிவித்துள்ளார்; -02.05.2026).

2

இச்சூழலில் தான், ஈரானிய கடற்படையை நாங்கள் முற்றாக துவாம்சம் செய்துவிட்டோம் என்றும் ஈரானிய வான்படையை நொறுக்கி தள்ளிவிட்டோம் என்றும், வழமைபோல் ட்ரம்ப் மார்தட்டும் நிகழ்வுகளும் வந்து போகின்றன. ஆனால், ட்ரம்ப், உண்மையிலேயே, ஒரு பேச்சுவார்த்தையை கோரி, கெஞ்ச ஆரம்பித்துள்ளதாய் ஈரான் அறிவிக்கின்றது. இந்த பின்னணியில், ஈரானின் அறிவிப்புகள் திட்டவட்டமாக இருந்தன:

    அணுஆயுதங்கள் தொடர்பிலான சர்வதேச பேச்சுக்கள் என்பன, நாடுகளால், பல வருடங்களின் முன்னரேயே, எம்முடன் நடத்தப்பட்டவைதான். எனவே, இவ்விடயத்தில் நாம் இனியும் பேச வேண்டிய தேவை இருப்பதாக நாம் கருதவில்லை. ஆனால், அண்மை நிகழ்வுகளின் பிரகாரம், ஹோமூஸ் நீரிணையை நாம் திறக்க உள்ளோம். அணு ஆயுதங்கள் தொடர்பிலான பேச்சு “பிறகு” நடைபெறலாம். (ஈரானின் இப்புதிய நிலைப்பாடானது, அதாவது, ஹோமூஸ் நீரிணையை அது திறக்க சம்மதமாய் இருப்பது என்பதானது, சீன-அமெரிக்க பேச்சுவார்த்தைகளோடு இணைத்து பார்க்கத்தக்கது). ஆனால், உடனடி போர் நிறுத்தம், முற்றுகைகளை நிறுத்தல், ஈரானிய சொத்துக்களை முடக்கத்தின் பிடியிலிருந்து விடுவித்தல் ஆகிய நிபந்தனைகள், உடனடியாக, அமுல் செய்யப்பட வேண்டும்.

    இம் முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதவிடத்து, தாம் இனியும் ஓர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்தே, அமெரிக்காவும், பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தது (26.04.2026).
ஆனால், பாகிஸ்தானில் இருந்து ஓமானுக்கு விஜயம் செய்த ஈரானிய வெளிநாட்டமைச்சர், யாரும் எதிர்பாராத முறையில், அங்கிருந்து புட்டினை சந்திப்பதற்காக ரஷ்யா சென்றதை உலகு, வியப்புடன் பார்க்கவே பார்த்தது. (27.04.2026).

3

அதாவது, ஈரான்-அமெரிக்காவின் இவ்வகை நிலைகள் ஒரு ஊசலாட்டத்தை காட்டினாலும், பின்வரும் மூன்று விடயங்கள் எமது கவனத்தை கவருவதாய் இருக்கின்றது:

    Stammer ட்ரம்புக்கு, ஏற்படுத்தியிருந்த தொலைபேசி அழைப்பு.

    ஈரானிய வெளிநாட்டமைச்சரின், புட்டினுடனான, 90 நிமிட சம்பாசணை.

    இவற்றின் தொடர்ச்சியாக, புட்டின், ட்ரம்புடன் 90 நிமிட நேரம் கதைத்தது.

Stammer கூறிய விடயங்களில், முக்கியமானது, ஹோமூஸ் நீரிணையானது திறக்கப்பட்டால், விளைவுகள் “பாரதூரமாய்” அமையும் என்பதே.

ஹோமூஸ் நீரிணையானது, போக்குவரத்துக்காய், இயல்பாக திறக்கப்படாவிட்டால், எந்த ஒரு பேச்சுவார்த்தையும், நடைபெறும் என்பதன் சாத்தியக்கூறு இல்லை என்பது தெளிவு. இச்சூழலில், இவ் “இழுபறி”, முடிவற்று நீளக்கூடிய சாத்தியகூறுகள் காட்சி தருகின்றன. இவை, போர் மீண்டும் தொடங்கக்கூடிய, சாத்தியக்கூறுகளை உள்ளடக்குவதை நாம் நிராகரிப்பதற்கில்லை. இப்பின்னணியில்தான், ட்ரம்பின், ஓர் AI  உருவம் இப்போது வெளியாகி உள்ளது. ஒரு யந்திர துப்பாக்கி, ட்ரம்பின் மார்பில் சாத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், ட்ரம்ப் ஒரு போர் வீரன் போல் நெஞ்சை நிமிர்த்தி காட்சி தரும் இச்சித்தரிப்பும், “ஈரானை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற கடந்த கால ட்ரம்பின் மிரட்டலின் தொடர்ச்சியா என்பதும் சரியாக தெரியவில்லை. ஆனால், இதன் இலக்கு, உண்மையில், ஈரானை மாத்திரம் குறிவைப்பதாக இல்லை. மாறாக, சீனா போன்ற நாடுகளை இது குறிவைக்கின்றது என வாதிடப்படுகின்றது. ஆனால், இதற்கு எதிராக, ஈரானின் நிலையோ திட்டவட்டமாக இருந்தது: “இது வெறும் வெத்துப்பேச்சு”.

இந்த சூழ்நிலையிலேயேத்தான், புட்டினின் ட்ரம்புடனான, உரையாடலும் இடம்பெற்றது (29.04.2026). இவ் உரையாடலின் முக்கியத்துவமும், ளுவயஅஅநசஇன் எச்சரிக்கையின் முக்கியத்துவமும் ஒரே பாணியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகின்றது.

Stammer, தனது தொலைபேசி அழைப்பிற்கு முன்னர் 40 நாடுகளை திரட்டி, ஹோமூஸ் நீரிணையை திறந்து வைக்க முயற்சி செய்திருந்தார். அவரது திட்டத்தின்படி, ஹோமூஸ் நீரிணையை திறப்பதற்கு ஓர் படையை ஹோமூஸ் நீரிணையில் கொண்டு நிறுத்துவது என்பதும், அப்படைக்கு தகுந்த உளவு செய்திகளும், செய்மதிகளின் ஆதிக்கமும் வழங்க வேண்டும் என்றும் வரையறுத்திருந்தார் மனிதர். ஆனால், இறுதியில், தொலைபேசியை எடுத்து, போர் தொடர்வதென்றால், அது “பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது” என ட்ரம்பை எச்சரிக்கை செய்து முடித்தார் (26.04.2026).

சாரம்சத்தில், இதே வார்த்தைகள்தான், புட்டினும் பாவிப்பதாய் இருந்தது. அதாவது, ஒருபுறம் 40 நாடுகளை திரட்டி முன்னெடுக்க முயன்ற ஓர் முயற்சி. மறுபுறம், ஓர் ஈரானிய வெளிநாட்டு அமைச்சருடன் தான் நடத்திய 90 நிமிட சம்பாசணையின் மொத்த விளைவு.

4

ஏற்கனவே, ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஓர் மிக ஆழமான கொடுக்கல்-வாங்கல் உறவு இருந்தது என்பது தெரிந்த ஓர் விடயமே. உதாரணமாக, ரஷ்யா கிட்டத்தட்ட 59 ரயில் பெட்டிகளை கொண்ட பண்டங்களை 9000 கி.மீ தாண்டி, கஸகஸ்தான்-டர்கமின்ஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் கடந்து, ஈரானுக்கு, 2025முதல் வழங்கி வருகின்றது.

இப்பண்டங்கள், எப்படிப்பட்டவை என்பது, இன்றுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதுபோக, உக்ரைனிய போரின்போது, ஈரான் தனது நவீன ட்ரோன்களை ரஷ்யாவுக்கு வழங்கியதும், இப்புரிதல்களின் ஒரு பக்கமே ஆகும். ஆகவே, ஒரு போர் சூழலில், இடம்பெற்றிருக்கக்கூடிய மேற்குறித்த 90 நிமிட கலந்துரையாடல் என்பது, பல முக்கிய கூறுகளை, உள்ளடக்கக்கூடியதாகவே இருந்திருக்கும் என்பது ஊகிக்கக்கூடிய ஒன்றே.

பாரிய யுத்தம் ஒன்று வெடிக்கும் ஒரு சூழலில், இனி, இரு நாடுகளும் செயல்பட வேண்டிய அணுகுமுறைகள் யாவன என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதா? அல்லது இனி ஈரானுக்கு வழங்கவிருக்கும் நவீன யுத்த கருவிகள் - விண்வெளி ஆதிக்கங்கள் - அல்லது அணு ஆயுதங்களின் பாவிப்புக்கள் அல்லது இவற்றை உள்ளடக்கிய நவீன தொழிநுட்பங்கள் பொறுத்து கலந்துரையாடப்பட்டதா என்பதெல்லாம் மர்மமாகவே காணப்படுகின்றது.

இருப்பினும், போர் தொடரும் பட்சத்தில், “விளைவுகள் பாரதூரமாய் அமையும்” என்பதும் “தரைவழி தாக்குதல்” என்பதும் பாரிய பின்னடைவை தருவதாகவே இருக்கும் என்பதும் புட்டின் எடுத்துரைக்கும் பல விடயங்களில், ஒன்றாகின்றன.

இப்போர் குறித்த உரையாற்றுகையில், கிளிண்டன், “தான் ஒரு 50 வருட அனுபவத்தை வெளிநாட்டு அரசியல் விவகாரங்களில் கொண்டுள்ளதாயும், ஆனால் இது போன்ற ஒரு “தீர்மானம் இல்லாத” அல்லது “முடிவு தெரியாத” யுத்தம் குறித்து அறிந்ததாக இல்லை” எனவும் அழுத்தி கூறினார்.

5

இச் சூழ்நிலையிலேயே, போரை தொடர்வதா அல்லது பேச்சுவார்த்தையை தொடங்குவதா என்பது ஓர் “பிடி-22” வினாவாகின்றது.

ஒருபுறம் 25 பில்லியன் டொலர்களை இப்போரில் கொட்டி தீர்த்துள்ளதாக கூறும் ட்ரம்ப், தனது உள்நாட்டு நெருக்கடிகளால் வதைபட தொடங்கியுள்ள இவ்வேளையில், தனது விமானம்தாங்கி கப்பல்கள் அல்லது நவீன விமானங்கள் அவ்வளவாக சோபிக்காத நிலையில், தனது உலக ஆதிக்கத்தை மேலும் தக்கவைத்து கொள்ள யாது செய்யலாம் என அவர் வதைபடும் ஓர் பின்னணியில், சீனத்தின் இன்றைய எழுச்சி, யாரையும் பயமுறுத்தக்கூடியதுதான். (மறுபுறத்தில் ஈரானிய வெளிநாட்டமைச்சர், ட்ரம்ப் வழமைபோல் பொய் பேசுவதாகவும், அமெரிக்கா யுத்தத்தில் செலவழித்த தொகை 25 பில்லியன் டொலர் அல்ல என்றும் அது 100 பில்லியன் டாலரை கடக்க கூடியது என்ற ஓர் அறிவிப்பையும் செய்துள்ளார்).

இச் சூழ்நிலையிலேயே, தற்போது, ட்ரம்ப், தனது சீன விஜயத்துக்கு நாள் குறித்துள்ளார் (மே 14 – 15).

ஆனால், சீனாவோ தாய்வான் விவகாரம் இதில் யாதொரு பேசு பொருளாகவும் இருக்ககூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றது. (இதுவும் ஈரானிய போர் இன்று சீனாவுக்கு கையளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றாகியது). இச்சூழ்நிலையில்தான், இஸ்ரேல் லெபனான் மீது தனது கடும் தாக்குதலை தொடர்வதாக தெரிகின்றது. அதாவது, எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஈரான்-அமெரிக்காவுக்கிடையே நடக்கக்கூடாது என்பதும் ஈரான் முற்றாக அழிய வேண்டும் என்பதும் காட்டுமிராண்டி இஸ்ரேலின் நெடுநாள் ஆசையாகின்றது.

இனி, இந்நிகழ்வுகள், ஒரு மூன்றாம் உலக போரை தோற்றுவிக்குமா என்பது கேள்வியாகின்றது. ஆனால், ஒரு மூன்றாம் உலக போர், இரண்டாம் உலக போரை போன்று இருக்க போவதில்லை என்பதும் தெளிவு. எனவேத்தான், “விளைவுகள் பாரதூரமாய் இருக்கும்” என்று புட்டினும், இதேபோல் Stammerஉம் கூறியுள்ளது கவனத்துடன் உள்வாங்கப்பட வேண்டியுள்ளது.

புட்டின், ஈரானிய வெளிநாட்டமைச்சருடனான நீண்ட உரையாடலின் பின் கூறியிருந்தார்: “எம் கண் முன்னாலேயே, இன்றைய உலகம் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. இதுவரையில், இருந்து வந்த புரிதல்கள் எல்லாம் அல்லது கூட்டணிகள் எல்லாம் சிதைகின்றன. அவ்விடத்தில், புதிய சிந்தனைகள், புதிய கூட்டணிகள் உருவாகின்றன”.

இருக்கலாம். ரஷ்ய அமைச்சர் கூட இன்று இலங்கை வரவிருக்கின்றார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதாயுள்ளது (03.05.2026). அமைவிட அரசியலில், இது ஒரு புதுவரவாக காணப்படுகின்றது. இதுபோலவே ஜெர்மனியில் இருந்து 5000 துருப்பினரை விலக்கி கொள்வதற்கான ட்ரம்பின் அறிவிப்பும் அனைத்து சந்தேகங்களுடனேயே பார்க்கப்பட வேண்டியுள்ளது (02.05.2026).

காரணம், ட்ரம்ப், உண்மையில் செயல்படுபவராக இருந்தால், அவரது செயல்பாடு ஸ்பெய்னுக்கு எதிராகவே இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ஏனெனில், ஒரு புறம் ஸ்பெய்ன் ஈரானிய தாக்குதலுக்கு அமெரிக்கா தனது வான்பரப்பை பாவிக்கக்கூடாது என கூறியதும் மறுபுறத்தில் அதன் பிரதமமந்திரி சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு 19 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நிகழ்வும் அண்மையில்தான், நடந்து முடிந்துள்ளது (14.04.2026).

இச்சூழ்நிலையில், ஹோமூஸ் நீரிணையை மூடியது அல்லது ஈரானின் மேல் தாக்குதல் நடத்தியதின் பிரதான நோக்கம் சீனமே ஆகும் என்பது பல ஆய்வாளர்களின் அபிப்பிராயம்.

இருக்கலாம். ஆனால் இது ஈரான்-ரஷ்ய-சீனா கூட்டணியை பலப்படுத்துவதாக அமையும் என்பதும் உலகின் ஆதிக்கம் தொடர்பிலான நிலைப்பாடுகளை இதனால், மாற்றுவதாகவுமே அமையப் போகின்றது என்பதும் வெளிப்படை. ஆனால், இவை நேர்ந்தாலும் இல்லாவிடினும், உலகம் நேற்றைய உலகமாக இல்லாது வெகுவாக மாறிக்கொண்டிருக்கின்றது என்பதும், சமன்பாடுகள் இன்று ஒரு மீள்வடிவை கோருவதாகவும் உள்ளது என்பதும் நிதர்சனமாகின்றது. ஆனால், இது என்றுமே ஒரு ராஜபாட்டையாக இருக்க போவதல்ல. அதாவது, ஓர் இழுபறியாகவே இது இருக்கப்போகின்றது. ஆனால், இவ் இழுபறிகள் எவ்வெவ் பரிமாணங்களை பெறலாம் என்பதை சீன-அமெரிக்க பேச்சுவார்த்தைகள் நிர்ணயிக்கலாம். இதன் ஒரு கூறு, ஈரானிய-அமெரிக்க முரண்களிலும் பிரதிபலிக்கலாம்.

ஆகவே, ஈரானிய-அமெரிக்க பேச்சுவார்த்தை என்பது (அல்லது, இவ்விரு நாடுகளுக்கிடையேயான உடன்பாடு என்பது) ஹோமூஸ் நீரிணையின் திறப்புடன் சம்பந்தமுள்ளது என கருதினாலும் பிழையில்லை. ஆனால், இப்பேச்சுவார்த்தையானது எளிதாக இருக்க போவதில்லை என்பதும் தெளிவு. தடைகளுக்கு எதிரான தடைகளும், வர்த்தக போட்டிகளுக்கு எதிரான வர்த்தக போட்டிகளும், ஆதிக்கங்களுக்கு எதிரான ஆதிக்கங்களும் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொள்ளப் போகின்றன. இதுவே, சாரம்சமாக இருக்கப் போகின்றது.

ஆனால், ட்ரம்ப், ஓர் பிறவி பொய்யர் என்பதும் அமெரிக்கா என்பது ஓர் யுத்தம் விரும்பும் ஆக்கிரமிக்கும் நாடு என்பதும், (இஸ்ரேலை போலவே) இன்று உலகில் நம்பப்படும் உண்மையாக பரிணமித்துள்ளது. இது, ஈரானிய யுத்தம் தந்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றென கருத இடமுண்டு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்