
சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.
இதுபோலவே, என் வாழ்நாளில், நான் சந்தித்த ஒருவன் உள்ளான் எனலாம். ஆம். அவனது கண்களும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்று பாவமற்றுக் கிடப்பன. இக் கண்களின் பின்னால் யாது நடக்கின்றது? இவனது சிந்தனை எப்படிப்பட்டது? எதுவுமே தெரியாது. ஆனால், இறுதிக் கணிப்பில் தனக்கேற்ற சரியான இரையை இவன் கவ்வி, தேர்ந்து கொள்ளுகின்றார்னே என்பது முடிந்த முடிபாகின்றது. விட்டுத் தராதவர்கள் இவனைப் போன்றவர்கள். தமது இரையின் சரியான பெறுமானத்தை மிக சரியாக கணித்து கொள்கின்றார்கள். இதற்காக இவர்கள், மயிர் கூச்செறியும் வகையில் போராடச் செய்கின்றார்கள். இவை அனைத்தும் இந்தச் சிங்க கண்களின் ஒரு பக்கம்.
மற்ற பக்கம் விரிகின்றது. இப்படிப்பட்ட சிங்கங்களை பாதுகாப்பது எமது கடமையில்லையா? கடமைத்தான். ஆனால், இந்த கடமையும் ஒரு வரையரைக்கு உட்பட்டதுதான். வானத்தை அண்ணாந்து பார்வையிடும் சிங்கங்களின் சிந்தனையில், எந்த தருணத்தில் பாயலாம் - யாரின் குரல்வளையை நெறித்து, பற்களால் குதறி ரத்தத்தை உறிஞ்சலாம் போன்ற சிந்தனைகள் அடங்கக் கூடும். கணநேரத்தில், இவர்களின் சாது தோற்றங்களின் நடந்தேறும் இந்த ரசாயன மாற்றம், பிரமிக்கத்தக்கதே.
இதே கண்ணாடித் துண்டுகளை, முதன் முதலாய் நான் தரிசித்தது, கார்க்கியின் கிளிம்மில்தான். கார்க்கியின் அந்த, வெலண்டைன் எனும் பாத்திரம், கண்ணாடி துண்டுகள் பதித்த கண்களுடன் வலம் வருவான். அவனின் சிந்தனைகள் நாலா புறமும் சிதறி விரிகின்றன. ஆனால், அவன் தனது இறுதி கணிப்பில், தனக்குரிய சரியான உணவின் பெறுமானத்தை மிக சரியாக கணிப்பவனாய் இருக்கின்றான். ஆனால், இப் பாவமற்ற கண்களை தாண்டிய நபர்களும், கணம் தோறும் இவ்வுலகில் தோன்றாமல் இல்லை. தமது இரையை, தியாகம் செய்தும், மற்றவர்களுக்கு அவ்விரையை தருவதில் இன்பம் கொள்வதாயும் இம் மனிதர்கள் இருக்கின்றனர்.
இவர்களது கண்கள் ஏதோ ஒரு வகையில் மாறுபட்டவையாகத் தோற்றமளிக்கின்றன. கண்ணாடித் துண்டுகளாய் இல்லாமல் அவை கருணையும் சாந்தமும் தவழ்வனவாக இருக்கின்றன. ரத்தத்தை உறிஞ்சக்கூடிய வெண்கலத் துண்டுகள் அல்ல அந்த கண்கள்.
ஏங்கல்சின் கண்களை லெனின் அவதானித்தே இருப்பார் என நாம் நம்பலாம். யாரிது? இவ்வளவு கருணையும், வாஞ்சையும், மனிதாபிமானமும் எங்கிருந்து குடியேறியது இந்த கண்களில் என அவர் அதிசயித்திருப்பார். தன்னையே இழக்க போகின்றான் இந்த மனிதன். பிரதானமானது, இதில் தெறிக்கும் பேரறிவின் பிரகாசமே. இப்பேரறிவிலேயே, மனிதாபிமானமும் அடக்கமாவது தரக்கரீதியாகவே இருக்கின்றது. இத்தகைய மனிதர்களால்தான், இச் சமூகங்கள் உயிர் பெறுகின்றன. கைலாசபதியும் இவ்விடயத்தை தொடாமல் இல்லை. மனித அறிவும் மனித நேயமும் அருகருகே பயணிக்க தக்கவைதாம்.
இவர்கள் இதற்கான ஊட்ட சத்தை அவ்வவ் சமூகங்களின் ஒட்டு மொத்த வரலாறுகளில் இருந்து பெறுகின்றனரா? தெரியவில்லை.
இத்தகைய ஒரு மனிதனா, பாரதியால் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்று பாராட்டப்பட்டான்? இத்தகைய மனிதர்களைத்தான் முதலில் பாரதியையும், பின்னர் அவனைக் கண்டுபிடித்து அரங்குக்கு கொண்டு வந்து சேர்த்த சுப்ரமணிய அய்யரையும், பின்னர் இருவரையும் போற்றி அடி தொழும் சீனி விஸ்வநாதன், இளசை மணியன் போன்றோரையும் நாம் இங்கே நினைவு கூர்தல் தகும். பாரதியை, சுப்ரமணிய ஐயர் ஏன், எப்படி கண்டு பிடித்தார்? – அவரது விதிவிலக்குகள் என்ன என்பதை ஆராய நாம் அவரது வாழ்க்கையைத் தட்டிப் பார்த்தல் அவசியமானது. அந்த காலத்தின் அட்வகேட்டாகவும், அதற்கு முன் தலைமை உபாத்தியாயராயும் இருந்த இவர், இந்து-சுதேசமித்திரன் போன்ற வெகு முக்கியமான பத்திரிகைகளின் ஸ்தாபகர் மாத்திரம் அல்ல –ஆனால் இந்திய நெஷனல் காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவரும்- அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட தியாகியும் சிறையில் தொழுநோய் தொற்றுக்கு ஆளாகி, அந்நோய் நிமித்தமே இறந்தவரும் ஆகின்றார்.
உண்மைத்தான். சிங்கத்தின் கண்கள் பலதையும் எமக்கு கூறுவனதாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









