பாரதிராஜா என்று தமிழ் திரைப்பட உலகில் சாதனை படைத்தவன் மறைந்து விட்டான். கிட்டத்தட்ட 49 வருடங்களின் முன்னர், 1977இல் “16 வயதினிலே” என்ற படத்திற்கூடாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா தனது காலப் பகுதியில் சில பிரமாண்டங்களை தராமல் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம் அன்று இருந்திருக்கக்கூடிய காலச் சூழல் என்பதும் நீதியரசர் பகவதி கூட பொது நல வழக்கு (Public Interest Litigation) என்ற கருத்தாக்கத்தை இக்காலத்திலேயே அறிமுகம் செய்தார் என்பதும் குறிக்கத்தக்கது. ஆதலால் இது தற்செயல் அல்ல என புரிவது பொதுவில் சிறப்பானது.

அலைகள் ஓய்வதில்லை” (1981) தனது முக்கிய படம் என பாரதிராஜா வரையறுப்பார். தேசிய விருது பெற்ற “முதல் மரியாதை''யைத் தாண்டி (1985) அவர் இப்படத்தை தேர்வது இவரது சிறப்பம்சம். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இவர் மனக்கண்களில் வடித்து வைத்திருக்கும் முஸ்லீம் பெண் கதாப்பாத்திரத்தை மட்டும் எடுத்துவிடக்  கோருவார். “முஸ்லிம்- இந்து விவகாரத்தை நீங்கள் தொடாதீர்கள்… என்பது அவர் விடுத்த வேண்டுகோள்” எனக் கூறுவார் பாரதிராஜா.

தனது 16 வயதினிலேக்கு பிறகு தனது கால்களை ஓரளவு உறுதியாக தமிழ் திரைப்பட உலகில் பதித்துக் கொண்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலமே புரையோடி போயிருந்த முஸ்லிம்-இந்து உறவுகளை சீர்படுத்தும் விதத்தில் செயல்படலானார். முஸ்லிம்-இந்து என்ற இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு பதின் வயது இளசுகளிடையே தோன்றும் காதல் குறித்தும் இறுதியில் இவ்விளசுகள் இருவருமே தத்தமது மத அடையாளங்களை தூக்கி எறியும் காட்சிகளையும் பிரதானமாக படம் பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறுவார்:

இறுதியில் அந்த முஸ்லிம் பெண் தனது பர்தாவை அப்படியே கழற்றி தூக்கி எறிவதாக நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை கற்பனையிலேயே வடிவமைத்தும் இருந்தேன். ஆனால் அமைச்சரின் இந்த கோரிக்கைகயை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை… படம் வெளிவந்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததேன்…இறுதியில் இந்த முரணை ஒரு இந்து-கிறிஸ்தவ முரணாக மாற்றிக் கொண்டேன்…

இது அவரது காலம் முழுவதும் தொடர்ந்த ஒரு கதையாகின்றது. அதாவது ஆதிக்க சக்திகள்  கலைஞன் ஒருவனை  வாங்குவதும் சிதைப்பதும்,  உருவகப்படுத்தி தமக்கேற்ற வகையில் உருவாக்குவதும் இச்சமூகம் கூறும் விடயமாகின்றது.

ஜெயகாந்தன் கூறுவார்: “என்னை அவ்வப்போது விழுங்க எத்தனித்த போதெல்லாம் (அவர்களின் அமைப்பு)அவற்றின் வயிற்றை குத்திக் கிழித்துக் கொண்டு வெளியே வந்திருக்கின்றேன்…” ஆனால் இத்தகைய மனிதர்களைப் பொறுத்தவரை இப்படி “குத்திக் கிழித்துக் கொண்டு வெளியே வருதல்” எத்தனை விகிதம்?

பாரதிராஜா என்ற இளைஞன் ,  அதுவும் யாருமே அறிந்திராத  இளைஞனாக இருந்த போது AVM ஸ்டூடியோவில் நுழைகின்றான். அங்கே அவர் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் காவலாளி ஒருவரால் தூக்கி வெளியே வீசப்படுகின்றார். அப்போது, அவர் தனக்குள் ஒரு சபதத்தை எடுத்துக் கொள்கின்றார்: “என்றாவது ஒரு நாள் நிச்சயம் இதே ஸ்டூடியோவுக்குள் நான் புகத்தான் செய்வேன்”.

இதை அறியாத அதே AVM இன் சரவணன் செட்டியாரும் பாரதிராஜாவை ஒரு கட்டத்தில் அழைத்து தங்களுக்காக ஒரு  படம் செய்யச் சொல்லி அவரிடம் வேண்டுகோள் விடுத்து,  அதற்கான முன் பணத்தையும் நீட்டிப்  பிடிக்கின்றார் : “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த மண்வாசணை கலந்த மனிதர்களை நடிகர்களாகத்  தெரிவு செய்து கொள்ளுங்கள்”. பாரதிராஜாவும் AVM கம்பனிக்கு படம் பண்ணுகிறார்.

விடயம், இதே வாய்ப்பை தூக்கி எறிந்த மனிதர்களும் இப்பூவுலகில் இருந்துள்ளார்கள் என்பதேயாகும். தனது படகின் பயணத்தை இடைமறிக்கும் ஒரு ரஷ்ய செல்வந்தரின் தான்தோன்றிக்  கப்பல் ஒன்றை குறித்த இளைஞன் ஒருவன் சந்திக்கவே செய்கின்றான். அவனது தன்மானம் புண்படுகின்றது. அவன் யோசனையில் ஆழ்கின்றான். செல்வந்தரின் செல்வாக்கினை அவன் அறிந்திருந்தாலும் கூட இவ் இளைஞன் தனது போராட்டத்தைப்  பல மாதங்களாய்த்  தொடர முடிவு செய்கின்றான். நீதிமன்றத்திற்கூடாகச் சட்ட ரீதியாக இவன் தன் போராட்டத்தைத்  தொடர்கின்றான். இவன் அப்போதுதான் தன் சட்டப் படிப்பை உயர் மதிப்பெண்களுடன் முடித்திருந்தான். அவனை இவர்கள் அன்றைய கிராமபுறச் சகதிகளில் அவன் களைத்து வெறுத்துப்போகச் செய்வதற்கென்றே நீதிமன்ற வழக்கை திட்டமிட்ட வகையில் இழுத்தடிக்கின்றனர். கிட்டத்தட்ட மாதங்களாய்ச்  சகதிமிக்க காட்டுவழியில் மழையில் நனைந்தபடி பயணிக்கும் இவ் இளைஞன், ஈற்றில், அச்செல்வந்தனுக்குத்  தண்டனை வாங்கித்  தருவதில் தன் பணியை நிறைவு செய்கின்றான். அவ் இளைஞனின் பெயர் லெனின்.

2

AVM சரவணனின் நந்தவனத்தில் ஒரு பகுதி மாத்திரம் பிரத்தியேகமானதாய்ப் பாவிக்கப்பட்டது. அங்கே கிடைப்பதற்கரிய பலவித வண்ண மலர்கள் நாட்டப்பட்டிருந்தன. அப்பகுதியை எந்த ஒரு படப்பிடிப்புக்கு உட்படுத்தப் போவதில்லை என்பது சரவணனின் அன்பு மனைவியின் கட்டளை.  “……… யாருமே இங்கே படம் எடுக்கக் கூடாது என்று நான் தடை விதித்திருந்தேன். ஆனால் பாரதிராஜா என்ற மனிதனுக்கு மாத்திரம் ஒரு விதிவிலக்கு உண்டு. காரணம் இந்த தோட்டத்தில் பூக்கும் மலர்களின் உண்மை அழகை அவன் ஒருவனே படம் பிடிக்கக் கூடியவன்”.

பாரதிராஜாவின் கெமரா இவ்விதம்தான் இயங்கியது. ஸ்டூடியோவுக்குள் அடங்கிக் கிடந்த தமிழ் திரை உலகை  வெளியே இருந்து வந்து கிராமங்களுக்கு எடுத்து சென்ற பெருமையும் இவனையே சாரும். கூறுவான்: “ஸ்டூடியோவுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கட்ட அன்று என்னிடம் பணம் இருக்கவில்லை. எனக்கிருந்த ஒரே வழி படத்தை ஸ்டூடியோவுக்கு வெளியே கிராமங்களுக்கு நகர்த்திச் செல்வதுதான்…” ஆனால் இங்கே வேறு ஒரு கூறும் செயற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. பணத்தைத்  தாண்டிய அந்த கூறை இலகுவில் தட்டி கழிக்க முடியாது – பாரதிராஜா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்.

3

பாரதிராஜாவின் படங்களில் முதல் மரியாதை (1985) வேதம் புதிது (1987) என்பவை விதிவிலக்கானவை. 1977இல் ‘16ம் வயதினிலே’ என்ற படத்தை எடுத்த பின்னரே அவர் 1981இல் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தையும் எடுக்கின்றார் (நான்கு வருடங்கள் சென்ற பின்), ஆனால் முதல் மரியாதை, வேதம் புதிது போன்ற திரைபடங்கள் தொட்ட கலை அம்சங்களை ஏனைய அவரது படங்கள் தொட்டனவா என்பது கேள்விக்குரியே. தனது ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தை மிகுந்து சிலாகிக்கும் பாரதிராஜா (முதல் மரியாதையுடன் ஒப்பிட்டு) படத்தின் கதைக்கு – உள்ளடக்கத்துக்கு – இவ்வாறு முக்கியத்துவம் தரும் ஒரு மனிதராய் இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

ஒரு  பேட்டியின் போது முதல் மரியாதை பொறுத்துப் பின்வரும் பொருள்பட பாரதிகண்ணன் கூறுவார்: “ராதா அந்த காட்சியில் உணவு பறிமாறும் போது சிவாஜி சிலாகித்து மீன் உண்பதையும் அந்நேரம் அவர் தன் தாயின் உணவையும் பறிமாறலையும் நினைத்து நா தழுதழுக்க கண்ணீர் மல்குவதாயும் முதல் மரியாதை படமாக்கப்பட்டுள்ளது. வாழ்வின் இந்த நேசம் இந்த பிரியம் இந்த பறிமாறல் - அனைத்துமே மனிதனை கட்டி அணைத்து விடும் அளவில் நேசத்துடன் மிக மென்மையாக படமாக்கப்பட்டுள்ளன. இங்கே பாரதிராஜா என்ற கலைஞன் வெளிப்படுகின்றான்”.

ஜெயகாந்தன் தனது வீட்டில் ஒரு பணி பெண்ணாக வேலை செய்யும் ஓர் இளம் பெண்ணின் மீது மோகம் கொள்வார். அந்நேரம் ஜெயகாந்தன் ஒரு கிழவர் – ஆனால் இப் பெண்ணோ இள வயது. மேலும் இவள் அவரது வாசகியும் கூட. இந்த உறவின் அர்த்தப்பாடுகளை மிக ஆழமாக காணும் ஜெயகாந்தனின் மனைவி அப்பெண்ணை அழைத்து கூறுவாள்: “அவருக்கு உன்னை பிடித்துப் போய் இருக்கின்றது. வாழ்நாள் முழுவதும் இதே வீட்டிலேயே நீ அகலாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். உனக்கான அனைத்து பணிவிடைகளையும் நானே செய்வேன்… அதற்கு சித்தமாகவே நான் இருக்கின்றேன்…”

என்ன இது?  ஒரு  பெரியவருக்கும் ஓர் இளவயது பெண்ணுக்குமிடையே இப்படியாய்த்  தோன்றும் காதல்…? இதனை நேசம் என்பதா…” இதற்கு நேசம் என்றுதானே பெயர்… வெறுமனே பாலியல் மாத்திரம் இங்கே சம்பந்தப்படவில்லை… ஒரு வேளை அது சம்பந்தமற்ற விடயமாகவே இருக்கும்..”

அந்நியோன்யமான மானசீக காதலின் வெளிப்பாடு இது. இதையே பாரதிராஜா என்ற கலைஞன் அன்று படம் பிடித்துள்ளான். தனது அந்திம காலத்தில் தோன்றக்கூடிய வர்ணங்களை, நிறங்களை, வசந்தங்களை, நம்பிக்கைகளை தேக்கி உருவாக்க கூடிய நேசம் - இதனையே அந்த பாரதிராஜா என்ற கலைஞன் வெளிக்கொணர்ந்துள்ளான்.

4

பாரதி கண்ணனின் இக்குறிப்பிடத்தக்க பேட்டியை பவா செல்லதுரையின் நினைவு கூரல்களுடன் ஒப்பு நோக்கலாம்: “வாழத் தெரிந்தவர் அவர். ஒரு நாள் காலை தொடக்கம் இரவு இரண்டு மணி வரை மது அருந்தியவாறே அவரது வீட்டில் பிரத்தி யேகமாக அமைக்கப்பட்டிருந்த அவரது மினி அரங்கில்  பல படங்களையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட காட்சி திரையில் ஓடும் போது அவர் கத்துவார். ‘நிறுத்து. இங்கேதான் நான் ராதாவை அறைந்தேன்’. பலவிதமான நான்வெஜ் உணவுகளை அங்கே நான் சுவைக்க நேரிட்டது. நண்டு கறி வைக்கவென்றே ஒரு சமையல் ஆளை தனியாக இருத்தி இருந்தார். நண்டு மாத்திரமே அவர் சமைப்பார். அவரது பெயர் பாண்டியன்”.

ஒரு சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு வந்தார். ‘ஒரு  தேனீர் மாத்திரம் கண்ணாடி தம்ளரில்’ என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு  மறுவார்த்தை பேசாமல் காரில் ஏறி சென்று விட்டார்.  ஒரு  கலைஞனின் வெளிப்பாடு இது - இங்கேயே தோன்றுகிறது

ஆக, கலைகள் தொடர்பாக அல்லது கலைஞன் தொடர்பாக இரு வேறுபட்ட அர்த்தப்பாடுகளை நாம் இங்கே காண்கின்றோம். பாரதிராஜாவின் எந்தப் பகுதி தன்னை ஆகர்சித்தது என்பதனையும் இதுவே கலை அல்லது கலைஞன் என்று வரைவிலக்கணப்படுத்தி பவா செல்லதுரை இவ்விடயங்களை தெரிய தரும் அதேவேளை பாரதி கண்ணனும் தனது விருப்பங்களையும் பகிர்பவராய் இருக்கின்றார் என்பதும் அவதானிக்கத்தக்கதே.

நண்டு சமைக்க தனி ஆளை அமர்த்துவதும் மறுபுறம் இளவயது பெண் மீனைப் பறிமாறி ஒருவரது கிழத்  தாயை நினைவூட்டுவதும் வெவ்வேறு கலைகளின், அறங்களின் வேறுபட்ட அளவுகோல்கள் ஆகின்றன.

எனவேத்தான் ஒரு  குறித்த மனிதன் தனது கலையை அல்லது அறத்தை எப்படி வரையறுக்கின்றான் என்பதும் அவன் “வாழத் தெரிந்து கொள்ளும்” அவ் அறங்கள் யாவை என்பவற்றை அவன் சுட்டி காட்டுகின்றான் என்பதும் நிகழ்வாகின்றன. இது ஒன்றும் புதுமையானதல்ல. ஆனால் தவிர்க்க முடியாதது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகின்றது. இதனை புறக்கணித்து நடக்கும் மனிதர்களும் இவ்வுலகில் வாழாமல் இருந்ததில்லை. இத்தகைய மனிதர்களே இறுதிக்  கணிப்பில் சிற்சில அறங்களை தமது காலத்தில் இச்சமூகத்தில் விதைப்பவராகின்றனர். அதற்கூடு அவர்கள் இச்சமூகத்துக்குப் “பயிற்றிப்  பல கல்வி தருவோரும்” ஆகின்றனர். கார்க்கி இவ் அறங்களை இரு வகையில் சுரம் பிரித்துக் கொள்வார்: “இள வயதிலேயே நான் கண்டு கொண்டேன். அறங்கள் வேறுபட்டன என்பதை. இரு வித்தில் இருவகையில் வேறுபாடடைந்தவை என்பதை. ஒன்று ஆதிக்க சக்திகளினுடையது. மற்றது மக்களை சார்ந்தது”.

5

“அப்போது நான் ஒன்றும் பெரிய டைரக்கடராக வந்திருக்கவில்லை. ஏதோ இரண்டொரு படங்களைத்தான் இயக்கியிருந்தேன். அந்த வேளையில்தான் AVMஇன் சரவணன் என்னை ஒரு நண்பகல் உணவுக்காக அழைத்திருந்தார். ஆனாலும் நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். எதற்காக இவர்கள் என்னை அழைக்கின்றனர்? எனது சுதந்திரத்தை பறிக்கவா? இதற்கூடாக இவர்கள் என்னை முற்றாக வாங்கிவிடவும் கூடும். ஆனால் அதற்கு நான் ஒருகாலும் சம்மதிக்க போவதில்லை. ஆனால் அவர்கள் கூறியது: உங்கள் விருப்பப்படி படம் எடுங்கள்… எதை எடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே”

“சிவாஜி, முதல்நாள், மேக்கப்புடன், தலையில் விக்குடன் வந்து விட்டார். முதல்நாள், மனிதரை விக்குடனேயே நடிக்க விட்டேன். இரண்டாவது நாள்: “அண்ணே, இந்த விக்கும் இந்த மேக்கப்பும் இல்லாம அப்படியே எழுந்தவுடன் புறப்பட்டு பட பிடிப்புக்கு வந்திடுங்கள்…”

“என்னை நடிக்க வேண்டாம் என கூறுகின்றாயா?”

“ஆமாம்… நீங்கள் நடிக்க கூடாது..” என்றேன் நான்.

இப்படியாகத்தான் அவரது முதல் மரியாதை உருவாகி இருந்தது. தனது “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தைப் பொறுத்து கூறும் போது கூறுவார்: “இப்பவெல்லாம் இந்த மாதிரி படம் எடுக்க முடியாது… விடமாட்டாங்க…அது ஒரு காலம்… கடந்த காலம் அற்புதமான காலம்…”

சந்தர்ப்பங்களில், மண்ணையும் மக்களையும் ஆற அமர கதைத்து, ஓர் அழகிய வாழ்வை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பாரதிராஜா தனது சில படங்களிற்கூடாக,  இனி வரவிருக்கும், ஓர் இளைய கலைஞனுக்கும் வழி காட்டலாம். பாரதிராஜா என்ற இக் கலைஞன் சென்று முடித்த பாதைகளை தனது கவனத்தில் கொள்பவனாகவே, நாளை வரவிருக்கும், இவ் இளைய கலைஞன் தோன்றக் கூடும் எனவும் நாம் நம்பலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்