சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற்  பயணம்.  அடிமனத்தில் முதல் பயணமாதலால்  எப்படி பயணம் இருக்கும்? 
போரடிக்குமா? 

புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு.  கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது. பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது, விமானத்தில் ஏறுவது போல் பாஸ்போர்ட், விசா மற்றும் பல சோதனைகள் இருந்தன. 

கப்பலில் எந்த குடிப்பானங்களும் கொண்டு செல்ல முடியாது என்று விதி இருப்பது நான் அறிந்ததே. ஆனாலும், சான் பிரான்சிஸ்கோ ஹோட்டலில் தங்கியபோது வருபவர்களுக்கு இரண்டு இலவசமாக குடிப்பானம் உள்ளது – அதை “வெல்கம் ரிங்” என்று சொல்லலாம். நான் அதைக் குடிக்கவில்லை, பிறகு மறந்தே போய்விட்டேன். 

இரண்டாவது நாள் அதை அங்குள்ள வரவேற்பில் உள்ள இளம் பெண்ணிடம் வெல்கம் ரிங்கை  நினைவுபடுத்திபோது, அவள் சிரித்துவிட்டு  ‘அது காலாவதியாகிவிட்டது’  என்று சொல்லிவிட்டு, பின்பு உள்ளே போய் ஒரு புதிய வைன் கொண்டு தனது அன்பளிப்பாக வழங்கினாள். இளம் பெண்கள் நம்மை சட்டை செய்யும் வயது கடந்த போதிலும், ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். படிப்பதாக கூறினதும், அவளது கையில் பத்து அமெரிக்க டாலர்கள் வைத்தேன். அன்று இரவு ஒரு கிளாஸ் குடித்து, முக்கால் போத்தல் மீதி இருந்தது.

அந்த கலிபோர்னியா சிவப்பு வைன் போத்தலை எனது கைபையுள் வைத்துக்கொண்டு சென்றேன். இறுதியில் அந்த வைன் போத்தல்  எந்த சேதாரமும் இல்லாமல் எல்லா பரிசோதனைகளும் கடந்து எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தது.   

நாங்கள் நினைத்ததுபோல் கடல்பயணம் அலுப்படையவில்லை. கடலில் செல்லும் நாட்களில் காலை முதல் இரவு வரை ஏதாவது நிகழ்வுகள் இருக்கும். அதைக் விட ஜிம்னாசியம், லைப்ரெரி, தியேட்டர், இரவு சங்கீத நிகழ்வு, ஓபரா, சங்கீதம், காமெடி நாடகம் ஆகியவை இடம் பெறும், எனவே நாங்கள் அலுப்படையாமல் ஒரு மாதம் இருந்தோம். 

விசேஷ வருகை அளித்த முக்கியமான பேச்சாளர்கள் பலர் வந்து போனார்கள்: எழுத்தாளர்கள், முன்னாள் அமெரிக்க தூதுவர், மற்றும் பல துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் பேசினார்கள். இவற்றை விட யோகா, நடனம் போன்ற பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன; பல இலவசமாகவும், சிலவற்றுக்கு பணம் மேலதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை எந்த கட்டுப்பாடும் இல்லை; பலர் கப்பலின் எடையை அதிகரித்தனர். சியாமளா பொறாமைப்படும் வகையில் எனக்கு  கப்பலில் எடை  அதிகரிக்கவில்லை, அதே நிறையில் வெளிவந்தேன்.

கப்பல்,  துறைமுகங்களில் தரிக்கும்போது  வெளிச்செல்ல முடியும். பணம் கொடுத்தால் அவர்கள் நாங்கள் விரும்பிய இடங்களுக்கு போகமுடியும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது எங்கள் முத்தரிப்பான இடம். அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் 40 சதவீதம் லாற்ரினோ எனப்படும் மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள், 20 சதவீதம் கறுப்பவர்கள், மற்றவர்கள் மிகுதியாக இருப்பர். நான் கப்பலில் சந்தித்த ஒரு ஈகுவேடோரியர் பெண், அமெரிக்கரை திருமணம் செய்து கால்  நூற்றாண்டு மியாமியில்  வாழ்கிறாள், ஆனாலும் அவளால் ஆங்கிலம் பேசமுடியாது. கணவனுக்கு  ஸ்பானிஷ் மொழி தெரியும். பிள்ளைகளுடன் தாய்  ஸ்பானிஷ் மொழியும் தந்தை ஆங்கிலமும் தொலைபேசியில் பேசியதைக்கேட்டேன்    

லாஸ் ஏஞ்சல்ஸில் நாங்கள் சுற்றிய ஒரு நாளில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கடைகளில் நாம் உணவுத் அருந்தினோம். லாஸ் ஏஞ்ஜலஸில் உள்ள ஹோலிவுட், வீனஸ் கடற்கரை போன்ற இடங்களிலும்,சாரதி இல்லாத டாக்ஸியும் பிளாட்பாரத்தில் போகும்  ஒரு சிறிய பச்சை நிறத்தில் ரோபோ வாகனம்   நமக்கு வழிவிட்டு செல்லுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த டாக்சி இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் காரில் இருந்து உரிய மென்பொருளைக் கொண்டு இயக்கப்படுகிறது என்று சொன்னார்கள். ஒருக்காவது  ஏறிப் பார்க்கின்றேன் என்று நினைத்தபோது, இணையத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருந்ததுடன் டாக்சி வாடகை விலை அதிகம்தான் என்பதால், அந்த ஆசையை மறந்தேன். 

அதன்பின்பு கப்பல் தரித்த இடம் மெக்சிக்கோவில் மேற்கே உள்ள உல்லாச நகரம் (Cabo San Lucas) அவுஸ்திரேலியாவிலுள்ள உள்ள கோல்ட்கோஸ்ட் நகரம் போல் இருந்தது. முக்கியமாக அமெரிக்க செல்வந்தர்கள் தங்கும் இடம் மற்றும் மீன்பிடி துறைமுகம் அங்கு என்னை கவர்ந்தது தூய்மையான கடற்கரை. அங்கு கரையில் எந்த தயக்கமும் அற்று  சீல்கள்( Seal Lions )வருகை தருகின்றன  அங்கு  மெக்சிக்கோவின குடிபானம் மற்றும் கத்தாளை போன்ற தாவரத்திலிருந்து தக்கிலா தயாரிக்கும் இடம் உள்ளது. 

 இதற்கப்பால் அங்கு இரண்டு பியர் வாங்கும்போது நான் ஏமாற இருந்தேன். இரண்டு பியர் 60 பெசோ என்றபோது, நான் என் கடன் அட்டை கொடுக்க, அந்த மெஷினில் 60 டாலர் போட்டிருந்தது. அதை பார்த்த உடன் சுதாரித்து , நான் மூன்று டாலர் நோட்டுகள் கொடுத்தேன். இங்கு மெஷின்கள் பெசோவையும் டாலரையும் ஏற்கும் என்பதால், இதைப் பயன்படுத்தி இலகுவாக ஏமாற்ற முடியும் (20 பெசோ ஒரு அமெரிக்க டாலர், கிடைத்தது 57 டாலர்களை இழந்திருப்பேன்). அதைவிட சியாமளாவிடம் வாங்க விரும்பும் பல டாலர் மதிப்புள்ள அறிவுரைகள் தவிர்க்கப்பட்டது மகிழ்சியானது.  

கப்பல் பசிபிக் சமுத்திரத்திலிருந்து, அத்திலாந்து சமுத்திரத்திற்கு செல்ல, நாங்கள் பனாமா கால்வாய் வழியாக போகவேண்டும். காலை பனாமா கால்வாயை கடக்கும் காட்சியை காண வேண்டும் என, நாங்கள் அதிகாலை விழித்து, காலை 6 மணியே எழுந்து கப்பலின் மேல் தளத்திற்கு சென்றோம். கால்வாயின் ஆரம்பத்தை பார்த்தபடி நின்ற எனக்கு பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, மெலிந்த 90 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்தார்.  அவர் அமரிக்கத் தொனியில் 'இதுதான் முதல் தரமாக கால்வாயூடாக போவதா?' என்னைப் பார்த்துக்  கேட்டார்.

'இதுவே முதல் தரம்' என சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன்;

'நான் ஆறு முறை போயுள்ளேன் இது ஏழாவது முறை' என்றார்

அவரின் பின்பாக அவரது மனைவி சக்கர நாற்காலிக்கு சரியாக பிரேக் போட்டபடி நின்றார்.

 அவரிடம் கேட்டேன்;

'ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா?

'இல்லை,  ஓவ்வொருமுறையும் இப்படி வந்து பார்போம். அதில் ஒரு மகிழ்சியான அனுபவம் ' என்றார்

இருவரும் இந்த முதிர்ந்த வயதில் ஆவலுடன் காலை ஆறு மணிக்கு எழுந்து மேலத்தளத்திற்கு வந்த இவர்கள் , உண்மையாக வாழ்வதைப் பார்த்தேன். நம்மில் பலர் 60 வயதிலே தாங்களாக கூட்டுக்குள் முடக்கிக் கொண்டு நத்தைபோல் சீவிக்கிறார்கள் என நினைத்தபடி அவர்களைப் பார்த்துவிட்டு  சியாமளாவைப் பார்த்தேன்.

நாங்கள் பசிபிக் சமுத்திரத்தின் ஆரம்பத்தில் பார்த்தபோது பனமா கால்வாய் சிறியது. அதற்குள் எங்களுடைய கப்பல் உள்ளே போவது லோக் அமைப்பால் தான்: அதையாவது தண்ணீரை கட்டிவைத்து கப்பலை மிதக்கும் வகையிலே மாற்றிக் கொள்வது இந்த லோக் அமைப்பு. நான் எட்டிப் பார்த்தபோது ஒன்று அல்லது இரண்டு அங்குல இடைவெளியில் கப்பலுக்கும் பாலத்துக்கும் இருந்தது.

இந்தக் கால்வாய்களில் முதலில் நீரை நிரப்பி ஒரு மட்டத்துக்கு தண்ணீர் வந்திருக்கும் போது, கப்பல் காத்திருக்கிறது. தண்ணீரை நிரப்பியபின்பு, கப்பல் இயங்காது, இரு பக்கத்திலும் இரண்டு இழுப்பாற்று இயந்திரங்களால் இழுத்து செல்லப்படுகிறது. அந்த யந்திரங்களின்(Mule) பெயர் கழுதைகள். அந்த காலத்தில் பொதி சுமந்ததின் அடையாளமாக, அந்தப் பெயரை இவ்வாறு இந்த இயந்திரங்களுக்கு வைத்துள்ளனர்.

இப்படியாக கால்வாய் வழியாக சென்றபின் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பல தீவுகளை கொண்டுள்ளது. மழைக்காலமாக இருப்பதால் மிகவும் பசுமையான காட்சி தருகிறது. கப்பல் சிறிது தூரத்திற்கு சென்றபின் அங்கு ஆறு வந்து கலக்கும். இந்த ஆற்றில் நீர் குறைந்தால் ஏரியிலும் தண்ணீர் குறையும். மகத்தான சிவில் பொறியாளரால் அமைக்கப்பட்ட இந்த கால்வாய்,  காலநிலை மற்றும் மழை வீழ்ச்சியால் பாதிக்கப்படுகிறது. கப்பல் அத்திலாந்திக் கடலுக்கு மீண்டும் செல்லும்போது, மீண்டும் லொக்குகள் எனப்படும் சிறிய கால்வாய்களில் மட்டுமே வெளியேற வேண்டும்.

 கிட்டத்தட்ட பதினொரு மணித்தியாலங்கள் இந்த பனாமா கால்வாயை கடக்க வேண்டும். கால்வாயை கடப்பதற்கு கப்டின்கள் மற்றும் நிர்வாகிப்பவர்கள் இருக்கின்றனர். உலகத்தில் பெரிய அளவு கடல் வர்த்தகம் இந்தக் கால்வாயையே நம்பி நடக்கிறது.

பனமா கால்வாயை கடக்கும்போது இரண்டு முக்கிய இடங்கள் எனக்குத் தெரிந்தது. அதில் முதலாவது பல வர்ணங்களில் கூரைகள் அமைந்த பனமா பற்றிய அருங்காட்சியகம்  இரண்டாவதாக தெரிந்தது மனுவல் நொறியேகா என்ற பனாமா சர்வாதிகாரி சிறை வைத்திருந்த சிறைச்சாலை. ஆரம்பத்தில் அமெரிக்காவின் உளவாளியாகி,  போதை வஸ்துக்கள் பற்றி தகவல் கொடுப்பவராகவும் இருந்ததால் அவர்கள் அமெரிக்க உளவுத் துறையை அவரை ஜனாதிபதியாக்கியது. அவர் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனம் செய்ததும், போதை வஸ்துக்கள் கடத்தலில் ஈடுபட்டும் இருந்தாரென  அமெரிக்கர்களே அவரை சிறைப்பிடித்து அமரிக்காவில் வைத்திருந்து இறுதியில்  இங்கு சிறைவைக்கிறார்கள். பனாமாக் கால்வாய் அருகே ஏன் சிறை வைக்கவேண்டும் என்ற கேள்வி? எனக்கு எழுந்தது ? தாஜ்மகால் கட்டிய சாஜகானை, மகனான அவுரங்கசீப் தாஜ்மகாலின் எதிரே சிறை வைத்தது போன்ற காரியமாக இருந்தது.

இரண்டாவதாக ஆரம்ப கால கால்வாய் கட்டிய வேலைக்காரர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள். இங்கு வேலை செய்தவர்களின் ஆரம்பத்தில் பெற்ற கூலி 10 சதமாகும். இங்கு அவர்களுக்குரிய எந்த வசதியும் இல்லை. காடு, நதி அமைந்த இடம் என்பதால் மிருகங்கள், நுளம்புகள் என்பனவுடன் சேர்ந்து வாழவேண்டும். 
கால்வாயை எங்கள் கப்பல் கடந்தபின், எங்கள் அறைக்கு சென்றபோது, எங்கள் அறையில் இரண்டு சான்றிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சியாமளா நடேசன் மற்றும் நோயல் நடேசன் இருவரும் இந்த பனாமாக கால்வாயை கடந்தவர்கள் என எழுதப்பட்டு, எங்கள் கப்பலின் கப்டனது கையெழுத்து இருந்தது.

இந்த கால்வாய்களை கடந்த நூற்றாண்டில் மெய்ப்பித்தவர்கள் மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த மக்கள் அவர்கள் நினைவாக இந்தக் கால்வாயின் வரலாற்றை அறிந்துகொள்வோம். பல்லாயிரக்கணக்கில் உயிரை தந்து உழைத்த அவர்கள் வரலாறு வேறு எங்கும் வராது. சமீபத்தில் பனாமா கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்பை ஹாங்கொங் நிறுவனம் பெற்றது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம் கொடுத்ததெனக் கொதித்தார்:அதில் சில நியாயங்களும் உண்டு.

பனாமா ஆரம்பத்தில் கொலம்பியாவின் ஒரு மாநிலம். சில காலத்தின் முன்புதான் லத்தின் அமரிக்க நாடுகள் ஸ்பானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றன.  அதனால் சிறிது பணத்துடன் அந்தப்பகுதி பிரிகப்பட்டு புதிய நாடாகியது. பனாமா கால்வாயை கட்டி முடித்தவர் என்ற பெருமை  அமரிக்க ஜனாதிபதி தியோடர் ருஸ்வேல்ட்யே சேரும்  கட்டிய பணம் அமரிக்கர்களதாகும் 375 மில்லியன்கள்மேல் அக்காலத்தில்  செலவானது. பனாமா கால்வாய் இருக்கும் புவியியல் முக்கியமானது. இரு கண்டங்களாகத் தென் அமெரிக்கா மற்றும் மத்திய நிலமும் இணையும் இடத்திலாகும். இந்த இடம் மலைதொடர்களாகும்; கருங்கல் போன்ற கடினமான கற்குன்றுகளால் ஆனது. இலகுவாக தோண்டக்கூடிய நிலமல்ல.

ஏன் இந்த கால்வாய் தேவை என்று சிந்தனை ஏற்படுகிறது என்ற கேள்வி வரும் போது, ஆரம்பத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிய அரசு, இங்கா அரசு இருந்த  , தற்போதைய பெருவையும் ஈகுவடோரையும் கைபற்றி, அங்கிருந்து தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை கரிபியன் கடற்கரை கிழக்கே கொண்டு வரப்பட்டு, ஸ்பெயினுக்கு கப்பலை ஏற்ற வேண்டும். இல்லையெனில், கப்பலில் தென்னமரிக்காவை சுற்றி கொண்டு வர வேண்டும். இந்த நிலைமை சமீபத்திய சிறிய பகுதிகளில், 24 நாள் அடர்ந்த காட்டுக்குள் கழுதைகளால் கடந்து செல்லும் பயணத்தில், அவர்களை கடல் வழியில் கொள்ளையடிக்க பிரித்தானியர் அக்காலத்தில் தயாராக இருந்தனர்.

ஸ்பானிய அரசு பிற்காலத்தில்  காட்டை அழித்து பாதையை உருவாக்கினார்கள்.  அக்காலத்தில் ஹோலி ரோமன் அரசரான ஸ்பானியராக இருந்தார்கள். அத்துடன் குடியேற்றங்களை வழியெங்கும் உருவாக்க முயற்சித்தபோது மஞ்சள் காச்சல் மலேரியா என்ற நுளம்பால். ஏற்படும் நோய்களுடன் ஜகுவார் எனப்படும்அமரிக்கப்  புலிகள் அந்தக்  காடுகளில் வசிக்கும் காரணத்தால் இந்த இடங்களில் காலனிகளை நிரந்தரமாக நிறுவ முடியவில்லை.

நெப்போலியன் ஸ்பெயினைத் தோற்கடிக்க  , ஸ்பானியர்கள் தென்னமரிக்காவை விட்டு செல்ல,  தென்அமரிக்க நாடுகள் சுதந்திரம் பெறுகின்றன.

பனாமா கால்வாய் அமைப்பதற்கான பல ஐரோப்பிய நாடுகளிடம் திட்டங்கள் இருந்தன. பிரித்தானியர்களிடம் ஒரு திட்டம் இருந்தது; அதேபோல் ஜெர்மனியரிடம் ஒரு திட்டம் வரைபடமாக இருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசு கால்வாய் கட்டும்  செயலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.  அவர்களிடம் ஏற்கனவே சூயஸ் கால்வாய் கட்டிய அனுபவம் இருந்தது. அத்துடன் பணம் சம்பாதித்திருந்தார்கள். அவர்கள் திட்டப்படி   கடல் மட்டத்திற்கு கால்வாயாக உருவாக்க முடியும் என அவர்கள் தொடங்கி , 22000 பேரை மலேரியாவுக்கும் மஞ்சள் காச்சலுக்கும் பறிகொடுத்துவிட்டார்கள்.

பிரான்சியர் செய்த மாபெரும் தவறு,   இங்குள்ள நதியை கணக்கெடுக்கவில்லை. வரண்டகாலத்தில் அமைதியான நதி, மழை பெய்தால் எல்லாவற்றையும் வாரி அடித்துகொண்டு செல்லும்.

பிரெஞ்சு நாட்டினர் இங்கு வேலை செய்பவர்களுக்காக ஒரு வைத்தியசாலை கட்டினார்கள். வெப்ப பகுதிக்கு ஏற்ப யன்னன்களைத் திறந்தபடி கட்டிடத்தை அமைத்தனர். மேலும், வைத்தியசாலையை அழகுபடுத்த பூ மரங்களை நாட்டி விட்டு வைக்கப்படும் பூ மரங்கள்  வண்டுகளால் உண்ணாமல் இருக்க தண்ணீர்த் தொட்டிக்குள்  வைத்தனர். இப்படியான முறையால் வைத்தியசாலை அருகே அவர்கள் அறியாமல் நுளம்புகளையும் அதிகமாக உற்பத்தி செய்தார்கள்.

நுளம்புகளால் மலேரியா மஞ்சள் காச்சல் பரவுவது அக்காலத்தில் அவர்களுக்குத்  தெரியாது, ஏதோ நச்சுக்  காற்றில் இருந்து நோய் வருவதாக எண்ணினார்கள். மேலும் பனாமா கால்வாய் கட்டிய இடங்கள், சுயஸ் கால்வாய் உள்ள இடம் போல;  மணல் சார்ந்த இடம் அல்ல. இவை எரிமலையால் உருவாகிய கடினமான பாறைகள் என்பதால், அவற்றை உடைப்பதற்கான உபகரணங்கள் அவர்களிடம் இல்லை. 300 மில்லியன் பணச் செலவழித்து 50 மைல் நீளமான வாய்காலைக் கடந்து, கடைசியில் கைவிட்டனர்.

இக்காலத்தில் அமெரிக்கா பனாமா கால்வாய் அமைக்க முன்வைக்கும் காரணங்களைப் பார்ப்போம்.

அமரிக்கா – ஸ்பானிய போரின் (1898) தோல்வியின் விளைவாக அமரிக்காவிடம் அக்கால கட்டத்தில் போட்டரிக்கா, கியூபா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து அமரிக்காவின் கீழ் வந்தன. அமரிக்கா அக்காலத்தில் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு சமமாக கருதப்பட்டது. அதனால் அமரிக்காவின் மொன்ரோ கருத்து, அமரிக்காவின் பகுதிகள் ஐரோப்பியர்கள் தலையிடாமல் இருக்கவேண்டும் என்பது முக்கியமானது.

இவங்களே ஜனாதிபதி தியோடர் ருஸ்வெல்டை பனாமா கால்வாய் திட்டத்தை ஏற்ற நடத்த முன்தள்ளியவைகளாகும்.

ஆரம்பம் இலகுகானதல்ல

கொலம்பியா,  25 மில்லியன் பணம் கேட்டபோது அமெரிக்கர்கள் 10 மில்லியன் தருவதாக பேரம் பேசக், கொலம்பியா ஏற்றுக் கொள்ள மறுத்தது. அமெரிக்கா கோபமடைந்து  கரிபியன் பகுதிக்கு கடற்படையை அனுப்பியது. அப்போது போராட வந்த கொலம்பியா ராணுவ வீரர்களுக்கு கட்சி மாற அமெரிக்கர்கள் 50 டாலர்கள் கொடுத்ததும் போராட்டம் ஒரு துப்பாக்கிக் குண்டு வெடிக்காமலே முடிந்தது.

ஆரம்பத்தில் கடல் மட்டத்திற்கு கால்வாய் வெட்ட முயற்சி தோல்வியடைந்தது. ஆரம்ப வேலைகள் பின்னர் லொக் முறையை கால்வாயின் ஆரம்பத்திலும், இறுதியில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 5600 இறப்புகள் மலேரியாவால் ஏற்பட்டவையாக இருந்தன. பின்னர், மலேரியா, மஞ்சள் காச்சலுக்கு நுளம்புகள் காரணம் என்பதை கண்டுபிடித்து, நுளம்புக் கொல்லிகள் எல்லா இடத்திலும் பயன்படுத்தப்பட்டன, இதனால் மரணங்கள் தடுக்கப்பட்டது. அத்துடன் வேலை செய்தவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டது. அப்படி இருந்தபோதிலும்  வேலை இடத்தில் மரணங்களால் 2800 பேர் இறந்தனர்.

பிற்காலத்தில் 99 வருடங்கள் ஜிம்மி காட்டர் மீண்டும் திரும்ப பனமாவுக்கு கையளித்தார். தற்பொழுது பனமாவின் பொறுப்பில் பனாமாக் கனல் உள்ளது.

இப்ப பனாமாவின் பல விடயங்கள் அந்தக் கடற்பயணத்தில் சொல்லப்பட்டபோது, அந்த நாள் ஒரு வரலாற்றை படித்த நாளாக இருந்தது. எவ்வளவு பார்த்தோ, படித்தோ, கிடைப்பதிலும் பார்க்க இரண்டும் ஒன்றாக நடந்தது, மகிழ்வாக இருந்தது.

[ தொடரும் ]


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்