எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.

அவர்களின் திட்டமிடலின்படி, எங்கள் பயணம் மெல்போர்னிலிருந்து தென் பசிபிக் சமுத்திரத்தைத் தாண்டி, சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோ சென்றது. அங்கிருந்து தென் அமெரிக்கக் கண்டத்தைக் குறுக்காகக் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலாக பறந்து ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட் சென்று, பின்னர் ரோம் சென்றடைந்தோம்.

சில நிமிடங்களில் பயணம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே பணம் செலுத்தி பதிவு செய்த பயணத் திட்டம் என்பதால் குழப்பம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வரலாற்று நாயகர்களான ஜு லியஸ் சீசர்(Julius Caesar) மற்றும் மார்க் அந்தனி(Mark Antony) நினைவுக்கு வந்ததுடன் அவர்கள் எனது கையை பிடித்து அழைத்தது போன்ற நினைப்பு என்னிடம் எழுந்தது. சியாமளாவின் சம்மதமும் கிடைத்ததால், பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.

இந்தப் பயணம் 36 மணிநேரம் நீடித்தது — சுமார் 28,000 கிலோமீட்டர் விமானப் பயணம். பூமியின் மொத்த சுற்றளவு 40,000 கிலோமீட்டர் என்பதால், அதன் நாலில் மூன்று பங்கு தாண்டிய பயணமாக இது அமைந்தது. ரோமில் இறங்கியபோது, கால்கள் யானைக்கால் வியாதி வந்தவர்களைப் போல வீங்கி இருந்தாலும், இதயமும் சுவாசமும் நன்றாகச் செயல்பட்டன.

பகலும் இரவும் மாறி மாறி சென்ற இந்தப் பயணத்திற்குப் பின், இரண்டு நாட்கள் ரோமாபுரியைச் சுற்றிப் பார்க்கும் திட்டம் இருந்தது. 40 பேராக இருந்த குழுவில் 21 பேர் மட்டுமே வந்திருந்தனர் என்று எங்களது இத்தாலிய வழிகாட்டி அலிஸ் தெரிவித்தார்.

அப்போது எங்களுடன் வந்த கலி என்ற பெண், “நாங்கள் விடுமுறை செல்ல வேண்டுமா இல்லையா என்பதை டொனால்ட் ரம் (Donald Trump )அல்லது வேறு யாரும் தீர்மானிக்க முடியாது” என்றாள்.

அவளது பதில் எனக்குப் பிடித்திருந்தது.

இத்தாலியின் நகரங்கள் அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டவை. அவற்றைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகிறார்கள். இத்தாலியின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான — சுமார் 80 மில்லியன் — சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகிறார்கள். நகர மையங்களில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பழைய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு நடப்பதே எங்களது முக்கியமான வழிமுறை. இதுவரை எந்த விடுமுறையிலும் இல்லாதபடி, தினமும் சுமார் பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

நான் தேர்ந்தெடுத்த காலம் முன் வசந்தம் — அதிகமான சுற்றுலாப் பயணிகள் இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், எங்கு சென்றாலும் திருவிழா கூட்டம் போல மக்கள் நிரம்பியிருந்தனர்.

நான் முன்கூட்டியே பதிவு செய்திருந்த முக்கிய இடம் கொலோசியம் (Colosseum) மட்டுமே. பல அருங்காட்சியகங்கள் மற்றும் குறிப்பாக வத்திக்கான், செயின்ட் பீட்டர் பேராலயம் போன்ற இடங்களை முன்பே பதிவு செய்ய வேண்டுமென்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

ரோமன் காலத்து பல இடிபாடுகள், பின்னாளில் முசோலினி(Benito Mussolini) காலத்தில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக அழிக்கப்பட்டதாக அறிந்தேன். அவர் கொலோசியத்தையே இடம் மாற்றி அமைக்க நினைத்திருந்தார் என வரலாறு கூறுகிறது.

ரோமில் தெருக்களிலேயே ஜு லியஸ் சீசர்(Julius Caesar) போன்ற பலரின் சிலைகள் இருந்தன. அப்போது நைல் நதி (Nile River) அருகே கிளியோ பட்ரா (Cleopatra) உடன் சீசர் பயணம் செய்த காட்சிகள் என் நினைவில் தோன்றின. கிளியோபாட்ராவின் மகன் சிசேரியன் (Caesarion,) பதவிப் போட்டியைத் தவிர்க்க ஆகஸ்ரஸ் சீசரின் (Augustus) ஆணையின்படி கொல்லப்பட்டார் என்பது வரலாறு மனத்தில் தோன்றியது .

மார்ச் மாதம் 14ம் திகதி

ரோமர்களின் ஃபோரம் (Roman Forum) எனப்படும் இடிபாடுகளிடையே சுற்றுகிறபோது எனக்கு மார்ச் மாதம் 15ம் திகதி (2700 வருடங்கள் முன்பாக) மனைவி கல்பூர்ணியா கனவு கண்டு சீசரை அன்று செனட்சபைக்கு செல்லவேண்டாம் எனத் தடுத்ததை எதிர்த்துச் சென்ற 55 வயதான சீசரை, மார்ச் 15 திகதி புரூட்டஸ் உட்பட 23 செனட்டர்களால் இதே பகுதியில் குத்திக் கொலை செய்யப்பட்ட வரலாற்றுச் சம்பவம் நினைவு வந்தது.

ஏன் கொலைசெய்தார்கள்?

அதுவரை குடியரசாக இருந்தபோது, செனட்டர்களுக்கு அதிகாரம் உண்டு ஆனால் யூலியஸ் சீசர் சர்வாதிகார மன்னராக விரும்பியதால், அதைத் தடுக்கவே இந்த கொலை நடந்தது. சீசரின் கொலையின் பின் சீசரால் எடுத்து வளர்க்கப்பட்ட ஓக்ரேவியன் அரசனாகவும் சர்வாதிகாரியாகவும் வருகிறார்.

ரோம் மக்களுக்காக நடந்த கொலையில் ,மக்கள் கொலைகாரருக்கு எதிராகத் திரும்பினர் காரணம் யூலியஸ் சீசர் தனது சொத்து முழுவதும் மக்களுக்கே உயில் எழுதி வைத்திருந்தார். அதனால் கொலைகாரர்கள் புரூட்டஸ் உட்பட உடனே ரோமை விட்டுத் தப்பி ஓடினார்கள் ஆனால் இறுதியில் மார்க்கஸ் அந்தனியாலும் ஓக்ரேவியனாலும் மூன்று வருடங்களில் கொலை செய்யப்பட்டார்கள்.

முதுகில் குத்திய புரூட்டஸ்ஸைப் பார்த்து சீசர், “நீயுமா புரூட்டஸ்” எனக்கேட்டதாக அறிகின்றேன். அதனை வெளிப்படுத்தும் சேக்ஸ்பியரின் "Et tu, Brute?" என்னும் கூற்று மிகவும் புகழ் பெற்ற கூற்றுகளில் ஒன்று. புரூட்டஸ் சீசரின் மகன் என்னும் ஒரு கருத்து இருந்தாலும் அது ஒரு speculation. அதற்குக் காரணம் சீசருக்கும், புரூடஸின் தாயாருக்குமிடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்புதான். உண்மையில் புரூடஸ் சீசரின் நம்பிக்கைக்குரிய அரசியல் நண்பனாக இருந்தவன்.

ரோமர் உலகிற்கு அளித்த பங்களிப்புகள் எண்ணற்றவை — செங்கல், சீமெந்து, கற்களால் செய்யப்பட்ட சாலைகள், மற்றும் நமது இன்றைய சட்ட அமைப்புகளின் அடிப்படை. ஆட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரித்த அமைப்பு — நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை — இவற்றின் விதைகள் ரோமர்களிடமே இருந்து வந்தன. அவர்கள் உருவாக்கிய ‘செனட்’ என்ற வார்த்தையே அரசருக்கு ஆலோசனை வழங்கும் சபையை குறிக்கிறது.

இதில் மட்டுமல்ல; ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றம், இத்தாலிய நகரங்களில் தான். கட்டிடக்கலை, ஓவியம், மற்றும் கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சி — இவை அனைத்தும் இத்தாலியோடு தொடர்புடையவை. இன்றைய உலகத்தை ரோமர்களின் தாக்கம் இல்லாமல் கற்பனை செய்வது கடினம்.

இவ்வளவு பெருமைக்குரிய ரோம இராச்சியம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ந்தது. அதன் பின், இத்தாலிய நகரங்கள், நகர அரசுகளாகத் தங்களை அமைத்துக் கொண்டன. அதே நேரத்தில், அதிகார துஷ்பிரயோகம், சகோதரக் கொலை, மனைவி கணவனை நஞ்சு கொடுத்து கொலை செய்தல் போன்ற கரும்புள்ளிகளும் ரோம வரலாற்றில் நிறைந்துள்ளன.

ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை: அதுபோல் ரோமைப் பார்க்க ஒரு நாள் போதாது . மேலும் ரோமின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் அதைப் பார்க்க முடியாது. கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் ரோம் உருவானது பற்றிய பல புராணக் கதைகள் உள்ளன. எனக்கு பிடித்தது Virgil எழுதிய Aeneid காவியம். டிராய் போரிலிருந்து தப்பிய Aeneas இத்தாலி வந்து குடியேறுகிறார். அவரது சந்ததியில் பிறந்த ரோமுலஸ்( Romulus )தான் ரைபர்(Tiber Rive) நதி பள்ளத்தாக்கை சுற்றியுள்ள குன்றுகளின் மீது ரோம் நகரை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கதைக்கு உறுதியான வரலாற்று ஆதாரம் இல்லாவிட்டாலும், பலர் அதை நம்புகின்றனர். ஆரம்பத்தில் ஏழு அரசர்கள் ஆட்சி செய்தனர். பின்னர் கி.மு. 503-இல் குடியரசு அமைப்பு உருவானது. இந்தக் காலத்தில் ரோமன் பேரரசு மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு விரிந்தது.

பின்னர் கொன்ரன்ரைன் (Constantine the Great) கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக்கி, கிழக்கு ரோமப் பேரரசை நிறுவினார். காலப்போக்கில், கிபி 410-இல் ஜெர்மானியர்களால் ரோம் தாக்கப்பட்டு வீழ்ந்தது.

ரோமில் உள்ள கட்டிடங்களில் கிரேக்கக் கட்டிடக்கலையின் தாக்கம் இருந்தாலும், அவை தனித்துவமானவை. பல கட்டிடங்கள் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டவை; இன்னும் உறுதியாக உள்ளன. ஆகஸ்து சீசர்(Augustus காலத்தில் செங்கற் கட்டிடங்கள், பளிங்கால் மாற்றப்பட்டன.

சீமெந்து முதலில் பயன்படுத்தியவர்களும் ரோமர்களே. எரிமலைச் சாம்பல், சுண்ணாம்பு, கடல் நீர் ஆகியவற்றின் கலவையால் உருவான இந்தச் சீமெந்து, இரசாயன மாற்றங்களால் காலப்போக்கில் மேலும் உறுதியடைந்தது.

இத்தாலியின் நடுப்பகுதியில் பளிங்கு மலைகள் காணப்படுகின்றன. உலகின் சிறந்த பளிங்கு கற்கள் அங்கிருந்தே அகழப்படுகிறது.

ரோமாபுரி பாதுகாப்பிற்காக ஏழு மலைகளின் மேல் அமைக்கப்பட்டது. அதனால் நகரைச் சுற்றிப் பார்ப்பது எளிதல்ல.

எங்களது வழிகாட்டியிடம் “சாபோ” என்ற மலை உள்ளதா என்று கேட்டேன். அவருக்கு தெரியாது என்றார். அப்போது நான் கேட்டிருந்த ஒரு கதையை பகிர்ந்தேன்:

“ரோமர்கள் சாபோ மலையின் உச்சியில் மிருகங்களை பலி கொடுத்து எரித்தபோது, அங்கிருந்து வந்த சாம்பல் (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு) மற்றும் மிருகக் கொழுப்பு மழை நீரில் கலந்து கீழே இறங்கியது. அந்த நீரில் துணி துவைத்த பெண்களின் துணிகள் எதிர்பாராத விதமாக சுத்தமாக ஆனது. இதுவே சவர்க்காரம் உருவான வரலாறு. இதனால் தான் இன்றும் அந்த இரசாயன செயல்முறையை ‘Saponification’ என்று அழைக்கிறார்கள்.”

அவர், “இது வரலாறு அல்ல, ஆனால் இதிகாசக் கதையாக இருக்கலாம்,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

2

தற்போதைய ஏழு உலக அதிசயமும் இத்தாலியின் அடையாளமுமான குலோசியத்தைப் (Flavian Amphitheatre–Colosseum) பார்க்க இரண்டாவது நாள் பதிவு செய்திருந்ததால் வழிகாட்டியுடன் விசேடமான சுற்றுலா இருந்தது. இது ஒரு திறந்த வெளி மைதானம் – தற்காலத்தில் உள்ள மெல்பேன் கிரிக்கெட் மைதானம் போல். குலோசியம் என்ற பெயர் வந்ததற்கு காரணம் மன்னர் நீரோவின் 100 அடிக்கு மேலான உயரமான வெண்கலச் சிலை (Colossus of Nero) இந்த மைதானத்திற்கு அருகே 400 வருடங்கள் இருந்தது. 5ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் அது அழிந்துபோனது. ஆலமரத்தருகே இருக்கும் பாடசாலையை ஆலடி பாடசாலை என்பதுபோல் இந்தப் பெயர் இக்காலம்வரையும் நிலைத்துவிட்டது. இதைவிட, மன்னன் நீரோவின் பின்பாக வந்த அரசர்கள் ஃபிளேவியன் (Flavian Amphitheatre) அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

மூன்று தளங்கள் கொண்ட இந்த மைதானத்தை சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டது. வேஸ்பாசியன் (Vespasian) என்ற ரோம அரசனின் காலத்தில் கிபி 72–80ல் கட்டப்பட்டது. அரங்கம் திறக்கும் நிகழ்வில் 5000 காட்டுமிருகங்கள் பலியிடப்பட்டன.

இப்படியான ஒரு பெரிய மைதானத்தை கட்டுவதற்கு ரோமர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று ஆராய்ந்தபோது, அக்கால ஜெருசலேமில் இருந்த யூதர்களது கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இது நிர்மாணிக்கப்பட்டது என்ற பதில் எனக்கு கிடைத்தது. மற்றவர்களது செல்வத்தை சூறையாடுவதில் பிரித்தானியர், பிரான்சியர் மற்றும் அமெரிக்கர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் ரோமர்களேயாகும்.

இங்கு ஏற்கவே நாம் அறிந்த விளையாட்டுகள் (Gladiatorial Battle), மிருகங்களுடன் சண்டைகள் நடப்பதற்காக, அதை மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் இடமாக இது அமைந்தது. அக்காலத்தில் 50,000–80,000 பேர் இருந்து பார்க்கக்கூடிய மைதானமாகும். கீழ்ப்பகுதியில் மிருகங்கள் மற்றும் அடிமைகள் அடைத்து வைப்பதற்கான இரும்புக் கூடுகள் உள்ளன. கீழ்தளப் பகுதி மரத்தில் அமைந்து அதன்மேல் மண் தூவியிருக்கும்; இரத்தத்தை உறிஞ்சவும், பின்னர் சுத்தப்படுத்த இலகுவாகவும் இருக்கும். கூரை அக்காலத்தில் படகுகளின் பாய் போன்றதால் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும். கீழ்ப்பகுதியில் அரசர்கள், பிரதானிகள் இருப்பார்கள்; மேல்ப்பகுதி சாதாரண பிரஜைகள் அமர்வதற்கு உரிய இடமாகும்.

எரிமலைக் கற்கள், சுண்ணாம்புக்கற்கள் மற்றும் செங்கற்கள் கொண்டு இரும்புடன் கலந்து ரோமர்களது சீமெந்தால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் பல ஓட்டைகள் தெரிந்தன. அங்கெல்லாம் இரும்பு உள்ளே இருந்து, பிற்காலத்தில் ரோம் நலிந்துபோனபோது அங்கிருந்த இரும்பை மிகத் திறமையாக வெளியே எடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 2000 வருடங்கள் பழமையான கட்டிடம் மழை, காற்று மட்டுமல்ல பூகம்பங்கள் என இயற்கையின் சக்திகளை எதிர்த்து நிற்பதென்றால், அக்கால கட்டிடக்கலையை வியக்காது இருக்க முடியாது.

குலோசியத்தில் ஒரு இடத்தில் சிலுவையை கண்டேன். அதைப் பற்றி விசாரித்தபோது, பல கிறிஸ்தவர்கள் இங்கு உயிர்ப்பலியிடப்பட்டார்கள் என்றார்கள். உண்மையில் ரோம் மன்னன் கொன்ஸ்டாண்டைன் காலம்வரை (AD 306) கிறித்துவ மதத்தை வழிபடுபவர்கள் மதரீதியாக பழிவாங்கப்பட்டார்கள். அவர்கள் பலர் குலோசியத்தில் அடைக்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு உணவாக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது என்ற போதிலும், இன்னமும் அதற்கான சாட்சியங்கள் கிடைக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ரோம சாம்ராஜ்யத்தில் பழிவாங்கப்பட்டதும், அவர்கள் பல காலமாக தலைமறைவு இயக்கமாக இருந்ததும் வரலாற்று உண்மையாகும்.

மன்னன் நீரோவின் காலத்தில் கிறித்துவ மதத்தை ஸ்தாபித்த புனித போல் ரோமிலே சிறை வைக்கப்பட்டு இறுதியில் தலை வெட்டப்பட்டார். நீரோ ரோமைவிட்டு வெளியே சென்றிருந்த காலத்தில் (18–23 ஜூலை 64 AD) ஐந்து நாட்களாக ரோம் பற்றி எரிந்தது. எல்லோரும் நீரோவே அந்த நெருப்புக்கு காரணம் என்றார்கள். ஆனால் நீரோ, அந்த நெருப்பை வைத்தவர்கள் கிறிஸ்தவர்களே என சொல்லி அவர்களை பழிவாங்கினான் என்பது வரலாறு.

இப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்திய இடமான குலோசியத்தை சிலுவையை வைத்து புனிதமாக்க ஒரு பாப்பாண்டவர் முயன்றார் என அறிந்தேன். இன்னுமொருவர் ரோமில் உள்ள விபச்சாரிகளுக்கு வேலை கொடுத்து அவர்களை இங்கு குடியேற்றவும் திட்டம் வைத்திருந்தார். ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின் பாப்பாண்டவர்களே பல நூற்றாண்டுகள் ரோமை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் ஜோன் போல் II பாப்பாண்டவர் 2000ஆம் வருடத்தில் குலோசியத்தில் வைத்த சிலுவையே நான் கண்டதாகும். இந்த சிலுவையே பிற்காலத்தில் வந்த மன்னர்கள் குலோசியத்தை அழிக்காது நமக்கு பார்ப்பதற்கு பாதுகாத்தது.

குலோசியத்தின் சுற்றளவு அரை கிலோமீட்டர். அடிப்பாகத்தை சுற்றிப் பார்க்க தற்போது அனுமதியில்லை. அங்கு பிரேதங்களை சேகரித்து வைக்கும் இடமாக இருந்தது. அத்துடன் அந்தப் பகுதியூடாக கால்வாய் போய் நீரை அனுப்பி, குலோசியத்துள் கப்பல்களை அனுப்ப முடிந்தது. அக்காலத்தில் சில கப்பல் சண்டைகள் பயிற்சிக்காக இங்கு செய்யப்பட்டது.

தற்போது அங்கு கட்டிட வேலை நடக்கிறது. அங்குதான் அக்காலத்தில் பழிவாங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று சொன்னார்கள்.

குலோசியத்தின் அருகாமையில் உள்ள முக்கிய இடம் டைட்டஸ் வளைவு. அது டைட்டஸ் அரசனால் ஜெருசலேமில் படையெடுத்து அங்குள்ள செல்வத்தை கொண்டுவந்ததை நினைவுகூரும்முகமாக கட்டப்பட்டது. 2000 வருடங்களாக உறுதியாக உள்ளது.

தொடர்ச்சியாக நடக்கும்போது, ஒக்டேவியன் எனும் ஆகஸ்டஸ் சீசரின் வசிப்பிடம் மற்றும் ஜூலியஸ் சீசரை புதைத்த இடம் என 1000 வருட வரலாறு அந்த இடங்களில் சிதறிய அடையாளங்களாக எங்கும் உள்ளது.

இறுதியாக ரோமர்களது தாவரவியல் தோட்டத்தைப் பார்த்ததும் கால்கள் கெஞ்சத் தொடங்கின. கடிகாரத்தை பார்த்தபோது 10 கிலோமீட்டர் தூரம் நடந்தோம் எனக் காட்டியது. “இன்று போதும்” என மற்றவர்களை விட்டுவிட்டு ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு ஹோட்டலை வந்தடைந்தோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்