மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் ஆறு: புயல் தந்த நண்பர்கள்!

இந்தப்புயலினால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம், சிலாபம் நீர்க்கொழும்பு பகுதிகளிலிருந்தெல்லாம் தமிழர்கள் பெருந்தொகையாக வந்து குடியேறத் தொடங்கிவிட்டார்கள். காட்டை அழிக்கும் வேலையைப் புயல் ஏற்கனவே செய்துவிட்டிருந்தது. குடியேறுவதற்குப் பெரிதும் துணையாக விருந்தது. எங்கள் வீடுகளைச் சுற்றி ஆங்காங்கே குடிசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அதுவரை காலமும் மனித நடமாட்டம் குன்றித் தனிமையிலிருந்த குருமண் காட்டுப் பிரதேசத்தின் நிலைமை மாறிவிட்டது. புதிய மனிதர்களின் வரவு அப்பகுதிக்குக் கலகலப்பை ஏற்படுத்திவிட்டது. அப்படி வந்தவர்களில் சிலரும் உண்மையில் கலகலப்பானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆறுமுகம். ஆறுமுகம் குடும்பம் நீர்க்கொழும்புப் பகுதியிலிருந்து வந்திருந்தது. ஆறுமுகத்திற்கு ஐந்து பிள்ளைகள்; இரண்டு பெண்கள். மூன்று ஆண்கள். மூத்த பெண்ணைத் தவிர மற்றெல்லோரும் ஏறத்தாழ எங்கள் வயதை ஒத்தவர்கள். இந்தப்புயலால் வந்த இன்னுமொரு இலாபம் எமக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

இதே சமயம் இன்னுமொன்றையும் புயல் ஏற்படுத்தியிருந்தது. சுமணதாஸ் பாசின் குடும்பத்துடனான எங்களது நட்பு மேலும் இறுக இந்தப் புயல் வழிவகுத்திருந்தது. பொங்கல், தீபாவளியென்று பண்டிகைகள் வந்து விட்டால்.சுமணதாஸ் பாஸ் குடும்பத்தவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடினார்கள். அவர்களது விசேஷ தினங்களில் நாங்களும் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களது சர்க்கரைப் பொங்கலை அவர்களும் அவர்களது கிரிபத்தை நாங்களும் பகிர்ந்துகொண்டோம். இதற்கிடையில் எனது புதிய நண்பர்கள் நீர்கொழும்பு ஆறுமுகத்தின் பிள்ளைகளின் சகவாசம் என் வாழ்வின் கலகலப்பை அதிகப்படுத்தியது. குமார், பாபு, ஆறுமுகத்தின் பிள்ளைகளில் எங்கள் வயதை ஒத்தவர்கள். இவர்களது கடைக்குட்டி ரவியும் எங்களுடன் வளைய வருவான். கூட இவர்களின் இளைய சகோதரி குந்தவியும் எங்களுடன் அடிக்கடி வருவாள். சுமணதாஸ் பாஸ் ஒய்வாகயிருக்கும் சமயங்களில், சுமணதாஸ் பாஸடன் நாங்களெல்லோரும் காடு மேடெல்லாம் உடும்பு பிடிக்க, மர அணில் பிடிக்க அலைவோம். கூடவே ரஞ்சிற்றும் வருவான். சுமனதாஸ் பாஸின் நாய் ஜிம்மி உடும்பு பிடிப்பதில் கைதேர்ந்தது. உடும்பு பிடித்ததும் அதனை வெட்டி அதன் ஈரலை ஜிம்மியின் மூக்கில் சுமணதாஸ் பாஸ் தேய்த்து விடுவார். உடும்பை மோப்பம் பிடிப்பதற்கு உதவியாகயிருக்குமாம். மர அணிலை சுமணதாஸ் பாஸ் பிடிக்கும்போது பார்க்கவேண்டும். ஏதாவது மர அணிலை மரமொன்றில் கண்டுவிட்டால், முதலில் ரஞ்சிற் அம்மரத்தில் ஏறி மர அணிலை ஏதாவது ஒரு கொப்புப் பக்கமாகக் கலைப்பான். இறுதியில் ரஞ்சிற் அருகில் நெருங்கியதும் பீதியுடன் நிற்கும் மர அணில் தப்புவதற்காக வெளியே பாயும் அவ்வளவுதான். அதன் வாழ்வு. பாயும் அணில் சுமணதாஸ் பாஸிடமிருந்து அல்லது ஜிம்மியிடமிருந்து தப்புதென்பது அரிதான நிகழ்வு. மரஅணில் பாய்ந்த மறுகணமே வைத்திருக்கும் தடியால் சுமணதாஸ் பாஸ் ஒரு போடு போட்டுவிடுவார். அவ்வளவுதான் அணில் மண்டையைப் போட்டுவிடும். உடனே அணிலை எடுத்து உடுப்பு பிழிவதுபோல் சுமணதாஸ் பாஸ் பிழிவார். அவ்விதம் பிழியாது விட்டால் அணிலில் இறைச்சி இறுக்கமாகிச் சுவையற்றுப்போய்விடுமாம். ஆனால் நான் அணில் இறைச்சி சாப்பிடுவதேயில்லை. சிறுவயதிலிருந்தே அணிலென்றால் எனக்கு ஒருவித அனுதாபம். சிவபெருமானால் மூன்று குறிகள் வைக்கப்பட்ட யாழ்ப்பாணத்து அணில்களுடனான தொடர்பால் உண்டான விளைவாகயிருக்கலாம். அதற்காக அணில் வேட்டையை வேடிக்கை பார்க்காமலும் இருக்க முடிவதில்லை. ஒருவித ஆர்வத்துடன் அனுதாபத்துடன் மரஅணில் வேட்டையைப் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த மர அண்ல்களிற்கு முதுகில் மூன்று குறிகளில்லை. கனடியன் கறுப்பு அணில்களைப்போல் பருமனாக புஸ்புஸ்சென்று பார்க்கத்தெரியும். ஆனால் கனடியன் அணில்களைப்போல் நிறம் கறுப்பு அல்ல. மண்ணிறம். இப்பதான் ஞாபகம் வருகிறது. கனடியன் அணில்களிற்கு ஏன் முதுகில் மூன்று கோடுகளில்லை என்பதற்கு நண்பரொருவர் விளக்கம் கூறினார். கனடியன் அணிகல்கள் கிறிஸ்துவ அணில்கள். அதனால் சிவபெருமான் இரங்கிக் குறி வைக்கவில்லை. ஆனால் குடிப்பதற்கு இளநீர் கொடுத்த யாழ்ப்பாண அணில்கள் சைவ அணில்களாம். அதனால்தான் சிவபெருமான் இரங்கி மூன்று குறிவைத்தாராம். அப்படியானால் அந்த மரஅணில்களிற்கு ஏன் முதுகில் குறிகளில்லை. ஆக நண்பர் வேடிக்கைக்காகத்தான் கூறினாலும் என்னால் அதனை ஏற்க முடியவில்லை?

 

சுமணதாஸ் பாஸ் சிலசமயம் நீர்க்காகங்களைப் பிடிப்பதும் வழக்கம். பொதுவாக நீர்க்காகத்தைச் சுட்டுத்தான் பிடிப்பது வழக்கம். ஆனால் சுமணதாஸ் பாஸ் சுட்டுப் பிடிப்பதில்லை. அடித்துத்தான் பிடிப்பது வழக்கம். இதற்காக அவர் பாவிப்பது கவண். சுமணதாஸ் பாஸ் வைத்த குறி தப்பாது அடிபட்டு விழுந்துவிடும். நீர்க்காகத்தை நீந்திச்சென்று பிடித்துவிடுவார். சிலசமயங்களில், சுமனதாஸ் பாஸ் பிஸியாயிருக்கும் சமயங்களில் நானும் தம்பியும், குமார் பாபு கடைக்குட்டி ரவி, குந்தவி எல்லோரும் வேட்டைக்குக் கிளம்புவோம்.

இவ்விதம் வேட்டைக்குப்போகும்போது நாங்கள் பாவிப்பது கவண் தான். குமார் 'கெட்டர்போல்' செய்வதில் வலு சமர்த்தன். சரியான மரக்கொப்பைத்தேடி எடுத்து, 'றப்பரை'யும், மிருகத்தோலையும் பாவித்து அழகாக ஒவ்வொருவருக்கும் ஒரு 'கெட்டர்போல்' செய்து தருவான். குறிவைத்து அடிப்பதிலும் அவன் விண்ணன்தான். இவனிடம் ஒரு மூட நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு முறையும் வேட்டைக்குப்போகும்போதும் வேலியில் ஓணானைத் தேடுவான். தென்படும் ஓணானின் கதி அவ்வளவுதான். ஓணானை அடித்து அதன் இரத்தத்தை கெட்டர்போலில் கல்லை வைத்து அடிக்கப்பாவிக்கும் மிருகத்தோலில் இலேசாகப்பூசி விடுவான். அவ்விதம் செய்வது செல்லும் வேட்டைக்கு அதிஷ்டத்தைத் தருமென்பது அவனது நம்பிக்கை. இவ்விதம் எத்தனை தடவைகள் எத்தனை உயிர்களை அந்த வயதில் கொன்று குவித்திருப்போம். இன்று நினைக்கும்போதும் சிலவேளை மனதிற்கு வேதனையைத்தரும் நினைவுகள் அவை. அன்று கொன்று குவித்த அப்பாவி உயிர்களை எண்ணி நான் இன்றும் கவலைப்படுவதுண்டு. கேட்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதா? இருக்கும், ஆனால் உண்மை. மகாத்மா காந்திக்குத்தான் இதுபோன்ற கனவுகள் வரும் என்பதில்லை. எனக்கும் அத்தகைய கனவுகள் அடிக்கடி வருவதுண்டு. அத்தகைய கனவுகளில் அன்று நாங்கள் கொன்று குவித்த ஓணான்கள், காடைகள், கவுதாரிகள், நீர்க்காகங்களெல்லாம் ஒன்று திரண்டு வந்து நீதி கேட்பது போன்ற காட்சிகள் அடிக்கடி தோன்றத்தான் செய்கின்றன. இப்படித்தான் ஒரு கனவில் ஒரு ஓணானொன்று மனித உடம்பும் ஒணான் தலையுமானதொரு தோற்றத்தில் வந்து உணவு தேட வந்த இடத்தில் அநியாயமாக என்னைக் கொல்வதற்கு உடந்தையாகவிருந்து விட்டாயடா படுபாவி என் குடும்பத்தின் கதி என்னவோ? நல்லாயிருப்பியா என்று சாபம் போட்டது. இன்னுமொன்றில் அதேவிதமாக நீர்க்காகமொன்று வந்து என் குழந்தைகளிற்கு உணவு தேடி எடுப்பதற்காக வந்த வழியில் என் உயிரை அநியாயமாகப் பறித்து விட்டாயடா அரக்கனே. என் குழந்தைகள் என்னைக் காணாமல் எவ்வளவு தூரம் துடியாய்த் துடிதுடித்திருப்பார்களோ? என்று பிரலாபித்துக்கொண்டது. இத்தகைய கனவுகள் சில சமயம் என்னைத் திக்குமுக்காட வைத்தன. நடந்த பாவங்கள் நடந்தவை தானே. போன உயிர்கள் திரும்பி வரவா போகின்றன. அந்த அப்பாவி உயிர்களின் அழுகைக்கும், துயரத்திற்குமுரிய காரணங்களின் நியாயத்தை மறுக்கமுடியுமா என்ன? நடந்த செயல்களிற்கு நான் உடந்தையாயிருந்து விட்டிருக்கின்றேன். சில சமயம் அச்செயல்களை நானே புரிந்துமிருக்கின்றேன். அந்த அப்பாவி உயிர்கள் என்மேல் சுமத்தும் குற்றத்திலிருந்து விலகித் தப்பியோட நான் விரும்பவில்லை. அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்கச் சித்தமாகவிருக்கின்றேன். ஆன்மீகவாதிகள் கூறுவதுபோல், நரகம் அல்லது சொர்க்கமென்று இருந்தால்கூட நரகத்திற்குச் சென்றாவது என் பாவங்களிற்கான  தண்டனையை ஏற்று அவர்கள் கூறுவது போல் மேலும் பல பிறப்புகளிலிருக்கும் பட்சத்தில் அப்பிறப்புகளிலாவது சுத்திகரிக்கப்பட்டு வந்து பிறக்க விரும்புகின்றேன்.

இப்போதெல்லாம் நான் வேட்டையை விரும்புவதில்லை. உண்மையில் அன்றுகூட வேட்டையால் விளைந்த இன்பத்தை விட, காடுமேடெல்லாம் அலைவதால், இயற்கையின் வனப்பால் விளைந்த இன்பம்தான் அதிகமாகயிருந்தது. இயற்கையை இரசிப்பதிலிருக்கும் இன்பம் இயற்கையை அழிப்பதில் வருவதில்லைதான். இயற்கையை இரசித்து, இயற்கையை விளங்கி, இயற்கையுடனொத்து வாழும் வாழ்க்கைதான் மனிதப் பிறப்பின் உண்மையான வாழ்வின் நோக்கமோ என்று கூடச் சிலவேளை நான் எண்ணுவதுண்டு.

இவ்விதம் வேட்டை வேட்டையென்று காடுமேடெல்லாம் அலைந்து திரியும்போது கூழாம் பழங்கள், வீரை, பாலைப்பழங்களையும் பறித்து வயிறு புடைக்கத் தின்போம். இதே சமயம் பாடசாலை வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிரம்பியதாகத் தான் சென்று கொண்டிருந்தது. எங்கள் வகுப்பு மாணவர்களைப் பொறுத்த அளவில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தோம். எம்.ஜி.ஆர். கட்சி, சிவாஜி கட்சி அந்தச் சமயத்தில் தான் நகரில் எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை'யும், சிவாஜியின் 'திருவிளையாடலும் ஒடிக்கொண்டிருந்தன. எங்களிற்கு வயசு பத்துதான். நடிகர்களின் ஆதிக்கம் அந்த வயசிலேயே எங்களை ஆட்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் கட்சிக்குத்தான் மாணவர்கள் அதிகம். இரு பிரிவுகளாகப் பிரிந்து உதைபந்தாட்டம் விளையாடுவோம். வெற்றி எப்போதும் எம்.ஜி.ஆர். கட்சிக்குத்தான். பாடசாலைக்கு அருகிலிருந்த காட்டினில் ஓய்வுநேரங்களில் கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுவோம். கள்ளனாக விளையாடும் போதும் எம்.ஜி.ஆர் கட்சிக்குத்தான் வெற்றி, பொலிஸாக விளையாடும்போதும் வெற்றி எம்.ஜி.ஆர் கட்சிக்குத்தான். சிவாஜி கட்சியினர் கட்டும் வீடுகளை எம்.ஜி.ஆர் கட்சியினர் இலகுவாகக் கண்டுபிடித்து அழித்து விடுவார்கள். எம்.ஜி.ஆர். கட்சியினர் கட்டும் வீடுகளை சிவாஜி கட்சியினரால் கண்டு பிடிக்க முடிவதில்லை. காரணம் எம்.ஜி.ஆர். கட்சியினர் மரங்களில் வீடென்று தெரியாதவகையில் வீடுகளைக் கட்டிவிட்டு, கீழே வீடு தேடி அலையும் சிவாஜி கட்சியினரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதில் அடியேன் எந்தக் கட்சியினைச் சேர்ந்தவனென்று நினைக்கிறீர்கள். சிவாஜி கட்சியென்று நீங்கள் நினைக்காவிட்டால் உங்கள் ஊகம் சரியானதுதான்.

எங்கள் பாடசாலைக்கு அருகிலிருந்த கிணறொன்றில் சிலவேளைகளில் தண்ணிர் அள்ளுவதற்காக சிலசமயம் மூடப்படாத சிறிய ஆர்மட் காரில் சிங்கள ராணுவச் சிப்பாய்கள் வருவார்கள. எங்களுடன் விளையாட்டாகக் கதைத்துச் செல்வார்கள். சிலவேளைகளில் இனிப்புகள் கொண்டுவந்து தருவார்கள். கதைக்கும்பொழுது அவர்களின் தமிழில் மழலை மிதக்கும். அப்பொழுது நாங்கள் எங்களிற்குள் வேடிக்கையாகக் கதைத்துக் கொள்வோம். தடியன்கள் தின்று தின்றுவிட்டு வேலையில்லாமல் இருக்கிறான்களென்று. ஆனாலும் விரைவிலேயே எங்கள் சிந்தனை பிழையென்பதை உணர்ந்து கொள்ள வைத்தது 71ம் ஆண்டு சேகுவேரா புரட்சி என்று கூறப்பட்ட சிங்கள இளைஞரின் புரட்சி. அதன்பின் தமிழ் மக்கள் மீதான ஆயுதப்படைகளின் அடக்குமுறைகளும், வெடித்தெழுந்த தமிழர்களின் போர்க் குரலும் நிலைமையை முற்றாகவே மாற்றி வைத்துவிட்டன.

இன்னுமொரு விடயம் எங்கள் பாடசாலைக்கு அருகிலிருந்த புத்தவிகாரை. ஓய்வு நேரங்களிலெல்லாம் புத்தவிகாரைக்கு அருகிலிருந்த கூழாம்பழ மரத்தில் பழங்கள் பறிக்கச் செல்வோம். அவ்விதம் செல்லும்போது விகாரையினுள் ஆழ்ந்த சயனத்திலிருக்கும் பிரமாண்டமான புத்தர் சிலையினைப்பார்த்து வியப்பதுண்டு. புத்த விகாரைக்குப் பொறுப்பான பிக்கு எங்களுடன் தமிழில் கனிவாகப்பேசுவார். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஒருகாலத்தில் அமைதி தவழ்ந்த மண் இன்று யுத்த பூமியாக மாறிவிட்டது. மக்களிற்கிடையில் நிலவிய அந்நியோன்யம் சிதைந்துவிட்டது. பிரிவுகள் வேரூன்றி விட்டன. அமைதி குலைந்தே போய்விட்டது. தி.மு.க.வினரின் குறிப்பாகக் கருணாநிதியின் பாஷையில் கூறப்போனால் எல்லைமண் இன்று தொல்லை மண்ணாக உருமாறிவிட்டது.

 


அத்தியாயம் ஏழு: புகலிடம் வாழ்க்கையும், புலத்து நினைவுகளும்...

இன்று வழக்கம்போல் வேலைக்கு வருவதற்காக 'சென் கிளயர' சப்வே'யில் நின்று கொண்டிருக்கின்றேன். சிந்தனையை அழகிய பெண் குரலொன்று கலைத்து விடுகின்றது.

"ஹலோ ராகவன்"

திரும்பினால் மறுபடியும் மனோரஞ்சிதம். வாடியுலர்ந்து போயிருக்கின்றாள். அந்தக் கவர்ச்சி மிக்க கனவுலகக் கண்களில் கொடிகட்டிப் பறந்த அந்தக் காந்தமெங்கே? இவளைத்தான் இந்த அழகைத்தான் ஒரு காலத்தில் நடுநிசி உறக்கத்தையு மிழந்து சிந்தித்தேனா என்றிருக்கின்றது. ஒரு காலத்தில் புதன்கிழமை இரவுகளில், ஒலிபரப்பாகும் இந்திய வானொலியின் நேயர் விரும்பிக் கேட்டவையில், பழைய சினிமாப்பாடல்களைக் கேட்டபடி உருகி உருகிக் கிடந்தது இவளிற்காகத்தானா என்றிருக்கின்றது? சிரிப்பாகவுமிருக்கின்றது.

'நீர் நல்லா வயக்கெட்டுத்தான் போய்விட்டீர் என்கின்றேன். அவளது கண்களில் மெல்லிய மலர்ச்சி.

'ஆ. இந்தத் தமிழைக் கேட்டு எவ்வளவு நாளாச்சுது. கேட்கேக்கையே எவ்வளவு சுகமாயிருக்குது.

‘என்ன ஏதாவது பிரச்சினையே? நல்லா வாடிப்போனிர. இந்த நேரத்திலை எங்கை போட்டு வாறிர்?"

எனது கேள்விக்கு அவளது பதில் எல்லாவற்றையும் புரிய வைக்கின்றது. ஆசை யாரைத்தான் விட்டது. இவளும் புருஷனுமாக வாங்கிய வீட்டை விற்கவும் முடியாமல், மோட்கேஜ் கட்டவும் முடியாமல். இருவரும் இரண்டு வேலைகள் செய்கிறார்களாம். பகலில் பாங்கில் வேலை செய்யும் இவளது புருஷன், நள்ளிரவிலிருந்து விடியும்வரை 'செக்கியூரிட்டி கார்ட்டா'க வேறு வேலை பார்க்கிறார். இவளும் பகல் முழுக்க ஒரு 'ட்ரஸ்ட் கொம்பனி'யிலை வேலை செய்துவிட்டு பின்னேரங்களில் பகுதி நேர வேலையாக ஒரு புத்தகக் கடையில் 'காஷிய'ராக வேலை பார்க்கிறாள். இருந்தும் இவர்களால் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதே பெரிய கஷ்டமாகிவிட்டது.

"கண்டறியாத கனடா வாழ்க்கை. இப்படித்தெரிந்திருந்தால் ஊரிலையே கிடந்து செத்துத் துலைத்திருக்கலாம்." என்று கூறி விட்டுத்தான் போனாள் போகும்போது மனோரஞ்சிதம்.  இவர்களைப்போல் வண்டில் மாடுகளாக எத்தனை பேரைக் கனடா மாற்றிவிட்டிருக்கின்றது. வண்டில் மாடுகள்,  செக்கு மாடுகள் நல்ல உவமை. உழைப்பது வாழ்வதற்கா? இல்லை வாழ்வது உழைப்பதற்கா?  இதுதான் இங்குள்ள நிலை, மாடு மாதிரி உழைப்பது. 'மோட்கேஜ்' அது இதென்று பலவிதமான செலவுகள். அனுபவிக்கவேண்டிய தேவையான சுகங்களை இழந்து வெறும் நடைப்பினங்களாக. போலியான வறட்டுக் கெளரவங்கள்....

மனோரஞ்சிதத்தின் நிலை ஒரு மாதிரி. நகுலேஸ்வரனின் நிலை இன்னுமொரு மாதிரி. மனைவி பிள்ளைகளை இழந்த இன்னுமொரு பிரகிருதிதான். தோள்களிலும் மார்பிலும் கொஞ்சிய தளிர்ப் பாதங்களின் , மழலையின் கற்பனைகளை வாழ்க்கையாக்கி வளையவரும் உலர்ந்துபோன கூடுகளாக. இவனைப் போலும் பலர். இவர்கள்தாம் இப்படியென்றால்..... என்நிலை...  குடும்ப உறவுகள் பிரிபட்டு,  உழைக்கோணும். வீட்டிற்கு ஒரு வழி செய்யோணும்,  .தம்பியை மெதுவாய் இங்காலை கூப்பிட்டு விடவேணும்.  .. அக்காவின் கல்யாணத்தை இந்த வருஷமாவது முடித்துவிடவேண்டும்.... அதன்பிறகு பிறகு.... பிறகுதான் என் வாழ்க்கையைப்பற்றி ஒரு திடமான முடிவிற்கு வர முடியும்.

இதுமட்டுமா..  இன்னும் பலர் சொந்த முகங்களையே இழந்தவர்கள். 'தமிழா என்ன? அப்படியொரு மொழி இருக்குதா' என்பதுபோன்ற ஒரு நிலைமை. இவர்களிற்கு தாய்மொழி செத்தமொழி அர்த்தமற்றுப்போன மொழி, நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளின் மொழி 'டாடி மம்மி.பெற்றவர்கள் தான் எவ்வளவு பூரிச்சுப் போய்விடுகின்றார்கள். ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டார்களோ. ஆனால் இவர்களையும் மீறி, தடைகளை வென்று வளர்ந்த மொழி மீண்டுமொரு முறை வென்றுதான் தீரப்போகின்றது.

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக்காரணம். அரசியல். சொந்த மண்ணின் அரசியல். மரணத்தை வாழ்வாக்கிவிட்ட வாழ்வையே சாவாக்கி விட்ட அரசியல். அறியாமை. ஆத்திரம். குரோதம். வெறி நிறைந்த அரசியல்.
அரசியல் பழையபடி நினைவுகளைப் பின்னோக்கி இழுத்து விடுகின்றது.

தேர்தல் காலம் நெருங்கியிருந்தது. வன்னித் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட செல்லத் தம்புவை ஆதரித்து தமிழரசுக்கட்சியினரால் கூட்டங்கள் நடத்தத் தொடங்கிவிட்டிருந்தன. அப்பா ஒரு தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். தேர்தல் நெருங்கும் சமயங்களில் அப்பாவிற்கு சுதந்திரனின், தேர்தல் காலங்களில் வரும் அந்தனிசிலின் தீப்பொறியின் தேவை அதிகமாகிவிடும். முதன்முறையாக தமிழரசுக் கட்சி பற்றியும், தமிழ்ப் பிரச்சினை பற்றியும் தகவல்களை நான் பெற்றது இந்தப் பத்திரிக்கைகள் மூலம்தான். சாவக்கச்சேரி உறுப்பினராகப் போட்டியிட்ட நவரத்தினம் பற்றிச் சுதந்திரனில் வாசித்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. தமிழ்ப்பிரச்சினை தீருமட்டும் தாடியை வெட்டுவதில்லையென்ற இவரது சபதத்தை முதன்முறை அப்பொழுது தான் அறிந்தேன். அதன்பிறகு வெகுநாட்கள் வரை எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. பொதுவாக நாட்பட நாட்பட வெட்டாத தாடி வளர்வது தானே இயற்கை? ஆனால் நவரத்தினத்தின் தாடி மட்டும் வளர்வதில்லையே ஏன் என்பதுதான் அந்தச் சந்தேகம். நவரத்தினத்தின் வெட்டாத தாடி வளர்வதில்லையே ஏன் என்றொரு விடுகதை போடலாமா என்று கூடச் சிலசமயம் சிந்தித்ததுண்டு. முதன்முறையாக தமிழரசுக் கட்சியினரின் தரிசனம் கிட்டியது வவுனியா நகரசபை மைதானத்தில் தான். அப்பாவுடன் போயிருந்தேன். கூட்டம் பொங்கி வழிந்தது. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் பாடலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து ஒட்டியுலர்ந்து பழுத்துப்போன தந்தை செல்வாவின் பேச்சு நடுங்கியது. கூடத்துணையாக தந்தைக்கு உறுதுணையாகத் தாங்கிப் பிடித்தபடி தானைத்தலைவர் ஒருகாலத்தில் தமிழர்க்காக அடிவாங்கி, உதைவாங்கி, சிறைசென்ற செம்மல் இந்நாளைய துரோகி, அமிர்தலிங்கம் அவர்கள், முதற் கூட்டத்திலேயே எனக்கு மங்கையற்கரசியின் பாட்டும், அமிரின் பேச்சும் நன்றாகவே பிடித்துப்போய்விட்டன.

அந்த வயசில் எனக்குப் பிடித்த இன்னுமொரு பேச்சாளர் ஆலாலசுந்தரம். இவரது பேச்சு நறுக்குத் தெரித்தாற்போன்றது என்பார்களே.அப்படிப்பட்டது. எதிரில் எதிராளி இருப்பதுபோல் உருவகித்துக்கொண்டு கடுமையாக, நளினமாக (நிச்சயமாக நக்கலில்லை) சாடுவதில் வல்லவர் இவர். இதன்பிறகு நான் தமிழரசுக் கட்சியினரின் கூட்டங்களென்றால். போகாமல் விடுவதேயில்லை. ஒருமுறை வீட்டாரிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு, நகரசபை மைதானத்தில் தூங்கிக் கிடந்தவனை அப்பா வந்து எழுப்பிக் கூட்டிப் போனாரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இன்னுமொரு கூட்டத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின், கையெழுத்துக்களை ஆட்டோகிராபில் வாங்கினேன். அதில் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கூட ஏதோ சாகும்போதும்.ஒண் தமிழே தமிழே சலசலத்து ஓடவேண்டும் என்பதுபோன்ற ஒரு வசனத்தை எழுதியிருந்தார். அந்த ஆட்டோகிராப் 1983 கலவரம் வரை என் கைவசம் தானிருந்தது. 83 கலவரத்தில் தான் என் உடமைகளுடன் கொழும்பில் தவறவிட்டுவிட்டேன்.

சுதந்திரனைவிட அந்தனிசிலின் தீப்பொறியின் அடுக்கு மொழியழகு அந்த வயசில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு விடயம். 'தீப்பொறி"இதழொன்றின் தலைப்பு வசனம் கூட இன்னமும் ஞாபகத்தில் அப்படியே பசுமையாகப் பதிந்து
போய்க்கிடக்கின்றது. "ஈரிய கொல்லை தராதே நீ தொல்லை". இதுதான் அந்த வசனம்.

தமிழ்ச் சிங்களப் பிரச்சினை பற்றி தமிழர்க்கெதிரான கலவரங்கள் பற்றிய தகவல்களை முதன்முறையாக அறியும் வாய்ப்பை இவற்றால் நான் பெற்றேன். இவையெல்லாம் சுமணதாஸ் பாஸஸுடனான எங்களது உறவின் நெருக்கத்தை தளர்த்தினவா? இல்லை என்றுதான் கூறவேண்டும். சிங்கள அரசின்மேல் அப்பாவித் தமிழர்கள் மேல் காடைத்தனம் புரிந்த சிங்களக் குணடர்களை மனம் வெறுத்தது. சபித்தது. ஆனால் சாதாரணச் சிங்கள மக்களை அப்பாவி மக்களை அந்த வயசில் கூட என்னால் வெறுக்கமுடியவில்லை. அந்த வயசிலேயே நன்மைக்கும் தீமைக்குமிடையிலான வேறுபாடுகளை இனம்பிரித்துக் காண்பதில் எனக்குக் கஷ்டமேதுமிருக்கவில்லை. சுமணதாஸ் பாஸன்மேல் எந்தவித வெறுப்போ, ஆத்திரமோ எனக்கு ஏற்படவில்லை. அவர் ஒரு சிங்களவர் என்ற விடயமே எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் எங்களிற்கும் சுமணதாஸ் பாஸ் குடும்பத்தவர்க்கும் இடையிலான தொடர்பில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைகளை வெறுத்த மனதால் சாதாரண சிங்களவர்களை வெறுக்க முடியவில்லை.


அத்தியாயம் எட்டு: மேலும் சில பால்ய காலத்து நினைவுகள்..

எங்கும் தனிமை பரவிக்கிடக்கின்றது. இரவு கவிந்து தூங்கிக் கிடக்கின்றது. இன்று அவ்வளவு 'பிஸி'யாக இல்லை. விரிந்திருக்கும் வானில் வழக்கம்போல் நட்சத்திரங்கள்.இருளை ஊடறுத்தபடி தொலைவில் 'பியர்சன் விமானநிலையத்தை நோக்கிச் செல்லும் விமானமொன்றின் சிமட்டல். சொந்த மண்ணில் மீண்டும் போர்மேகங்கள். இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் தொடரப்போகின்றது. இதற்கொரு முடிவு என்றுதான் கிடைக்கப்போகின்றது. என் நிலை எனக்கே சிரிப்பைத் தருகின்றது. வெறுப்பையும் தருகின்றது.

திரிசங்கு நிலை என்பது இதுதான். இந்தப் பக்கமும் இல்லாமல், அந்தப் பக்கமும் இல்லாமல் இடையில் கிடந்து உழன்று முடிவதுதான் கடைசியில் கண்ட மிச்சமோ? சொந்த மண் தந்த திருப்தியை புகுந்த மண் தரவில்லைதான். இந்த மண்ணுடன் என்னால் பூரணமாக ஒட்ட முடியவில்லைதான். எந்தப் பிரச்சினைகளை வெறுத்து ஏற்க முடியாமல் பிறந்த மண்ணில் போராட்டம் வெடித்ததோ அந்தப் பிரச்சனைகளெல்லாம் இந்த மண்ணில் ஆழமாக வேரூன்றிப் போய்க் கிடக்கின்றன. அவற்றுடன் இன்னுமொரு விடயம் அதிகமாகச் சேர்ந்துபோய்க்கிடக்கின்றது. நிறப்பிரச்சினை. இங்கு வாழ்வின் முக்கியமானதொரு பிரச்சினையாக நிறம் இருக்கின்றது. நிறத்தை வைத்து மனிதர்களை எடைபோடும் பழக்கம்.அங்குதான் வாழ முடியவில்லை யென்றால்.இங்கும் தான் வாழ முடியவில்லை. திருப்தியாக வாழ முடியவில்லை. ஒரு காலத்தில் சுதந்திரமாக துள்ளித் திரிந்த மண்ணின் சுதந்திரமும் பறிபோய் விட்டது. இன்னொருமுறை அதே மாதிரி துள்ளிக் குதித்துத் திரிய முடியுமா? மூலைக்கு மூலை குறி பார்த்தபடி துப்பாக்கிகள் பலவிதமான துப்பாக்கிகள்.பல விதமான எஜமானர்கள். புதிய சப்பாத்துக்களின் கீழ் புதிய எஜமானர்களின் கீழ் பழையபடி. சுற்றிச் சுற்றி சுப்பற்ரை கொல்லைதான். வாழ்க்கையே ஒரு வகையில் பாலையில் தொடரும் பயணம் போலிருக்கின்றது. தொலைவில் தெரியும் கானல்களை எண்ணி எண்ணிக் கனவு கண்டு கண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது. ஒவ்வொரு முறை நெருங்கியதும் தான் தெரிகின்றது கானலென்று. மீண்டும் பழையபடி நம்பிக்கைகளைக் கனவுகளை கற்பனைகளைச் சுமந்துகொண்டு பயணத்தைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் நான் எழுதிய உரை வீச்சொன்றில் ஞாபகம் வருகின்றது அப்பொழுதுதான் எழுதத் தொடங்கியிருந்தேன்.

நாளையென்ற வசந்தத்தை நாடி
எங்கள் பயணம்
வாழ்க்கை பாலையினூடு
தொடர்கின்றது.
துன்பப் புயற்காற்றுக்களால்
எங்கள் தேகங்கள்
சீர்குலைந்து
துவண்டு விட்டபோதும்
உறுதி குறையவில்லை.
கானல் நீர்களைக்கண்டு
கண்டு எங்கள்
கண்கள்
பூத்துவிட்டபோதும், கண்
பார்வையின் ஒளி
பூத்துவிடவில்லை
நம்பிக்கைக்கோல் பற்றி
எண்ண ஒட்டகங்கள் மேல்
இனியும் தொடரும்
அந்த வசந்தத்தைநாடி,

இதுதான் அந்தக் கவிதை. இது கவிதையா? வெறும் வசனக் கோர்வையா? எதுவாகயிருந்தாலும் எதற்கும் சலிக்காத தோல்விகளால் தயங்கிவிடாத எனது இன்றைய மனப்போக்கை அன்றே கொண்டிருந்தேன் என்பதை இக்கவிதை எனக்கு உணர்த்துகின்றது. வாழ்க்கையைப் பாலையாகவும் நிறைவேறாத ஆசைகள் சம்பவங்களைக் கானல்களாகவும் பார்த்துத் தொடர்ந்தும் எண்ண ஒட்டகங்களில் பயணம் செய்யும் பண்பை அன்றே என்னையறியாமல் நான் வளர்ந்து விட்டிருந்தேன். அதனால்தான் என்னால் பிரச்சினைகளிற்கு மத்தியிலும் வாழ்க்கையை இன்பமாகக் கழிக்க முடிகின்றது. இன்றைய இந்தத் திரிசங்கு நிலை வாழ்க்கையிலும் சில நம்பிக்கைகள் எண்ணங்கள் தான் எவ்விதம் வாழ்க்கையை இழுத்துச் செல்ல உதவுகின்றன.

சிலவேளைகளில் சாண் ஏற முழம் சறுக்கத்தான் செய்கின்றது. அதனால் சோர்ந்து தளர்ந்துவிடாமல், சறுக்குவது மீண்டும் ஏறுவதற்கே. முன்னைவிட முனைப்புடன் ஏறுவதற்கே என்ற போக்கினை இத்தகைய எண்ணங்களே தருகின்றன.
இன்றைய போர்மேகங்களிற்கு மத்தியிலும் சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதும் இதனால்தான். மனித வாழ்க்கை என்பது எத்தனையோ பல லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட வரலாற்றை தன்னகத்தே அடக்கி விட்டிருக்கின்றது. இதில் எங்களது கால கட்டம் சிறிய அற்பமான கணத்துளி மாற்றமென்பது தவிர்க்க முடியாத நியதியாகத்தானே தெரிகின்றது. சொந்த மண்ணின் வரலாறு மீண்டும் ஒருமுறை சுழலத்தான் போகின்றது. மீண்டுமொரு முறை சுதந்திரமாக ஆடிப்பாடித் திரியக் கூடிய நிலை எம்மண்ணில் ஏற்படத்தான் போகின்றது. துப்பாக்கிகளின் ஆதிக்கம் ஒழிந்த நிலை.இயற்கையை எவ்வித அச்சமுமற்று ரசித்துத் திரியும் நிலை..எந்தவித இனம் பாகுபாடுகளுமற்று கூடித் திரியும் நிலை.
மீண்டுமொருமுறை வன்னிக் காடுகளில் ஒடித்திரிய வேண்டும் போலிருக்கின்றது. துள்ளிப்பாயும் மரஅணில்களை, உயரத்தே பறக்கும் ஆலாக்களை, ஓய்வு ஒழிச்சலற்ற ஊர்லாத்திகளை, ஆட்காட்டிச் சந்தேகராமன்களை, நயவஞ்சகமான சுடலை நரிகளையெல்லாம் மீண்டுமொரு முறை பார்த்து மெய்மறந்து திரியவேண்டும் போலிருக்கின்றது. எந்தவித அச்சமுமற்று. சஞ்சலமற்று, இன்பமாக பரவசமாக ஆடிப்பாட வேண்டும் போலிருக்கின்றது.

சுமணதாஸ் பாஸ”டன் திரிந்த அந்த நாட்கள். அந்த பெல்ட்டும், சறமும், குடுமியும், சிரிப்பும், குழந்தையாகி விளையாடும் சுமணதாஸ் பாஸ்.வேட்டையாடும் சுமணதாஸ் பாஸ்.எதற்கும் சஞ்சலப்படாது சிரிக்கும் சுமணதாஸ் பாஸ்.
தவளைக்குஞ்சுகள் என்ன விநோதம்.காதில் இன்னமும் சுமணதாஸ் பாஸின் மழலைத் தமிழ் கொஞ்சுகின்றது. நினைவுக்குருவிகள் சிறகடித்துப் பறக்கின்றன. பின்னோக்கிப் பறக்கின்றன. ஐன்ஸ்டைனின் காலம் சார்பானது என்பதை அறிந்து கொண்ட நினைவுக்குருவிகள் அதனால் தான் இவற்றால் பின்னோக்கியும் பறக்கமுடிகின்றன.

உண்மையிலேயே சுமணதாஸ் பாஸ் முற்போக்கானவர்தான். பெருந்தன்மையானவர்தான். அவர் தனது மனைவி நந்தாதேவிமேல் உயிரையை வைத்திருந்தார். நந்தாவதி நல்ல வடிவு. ஆனால் நிரந்தர நோயாளி. தொய்வுக் காரி நந்தாவதிக்கு சுமணதாஸ் பாஸைக் கட்டுவதற்கு முன் ஏற்கனவேயொரு தொடர்பிருந்தது. சின்ன வயதிலேயே நம்பிக் கெட்டிருந்தாள். வயிற்றில் சுமையுடன் கைவிடப்பட்டிருந்தவளை சுமணதாஸ் பாஸ்தான் காப்பாற்றியிருந்தார். அதன் விளைவு தான் மல்லிகா, மல்லிகாவைச் சொந்த மகளாகவே வளர்த்து வந்த சுமணதாஸ் பாஸின் பண்பு இன்று நினைக்கும்போது கூட ஆச்சர்யத்தைத் தருகின்றது. தேவையற்ற சந்தேகங்களால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து விட்டிருக்கின்றன. சுமணதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் மனைவியைச் சந்தேகித்ததுமில்லை. குறை வைத்ததுமில்லை. மல்லிகா பெரிய பிள்ளையானபோது எவ்வளவு ஆரவாரமாக அதனை நடத்தி வைத்தார். மூன்று நாட்களாகக் கொண்டாட்டம். எங்களிற்கோ கும்மாளம். பழைய கிராமபோன் ரெக்கார்ட் பிளேயரும், ஸ்பீக்கரும்.சிங்கள தமிழ்ப் பாட்டுக்களை ஒலிபரப்பியது அப்பகுதி மக்கள்  அனைவரையுமே அவர் வீட்டிற்கு அழைத்துவிட்டது. அந்த வயதில் எனக்குப் பிடித்த பாடலிலொன்று தமிழுக்கு அமுதென்று பேர்.பஞ்சவர்ணக்கிளி படத்தில் கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல். இந்தப் பாட்டைக்கூட சுமனதாஸ் பாஸின் வீட்டில், மல்லிகா பெரிய பிள்ளையாகிவிட்ட சடங்கின் போது ஒலிபரப்பினார்கள். ஆச்சரியமாயிருக்கிறதா? ஒரு சிங்களவரின் வீட்டில் இப்படியொரு பாடலைக் கேட்க முடிந்த காலமொன்று கூட இருக்கத்தான் செய்ததா? இருக்கத்தான் செய்தது.

பாரதிதாசன் என்றதும் தான் ஞாபகம் வருகின்றது. பாரதியார்! அப்பா ஒரு புத்தகப் பைத்தியம். அம்புலி மாமாவிலிருந்து கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர் தொடக்கம் தினகரன், ஈழநாடு, வீரகேசரி, சுதந்திரன் என்று சகலவற்றையும் வாங்கிக் குவித்தார். அம்புலிமாமாதான் நான் முதன்முறையாக வாசிக்கத் தொடங்கிய இதழ். மண்டுக்கோட்டை மந்திரவாதியும் கானகச்சிறுவனும் நான் விரும்பி வாசித்தவை. வேதாளம் சொன்ன கதையில் இடையில் வரும் கதையை மட்டும் விரும்பி வாசிப்பேன்.ஆரம்பத்தில் சற்றும் மனந்தளராத விக்கிரமனைப் பார்த்து வேதாளம் எள்ளி நகைப்பதும், இறுதியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் எனக்குப் பிடிப்பதே யில்லை. வேதாளம் இரவு நேரங்களில் ஒருவித பயத்தினையும் அருவருப்பையும் தருவதால் அப்பகுதியை இரவுகளில் நான் தொடுவதில்லை. அந்தச் சமயத்தில்தான் எங்கள் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த மாணவனொருவனை நள்ளிரவில் முனி அடித்துக் கொன்றுவிட்டிருந்தது. ஒன்றுக்கிருக்க வெளியில் போனவன் மூக்காலும் வாயாலும் இரத்தம் வரச் செத்துப் போயிருந்தான். இது முனியின் வேலையில்லை.  இரத்தக்காட்டேரியின் வேலைதான் என்றும் சிலர் கூறிக் கொண்டார்கள்.

அப்பா எங்களிற்கென்று, குடும்பத்திற்கென்று சில புத்தகங்கள் வாங்கிவந்தார். பாரதியார் பாடல்கள், ராஜாஜியின் வியாசர் விருந்தும் சக்கரவர்த்தித் திருமகனும் இது தவிர சிலப்பதிகாரம் மணிமேகலை. இவையெல்லாம் வீட்டில் எந்த நேரமும் இருக்கவேண்டிய புத்தகங்களென்பது அப்பாவின் எண்ணம். வியாசர் விருந்தும் (மகாபாரதம்) சக்கரவர்த்தித் திருமகனும் (இராமாயணம்) தமிழ் மக்களின் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இரு பெரும் இதிகாசங்கள் என்று அடிக்கடி அப்பா கூறுவது வழக்கம். அடுத்தது ஐம்பெருங் காப்பியங்கள், சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, போன்றவை கிடைக்காததால் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலையை வாங்கித் தந்தார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவி பாரதியும் முக்கியமான தமிழ்க்கவி என்பது அப்பாவின் உறுதியான எண்ணம். அம்மா நல்லாய் பாடுவா, ஏன் அப்பாவும் தான். இருவரும் சேர்ந்து மிஸியம்மா படத்தில் வரும் "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்” என்ற பாடலைப் பாடக்கேட்டிருக்கின்றேன். எம்.எஸ். சுப்புலட்சுமியின் கல்கியின் 'காற்றினிலே வரும் கீதத்தை'யும் அம்மா பாடக் கேட்க இனிமையாயிருக்கும். அம்மா விரும்பிப் பாடும் இன்னுமொரு பாடல் பாரதியின் 'தாயின் மணிக்கொடி பாரீர்" என்ற பாடல். அப்பா அந்தக் காலத்து ஆள். அவருக்கு தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, ரஞ்சனென்றால் பிடிக்கும். எம்.ஜி.ஆர் என்று சொல்லமாட்டார். எம்.ஜி.ராமசந்தர் என்றுதான் கூறுவார். எம்.ஜி.ராமச்சந்திரனின் இன்றைய படங்களை அவரிற்குப் பிடிக்காது. ஆனால் அன்றைய படங்களான மர்மயோகியையும் குலேபகாவலியையும் அவருக்குப் பிடிக்கும். டி.ஆர்.ராஜகுமாரியின் கச்சதேவயானி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மீரா, ஜெமினியின் மிஸ்ஸியம்மா இவற்றைப்பற்றி இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். இலங்கை வானொலி காலை நேரங்களில் நெஞ்சில் நிறைந்தவை என்றொரு நிகழ்ச்சியை ஒலிபரப்புவார்கள். அதில் பாகவதரின், கிட்டப்பாவின், சின்னப்பாவின், சுப்புலட்சுமியின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இந்த நிகழ்ச்சிப்பாடல்களை அப்பா விரும்பிக் கேட்பார். இதனால் எனக்கும் அப்பாடல்களைக் கேட்டுக்கேட்டு நினைவில் அவைநன்கு பதிந்து போய்விட்டன.

பாகவதரின் ‘கிருஷ்ணா முகுந்தா முராரே', ''ராதே உனக்குக் கோபம் ஆகாதடி',  'சிவபெருமான் கிருபை வேண்டும்’ எம்.எஸ்சின் காற்றினிலே வரும் கீதம்' 'கிரிதர கோபாலா. இவையெல்லாம் எனக்கும் பிடித்த பாடல்களாகிப்போயின. திரைப்படப் பாடலாசிரியர்களில் அப்பாவிற்குப் பிடித்த முக்கியமான பாடலாசிரியர் பாபநாசம் சிவன். எழுத்தைப் பொறுத்தவரையில் கல்கியின் எழுத்தென்றால் அப்பா, அம்மா இருவருக்குமே பிடிக்கும். அந்தக் காலத்தில் விகடனின் நடுப்பகுதியில் வரும் தியாக பூமி’யைக் காத்திருந்து வாசித்ததை நினைவு கூறுவார்கள். சிவகாமியின் சபதத்தை, பொன்னியின் செல்வனைப்பற்றி அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். பொன்னியின் செல்வன் நான் வாசித்த முதலாவது நாவல் இதுதான். இன்று கல்கியை விமர்சிக்கும் விமர்சக வித்தகர்களெல்லாம் கல்கியின் எழுத்தை வெறும் குப்பையாக ஒதுக்கித் தள்ளிவிடுகின்றார்கள். இன்றைய நிலையில் எத்தனையோ நூல்களை, விடயங்களை அறியக்கூடிய அளவிற்கு நவீன தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. இன்றைய நிலையில் இருந்துகொண்டு கல்கியின் அன்றைய எழுத்துக்களை விமர்சனம் செய்வது வேடிக்கையாயிருக்கின்றது. அன்றைய சூழலில் அன்றைய காலகட்டத்தில் கல்கியின் எழுத்துக்களை வைத்துப் பார்ப்பதில்தான் கல்கியின் வெற்றி தங்கியுள்ளது. என் அப்பா அம்மா விரும்பி வாசித்த கல்கியின் பொன்னியின் செல்வனை நானும் ஒரு காலத்தில் விரும்பி வாசித்தேன். அதில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியும் வல்லவரையன் வந்தியத் தேவனும், ஆழ்வார்க்கடியானும் நந்தினியும் குந்தவைப் பிராட்டியாரும்.இன்னமும் இவர்களை என்னால் ஞாபகப்படுத்த முடிகிறதென்றால்.கல்கியின் வெற்றி இங்குதான் தங்கியுள்ளது. நாவல்களைப் படிக்க அதிகத் தமிழர்களைத் தூண்டியதில் நிச்சயம் கல்கிக்கு நிறையப் பங்கிருக்கின்றது. ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நடந்து வருவதில்லை. உருண்டு, புரண்டு, தவழ்ந்து, எழுந்து பின்புதான் நடக்கத் தொடங்கு கின்றது. வளர்ச்சி அத்துடன் நின்று விடுவதில்லையே. அதுபோல் தான் கல்கி போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பும், வளர்ந்த குழந்தை தவழும் குழந்தையை வளர்ந்த நிலையில் வைத்து விமர்ச்சிக்கமுடியாது. தவழுதல் வளர்வதற்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் தான் கல்கிபோன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும். தமிழ் எழுத்துலகின் வளர்ச்சியின் ஒரு கட்டத்திற்குரிய தேவையை அவர்களின் எழுத்துக்கள் பூர்த்தி செய்தன. இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் அமிர்தலிங்கத்தின் பங்களிப்பும் தேவையாகத் தானிருந்தது. அதுபோல்தான் இதுவும்,

பாரதியின் பாடல்களைப் பொறுத்தவரையில் "புதிய கோணங்கி' 'பாப்பாப்பாட்டு மழைப்பாட்டு இவையெல்லாம் அந்த வயதியில் எனக்குப் பிடித்த பாடல்கள் ஏன்? இந்த வயதில் கூடத்தான்.\]

'திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத் தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது '

என்ற பாடல் மழைக்காட்சியை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடும் சக்திவாய்ந்தது. பாரதியின் எழுத்துக்கள் எல்லா வயதினருக்கும் எல்லாக் காலங்களிலும் இன்பத்தைத் தரும் சக்தி வாய்ந்தவை. இதில் தான் கல்கி போன்றவர்களின் எழுத்துக்களிற்கும் பாரதி போன்றவர்களின் எழுத்துக்களிற்கும் உள்ள வித்தியாசமே இருக்கின்றது. பாரதியின் எழுத்து அறிவு வளர வளரப் புதுப்புது அர்த்தங்களைத் தந்து மேலும் உயர்ந்து போய்க்கொண்டேயிருக்கின்றது. பாரதியின் சிறப்பே இதுதான்.

பாரதி இவன் என்மேல் ஏற்படுத்திவிட்ட பாதிப்பு மிகவும் பலமானதுதான். வேறெந்த தமிழ் எழுத்துலகச் சிற்பியையும் விட என்னை அதிகமாக ஆட்கொண்டவன் இவன்தான். வாழ்ந்த வாழ்க்கையிலோ வறுமை படர்ந்த சூழல், போதாக்குறைக்குக் கண்ணம்மா கண்ணம்மா என்று கொஞ்ச ஒரு செல்லம்மா. அன்னியப் படைகளின் தேடுதல் வேட்டை.தலைமறைவு வாழ்க்கை. இந்நிலையில் நீ சாதித்தது மிகமிக அதிகம்தான். உன் குறுகிய கால வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் உன் சாதனைகள் மிகவும் அதிகம்தான். உன்னாலெப்படி முடிந்தது? எப்படி முடிந்தது? உண்மையிலேயே நீ ஒரு விந்தையான மனிதன் தான். வாழ்வின் வெற்றிக்காக வெற்றி பற்றி இங்கு எத்தனைபேர் எழுதிக் குவிக்கின்றார்கள். ஆனால் உன் வாழ்க்கையே ஒரு புத்தகம்தான். நொந்து, சலித்து துவண்டிருக்கும் நெஞ்சுகளிற்கு உன் ஒவ்வொரு செய்கையும், எழுத்தும் உரமூட்டும் மருந்துகள்தான். பழமை அரசோச்சிக் கொண்டிருந்த ஒரு சூழல், நீ வாழ்ந்த சூழல். உன் ஒவ்வொரு செய்கையும் எழுத்தும் உனக்கு எவ்வளவு எதிர்ப்பைக்கொண்டு வந்து தந்திருக்கும் என்பதை உணர முடிகின்றது. நீ வாழ்ந்து முடிந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இன்றும் நம் சமூகத்தைத் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவையெல்லாம் பீடித்துத்தானிருக்கின்றன. முற்றாக ஓடிவிடவில்லையே. உன் காலகட்டத்திலோ இவையெல்லாம் மிகமிகப் பலமாக நம் சமூகத்தைப் பற்றியிருந்தன. இந்நிலையில் தான் பிராமணனான நீ உன் மார்பைச் சுற்றியிருந்த பூணுலை அறுத்தெறிந்தாய். மக்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தாய். வறுமை, தலைமறைவு வாழ்க்கை, சமுதாய எதிர்ப்பு இவற்றிற்கிடையில் உன்னால் இன்பமாக வாழ முடிந்தது. சிட்டுக்குருவியுடன் சல்லாபிக்க முடிந்தது. கம்பீரமான மீசையை முறுக்கியபடி நெஞ்சு நிமிர்த்தியபடி ஏறுநடைபோட முடிந்தது. அஞ்சிக்கிடந்தவரிடையே நெஞ்சுத் துணிவை ஏற்ற, வளர்க்க முடிந்தது. இந்தியனாய்ப் பாடினாய். தமிழனாய்ப் பாடினாய். மனிதனாய்ப் பாடினாய். உன் இறுதிக் காலத்தில் யானையால் மிதியுண்டு உடல்வாதையுற்று உன் உடல் ஓய்ந்து கிடந்தபோது இவர்களெல்லாம் உனக்கு எவ்விதம் நன்றிக் கடனைத் தீர்த்தார்கள்? எட்டே எட்டுப் பேர்களை மட்டும் உன் இறுதிச் சடங்கிற்கனுப்பி எவ்விதம் பெருமைப் பட்டுப்போனார்கள்? உன் வாழ்க்கையிலிருந்து நாங்கள் அறிந்தது. நிறைய நிறைய. ஊரோடு ஒத்து வாழ். அதற்காக எல்லா விடயங்களிலும் ஒத்து வாழ வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில் சரியான கருத்திற்காய், சரியான விடயத்திற்காய் ஊரென்ன உலகமே எதிர்த்து நின்றாலும் அடிபணிந்து விடாதே. உன்னை ஊர் உலகம் மதிக்க வேண்டுமென்பதற்காக நாணலைப்போல், பச்சோந்தியைப்போல வளைந்து, குழைந்து உழன்று கிடக்காதே. உன் கருத்து மட்டும் சரியாகயிருந்துவிட்டால் உன் வாழ்நாளில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் கூட உனக்குப் பின்னாலாவது நிச்சயம் உரிய தருணத்தில் மக்களைப் பற்றிக் கொள்ளத்தான் போகின்றது? இதைத்தான் உன் வாழ்க்கை கூறுகிறது. உன் எழுத்தும் இதனைத்தான் கூறுகின்றது.

சிந்தனை கலைகிறது. அழைத்தது யாராயிருக்கும். எதிரே. கேற்றருகில் நிற்பது யார்? இந்த இரவில்.நகுலேஸ்வரன் தான். புகையிரத தொடரொன்று இரைந்தபடி சென்று மறைகின்றது. கேற்றைத் திறந்து உள்ளே அழைத்து வருகின்றேன். இந்த நேரத்தில் எதற்காக இவன்.அப்படியென்ன தலைபோகின்ற அவசரம். நன்கு ஒருமுறை அவனது முகத்தை உற்றுப் பார்க்கின்றேன். சோர்வின் கோடுகள் படர்ந்து கிடக்கின்றன.

"என்னடா மச்சான் என்ன விசயம்.இந்த நேரத்தில்.என்னடா விசயம்.

அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அழுது விடுவான் போலிருக்கின்றது. ஏதோ சொல்வதற்கு முயல்கின்றான். வார்த்தைகள் தான் ஒழுங்காக வரமுடியாமல் திணறுகின்றன.

"என்ரை மனுஷி.என்ர குஞ்சு."

இவனது குடும்பத்திற்கு ஏதோ நடந்து விட்டிருக்கின்றது.

"நகுலேஸ்.அழாதை மச்சான். என்னடா விசயம். வீட்டிலையிருந்து ஏதாவது லெட்டர் வந்ததே."

ஒருவாறு தன்னைத் தேற்றியவன் கூறிய செய்தி... ஊரில் நடக்கும் குருஷேத்திரப்போரின் இடையில் அகப்பட்டு இறந்து விட்ட அப்பாவிகளில் இவனது மனைவியும் ஒருத்தி. எல்லாம் முடிந்த பிறகுதான் இவனிற்கே தெரியவந்திருக்கின்றது. ஆறுதல் கூறித் தேற்றக்கூடிய விசயமா. குழந்தைகளின் நிலை.இவனைப்போல் எத்தனை குடும்பங்கள்? எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன? சொல்லி ஆறுதல் பெறக்கூட முடியாதபடி சோகத்தைத் தாங்கித் தாங்கி உள்ளே வெந்து வெந்து .சீரழிந்து கிடக்கும் வாழ்க்கைகள்.தொலைவிலிருந்து நட்சத்திரக் கன்னியர்கள் கேலியாகக் கண்களைச் சிமிட்டுகின்றார்கள். உண்மைதான் எங்கள் நிலை கேலிக்குரியதாகத்தான் போய்விட்டது. சுடர்க்கன்னியரே! உங்கள் கண் சிமிட்டலைப் போன்றது தான் எங்களது காலகட்டமும், இதற்குள் இருந்துகொண்டுதான் இத்தனை குத்து வெட்டுக்கள்.புரண்டு.தவழ்ந்து, வளர்ந்த மண்ணில் சொந்தம் கொண்டாட எம்மால் முடியவில்லை. புகுந்த மண்ணில் ஒட்டி உறவாடிட எம்மால் முடியவில்லை. ஒருவிதத்தில் நாங்கள் மா பாவிகள். எந்த மண்ணில் நிற்கின்றோமோ அந்த மண்ணில் ஆத்மார்த்தமாக எம்மைப் பிணைத்து, கனவு கண்டு வாழ முடியாதபடி சபிக்கப் பட்டவர்களாகிவிட்டோம். சபித்தது யார்? ஏன் எங்களிற்கிந்த நிலை? மனம் திறந்து வார்த்தைகளை வெளியே சொல்லத்தான் எம்மண்ணில் முடியவில்லையென்றால்.மனம் விட்டு அழக்கூட முடியவில்லை இம்மண்ணில்.


அத்தியாயம் ஒன்பது:  சுழலும் காலச்சக்கரம்

நகுலேஸ்வரன் இவன் என் பாடசாலை நண்பர்களில் முக்கியமானவன். இவனது வீடு எங்களது பாடசாலை செல்லும் வழியில் ஸ்டேசனிற்கு அண்மையில் அமைந்திருந்தது. இவனது வீட்டிற்கு அருகில்தான் எங்களது தமிழ் டீச்சர் கார்த்தியாயினி டீச்சரின் வீடுமிருந்தது. கார்த்தியாயினி டீச்சர் என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்திற்கு வருவது நளவெண்பாதான். தமயந்தி அன்னத்தைத் தூது விடுவதையும், சுயம்வரத்திற்கு தேவர்கள் நளனுருவில் வருவதையும் விளக்கும் பாடல்களை உள்ளடக்கியிருந்தது எங்கள் பாடத்திட்டம். ஒருமாதமாக கார்த்தியாயினி டீச்சர், ஒவ்வொரு வெண்பாவாக எங்களிற்கு விபரித்துக் கொண்டு வந்த விதம், எங்களை ஒவ்வொரு நாளும் தமிழ் வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது. ஒரு பாடத்தை மாணவர்களிற்கு எப்படிக் கற்பிக்க வேண்டுமென்பதை நன்றாகவே விளங்கி வைத்திருந்தார் கார்த்தியாயினி டீச்சர். வெண்பாவிற்கொரு புகழேந்தியென்று சும்மாவா சொன்னார்கள். அந்த ஒவ்வொரு வெண்பாவையும் அழகாகச் சுவையாக, எளிமையாக மாணவர்க்குப் புரியும்படி சொல்ல அவரால் எப்படி முடிந்தது. இத்தனைக்கும் கார்த்தியாயினி டீச்சர் ஒரு தமிழ்ப்பண்டிதை கூட அல்ல. ஆனால் ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களை உயர்தர வகுப்பு மாணவர்களைப்போல் வைத்துக்கொண்டு பாடத்தில் மனமொன்றி அவர் படிப்பிப்பதைப்போல், எத்தனையோ கலாநிதிகள் கூடப் படிப்பிப்பதில்லை. இன்றுகூட இதனை அடிக்கடி நினைத்து நான் ஆச்சர்யப்படுவதுண்டு. தமயந்தியின் சுயம்பர நிகழ்வை விளக்கும் நளவெண்பாவை உள்ளமொன்றி உணர்ச்சி பூர்வமாகக் கற்பித்ததிற்கு கார்த்தியாயினி டீச்சரின் இயல்பான திறமையுடன் சேர்ந்து இன்னுமொரு காரணமும் இருப்பது போல் சில சமயம் நான் உணர்வதுண்டு. கார்த்தியாயினி டீச்சரிற்கு அப்பொழுது தான் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இளமைக்குரிய உணர்வுகள், கனவுகள் அவர் மனமொன்றி நள தமயந்தி காதல் கதையை விளக்கியதற்குரிய காரணங்களிலொன்றாக இருந்திருக்கலாம்.

குணத்தைப்போல் கார்த்தியாயினி டீச்சரும் சரியான வடிவு தான். சிவந்து உயர்ந்து கோவிற் சிலை வடிவு. சில சமயங்களில் நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும் சமயங்களில் அவர் செல்வதைக் கண்டிருக்கின்றேன். ஆடி அசைந்து புத்தகங்களை மார்போடனைத்தபடி அவர் செல்லும்போது அந்தக் காலைப்பொழுது கூட வழக்கத்திற்கு மாறாக சிறிது எழில் கூடியிருப்பதுபோல் எனக்குப்படும். ஆனால் அதே கார்த்தியாயினி டீச்சரை எனது நண்பனொருவன் அண்மையில் தமிழக அகதி முகாமொன்றில் சந்தித்ததாகக் கூறியபோது மனம் பெரிதும் வேதனைப்பட்டது. கணவன் மோதலொன்றிலகப்பட்டு உயிரிழந்த நிலையில், பிள்ளைகளிருவருடன், பெரிதும் கஷ்டமான நிலையில் கண்டதாகக்கூறியபோது வருத்தமாகத் தானிருந்தது. கற்பனைகளுடன், கனவுகளுடன் உணர்வுகளுடன் மனமொன்றி அவர் தமயந்தியின் காதல் கதையைக் கூறியதுதான் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தது. சூழல்கள் எவ்விதம் கனவுகளைக் கற்பனைகளைச் சிதைத்து விடுகின்றன. மனிதர்களை எவ்விதம் அலைக்கழித்து விடுகின்றன. கார்த்தியாயினி டீச்சரிற்கு ஏற்பட்ட நிலைமை, இன்று நகுலேஸ்வரனிற்கு ஏற்பட்ட நிலைமை.

நகுலேஸ்வரன்... இவனுடன் பாடசாலையிலிருந்து வீடு செல்லும் போது வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்த பழைய இராணுவக் கட்டட இடிபாடுகளை ஊடறுத்துச் செல்லும் பாதை வழியாகத் தான் செல்வது வழக்கம். உலகப்போரின் போது பாவிக்கப்பட்ட இராணுவக் கட்டடங்களின் இடிபாடுகளென்று அவற்றைப்பற்றிக் கூறக் கேட்டிருக்கின்றேன். செடிகொடிகள் மண்டிக் காணப்படும் கட்டடச் சிதைவுகள்.இதே மாதிரியான ஆனால் சிறிய அளவிலான கட்டடச் சிதைவுகளை எங்கள் வீட்டிற் கண்மையிலுள்ள மன்னார் ரோட் சந்திக்கண்மையிலும் காடழிக்கும் நேரமொன்றில் கண்டிருக்கின்றேன். இந்தச் சின்னங்கள் என் நெஞ்சில் பலவிதமான கற்பனைகளை எழுப்புவது வழக்கம். பொதுவாகப் பழமையின் சின்னங்கள் ஒரு கால கட்ட வரலாற்றை கூறிவைக்கும் சின்னங்கள். பாதுகாத்து வைக்கப்படவேண்டிய சின்னங்கள். பழமை பழமையென்று வாய்க்கு வாய் பேசும் நம்மவர்கள் இந்த விடயத்தில் சொல்வதொன்று செய்வதொன்றாகத்தானிருந்து வருகின்றார்கள். சங்கிலியன் சிலை, பண்டாரவன்னியன் சிலையென்று சிலைகள் வைப்பதுடன் மட்டும் திருப்தியடைவதால் பயனில்லை. சரித்திரச் சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இந்தச் சரித்திரச் சின்னங்களிற் கண்மையில் நிற்கும் போது ஒரு காலத்தில் அப்பகுதியில் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சில் ஒரு வித நெகிழ்வு தோன்றுவது வழக்கம். வவுனியாப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த அந்த இடிபாடுகளை அண்டியிருந்த பகுதி, செடிகொடிகளால் சூழப்பட்டிருந்த பகுதி இன்னுமொரு விதத்திலும் எனக்குப் பிடிக்கும். எனக்கு அதிகம் பிடித்த குருவிகளிலொன்றான இரட்டை வாற் குருவிகளை அதிகம் அங்கு கண்டிருக்கின்றேன். குறிப்பாக மார்புப்பகுதியில் சிவப்பும், முதுகுப்பகுதியில் கறுப்பும் கலந்த இரட்டை வாற்குருவிகள் என்னை அதிகம் கவர்ந்தவை. இவற்றின் நீண்ட இரட்டை வாற்பகுதி அசையும்போது பார்ப்பதற்கு அழகாகயிருக்கும். நகுலேஸ்வரனிற்கும் இந்தப்பகுதி பிடித்த பிரதேசம். இதனால் வீடு செல்லும் சமயங்களில் சிறிதுநேரம் அப்பகுதியில் விளையாடித் திரிந்து விட்டுத்தான் செல்வது வழக்கம். அந்த வயதில் போர்க்காலச் சூழலை ஞாபகப்படுத்தும் இத்தகைய இடிபாடுகள் நெஞ்சில் வியப்பினை ஏற்படுத்தின. இந்த மண்ணிலும் ஒரு காலத்தில் யுத்தமொன்று நடந்ததா என்று ஆச்சர்யப்பட்டுப்போனோம். கவசவாகனங்களில் தண்ணீர் அள்ள வரும் இராணுவத்தினரைப் பார்த்து சிரித்துக்கொண்டோம், அமைதி தவழ்ந்துகொண்டிருந்த மண்ணின் முதல் மாற்றத்தை றோகண விஜேவீராவின் இயக்கத்தினரின் முதற் புரட்சியின்போது கண்டோம். முதன்முதலாக ஹெலிகாப்டர்களைக் கண்டது அப்போதுதான். நாடு முழுவதும் அவசரகாலச் சட்டநிலை பிறப்பிக்கப்பட்டு, பாடசாலைகளிற்கெல்லாம் விடுமுறை விடப்பட்டு, சிங்கள இளைஞரின் புரட்சியை சிறிமாவின் அரசாங்கம் முழுமூச்சாக நசுக்கிக்கொண்டிருந்த காலகட்டம். பாடசாலை விடுமுறையென்றால் எங்களிற்குச் சொல்லவா வேண்டும். ஒரே குதியுங் கூத்துத்தான். கும்மாளம் தான். காடுகுளம் விளையாட்டென்று நேரம் போவதே தெரியாமல். நகுலேஸ்வரன் பெரும்பாலும் எங்கள் வீட்டோடுதான். எங்களிருவருக்கும் பிடித்த பொழுது போக்குகளில் முக்கியமான பொழுதுபோக்கு என்ன தெரியுமா? சீறிலங்கா விமானப்படையினர் ஹெலிகாப்டர்களிலிருந்து போடும் குண்டுகளை எண்ணுவதுதான். வவுனியா நகரின் பிரதான ஆஸ்பத்திரிக்கண்மையிலிருந்து பெரிய குளத்திற்கும் அப்பால் ஒரு மலைத் தொடரொன்றிருந்தது. சிறிய மலைத்தொடர். ஒருநாளும் நான் அப்பகுதிக்குப் போயிருக்கவில்லை. தொலைவிலிருந்துதான் பார்த்திருக் கின்றேன். மடுக்கந்தை என்று பெயர். இப்பகுதி வழியாக, லக்சபானாவிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வருவதற்காகப் போடப்பட்ட பிரமாண்டமான மின்சாரக் கம்பங்களிற்காகக் காட்டினூடு வெட்டப்பட்ட பாதைவழியாக 'சேகுவேரா" இளைஞர்கள் வவுனியாப் பகுதிக்கு வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். அவர்களது இருப் பிடங்களின் மீதுதான் சிங்களப்படையினர் குண்டுகளை வீசிக் கொண்டிருந்தார்கள். தொலைவில் இம்மலைப்பகுதியை அண்மித்து ஹெலிகாப்டர்கள் பறப்பதை எங்கள் வீட்டு வளவிலிருந்து பார்க்கக் கூடியதாகவிருந்தது. தொடர்ந்து விட்டு விட்டுக் குண்டுச்சத்தம் கேட்கத் தொடங்கும்போது அப்பா கூறுவார் "சேகுவேராப் பொடியள் மீது குண்டு போடுறான்கள்" அப்பொழுதுதான் நாங்கள் எண்ணத் தொடங்குவோம். சில சமயங்களில் நாற்பதுவரையில் கூட எண்ணியிருக்கின்றோம். அந்தச் சமயத்தில் அவ்விதம் ஒருவித திகில் கலந்த வியப்புடன் எண்ணிக் கொண்டிருந்த அந்த அனுபவத்தை என் நெஞ்சுக்கூட்டின் ஆழத்தில் பாதுகாத்து வைக்கவேண்டியதொரு பொக்கிஷமாகத் தான் இன்றுவரை பாதுகாத்து வருகின்றேன். அதனை இழந்துவிட நான் விரும்பவில்லை. அந்த அனுபவம் ஏற்படுத்தி விடும் இன்பகரமான, பசுமையான நினைவுகளைப் பொசுக்கிவிட என்னால் முடியாது.

இந்தச் சமயத்தில் நகரில் ஒரு கதை உலவிக்கொண்டிருந்தது. "சேகுவேரா" பற்றிய கதை. சேகுவேரா இளைஞர்கள் மாகோவைப் பிடித்துவிட்டார்கள். அநுராத புரத்தையும் பிடித்துவிட்டார்கள். சிறிமாவை நடுக்கடலில் பாதுகாப்பாக கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். இதே சமயம் வவுனியா நகரிற்குள்ளும் இரவோடிரவாக கட்டாக்காலி மாடுகளோடு மாடுகளாக மறைந்தபடி புரட்சிக்காரர்கள் வந்துவிட்டார்கள். இப்படி பலவிதமான கதைகள். யூகங்கள். வேடிக்கையான இன்னொரு விசயம் என்னவென்றால். படையினரின் சந்தேகத்திலிருந்து தப்புவதற்காக சிங்கள இளைஞர்கள் கூடத் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டதுதான். ஆனால் இன்று.? காலச்சக்கரம் மீண்டும் சுழல்கின்றது என்பது இதனைத்தான்.

[தொடரும்]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

 
எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!                                           'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ