எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!
"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள். ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.