"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி! - சூரியகுமாரி பஞ்சநாதன் -
எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி. சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது. சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."
சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார்.
தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது "சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் "சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது. சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது.