நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள் - பேராசிரியர் அ.ராமசாமி -
- பேராசிரியர் அ.ராமசாமியின் 'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் நாடகவியலாளர் ப்ரசன்னா ராமஸ்வாமி பற்றியதொரு அறிமுகக் கட்டுரை ' நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்' என்னும் தலைப்பில் வெளியாகியிருந்தது. (ஆகஸ்ட் 19, 2017 ) இக்கட்டுரையில் அவர் ப்ரசன்னா ராமஸ்வாமியைத் 'தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி' என்பார். அத்துடன் 'தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி' என்றும் கூறுவார்.
ப்ரசன்னா ராமஸ்வாமி அவர்களைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். என் முகநூல் நண்பர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். அண்மையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அத்துடன் துயரையும் அடைய வைத்திருக்கும். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:
"வலி. இந்த வலியின் கொடுமையிலிருந்து விடுதலை என்று சாவை யாசிப்பது துயரமான நிலை. வாழ்க்கை போல மரணமும் இயல்பாக, விரைவில் நிகழ்ந்து விட அருள் புரிய வேண்டும் தெய்வமே."