வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்!
- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
Arun Ambalavanar: அனோஜன் இதில் பொய்யான தகவல் எதுவும் எழுதவில்லை. N.K. மஹாலிங்கம், மு. பொ ஆகியோர் அனோஜன் சொன்ன விடயத்தை ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். தயவு செய்து விடயத்தை முழுமையாக ஆராயாமல் சோபாசக்திக்கு வக்காலத்து வாங்குவதை கைவிடுங்கள்.
Annogen Balakrishnan: நீங்கள் புரிதல் இன்றி விவாதத்தை வேறுபக்கம் கொண்டு செல்கிறீர்கள். //ஜீவா மீது மல்லிகையில் மு.த கலந்துகொண்ட ஒரு சமூக, அரசியல் போராட்டம் பற்றிய செய்தியொன்றைப் போடவில்லையென்பதை எவ்விதம் முக்கியதொரு குற்றச்சாட்டாகக் கூறலாம்?// என்று வினவுகிறீர்கள், மு.தளையசிங்கம் என்ற இலக்கியவாதி ஈடுபட்ட முற்போக்கு நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது, வெறுமே சமூக, அரசியல் போராட்டம் என்று சுருக்கி, அதனை மல்லிகை செய்தியாகப் போடவில்லை என்று சொல்வது, பிரச்சினையை விளங்கிக்கொள்ளும் திறன் போதாமையால் வருவது. சாதி ஒழிப்புப் போராட்டம் காரணமாகத் தாக்கப்பட்ட தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அந்தச் செய்தியை மல்லிகை பிரசுரிக்கவில்லை என்பதற்குக் காரணம் க.கைலாசபதி மீதிருந்த அச்சம். இது திண்ணை உரையாடலில் பதிவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டக் காரணம், கைலாசபதியின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இலக்கிய உலகைக் கட்டுப்படுத்தியது என்று காட்டத்தானே தவிர, ஜீவாவை சிறுமை செய்ய அல்ல. முதலில் அதனை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் முற்போக்குப் போராட்டம் காரணமாக மிலேச்சத்தனமான வன்முறைக்கு உள்ளாகியபோது, அது சார்ந்த விடயங்களை பேசாமல் கடந்தமை சாதரணவிடயமல்ல. முற்போக்கு பத்திரிக்கை ஒன்று காரணம் இன்றி இதனைச் செய்யாது. பொது அறிவு இருந்தாலே இதனை விளங்கிக்கொள்ளலாம்.