படித்தோம் சொல்கின்றோம் : சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? - முருகபூபதி -
“வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் இல்லை. மனிதர் செய்யும் இடையூறுகளை கடந்து அது புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து வாழ்ந்துகொண்டேயிருக்கும். இதைப்போலவே மரணசாசனம் என்பதும் ஒரு ஆதங்கம். நதிகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கை. ஆனால், நதி இன்னமும் மரணமுற்று விடவில்லை. மரணம் அடைந்துவிட்டதாக மனம் கொந்தளிக்கிறது. அவ்வளவுதான். “ என்று, வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்ற நூலை எழுதியிருக்கும் தோழர் சி. மகேந்திரன், ஏன் இதனை எழுதினேன் என்பதற்கான காரணத்தை சொல்கிறார். தலைப்பினைப் பார்த்ததும், இந்த நூல் ஏதோ கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவிருக்குமோ ? என்ற எண்ணம்தான் வாசகர்களுக்கு முதலில் வரக்கூடும். ஆனால், தமிழக நதிகளின் வரலாற்றையும் சுற்றுச்சூழலினால் மாறிவிட்ட அதன் கோலங்களையும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் ஊடாக ஆவணமாகவே இந்நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது. நூலாசிரியர் , இந்தநூலின் 74 ஆவது அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் ஆதங்கத்தையே இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவரையில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூல் இந்திய சாகித்திய அகடமியின் தெரிவுக்குழுவுக்கு ஏன் எவராலும் பரிந்துரை செய்யப்படவில்லை..? என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது. இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழக நதிகளின் வரலாறு ஏற்கனவே ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் பிரபல ஓவியர் மருது வரைந்த வண்ணப்படங்களுடன் தொடராக வெளியாகியது.