இணையவழிக் கல்வி வரமா? சாபமா? - முனைவர் பா.பிரபு. தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் , கோயம்புத்தூர் - 28 -
உலகிலேயே கல்வியைக் கலைமகளாக வணங்கும் இனம் நம் தமிழினம். கல்விக்கு மிக முக்கியமான இடத்தை நம் முன்னோர்கள் வழங்கியிருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குக் கல்வியும் விதிவிலக்கல்ல. கல்விமுறையில் காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழியில் கற்பிக்கப்படும் கல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது.அது இளம்தலைமுறைக்கு வரமா? சாபமா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
கல்வி குறித்த ஆன்றோர்களின் கருத்துகள்
எண்ணையும் எழுத்தையும் கண் என்று கூறினார் வள்ளுவர். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றும் எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்றும் விளம்பியது வெற்றிவேற்கை. இவ்வாறு நம் சான்றோர்கள் கல்விக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
காலந்தோறும் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
ஆதியில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மனிதன் அந்த இயற்கையிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொண்டான்.அவ்வகையில் மனிதனின் முதல் ஆசானாக இயற்கையே விளங்கியது என்றால் அது மிகையல்ல.மனித இனம் சமூகமாக இணைந்து வாழ்ந்த போது தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள எண்,எழுத்து போன்ற குறியீடுகள் தேவைப்பட்டன.இதுவே கல்வியின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது எனலாம்.
குருகுலக் கல்வி
கால ஓட்டத்தில் ஒரு குருவைத் தேடிச் சென்று வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும் குருகுலக் கல்விமுறை தோன்றியது.அக்கல்விமுறை மிகச் சிறந்தது என்றாலும் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியது என்ற சூழலும் ஏற்பட்டது.