வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
2009 - 1
அற்றைத் திங்களின் அவ்வெண்ணிலவு அப்போதும் காய்ந்துகொண்டிருந்தது. குன்றுகள்தான் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க்கொண்டிருந்தன. மக்கள் திகிலடைந்திருந்தனர். தங்கள் கனவு ராஜ்யம் அழிந்துபோகும் நிர்க்கதி. அது மன மெய்களின் மொத்தமுமான ஸ்தம்பிதமாக இருந்தது.
உலகத் தமிழரங்கில் வெளிச்சமிடப்பட்ட நாடக மேடை தகர்ந்துகொண்டிருந்ததில் எங்கெங்கும்தான் அந்த நிர்க்கதி. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் வீதியிலிறங்கியிருந்தனர். ‘Stop the Geanocide’ என்ற சுலோக கொடிகள் இளைஞர்கள் கையில் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன.
கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவத்தின் கையில் வீழ்ந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கருணா அம்மான் கிழக்குப் புலிகளின் பெருவலிமையுடன் பிரிந்துவிட்டாரென்று அறிந்தபோது வந்துவிழுந்த ஏக்கத்தை, வன்னியிலிருந்து சென்ற இருநூறு திறல் படைத்த அதிரடிப் புலி வீரர்களால் அவர் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளிவந்து போக்கியது. இப்போது முற்று முழுதாய்த் தெரிந்தது, கருணா அம்மான் அன்று தோற்கடிக்கப்படவில்லையென.
2004இன் அந்த நிலைமையில் அவர்கள் பெரிய நம்பிக்கையீனம் எதனையும் அடைந்துவிடவில்லை. கிழக்கு முற்றாக பறிபோயிருந்தபோதும் அவர்கள் பெரிய மனப் பாதிப்பைக் கொண்டுவிடவில்லை. ஆனால் அப்போது வன்னியின் பெரும் பகுதியும் பறிபோயிருக்கிறது. கிளிநொச்சி, மாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய சில கோட்டைகளே எஞ்சியிருந்த அந்த நிலைமை அவர்களை அடிவேர்காண அதைத்தது.