கறுப்பு ஜூலை நினைவுகள்! - முருகபூபதி -
- 1983 கறுப்பு ஜூலையில் நாடே பற்றியெரிந்தபோது...
ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..?
கவியரசு கண்ணதாசன் “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும், கனவுகள் ஆயிரம் , 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது.