இலங்கையின் முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க (இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர்) பற்றிய எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் முகநூற் பதிவொன்று ஏற்படுத்திய நினைவலைகள் இவை:

எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் (Karunaharamoorthy Ponniah) ஶ்ரீமாவோ அம்மையார் பற்றிய முகநூற் பதிவு: "ஆனந்தசங்கரி அவர்கள் பதவியில்லாமல் இருந்தபோது 1983 இல் பெர்லினில் கூடியிருந்த நண்பர்களிடத்தில் சொன்னது: “ இந்தக்கூட்டணி, மாட்டணி ஒன்றுந்தேவையில்லை, அமிரை வீட்டில இருக்கவைச்சிட்டு.....நாலு எம்பிக்களை தமிழ்ப்பகுதியிலிருந்து அவளுக்கு (ஸ்ரீமாவோ) அனுப்பியிருந்தால் தமிழர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவளிட்ட வாங்கியிருக்கலாம்…………. முட்டாள் தமிழர்களுக்கு மூளை ஒருநாளும் வேலை செய்யாதென்றன். வெங்காயம் விளைஞ்சநேரம் வெங்காயத்தையும், மிளகாய் விளைஞ்சநேரம் மிளகாயையும் அரசாங்கக்காசில இறக்குமதிசெய்து ஜே.ஆரைபோல தமிழர்களுக்கு வம்புபண்ற கெடுபுத்தி அவளுக்கில்லை, அவள் மனுஷி……. !” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

என்னைப்பொறுத்தவரையில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டு வந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தரப்படுத்தல் ஆகியவை, தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் எழுந்த எதிர்ப்பு தமிழரசுக்கட்சியினரைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்க வைத்தது. மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் என்று 42 தமிழ் இளைஞர்கள் (தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த) கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நன்மைகளாக நான் கருதுவது:

1. யாழ் பல்கலைக்கழகம் அவர் காலத்தில் உருவானது.
2. உள்ளூர் உற்பத்திகளை அவர் ஊக்குவித்தது. இன, மத வேறுபாடற்று இவ்வகையான உற்பத்திகளை அவரது அரசு ஊக்குவித்தது. தோட்டப்பக்கமே செல்லாத தமிழ் இளைஞர்கள் பலர் வன்னிக்குச் சென்று மிளகாய் பயிரிட்டு இலாபம் சம்பாதித்தார்கள்.
நான் அறிந்திருக்கின்றேன்.
3. தமிழக நூல்கள், சஞ்சிகைகளுக்கு ஏற்பட்ட தடை காரணமாக வீரகேசரி பிரசுரங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல நூலுருப்பெற்றன.
4. உள்ளூர் உற்பத்தி பல துறைகளிலும் ஊக்குவிக்கப்பட்டது.
5. அக்காலகட்டம் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று கூடக் கூறலாம். கோமாளிகள், நான் உங்கள் தோழன், வாடைக்காற்று எனத் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்பட்டு நீண்ட நாள்கள் ஓடிச்சாதனை புரிந்த காலகட்டம்.

உண்மையில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தது இவரது கல்வி அமைச்சர் பதியுதீன் முகம்மத். தரப்படுத்தல் தகுதியான நகர்ப்புறத் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை மறுத்ததுதான் தமிழ் மாணவர்களை அதிக அளவில்
அரசுக்கெதிராகத் திருப்பக் காரணமாக அமைந்தது. ஆனால் அதே தரப்படுத்தல்தான் பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதியை அதிக அளவில் வழங்கவும் காரணமாகவும் அமைந்தது. குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகங்களுத் தெரிவாகிய பல பின் தங்கிய பிரதேசத்து மாணவர்கள் , அதிக புள்ளிகளுடன் தெரிவான நகர்ப்புற மாணவர்களை விடத்திறமையாகப் பல்கலைக்கழகங்களில் விளங்கியதையும் கண்டிருக்கின்றேன். மட்டக்களப்பு, கிளிநொச்சி, வன்னிப்பகுதி மாணவர்கள் பலர் தரப்படுத்தலால் மிகுந்த பயனடைந்துள்ளார்கள். பல்கலைக்கழகங்களில் திறமையான மாணவர்களாகவும் விளங்கியிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணக்கல்லூரியில் மாரசிங்க என்னும் சிங்கள இளைஞர் கத்திக்குத்துக்காளாகியபோது அச்சம்பவம் நாடெங்கும் பரவி இனக்கலவரமொன்று ஏற்படாதவகையில் , செய்தியைப்பரவ விடாமல் அவரது அரசு தடுத்திருந்தது.

இவரது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஏனைய முக்கிய விடயங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. ஜேவிபியினரின் முதற் புரட்சி தோல்வியில் முடிந்தது. தோல்வியில் முடிந்த புரட்சிக்காலகட்டத்தின் போது பல மாதங்கள் இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நினைவில் நிற்கும் காலகட்டம். இந்தியப்படையினரின் உதவியுடன் முறியடிக்கப்பட்ட புரட்சியின் முடிவில் சிங்கள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் சரணடையும் செய்திகளைத்தாங்கிப் பத்திரிகைகள் வெளியாகின. நினைவிலுள்ளது.
2. சீனர்கள் இலவசமாக பண்டாரநாயக்க சர்வதேச நினைவு மண்டபத்தைக்கட்டிக் கொடுத்தார்கள் (அவ்விதமே நினைவு). அதுபோல் கட்டுநாயக்க விமான நிலையத்தையும் சீனர்களே கட்டிக்கொடுத்ததாக நினைவு.

இவரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத இன்னுமொரு விடயம்: உணவுக்காக கியூவில் நின்றது. காலைகளில் பாண் வாங்க பேக்கறிகள் முன்னால் கியூவில் நின்றது இன்னும் நினைவிலுள்ளது. பேக்கறிக்காரர்கள் இதனால் கொள்ளை இலாபம் சம்பாதித்தார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் இலங்கையின் மிகவும் கொடிய ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தனேயையே கூறுவேன். அவரது அரசியற் செயற்பாடுகளே நாட்டில் பின்னர் ஏற்பட்ட அனைத்துப்பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணங்கள். குறிப்பாகச் சில காரணங்கள்:

1. 1977 இனக்கலவரம். போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம் என்று அவர் முழங்கிக் கலவரத்தைத்தூண்டி விட்ட கலவரம்.
2. 1981 யாழ் பொதுசன நூலகம் எரிந்தது அவரது அமைச்சரான காமினி திசாநாயக்க தலைமையில்தான்.
3. 1983 இனக்கலவரம். ஜே.ஆரின் அமைச்சர்கள் பலர் முன்னெடுத்த , திட்டமிடப்பட்டு புரியப்பட்ட இனக்கலவரம்.
4. 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக்கொண்டு வந்து , அவ்வருட டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பயங்கரவாதத்தை ஒடுக்கும்படி கட்டளையிட்டு தனது மருமகன் பிரிகேடியர் வீரதுங்கவை யாழ்ப்பாணம் அனுப்பி தமிழ் இளைஞர்களைக் கைது செய்தார்; கொன்றொழித்தார். இன்பம், செல்வம் போன்ற இளைஞர்களின் படுகொலைகள் நினைவில் நிற்கின்றன.

ஜேஆர் அரசியலில் சாணக்கியம் மிக்க குள்ளநரி. இவரே பண்டா -செல்வா ஒப்பந்ததிற்கெதிராகக் கண்டிக்குப் பாத யாத்திரை செய்தவர். தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதிலும் வல்லவர். ஶ்ரீமா அம்மையாரின் குடியுரிமையினைப்பறித்துத் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்த இவர் பின்னர் தான் உருவாக்கிய 83 கலவரத்துக்குக் காரணமாக ஜேவிபியினரைக் குற்றஞ்சாட்டி அக்கட்சியினையும் தடை செய்தார்.

இவரது அரசியல் நடிவடிக்கைகளே பின்னர் ஈரினங்களுமிடையிலான சமூக யுத்தமாக வெடித்து, உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாகி, முடிவில் முள்ளிவாய்க்காலில் பேரழிவுகளுடன், இன்றைய ஜனாதிபதி, அவரது போர்த்தளபதிகளின் போர்க்குற்றங்களுடன், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. உண்மையில் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி இலங்கைத்தமிழர் பிரச்சினையைத் தமது கையிலெடுத்ததன் முக்கிய காரணமே அமெரிக்க சார்பு ஜே.ஆர் அரசின் அரசியல் நிலைப்பாடுதான். அதுவே அக்காலகட்டத்தில் இந்தியா தன் தேச நலன்களுக்காக இலங்கைத்தமிழர் பிரச்சினையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தக் காரணமாக அமைந்தது. பின்னர் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்பவும் ஜே.ஆரின் இலங்கைத்தமிழர் பிரச்சினை மீதான அணுகுமுறையே முக்கிய காரணம். ஆனால் அவ்விதம் வந்த இந்திய அமைதி காக்கும் படையினையும், விடுதலைப்புலிகளையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது ஜே.ஆரின் அரசியல் சாணக்கியம் எனலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R