- 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகள் பல நூலுருப்பெற்று வருகின்றன. அது மகிழ்ச்சியினைத்தருவது. திலகபாமா, நாகரத்தினம் கிருஷ்ணா, பிச்சினிக்காடு இளங்கோ, வ.ந.கிரிதரன், முனைவர் ஆர்.தாரணி, நடேசன் , ஜெயபாரதன் எனப் பலரின் படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. நாவல்களைப்பொறுத்தவரையில் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்', 'அமெரிக்கா (திருத்திய இரண்டாம் பதிப்பு) , முனைவர் ஆர். தாரணியின் 'மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு! , நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்பில் மார்கெரித் த்யூரா என்னும் பிரெஞ்சு எழுத்தாளரின் நாவலான காதலன், நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' ஆகியன நூலுருப்பெற்றுள்ளன. சீர்காழி தாஜின் குறுநாவலான 'தங்ஙள் அமீர்' நூலுருப்பெற்றுள்ளது. மேலும் பல பதிவுகளில் வெளியான படைப்புகளை (சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்) உள்ளடக்கிய நூல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அறிவியல் அறிஞர் ஜெயபாரதனின் அறிவியற் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இவ் வரிசையில் தற்போது அமரர் 'யுகமாயினி' சித்தனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' 'King Asoka’s Veterinary Hospital' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அது பற்றி எழுத்தாளர் முருகபூபதி 'எழுதிய கட்டுரையிது. - பதிவுகள்-]


 

King Asoka’s Veterinary Hospitalஅமரர் யுகமாயினி சித்தன்அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் விலங்கு மருத்துவர் நடேசன், கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் எழுதிய 'வண்ணாத்திக்குளம்', 'உனையே மயல்கொண்டு' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்திலும், வண்ணாத்திக்குளம் , மலேசியன் ஏர்லைன் 370 ( கதைத் தொகுதி ) என்பன சிங்கள மொழியிலும் வெளிவந்துள்ளன. உனையே மயல்கொண்டு நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வரவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே இந்தத் தகவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றேன்.

நடேசனின் நூல்களின் வரிசையில் தற்போது அவர் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய அவுஸ்திரேலியா புகலிட வாழ்வையும் விலங்கு மருத்துவப்பணியையும் சித்திரித்த 'அசோகனின் வைத்தியசாலை' நாவலும் தற்போது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை King Asoka’s Veterinary Hospital, என்னும் பெயரில் Amazon இல் தொடர்புகொண்டால் கிடைக்கிறது.

இந்த நாவல் முதலில் கனடாவிலிருந்து நீண்ட காலமாக வெளியாகும் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்தது.அந்த இணையத்தளத்தை நடத்தும் வ.ந.கிரிதரன் அவர்களும் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர். அவரது படைப்புகளும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்தும் தரமான தமிழ் நாவல்களையும் மொழிபெயர்ப்பு படைப்புகளையும் பதிவுகளில் வெளியிட்டு வருபவர்.

நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை' நாவலை சில வருடங்களுக்கு முன்பு அது நூலாக வெளிவருவதற்கு முன்னர், அதன் படிகளை ( Proof Reading ) திருத்தும்போதே படித்திருக்கின்றேன். அச்சமயத்தில், நான் பெற்ற வாசிப்பு அனுபவத்திலிருந்து இந்நாவலை நடேசன், ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதினாரா? என்றும் யோசித்திருக்கின்றேன். அவர் ஏன் இந்த நாவலுக்கு அசோகனின் வைத்தியசாலை என்ற பெயரைச்சூட்டினார்? விலங்கு மருத்துவத்துறையில் தான் பெற்ற அனுபவங்களை படைப்பிலக்கியமாக்க முயன்றபோது, எதற்காக விலங்குகளின் பெயரைத்தாங்காமல், ஒரு மனிதனின் பெயரை வைத்தார் என்றும் சிந்தித்தேன்.

பின்னர், நடேசனைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தபோது கிடைத்த செய்தி என்னை ஆச்சரியத்திற்குட்படுத்தியது. அசோகன்   என்பவர்  யார்   என்பது   உங்கள்    அனைவருக்கும்   தெரியும்.    இந்தியாவில்   பல  நூறு  ஆண்டுகளுக்கு   முன்னர்   அரசாட்சி  செய்த மன்னன். நாடு  பிடிக்கும்  ஆசை   அலெக்ஸாண்டருக்கும்  நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும்   இருந்தது  போன்றே    அசோகனுக்கும்   கலிங்கம்  என்ற நாட்டை பிடிக்கும்   ஆவல்   இருந்தது.    அந்த   மன்னன்  அந்தப்போரின்  வெற்றியை மனதளவிலும்கூட   கொண்டாட   முடியாமல்  மக்களின்    உயிரிழப்பு    குறித்து   ஆழ்ந்த    கவலையடைந்து   புத்தமதத்தை    தழுவி   அன்பு மார்க்கத்தை  போதிக்க     முன்வந்ததுடன்    இலங்கைக்கு    தனது   மகள் சங்கமித்தையையும்  அரச   மரக்கிளையுடன்    அனுப்பிவைத்தார்.

அசோக சக்கரவர்த்தியை திரையில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'அசோக்கா' திரைப்படத்திலும் (2001 ) நாராயணமூர்த்தியின் இயக்கத்தில் 1958 இல் சிவாஜி கணேசன் நடித்த 'அன்னையின் ஆணை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சாம்ராட் அசோகன்' நாடகத்திலும் பார்த்திருக்கின்றோம். ஆனால், இந்தப்படங்களில் அந்த மன்னனின் நாடு பிடிக்கும் ஆசையையும் தனது வெற்றிக்காக எத்தனை மனித உயிர்க்கொலையும் செய்யத்துணிந்த கோரமான பக்கத்தையும், இறுதியில் தனது குற்றங்களையும் செய்த பாவங்களையும் உணர்ந்து மனம் மாறியதையும்தான் அறிந்தோம். ஆனால், அந்த மன்னன்தான் இந்த உலகில்  முதல் முதலில்    மிருகங்களுக்கான வைத்தியசாலையை    உருவாக்கிய    முன்னோடி என்ற அரிய செய்தியை நடேசன் சொல்லித்தான் அறிந்துகொண்டேன். அத்துடன் அவர் மேலும் சில விளக்கங்களும் தந்தார்.

ஜீவராசிகளான     விலங்குகளும்   பிராணிகளும்  ஊர்வனங்களும்   நோயுற்றால்    அதற்குரிய  சிகிச்சை அளித்து    காப்பாற்றவேண்டும்   என்ற   உயர்ந்த   நோக்கம்   அசோகன்    பின்பற்றிய    அன்பு   மார்க்கத்திலிருந்து   தோன்றியது. விலங்குகளும்   மற்றும்   பிராணிகள்    உயிரினங்களும்   வாய்பேச    முடியாத   ஜீவன்கள்.  ஆனால், அவற்றுக்கும் மனிதர்களுக்கு இருப்பதுபோன்ற உணர்வுகளும் விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன என்பதை       தனது   மூன்றாவது  நாவல்  'அசோகனின் வைத்தியசாலை'யில்  நடேசன்   மிகவும்    அழுத்தமாகப்  பதிவு   செய்கின்றார்.

நிறையப்பாத்திரங்கள்  இந்நாவலில்   வருகின்றன.   சுமார்   முப்பது   பாத்திரங்கள்    இருக்கலாம்.    ருஷ்ய   இலக்கியமேதை   லியோ   ரோல்ஸ்ரோயின் உலகப்புகழ்பெற்ற   போரும்   சமாதானமும்   நாவலில்    ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கதாபாத்திரங்கள்   வருகிறார்கள்.

அசோகனின்   வைத்தியசாலையில்   கொலிங்வூட்   என்ற   ஒரு    பூணையும் மிக    முக்கியமான   பாத்திரமாக    வருகிறது. நானூறு   பக்கங்கள்   கொண்ட    இந்நாவலை    எழுதி   முடிப்பதற்கு தனக்கு   சுமார்  மூன்று   வருடகாலம் எடுத்ததாகவும் நடேசன் சொன்னார்.

இந்த   நாவலை   படிக்கும்  பொழுது   ஒரு   ஆங்கில   நாவலை   படிக்கும் உணர்வுதான்   எனக்கு   ஏற்பட்டது.   இந்த   நாவலை   முன்பு   கனடா 'பதிவுக'ளில் தொடர்ந்து    படிக்காத    ஒரு   வாசகன்,     முழுநாவலாக    நூல் வடிவத்தில் முதல்   தடவையாக   படிக்க   நேர்ந்தால்   ஆங்கில    நாவலின் தமிழ்    மொழிபெயர்ப்புத்தான்    இந்நூல்   என்ற   முடிவுக்கும்   வரலாம்.

நான்    இதனைப்படித்தபொழுது   நடேசன்   ஆங்கிலத்தில்   சிந்தித்து ஆங்கிலத்தில்    கற்பனை    செய்து   தமிழில்    எழுதியிருக்கிறாரோ..?     என்றும் கருதினேன். சில    அத்தியாயங்கள்    தனித்தனி    சிறுகதைகளுக்கு   அல்லது குறுநாவலுக்குரியது    போன்ற   தோற்றத்தையும்    காண்பிக்கின்றன. குறிப்பாக  Sharan  என்ற     பாத்திரம்.  அவளது   கதை    வித்தியாசமானது.    அவள் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை    படித்தபொழுது   ஆங்கில     த்ரில்லர் படங்களை    பார்த்தது   போன்ற   உணர்வுதான்    எனக்கு  வந்தது. அதுபோன்று   மற்றுமொரு   பாத்திரம்   பழைய   சாமான்கள்    பழைய வெற்று    மதுப்போத்தல்கள்    முதலானவற்றை   தனது  வீடு    நிரம்பவும் சேகரித்துவைத்திருந்து  இறுதியில்   அநாதரவாக    மரணிக்கும்    ஒரு   பாத்திரம்.

நடேசன்,     இந்நாவலில்   எம்மை     நாம்    முன்னர்    பார்த்தறியாத உலகத்திற்கு    அழைத்துச்செல்கின்றார்.   தமிழில்   படைப்பு    இலக்கியத்திற்கு    இது   புதிய   வரவு.    புதிய    அறிமுகம்.    அதாவது    எம்மில் எத்தனைபேர் மருத்துவ மனைகளில்   இருக்கும்   சவ   அறைகள்   பற்றி  இலக்கியத்தில்    அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இந்த   உலகில்   பிறந்த   அனைவருமே   ஒருநாள்   இறப்பது    நிச்சயம்தான். ஆனால் - இறந்தபிறகு   என்ன    நடக்கும்  என்பதை  மற்றவர்களின் மரணச்சடங்கில்தான்   நாம்   பார்க்கின்றோம். விலங்குகள்   பிராணிகளின்   சவ அறை   எப்படி    இருக்கும்?  நடேசனின் நாவல்   அது   பற்றியும்   பேசுகிறது.    பதட்டத்துடனும்   அதிர்வுடனும்   அந்த    அத்தியாயங்களை    படித்தேன்.

முற்றிலும்   புதிய  களம்  இந்த   நாவலில்   விரிகிறது.    நாம் பார்க்கத்தவறிய    பார்க்கத்தயங்கும்   பேசத்தயங்கும்  செயல்படுத்துவதற்கு   அஞ்சும்   பல   பக்கங்கள்    இந்நாவலில் திரைப்படக்காட்சிகளாக    வருகின்றன. பல  பாத்திரங்கள்   வந்த பொழுதும்    ஒரே  ஒரு   தமிழ்ப்பாத்திரம்    சிவநாதன் சுந்தரம்பிள்ளை   மாத்திரம்தான்.    அவனது    மனைவி    பிள்ளைகள்   இந்நாவலில்   இரண்டாம்    பட்சம்தான்.

காலோஸ்  சேரம்   என்ற  மற்றும்   ஒரு   மிருகவைத்தியர்   மிகவும் சுவாரஸ்யமான    பாத்திரம்.    எனக்கு   அவர்    சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை   படித்தபொழுது       இந்தியாவின் பிரபல   பத்திரிகையாளர்    இலஸ்ரேட்டட் வீக்லியின்  பிரதம ஆசிரியர்   குஷ்வந்   சிங்தான்    நினைவுக்கு   வந்தார். குஷ்வந்த்சிங்   மிகவும்   உற்சாகமான   சுவாரஸ்யமான  மனிதர்.   அவர் பாலியல்    விடயங்களையும்    வெளிப்படையாகவே    பேசுபவர்    எழுதுபவர். அதில்   அவரிடம்   ஒரு    நேர்மையும்    இருந்தது.   இந்நாவலின்   கார்லோஸ் சேரம்   பல   இடங்களில்    எம்மை    வாய்விட்டு   சிரிக்கவைக்கின்றார்.

அசோகனின் வைத்திசாலை தற்போது, King Asoka’s Veterinary Hospital என்ற பெயரில் தனி நூலாக எமக்கு வரவாகியிருக்கிறது. ஆனால், இதனை மொழிபெயர்த்த எமது அருமை நண்பர் ‘யுகமாயினி ‘ சித்தன் இந்த ஆக்கபூர்வமான முயற்சியை பார்க்காமல் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டு விடைபெற்றுவிட்டாரே!? இச்சந்தர்ப்பத்தில் அவரையும் நினைவுபடுத்தும் வகையில் இந்தப்பதிவை மேலும் தொடருகின்றேன்.

சித்தனை கலை, இலக்கியத்துறையில் ஒரு சகல கலா வல்லவன் என்றுதான் சொல்லவேண்டும். அவரால் இலக்கியம் படைக்கமுடியும். ஓவியம் தீட்டுவார். கேலிச்சித்திரம் வரைவார். இதழ்கள், நூல்களுக்கு அட்டைப்படங்கள் வடிவமைப்பார். அழகாக

மொழிபெயர்ப்பார். செம்மைப்படுத்துவார். ஒளிப்படக்கலைஞர். நாடகம் எழுதுவார். நடிப்பார். இத்தனைக்கும் மத்தியில் தொடர்பாடலை நன்கு பேணுவார். இவ்வாறு பல தளங்களில் இயங்கியிருக்கும் அவரிடம் வாதத்திறமையும் குடியிருந்தது. சில திரைப்படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருப்பவர். சுறுசுறுப்பாக இயங்குபவர். சிட்னியிலிருந்த மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவர்கள் சென்னை சென்று, மித்ர பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சித்தன் அவருக்கு அறிமுகமாகியதைத்தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு முதல் சித்தன், யுகமாயினி என்னும் மாத இதழைத்தொடங்கினார். அதற்கு அந்தப்பெயரைச்சூட்டியதும் எஸ்.பொ. தான். எஸ்.பொ.வும் மாயினி என்னும் பெயரில் ஒரு நாவல் எழுதியுள்ளார்.

சித்தன், யுகமாயினி இதழை தமிழகத்திற்குள் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் அய்ரோப்பிய நாடுகளிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் களம் வழங்கும் நோக்கத்துடன் வெளியிட்டார். எஸ். பொ. நிறுவக ஆசிரியராகவும், அதன் ஆலோசனைக்குழுவில் இந்திரா பார்த்தசாரதி, சிற்பி, இன்குலாப், வி.கே.டி பாலன் (தமிழகம்) செங்கை ஆழியான் ( இலங்கை) தர்மகுலசிங்கம் (டென்மார்க்) ஆகியோரையும் இணைத்துக்கொண்டார். யுகமாயினி இதழுக்குரிய பதாகையை எழுதியர் எஸ்.பொ. இவ்வாறு அது அமைந்திருந்தது:

'முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம்'. அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் நடேசன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகரன் ஆகியோரும் யுகமாயினியில் எழுதியிருக்கின்றோம். எனது சொல்ல மறந்த கதைகள் தொடர் யுகமாயினியில்தான் முதலில் வெளியானது.  சிட்னியில் வதியும் இலக்கிய சகோதரி யசோதா பத்மநாதன் யுகமாயினி இதழ்களை தருவித்து எமக்கும் விநியோகித்தார். தரமான இதழ். சிற்றிதழ்களுக்கு நேரும் துன்பியல் யுகமாயினிக்கும் நேர்ந்து சில வருடங்களில் மறைந்துவிட்டது.

சித்தனைச்சுற்றி எப்பொழுதும் இலக்கிய நூல்களும் இதழ்களும் இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் யாராவது ஒரு கலைஞனோ அல்லது இலக்கியவாதியோ இருப்பார். அவரது பேக்கில் எப்பொழுதும் ஏதும் ஒரு புத்தகமும் ஒரு சிகரட் பக்கட்டும் இருக்கும்.  இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் நான், சித்தனைச் சந்தித்தபோது ஒரு திரைப்படத்தை எடுக்கவிருப்பதாகவும், அதற்கான திரைக்கதை வசனமும் எழுதி, படப்பிடிப்பிற்கான இடங்களும் தேர்வாகி, தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.

இறுதிக்காலத்தில் ஒரு ஆங்கில ஊடகத்தையும் தொடங்கியிருந்தார். நடேசனின் 400 பக்கங்கள் கொண்ட அசோகனின் வைத்தியசாலை நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டுத்தான் சித்தன் விடைபெற்றுள்ளார். நடேசன் தனது நாவலின் தமிழ் வடிவத்தை எனக்குச் சமர்ப்பித்துள்ளார். அதன் ஆங்கில வடிவத்தை கடின உழைப்போடு மொழிபெயர்த்த சித்தனுக்கு சமர்ப்பித்துள்ளார். இதுவும் விதிப்பயன்தானா !!??  சித்தத்தில் கலந்திருக்கும் சித்தனை மீண்டும் எழுத்தில் பதிவுசெய்வதற்கு King Asoka’s Veterinary Hospital நாவல்தான் காரணம் ! இதனைப்பார்க்க நண்பர் சித்தன் நம்மத்தியில் இல்லையே என்பதை வலியுடன் உணர்கின்றேன். நாம் சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரை சித்தனின் உருவத்தில் இழந்துவிட்டோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R