பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (7) - யப்பானிய தேயிலை - நடேசன் -
ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.
டோக்கியோவிலிருந்து, நாகோயா என்ற பெரிய நகரத்திற்கு பஸ்ஸில் போகும் பாதை, வளைவுகள் மலைகள் நிறைந்தது. ஒரு பக்கம் பச்சை சிவப்பு என வர்ணம் கலந்த மலைச்சிகரங்களின் நிரந்தர அணிவகுப்பு மறுபக்கம் தூரத்தில் அமைதியான நீல வர்ணத்தில் பசுபிக் சமுத்திரம் என்பது அழகான காட்சி , அதுவும் இலையுதிர்காலம் கண்ணுக்குக் கல்யாண விருந்தாக இருந்தாலும், என் மனதில் வெளியே தெரியும் அழகிற்கு மாறாக உள்ளே இருப்பது நமக்குத் தெரியாது. கோபத்தில் கொதிக்கும் நிலமும், பொங்கி அதிரும் கடலும் நினைவுக்கு வந்தது. யப்பான் மூன்று கண்டங்களின் நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்ற இயற்கை அழிவுகள் நமது தவிர்க்க முடியாத உறவினர்கள்போல் வந்து தங்கிப் போவன.