சிறுகதை: மனிதம் - கே.எஸ்.சுதாகர் -
வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. வேப்பமரமொன்று தலை சாய்த்துவிட்டு எழும்பி நிற்கின்றது. கண்டி – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேரம் மதியம் தாண்டி இரண்டை எட்டிப்பிடிக்கிறது.
“இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்யவேண்டியிருக்கு. உப்பிடியே படுத்திருந்தால்?” மனைவி வயிற்றைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள்.
இன்னும் பத்து நாட்களில் நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்படவேண்டும். இந்தப் புலம்பெயர்வு விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. என்னுடைய நண்பர்களில் பலர் முன்னதாகவே, இலங்கையை விட்டுப் புறப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சிதறுண்டு போய்விட்டார்கள். இருந்து பார்த்துவிட்டு, நாட்டு நிலைமைகள் மிகவும் மோசமடையவே நானும் புறப்படுவதற்கு ஆயத்தமானேன். இதுவரை சொந்தநாட்டுக்குள்ளேயே நான்கு இடங்கள் இடம்பெயர்ந்துவிட்டேன். வடபகுதிக்குள் இரண்டு இடங்கள், பின்னர் தலைநகரம் கொழும்பு, இப்போது வன்னி. 1990 ஆம் ஆண்டு முதன்முதலாக இடப்பெயர்ந்த போது வீடுவாசல் சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தேன். அதன் பிறகு உயிரைக் கையில் பிடித்தபடி மாறி மாறி ஓட்டம்.
நியூசிலாந்து போவதற்கான எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. மனைவி ஏழுமாதக் கர்ப்பிணி. முதலாவது பிரசவம். இனியும் தாமதித்தால் அவரை விமானத்தில் ஏற்றமாட்டார்கள். வன்னியில் வேலை செய்வதால், அங்கு இருந்துகொண்டு பிரயாணம் தொடர்பாக எதையும் செய்துகொள்ள முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பின்னடைவையே தரும்.
வீட்டு முகப்பில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. மனைவி ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்துவிட்டு, “உங்களுடன் வேலை செய்யும் யோகன்” என்றார். பாயைச் சுருட்டிக் கரையில் வைத்துவிட்டு வெளியே வருகின்றேன்.