எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி.. - வ.ந.கிரிதரன் -
நூலை பெற்றுக்கொள்வதற்கு: சவுத் விஷன் புக்ஸ், 491-B, G2 - ஓமேகா, பிளாட்ஸ், தரைத்தளம், நான்காம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம் , சென்னை - 600 091 மின்னஞ்சல் முகவரி - southvisionbooks@!gmail.com | தொலைபேசி இலக்கம் - 94453 18520
எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின் பிரதிபலிப்புகள்.
ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.
தற்போது ஜோதிகுமார் பதிவுகளில் எழுதிய கட்டுரைகளின் ஒரு தொகுதி சவுத் விசன் புக்ஸ் மற்றும் நந்தலாலா பதிப்பக வெளியீடாக 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளன.
இக்கட்டுரைத்தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மலையகத்தமிழ் எழுத்தாளர் சி.வி.வெலுப்பிள்ளை போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளுடன் ஜெயமோகன், அசோகமித்திரனின் நாவல்கள் (ரப்பர், 18ஆவது அட்சக்கோடு) பற்றிய இலக்கியத் திறனாய்வுகளும் இடம் பெற்றுள்ளன.