எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -
தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"டொமினிக் ஜீவா போன்ற வாழ்நாள் போராளி மீது விமர்சனம் வைக்கும்போது, ஒன்றுக்கு நான்கு தடவைகள் யோசித்துப் பேசுவதே நல்லது. அனோஜன் பாலகிருஷ்ணன் இன்றைய நிகழ்வில் 'டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீது அச்சம் இருந்தது' என்று சொன்னது தவறு. 'தமிழ் மொழிச் செயற்பாட்டகம்' மு.தளையசிங்கம் குறித்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார். மு.தளையசிங்கத்தை மதிப்புறப் பேசுவதற்காக, ஜீவாவை மதிப்பிறக்கிப் பேச வேண்டிய அவசியம் கிடையாது. இது ஜீவா மீதான கடுமையான பழிச் சொல்! மல்லிகை இதழில் அப்போது ஏன் செய்தி வெளியிடவில்லை எனப் பதில் சொல்ல இப்போது நம்மிடையே ஜீவா இல்லை. "
இதில் அவர் அனோஜன் பாலகிருஷ்ணன் மல்லிகை ஆசிரியரான அமரர் டொமினிக் ஜீவா மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை வைத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அது: "அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார்".