சிறுகதை : சீத்துவக்கேடு - எஸ் அகஸ்தியர் -
- எழுத்தாளர் அகஸ்தியர் நினைவு தினம் டிசம்பர் 8. -
‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
இவள்பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.
‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’
கள்ளி, மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.
‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’
‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’
‘அக்காள், வாய் புளிக்குது, உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’
ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா, ‘தாக்கற’ இருந்து வெத்திலையும் சப்பிக்கொண்டு வியளம் பறைய வந்திருக்கிறாளுகள்.
‘தந்தி குடுத்து ரண்டு நாளாப்போச்சு, இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும் வரக்காணன், என்ன சங்கதி?’
‘வயிலசில பேசினாச் சுறுக்கில் கிடைக்குமல்லே’
‘தந்தி என்னெண்டு குடுத்துதுகளோ?’
‘ஆச்சிக்குக் கடுமை உடனே புறப்பட்டு வாருங்கோ’ண்டு தான் அடிச்சவையாம்’
‘ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் மறுமொழி வரேல்லயாமோ?’
இதேன் இவளவே இதுகளைக் கிண்டிக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ தெரியல்லே.
‘இல்ல பாவம், தேப்பன் மனுசன் தந்தி குடுத்துப்போட்டுப் பெஞ்சாதிக்குப் பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு’
வேண்டிப்போட்ட வெத்திலை பாக்குச் சமையப் போகுதாக்கும் தேப்பனைத் தின்னியளாட்டம் மனிசனிலையும் பரிவு காட்டிக் கரிசனையாய்ப் பறையிறாளவ.