ஆய்வு: புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இதழியற் செயற்பாடுகள்! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
அறிமுகம்புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும் நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன
1983 யூலைக் கலவரங்களுக்குப் பின்னரே இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள் பெருமளவில் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களின் இலக்கியச் செயற்பாடுகளே ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகைமைக்கு வழிவகுத்தது. புலம்பெயர்ந்தவர்களில் எழுத்தார்வம் உள்ளோர் தங்கள் அக - புற நெருக்கடிகளை, உணர்வுகளை வெளிப்படுத்த இதழ்களை வெளியிட்டனர். ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் வடஅமெரிக்காவில் கனடாவிலும் இருந்து அதிகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்த வரலாறு இவ்வாறுதான் ஆரம்பித்தது. இந்த முயற்சிகள் புலம்பெயர்ந்தோரின் இதழியல் வரலாற்றில் ஆவணப்பதிவுகளாக அமைந்துள்ளன.
முதல் முயற்சி
புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து முதலில் வெளிவந்த சஞ்சிகையாக ‘தமிழ்முரசு’ என்ற இதழை இனங்காணலாம். பிரான்சில் இருந்து வெளியாகிய இவ்விதழ் பற்றி கலைச்செல்வன் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“பிரான்சில் புகலிட இலக்கியத்தின் உருவாக்கம் கார்த்திகை 1981 இல் வெளியான ‘தமிழ்முரசு’ என்னும் சஞ்சிகையுடன் உருவாகின்றது. இலங்கைத் தமிழரிடையே 1981ஆம் ஆண்டில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப்போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதன்முதல் தமிழ்முரசு 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியது.” (16ஆவது இலக்கியச் சந்திப்பு மலர், நெதர்லாந்து, 1993) என்று ‘பிரான்ஸ் தமிழ்ச் சஞ்சிகைகள் ஒரு பதிவு’ கட்டுரையில் கலைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முரசின் ஆசிரியராக உமாகாந்தன் பணியாற்றினார். தமிழ்முரசு ஆரம்பத்தில் 16 பக்கங்கள் கொண்ட கையெழுத்திலான ஒளிப்படப்பிரதியாகவும் (Photo Copy) பின்னர் 40-60 பக்கங்களைக் கொண்ட தட்டச்சுச் செய்யப்பட்ட பிரதியாகவும் 1981-1989 ஆம் ஆண்டுவரை 72 இதழ்கள் வெளியாகியது. கலை இலக்கியம் அரசியல் குறித்த இவ்விதழின் ஊடாகவே உமாகாந்தன், செல்வம், கலாமோகன், அருந்ததி, சுகன், தேவதாஸ் முதலான படைப்பாளிகள் இலக்கியச் சூழலில் அறியப்பட்டனர்.