கம்பராமாயணம் கூறும் வாழ்வியல்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -
முன்னுரை
வாழ்வியல் நெறி என்பது செம்மையான வாழ்க்கை முறை எனலாம். இல்வாழ்வானுக்குரிய பண்பாக வள்ளவர் அன்பு, அறம் ஆகியவற்றைக் கூறுகிறார். நற்பண்பு கொண்ட இச்சான்றோர் பண்பாக அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றை வள்ளுவர் காட்டுகிறார். பெண்களுக்குரிய வாழ்வியல் பண்பாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, விருந்தோம்பல், கணவனைத் தெய்வமாகக் கொண்டொழுகுதல் முதலிய பண்புகளைக் காட்டுவர். இத்தகு வாழ்வியல் நெறிகளைக் கருவிலே திருவுடைய கம்பர் தமது காப்பியமான கம்பராமாயணத்தில் இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறே போல் உயர்த்தி காட்டுகின்றார். இதனை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி - பெண்மை சிறக்க செய்வது
இல்லறம் இனிமை பெற, இல்லாள் அறிவும், பண்பும் பெற கல்வியே அடிப்படை ஆகும். கல்வி பெற்ற பெண்டிரே இல்லறப் பண்பை உணர்ந்த இனிது நடத்தி செல்ல முடியும். வறுமையால் வாடி வந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவினர். விருந்தினர் அருந்தி மகிழ உணவை அளித்தனர். கோலச நாட்டு குடும்பங்கள் இவ்வாறு குறைவின்றி வாழ்ந்தன என்று கோசல நாட்டைப் பற்றி கூறும் போது கம்பர் கூறுகிறார். இதனை,
பெரும் தடங்கண் பிறை நுதலார்க்கெலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும் அன்றி விளைவன யாவையே (36)
என்கிறார்.