Adolescence – TV miniseries - ஶ்ரீரஞ்சனி -
NetFlix இல் வெளியாகியிருக்கும் Adolescence என்ற குறுகிய தொலைக்காட்சித் தொடரைப் பதின்மவயதினருடன் தொடர்பாக இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டும். நான்கு பகுதிகளைக் கொண்ட இதன் முதல் தொடர் தொடர் என் ஆசிரியர் வேலையுடனும், மொழிபெயர்ப்பாளர் வேலையுடனும் தொடர்பானதாகவும், நான் பார்த்திருந்த காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்ததால், ஒரேயடியாக இருந்து முழுவதையும் பார்த்துமுடித்தேன்.
வன்முறையின் உச்சக்கட்டம்தான் கொலை. ஆனால், வன்முறையாளர்கள் எல்லோரும் கொலைசெய்வதில்லை. கொலைசெய்வதற்கு உளவியல்ரீதியான காரணங்கள்தான் ஏதுவாக இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். சக மாணவி ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒரு 13 வயதுச் சிறுவனுக்கு எவை உந்துதலாக இருந்தன என்பதைச் சொல்லும் இந்தத் தொடர் சமூக ஊடகங்களின் செல்வாக்குப் பற்றியும் எச்சரிக்கிறது.
பொதுவில், தன் செயல்களுக்குப் பொறுப்பெடுக்காத, சமூக விரோதக்குணம் கொண்ட psychopathஆக இருப்பவர்கள்தான் கொலைசெய்கிறார்களெனக் கூறப்பட்டாலும்கூட, அந்த மாணவன் அப்படியானவன் என்பதற்கான அறிகுறிகள் இதில் காட்டப்படவில்லை, அப்படியிருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த முடியாது என்றாலும், நேரத்துடன் கண்டறியப்பட்டால் சிகிச்சைகளால் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதில் அச் சிறுவனுக்கு சுயமதிப்பின்மை, தன் உணர்சிகளைக் கையாளத் தெரியாமை என்பன இருந்தமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையான பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய தொடர்பாடலைச் சந்ததி இடைவெளி முன்னெப்போதையும்விட அதிகமாக இப்போது தடைசெய்கிறது. அதுவும் ஆண் பிள்ளைகள் பொதுவில் தங்களைப் பற்றிக் கதைப்பதேயில்லை. எனவே உரையாடல்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்பதையும் இது விளங்கவைக்கிறது.