
தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏபரில் 23 நடைபெறவுள்ளது. இத்தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை திமுகவின் வெற்றியையே எதிர்வு கூறுகின்றன. இந்நிலையில் தற்போது நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் பற்றிய என் ஊகத்தை முன் வைக்கின்றேன்.
கடுமையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமிடையில்தான் நடக்கின்றது. நடிகர் விஜய்யிற்கு வெறித்தனமான , பெரும்பாலும் இள வயதினரான இரசிகர்களின் ஆதரவு உண்டு. 'நாம் தமிழர்' சீமானுக்கு அவரது உறுதியான தமிழ்த்தேசிய வெளிப்பாடு காரணமாக வாக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆதரவு உன்டு.
அதிமுகவைப் பொறுத்த வரையில் என்னைப் பிரமிப்படைய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா அணி, செங்கோட்டையன் அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்திருந்த அதிமுக இத்தேர்தலில் காணாமல் போகுமென்று அரசியல் அவதானிகள், ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில் திமுகவுக்கு எதிரான பலமான எதிரியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருப்பது அவரது ஆளுமைக்குக் கிடைத்த வெற்றி. அவரது பலவீனம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மட்டுமல்ல, அதன் அடிவருடிபோல் செயற்படுவது. மோடி அரசு இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் துருப்புச்சீட்டாக வைத்து இவரைத் தம் கைகளுக்குள் அடக்கி வைத்திருப்பது போல் தெரிகிறது.
நடிகர் விஜய்யின் பின் கணிசமான இளவயது வாக்காளர்கள் தொடர்ந்தாலும், தேர்தலில் வெல்லும் அளவுக்கு வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. இத்தேர்தலில் தமிழக அரசியலின் பலமான மூன்றாவது அணியாக அவர் உருவெடுப்பார். அடுத்த பத்தாண்டுகள்வரை அவர் திரைப்படங்களில் நடித்தபடி , எம்ஜிஆர் செய்தது போல் தன் கட்சியைத் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வந்தால், அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து வந்தால் எதிர்காலத்தில் முதல்வராக ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். அதுவும் சரியான ம், வலுவான கூட்டணி அமைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். அடுத்தது கரூர் சம்பவம், மனைவி சங்கீதாவின் விவாகரத்துக் கோரிககை போன்றவை அவரது ஆளுமை பற்றிய விடயத்தில் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பும் விடயங்களாக மாறியுள்ளன. இது விஜய்யின் அரசியலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவன.
சீமானைப்பொறுத்தவரையில் அவரது வாக்கு வங்கியில் பெரிதாக மாற்றம் ஏற்படுமென்று நான் கருதவில்லை. அவர் தமிழகத்தில் தமிழர்களாக வாழும் தமிழக மக்களை அவர்கள்தாம் மூதாதையர் அடிப்படையில் தனித்தமிழர் , பிறமொழியினர் எனப்பிரித்து அரசியல் செய்கின்றார். அதன் காரணமாகத் தனித்தமிழ், எதிலும் தமிழ் போன்ற தமிழ் உணர்ச்சி வெறியினரின் ஆதரவு மட்டுமே அவருக்குக் கிடைக்கும். அதனால்தான் இதுவரையில் அவரால் குறிப்பிட்ட சத வீதத்துக்கு அப்பால் தன் ஆதரவைப் பெருக்க முடியவில்லை. அதற்கு அனைத்துப் பிரிவினரின் ஆதரவும் தேவை.
இந்நிலையில் தேர்தலைச் சந்திக்கும் கூட்டணிகளில் வலுவான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி. மாநில உரிமை, சமத்துவம், சமநீதி , பகுத்தறிவு , மதச்சார்பினை, பெண்கள் நலத் திட்டங்கள் போன்ற பல காரணங்களுக்காக இத்தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகமுள்ள கட்சி திமுக கட்சியே.
தொங்கு சட்டசபைக்கான சாத்தியம் அரிது. அதிமுக மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தால் , விஜய்யின் பிரிக்கும் வாக்குகளால் எந்தக் கட்சியும் போதிய பெரும்பான்மை பெறாத நிலை உருவாகலாம். ஆனால் அதற்கான சாத்தியம் அரிது.
இந்திய அரசியலில் அரசியலும் , ஊழலும் இணைபிரியாத சகோதரர்கள். அதனால் ஊழல் முக்கிய விடயமாகத் தேர்தலில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
இந்நிலையில் வலுவான கூட்டணி, மத்திய அரசு விடயத்தில் உறுதியான மாநில எதிர்ப்பு , பெண்கள் நலத்திட்டங்கள் போன்றவை காரணமாகத் திமுக வெல்வதற்கே அதிகமான சாத்தியங்கள் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









