- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. -
ஆய்வுச்சுருக்கம்பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.
திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர், பனிச்சறுக்கல், நங்கூரி, உறவுகள்
தொடர்கதை.
அறிமுகம்
குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது.
இவரது புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டும், குறும் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைமகள் விருது, விகடன் விருது, உதயன் தங்கப்பதக்க விருது, தமிழர் தகவல் விருது, தமிழ்மிரர் விருது, ஞானம் விருது, சிறுகதைவித்தகர் விருது, சிறந்த ஊடகவியலாளருக்கான கவர்னர் விருது, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான ஜனகன் பிச்சேஸ் விருது, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க விருது, மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவருக்கான சாதனையாளர் விருது போன்ற பல பரிசுகளையும் விருதுகனையும் பெற்றிருக்கிறார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற் போல அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால் அவர் ஆக்கங்களும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டவையாக அமைகின்றன.
- எழுத்தாளர் குரு அரவிந்தன் -
சிறுகதை
சிறுகதை என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பு. அதில் நிறைய நிகழ்ச்சிகள்,விபத்துக்கள், திடீர்த்திருபப்ங்கள், எதிர்பாராத வளர்ச்சி மூலம் உச்சக்கட்டத்தை அடைதல், நிறைவான முடிவு போன்றவை இருக்க வேண்டும் என்பார் ஹியூக் வாவ்போல். ஒரு சிறுகதை மூலக்கருத்து ஒன்றையும் ஓரே ஒரு கதைப் பொருள் கூறையும் கொண்டிருப்பதால் அது நாவலிலிருந்து வேறுபடுகின்றது. கதாாசிரியரின் சிந்தனையில் பிறந்து அது வாசகனின் சிந்தகனையில் நிறைவு பெறுகிறது . சிறுகதையின் அமைப்புச் சிறப்படைவதற்கு சிறந்த தலைப்பு, தொடக்கம், நேர்த்தியான கருப்பொருளும் கதைப்பின்னலும், மனத்தினின்று அகலாத பாத்திரங்கள், நுட்பமாகக் கதைகூறல், சிறுகதையின் கால இடஅமைவு, பாத்திரப் பேச்சு, சிறந்த முடிவு என்பவை இன்றியமையாதவை. இவற்றின் தளங்களில் நின்றே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுகதைகளும் திறனாய்வு செய்யப்படுகின்றன.
முதலாவதாக குரு அரவிந்தனின் ‘புல்லுக்கு இறைத்த நீர்’ என்பதனை எடுத்துக் கொள்வோம். தள்ளாத வயதிலுள்ள ஆசிரியர் தான் கற்பித்த சிறந்த மாணவர்களைச் சந்திக்கும் போது ஏற்படும் விகசிப்பையும், எதேச்சையாக சமூகப் பிறழ்வுகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட மாணவனைச் சந்தித்ததால் அவரடைந்த ஆதங்கத்தையும் எடுத்தியம்புகிறது. அந்த மாணவனின் சமூகப்பிறழ்வுக்கு யார் காரணமென்பதே கதையின் கருவூலம்.
அடுத்த கதையாகிய ‘நங்கூரி’ என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் இக்கதை 1983ம் ஆண்டு சிங்கள இனவாதத்தால் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தால் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களைச் சுமந்து கொண்டு தமிழ்க் கரையோரப் பிரதேசங்களூடாகக் காங்கேசன்துறையைச் சென்றடையும் நங்கூரி எனும் கப்பலில் நிகழும் சோகக்கதையைப் பேசுகிறது. பயணக் காலமான அந்த இரண்டு நாட்களில் தான் எத்தனை பாத்திரங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், எத்தனை விவாதங்கள், எப்படிப்பட்ட தீர்வுகள், அது ஓர் துன்பியல் நாடகம் என்பதை ஆசிரியர் யதார்த்தபூர்வமாக எழுதியுள்ளார்.
மூன்றாவது சிறுகதையாகிய ‘பனிச் சறுக்கல்’ என்பது, பனிச்சறுக்கல் விளையாட்டை புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் புனையப்பட்டதாகும். மனவிருப்பமன்றிக் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈழத்துப் பெண் புலம்பெயர் நாட்டு மணமகனைத் திருமணம் செய்து அந்த நாட்டிற்குச் சென்ற பின் அங்குள்ள இயற்கைச் சூழலுக்கு மேலாக, சமூகச் சூழலுக்கு இசைவாக்கமடையும் போது அவள் பட்ட துன்பத்தையும், அவளுக்கேற்பட்ட சோக நிகழ்வையும் எடுத்தியம்புகிறது.
நான்காவது சிறுகதையாகிய ‘உறவுகள் தொடர் கதை’ என்பதாகும். ஈழத்தில் நடந்தேறிய யுத்ததாண்டவத்தின் கோரப்பிடியில் சிக்கிய தனயன் உயிரைக் காப்பாற்ற தாயின் விருப்பத்துடன் கனடாவில் தஞ்சமடைகிறான். ஈழத்தில் தனியாக வாழ்ந்த தாய் யுத்தம் காரணமாக நிகழ்ந்ந இடப்பெயர்வுகளில் எங்கு போனாள் என்றறியாத தனயன் பல காலங்கள் கழித்து யுத்தம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் அவளைத் தேடித் தனது குடும்பத்தாருடன் தாய் நாட்டிற்கு வருவதையும் அதன் பின் நடந்தேறிய தொடர் சம்பவங்களையும் சித்தரிப்பதாகும்.
கதைகளின் தலைப்புகள்
சிறுகதைக்குப் பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களுக்கு முதலில் அறிமுகமாகின்றன. ஒரு கதைக்கு ஒரே ஒரு சரியான பெயர்தான் இருக்க முடியும். அந்தப் பெயரைத் தேடிப் பிடிப்பதில் தான் சிறுகதையாசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது.சிறுகதைக்குத் தலைப்பிடும்போது அதன் தொடக்கம், அதன் முடிவு, அதன் பிரதான பாத்திரம், அக்கதை கூறும் பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தலைப்பிடலாம். குரு அரவிந்தனின் புல்லுக்குிறைத்த நீர் சிறுகதையானது அங்கு கூறப்படும் பொருளை வைத்து உட்கருத்தை உள்ளடக்கித் தலையிடப்பட்டுள்ளது. நங்கூரி, பனிச்சறுக்கல் ஆகிய சிறுகதைகளின் தலைப்பானது கதையின் தொடக்கமாக அமைந்திருக்கின்றது. உறவுகள் தொடர்கதை என்ற கதை அக்கதையின் முடிவைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ஆக, சிறுகதைகளுக்குப் பெயரிடுவதில் குரு அரவிந்தன் அவர்கள் தனது தனித்திறமையை நிலைநிறுத்தியுள்ளார்.
சிறுகதையின் தொடக்கம்
மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளுக்குமே கதைப் பொருளுக்கும் கதைக்கருவிற்கும் ஏற்ற தொடக்கங்கள் அமைந்துள்ளன. கதாசிரியர் சிறுகதைகளின் ஆரம்பத்திலேயே வாசகரின் கவனத்தையும் ஆவலையும் தூண்டுவதாகவே கதைகளைப் புனைந்துள்ளார் .
கதைக்கருவும் கதைப் பின்னலும்
எந்தவொரு நிகழ்ச்சியின் மேல் சிறுகதை பின்னப்பட்டுள்ளதோ அந்த நிகழ்வு சிறுகதையின் கருவாகும். கரு கதையின் சிறப்புக்கு மூல காரணமாக அமைகின்றது. கருவில் திரு இல்லையேல் கதையிலும் வளமிருக்காது. சிறுகதை, ஆசிரியரின் அனுபவத்திலிருந்து முகிழ்கின்றது. ஆசிரியர் எங்கோ எப்போதே பார்த்த ஒரு நிகழ்ச்சி கேட்ட சம்பவம் அவருக்கு நேரிட்ட சில அனுபவங்கள் இவையே நினைவாகிச் சிறுகதையாகின்றன. வேறு வேறு காலங்களில் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் கதாசிரியர் கற்பனையுடன் கலந்து அவற்றைக் கோர்த்து விடுகிறார். இதுவே கதைப்பின்னலாகும்.
விகடனில் வெளிவந்த ‘புல்லுக்கு இறைத்த நீர்’ மனதைத் தொடும் கதை. கதைத் தலைவனாக தள்ளாத வயது ஆசிரியர் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவரின் வாழ்வின் நிகழ்காலத்திலிருந்து சம்பவங்கள் பின்னோக்கிப் பின்னப்பட்டிருக்கின்றன. தன்னிடம் கல்வி பயின்று சமுதாயப் பிறழ்வில் சிக்குண்ட மாணவனொருவனைச் ஏதேச்சையாக கதைத்தலைவன் சந்திக்கும் போது அவரிடம் ஏற்படும் உணர்வுகளின் ஆதங்கத்தை கதாசிரியர் நுட்பமாக விபரித்திருக்கின்றார். . பிள்ளைகள் தமது இலக்குகளை அடையாளம் காணும் போது பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்வதே முக்கியம். மாறாகத் தமது சொந்த இலக்குகளைப் பிள்ளை மீது திணித்ததால் அப்பிள்ளை எவ்வாறு சீரழிந்துள்ளான் என்பதனையும் ஆசிரியரும் தானும் அதற்கொரு காரணமாக இருக்குமோ என்று ஏங்குவதையும் கதாசிரியர் சமூகத்திற்கு இக்கதையின் வாயிலாக எடுத்தியம்புகின்றார்.
விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி’ என்ற கதையை எடுத்துக் கொண்டோமானால் இக்கதையானது 1983ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டதாகும். காடையர்களால் கற்பழிக்கப்பட்ட் பெண்ணும் அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளில் பழிபோடும் கையாலாகாத கணவனும், அவர்களை ஆற்றுப்படுத்தும் பெண் ஆசிரியரும் நங்கூரி என்ற கப்பலில் அகதிகளோடு அகதிகளாகக் காங்கேசன்துறைக்குக் கொழும்பிலிருந்து இரண்டு நாட்கள் பயணிக்கிறார்கள். மனைவி காடையர்களால் கற்பழிக்கப்பட்டமை அருவருப்போடு நோக்கும் கணவன் மானங்கெட்டுவிட்டதாகத் தற்கொலைக்கு முயல்கின்றான். மனைவியம் கணவனின் சுடுசொற்கள் தாங்காமல் தற்கொலைக்கு முயல்வாள் என்று பீதியுற்ற பெண் ஆசிரியர் அவர்களை ஆற்றுப்படுத்தி அனைவரும் கரையைச் சென்றடைகின்றனர். நெருக்கீட்டிற்குப் பின்னரான மனவடுவால் கணவன் மனநோயாளியாகிவிடுகிறான். மனைவி தான் பட்ட அவலத்திலிருந்து மீண்டு வந்து முதியோர் இல்லத்தில் கடமையாற்றுகின்றாள். ஆசிரியரின் மகள் இனப் பிரச்சினையால் ஏற்பட்ட அவலங்களைக் கேள்வியுற்று விடுதலைப் போராளியாகி மாவீரராக மரணிக்கிறாள்.
கதை ஆரம்ப கட்டத்திலிருந்து முன்னோக்கிப் பின்னப்பட்டுள்ளது. கதாசிரியர் இங்கு பெண் கதாப்பாத்திரங்களை எந்தச் சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உயிர்ப்பான பாத்திரங்களாகச் சிருஷ்டித்துள்ளார் .ஆற்றுகைப்படுத்திய ஆசிரயர் தனது மகள் மரணிப்பிலும் பெருமை கொள்கிறாள் எனக் கூறுமவர் அப்பெண் பாத்திரத்தின் மன வலிமையை இறுக்கமாகச் சித்தரித்துள்ளார்.
பனிச்சறுக்கல் சிறுகதையில் சித்தரிக்கப்படும் பெண் பாத்திரம் தாய் நாட்டிலிருந்து புலம் பெயர் நாட்டுக்குத் திருமணமாகிச் செல்கிறாள். அங்குள்ள பண்பாட்டுச் சூழலுக்கு இசைவாக்கமடைய எண்ணி அருந்திய மென்பானத்தில் யாரோ கலந்து கொடுத்து மதுபானத்தால் அவள் தன்னிலை மறக்கக் கணவனல்லாத யாரோ ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகி கின்றாள். கதையின் உச்சம் அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதுதான். எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் இப் பாத்திரத்தைப் படைத்துள்ளார். செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை நசுக்க முடியாது. பாதிரத்தைப் படைப்பது பெரிதல்ல, அதில் எழுத்தாளரின் பரிவுணர்ச்சியும் இருக்க வேண்டும். அந்த வகையில் கதாசிரியர் அப் பெண் பாத்திரத்தின் உள்ளக்கிடக்கையை பனிச்சறுக்கல்களால் ஏற்படும் விபத்துக்கள் குடும்ப எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதுடன் ஒப்பிட்டு அப்பாத்திரத்துக்கு புதிய வலிமையையும், நம்பிக்கையையும் அளித்து வாழ வைத்திருக்கிறார்.
அடுத்து உறவுகள் தொடர்கதை என்ற கதையை எடுத்துக் கொண்டால் தாய் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைக்க புலம்பெயர் நாட்டில் தஞ்சமடைந்த தனயன், தனியாக விட்டுச் சென்ற தாயைத் தேடும் படலமாகும். தனியாக இருந்த தாய் இடம்பெயர்ந்து எங்கு சென்றிருப்பாள்? அல்லது உயிருடன் இருக்கின்றாளா? என ஏங்கிய தனயன் யுத்தம் தளர்வடைந்த போது தாய் நாட்டிற்குத் தனது குடும்பத்துடன் புறப்படுகிறான். அவனுடைய அன்பு மகள் புலம்பெயர் நாட்டில் பிறந்திருந்தாலும் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அங்கு கருணை இல்லத்திலுள்ள உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறாள். தனயன் எல்லா இடங்களிலும் தாயைத் தேடி இறுதியாகக் கருணை இல்லத்துக்கு வருகிறான். அங்கும் தாய் இல்லாமையால் ஆதங்கப்படுகிறான். ஆனால் அந்தக் கருணை இல்லத்தில்தான் தாய், எல்லாம் மறந்த நிலையில் இருந்தாலும் தனயனால் அடையாளம் காணப்படவில்லை. அவனது மகள் அடையாளம் காணுகிறாள். உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்பது போல் தனயனின் தாய் பற்றிய உணர்வலைகளை எழுத்தாளர் எட்ட நின்று விபரித்தது போல் தோன்றுகிறது. தனயன் பாத்திரத்தின் உணர்வுகளை அவருடைய மனதினூடாகவும் காட்டியிருந்தால் கதை இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும்.
புலம்பெயர் நாட்டில் பிறந்த மதலையின் மனிதத்துவம் மெச்சத்தக்கது. இச் செயற்பாடு அங்கு பிறந்த ஏனைய குழந்தைகளுக்கு முன்னுதாரமாகும் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கூறப்பட்ட கதைகளில் ஆசிரியர் கதைகளின் கருப்பொருளை விரித்துக் கூறி அவர் உணர்த்த விரும்பும் இலட்சியத்தை அக்கருப் பொருட்களினூடாக அதனின்று மாறுபடாமல் வெளிக்கொணர்ந்துள்ளார். வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்வையாக்கி ஒழுங்குபடுத்தி மையக்கருவுடன் பின்னிக் கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாமல் கதைகளை எங்கே உச்சம் தொட வைப்பது, எங்கே திடீரென்று ஆச்சரியத்தைப் புகுத்துவதென்று துல்லியமாகக் கணித்து வாசகர்களின் மனதைத் தொட்டுள்ளார்.
கதையின் கால அமைவு
நவீன உலகம் இயந்திரமாகிவிட்டது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் ஆழ்ந்து படித்கது அனுபவிக்கக்கூடிய பொறுமை மக்களுக்கில்லை. கதைகள் படிப்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி அவர்கள் குறுகிய நேரத்தில் புதுமையைக் காணத்துடிக்கின்றனர். சிறுகதையில் காலம் - அக்கதையை வாசிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதென்பது மட்டுமல்ல அது அதிலமைந்த உட்பொருளைப் பொறுத்ததாகவும் கையாளும் விதத்தைப் பொறுத்ததாகவும் அமையும் . சிறுகதையின் காலம் கற்பனையாகவே கையாளப்படுவது ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.
கதாசிரியர் இந்தவகையில் மேற்கூறப்பட்ட நான்கு கதைகளையும் வாசகர் குறைவாகவும் இல்லை, மிகையாகவும் இல்லை என்று கூறுமளவிற்கு தான் சொல்ல வந்த கதையின் கருப்பொருளை கலைக்காமல் காலத்தைக் கற்பனையாகக் கையாண்டு செம்மையாக அதிக நீட்சியில்லாமல் நிறைவு செய்திருக்கிறார்.
பாத்திர அமைப்பு
படைப்பில் முன்னிலை வகிப்பது பாத்திரங்களாகும். சிறுகதை என்பது சிறியகதை. ஆதலால் அதில் அவசியமற்ற பாத்திரங்களைப் படைக்க முடியாது. ஆசிரியர் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தே படைக்க வேண்டும். சிறுகதையில் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள் அமைவதே சிறப்பு. படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களுக்காக அநேக விதமான மனித இயல்புகளையும் தெரிந்த வைத்திருக்க வேண்டும். குரு அரவிந்தன் அவர்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நான்கு கதைகளிலும் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.
புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் ஆசிரியர், மாணவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும், நங்கூரியில், அக்கா, கணவன், மனைவி அவர்களின் மகன் மற்றும் அக்காவின் மகள் ஆகிய ஐந்து பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும் அக்கா என்ற பாத்திரத்தைத் தவிர மற்றைய பாத்திரங்களின் இயங்கு நிலைகளை மட்டுப்படுத்திக் கதையை திறம்பட நகர்த்தியுள்ளார். பனிச்சறுக்கல்கள் கதையில் கணவன், மனைவி பிரதான பாத்திரங்களாகக் காண்பிக்கப்பட்டு அதேநேரம் நண்பர்கள் பாத்திரங்களை தேவைக்கேற்ப கையாண்டு கதையை நிறைவு செய்திருக்கிறார். உறவுகள் தொடர்கதை என்ற கதையில் தாய், மகன், மனைவி இவர்களின் மகள் என்றவாறு நான்கு பாத்திரங்களுடன் கதையை நகர்த்தியுள்ளார். மேற்கூறப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களுக்குரிய குணச்சித்திரங்களையும் எடுத்துக் காட்டி ‘இந்த மனிதரை எங்கோ பாத்திருக்கிறோம்’ என்று வாசகர் சொல்லுமளவுக்கு பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார்.
பாத்திரப் பேச்சு
ஒரு பாத்திரத்தின் பண்பை விளக்கிக்காட்டும் சிறந்த கருவிதான் பேச்சாகும். ஆசிரியர்கள் பாத்திரங்களின் தரத்துக்கு ஏற்ப பேச்சை அமைக்க வேண்டும். படிக்கின்றவர் இந்தப் பாத்திரம் இப்படித்தான் பேசும். இதைத் தவிர வேறு வகையாகப் பேச முடியாது என்று கருத வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கு கதைகளிலும் பாத்திரப் பேச்சானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்காக இருந்த போதும் கதாசிரியர் இலக்கணம் சார்ந்த பேச்சு முறையே அதிகமாகக் கையாண்டுள்ளார். இந்த மொழிநடையைத் தமிழ் அறிஞர்கள் தாயகத் தமிழ்நடை, புலம்பெயர் தமிழ்நடை என வகைப்படுத்துகின்றனர். (சதிவிரதன், ப – 15 முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்). இது தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சி நிலையெனக் கருதப்படுகின்றது. வாசகர்களும் புரிந்து கொள்ளக்கூடிய இவரது இத்தகைய வகைப்பாட்டை ஊடகங்களும் பேணிவருகின்றன.
கதை கூறும் முறை
பெரும்பாலும் யார் மூலமாகக் கதை கூறப்படுகிறது? ஆசிரியனுக்கும் கூறுகிறவருக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதே கதை கூறும் முறையாகும். ஆசிரியர் கதை கூறும் போது தான் எங்கேயும் உரைதராமல் படர்க்கையில் நின்று கதை கூறுவது சிறந்த முறையாகும். பனிச்சறுக்கல்கள் கதையில் கதாசிரியர் இந்த முறையைக் கையாண்டுள்ளார். புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் கதாசிரியர் தான் ஆசிரியர் என்ற பாத்திரமாகவும், நங்கூரியில் தம்பி என்ற பாத்திரமாவும், உறவுகள் தொடர்கதையில் தனயன் என்ற பாத்திரமாகவும் நின்று கதைப்போக்கிற்கு உதவுகிறார்.
சிறுகதை முடிவு
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கதைகள் அதன் வளர்ச்சிக்கேற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளன. இப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்து கொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் சிந்தித்து இது தான் சரியான முடிவென்று அவர்கள் ஒப்புக் கொள்ளும் வகையிலும் கதைகளை ஆசிரியர் நிறைவு செய்துள்ளது சிறப்பானது. சிறுகதைகள் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்குக் குரு அரவிந்தனின் இந்தச் சிறுகதைகள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
முடிவுரை
புலம்பெயர் தமிழர் இலக்கியத்துக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு இன்றியமையாதது. இவருடைய சிறுகதைகள் இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகத் திகழ்கின்றன. இவர் கதைகளில் கையாளும் கதைமாந்தர்கள் நமது அன்றாட வாழ்க்கையில் காணப்படுகிறார்கள். பெண்களின் பாத்திரச் சித்தரிப்பை மிகவும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் . ஆசிரியர் புலம்பெயர் நாட்டுச் சூழல்கள் கதைக் களங்களாகும் போது அங்கு சித்தரிக்கப்படும் பெண் பாத்திரங்களை முன்னேற்றச் சிந்தனையுள்ளவர்களாகப் படைத்தாலும், அவர்கள் மனிதவிழுமியங்களின் பெறுமானத்தை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டுமெனக் கூறாமல் கூறும் பண்பு நியாயிக்கத்தக்கது.
‘நங்கூரி’ என்ற கதை தாயகத்தின் முக்கியமான வரலாற்று ஆவணமாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆக, சிறுகதை ஆக்கம் என்பது பொறுப்புள்ள சமுதாயப் பணி என்ற கருத்தை முன்னிறுத்தி எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தமது கதைகளால் வாசகர்களுக்கு உணர்வலைகளை ஏற்படுத்தும் அதேசமயம் இதுபோன்ற இன்னும் பல புதிய யுக்திகளைப் புகுத்தினால் மேலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. புலம்பெயர் நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இவருடைய படைப்புகள் ஓர் ஆவணமாக, தாயக வரலாற்றை எடுத்தியம்புவனவாகவும், இவரது ஆக்கங்கள் மேலும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தி முக்கிய பங்காற்றுவதில் துணை நிற்பனவாகவும் அமைந்திருக்கின்றன என்பதற்கு இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
உசாத்துணை நூல்கள் :
குரு அரவிந்தன் (2019 ), சதிவிரதன்.மணிமேகலைப் பிரசுரம்-சென்னை
Kurunovelstory.blogspot.com
கோகிலா மகேந்திரன் (2014) ,சிறுகதையென்பது. கலை இலக்கியக் கழக வெளியீடு.
மு.முருகேஷ் – குரு அரவிந்தனின் மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்.