கோண்டல் என்பது எமிலி பிரான்டே மற்றும் அவரது சகோதரி ஆன்னே ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கற்பனை உலகம். அவ்வுலகத்தை மையமாகக் கொண்டே அவர்கள் இருவரும் கவிதைகள் மற்றும் கதைகள் எழுதி வந்தனர். இவ்வுலகத்தை உருவாக்குவதற்கு முன் அவர்கள் தங்களின் மூத்த சகோதர சகோதரிகளான சார்லட் மற்றும் பிரான்வெல்லுடன் இணைந்து ‘ஆங்க்ரியா’ என்ற இராச்சியத்தை உருவாக்கி விளையாடி வந்தனர். அந்த இராச்சியத்தின் கதாநாயகர்களாக ‘டியூக் ஆப் வெல்லிங்டன் மற்றும் அவரது மகன்கள் இருந்தனர். இப்போது அந்த இராச்சியம் உருவான கதையைப் பார்ப்போமா.

ஒரு நாள் சகோதரன் பிரான்வெல்லுக்கு அவரது தந்தையான பாட்ரிக் பிரான்டே 12 மரத்தால் செய்யப்பட்ட வீரர்களைப் பரிசளித்தார். அதன்பிறகு தோன்றியதே இக்கற்பனை இராச்சியமென சார்லட் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். அந்த நாள் 5 ஜூன் 1826.

“பிரான்வெல் எங்களது அறைக்கு பொம்மைகள் இருந்த பெட்டியோடு வந்தான். நானும் எமிலியும் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தோம். நான் ஒரு பொம்மையைப் பிடுங்கி எடுத்து இது ‘டியூக் ஆப் வெல்லிங்டன்’ எனக் கூறி மகிழ்ந்து இனி இது என்னுடையது என்றேன். (வெல்லிங்டன் அப்போதைய ஐக்கிய நாடுகளின் பிரதம மந்திரி. அவர் புகழ் பெற்ற வாட்டர்லூ போரில் பிரெஞ்சுத் தலைவர் நெப்போலியன் போனபார்டேவைத் தோற்கடித்தவர்). நான் இதைச் சொன்னபோது எமிலியும் தன் பங்கிற்கு ஒன்றை எடுத்துக் கொண்டாள். மேலிருந்து இறங்கி வந்த ஆன்னேவும் ஒன்றை எடுத்தாள். மற்றனைத்தையும் விட என்னுடையது அழகாக இருந்தது. எமிலி எடுத்துக் கொண்டவனுக்கு பிரேதத் தோற்றம் இருந்ததால் ‘கிரேவி’ (Gravey) எனப் பெயரிட்டோம். ஆன்னே எடுத்துக்கொண்டதோ விசித்திரமான உருவம் கொண்ட பொம்மை. அதனை waiting boy என்றோம். பிரான்வெல் தனது பொம்மையை ‘போனபார்டே’ என்று அழைத்தான்.”

இருப்பினும் டிசம்பர் 1827 ஆம் ஆண்டில் தான் அவர்களின் கற்பனை உலகம் முழுமை பெற்றது. சார்லட்டின் ஆலோசனைப்படி அனைவரும் தங்களின் கற்பனைத் தீவு இராச்சியங்களுக்கு பெயர் சூட்டினர். சார்லட் ‘வெல்லிங்டன்’ என்றும் பிரான்வெல் ‘ஸ்னீக்கி’ (Sneaky) என்றும், எமிலி ‘பேரி’(Parry) என்றும் ஆன்னே ‘ராஸ்’(Ross) என்றும் பெயர் பெயரிட்டனர். இத்தீவு இராச்சியங்கள் அனைத்திற்கும் தலைநகராக ‘கிளாஸ்டவுண்’ (Glasstown) விளங்கும் எனவும் தீர்மானித்தனர். 

இந்நிகழ்வின்போது எமிலியின் வயது 9. அவளது தங்கை ஆன்னேவின் வயது 7. அதன்பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கதாநாயகனை மையமாகக் கொண்டு கதை புனையத் தொடங்கினர். சில வருடங்களிலேயே அவர்களின் கற்பனைப் புனைவுகள் அடுத்த நிலைக்கு நகர்ந்தன. ‘ஆங்க்ரியா’ எனும் கற்பனை இராச்சியம் உருவானது. தொடக்கத்தில் நால்வரும் இந்த இராச்சியத்தில் கவனம் செலுத்தினாலும் நாளடைவில் சார்லட்டும் பிரான்வெல்லும் இணைந்து தாங்கள் மட்டுமே செயல்படத் தொடங்கியதால் எமிலிக்கும் ஆன்னேவுக்கும் ஆர்வம் குறைந்தது. அதன் விளைவாக அவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே புதிய கற்பனை இராச்சியமான ‘கோண்டல். 

கிளாஸ்டவுணின் உருவாக்கத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோண்டல் உருவாக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோண்டல் இராச்சியத்தைப் பற்றி அவர்கள் எழுதி வைத்திருந்த முழுமையான கதைகள் தற்போது கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் கோண்டல் கவிதைகளின் அடிப்படையில் அந்நாடு பசிபிக் பெருங்கடலின் வடபகுதி நிலமான புதர்கள் நிறைந்த பனிபடர்ந்த தீவுப் பகுதியிலும் மற்றும் சீரான வெப்பமண்டலப் பகுதியான தென்பகுதித் தீவுகளிலும் பரவியிருந்ததாக அறிகிறோம். இக் கற்பனை நிலங்கள் அவர்கள் வசித்த ‘யார்க்ஷையர்’ நகரத்தை மையமாகக் கொண்டும் தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். 

சிறுபிள்ளைப் பருவத்தில் தொடங்கப்பட்ட இந்நீண்ட காலக்கற்பனை ஆழமானதாகவும், விரிவானதாகவும் பல கற்பனைக் கதாபாத்திரங்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாகவும் அமைந்துள்ளது. எனவேதான் ‘கோண்டலை’ ஊகப்புனைவின்(speculative fiction) தொடக்க நிலையாகக் கொண்டாடுகிறது ஆங்கில இலக்கியம். கோண்டல் புனைவுகளில் ‘கோதிக்’ இலக்கிய பாணி அதிகம் காணப்படுகின்றது. ‘கோதிக்’ என்பது மர்மம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் மற்றும் பயமுறுத்தும் சூழலை மையமாகக் கொண்ட ஒரு புனைவு வகை. இவ்வகைப் படைப்புகள் பெரும்பாலும் கைவிடப்பட்ட கோட்டைகள், போன்றவற்றை மையமாகக் கொண்டு திகிலையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமையும்.

 எமிலி பாடிய கோண்டல் வகைக் கவிதைகள் மொத்தம் 44 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை அந்த இராச்சியத்தில் நடந்த போர் மற்றும் அரசன் உட்பட பிற கதா பாத்திரங்களின் குரலாகவும் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் A.G.A எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் ‘அகாதா ஜெரால்டின் அல்மேடா’ என்னும் பெயருடைய பல காதலர்களைக் கொண்ட கற்பனைக் கோண்டல் அரசியின் வாழ்வில் நிகழ்ந்தவைகளை மையமாகக் கொண்டே அமைகின்றன. A.G.A அரசியின் குரலாக சுமார் பதினொன்று கோண்டல் கவிதைகளை எமிலி பாடியுள்ளார். இந்த அரசியின் காதலர்களுள் முக்கியமானவர்களாக எமிலி குறிப்பிடுவது எல்பேயின் அலெக்ஸாண்டர், ஃபெர்னான்டோ டி சமாரா, ஆஸ்பின் கோட்டையின் ஆல்பிரட் சிடோனியா ஆகியோர். இவர்கள் அனைவரும் இறந்து விடுகின்றனர். கோண்டல் கதையின்படி கடைசியில் அந்த அரசியும் கொல்லப் படுகிறாள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்