
பெரும்பாலும் கவிஞனாகவே அறியப்பட்ட பாரதி, பெருமளவு எழுதியது என்னவோ கட்டுரைகளே. அதிலும் 1905-1907 காலப்பகுதியில் அவனது கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியல் கட்டுரைகள் என வரையறுக்கப்படலாம். இன்னும் சில சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றும் கூறப்படலாம்.
1905 முதல், அவன் தமிழ் நாட்டை விட்டு அகன்று, (1907 ஆகஸ்ட் நடுப்பகுதியில்), புதுவையில் அடைக்கலம் புகும் வரை கிட்டத்தட்ட 454 விடயங்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதியுள்ளான். 1904இல் எழுதப்பட்ட அவனது ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதையும் சேர்த்து கூட்டி பார்த்தாலும் ஜுலை 1907 வரை அவன் எழுதிய கவிதைகளின் மொத்த எண்ணிக்கை 28 அல்லது 29 ஐ தாண்டாது.
ஆக, மிகுதி 415உம் கட்டுரைகளாகவே தேறும்.
ஸி.எஸ்.சுப்ரமணியம் எழுதுவார்:
“1906 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரசில் இருந்து திரும்பி வந்தவுடன் பாரதி தீவிர அரசியலில் ஈடுபட்டான்”
(பாரதி தரிசனம்: 2ம் பாகம்: பக்கம் XV)
இருக்கலாம். பாரதி, அரசியல் தளத்திலேயே இயங்கிய ஒருவன். அவ்வப்போது இலக்கிய சோலையினுள் தரித்து நின்று கவிதைகள் ஆற்ற முனைந்தான் என்பதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இப்படி கூறுவதற்கூடு, அவனது கவிதைகளை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாகாது. கவிதைகளில், சிலர் கூற முனைவது போல, வாழ்வை சாறு பிழிந்து கொடுக்க முற்பட்டான் என கூறலாம்.
பிரிட்டிஷாரின் கொடூர ஒடுக்குமுறையும் அது கைக்கொண்ட பயங்கரமான பயங்கரவாதத்தையும் கூடவே, ஓரளவில் மறைமுகமாக அதனை ஆதரித்து நின்ற மிதவாத சிந்தனைகளையும், இவற்றுடன் இந்தியாவின் அன்றைய பின்னடைந்த உற்பத்தி-சமூக நிலைமையினையும் ஒன்று சேர்த்து பார்த்தால் பாரதி, ஒரு கட்டத்தில் தனது தலையாய வெளிப்பாட்டு ஊடகமாக, கவிதைக்கு வந்து சேர்ந்தான் என கூறுவதில் ஆச்சர்யம் இல்லை எனலாம்.
பாரதிக்கு, வாரண்ட் பிறப்பித்து, ‘இந்தியா’ பத்திரிகைக்கு மூடுவிழா நிகழ்த்தி, அவனையும் புதுவைக்கு தப்பியோட செய்து, பின்னர் திலகர்-வ.உ.சி போன்ற மாபெரும் மனிதர்களை அந்தமானின் கொடுஞ்சிறைக்கு அனுப்பி வைத்தது முதல், பின்னாளில் ஜாலியன் வாலா பாக் போன்ற கொலைகளை நடத்தியமை அல்லது பகத்சிங்கை தூக்கில் போட்டமை உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பிரிட்டிஷாரின் கோர முகத்தையும், அதற்கு அவ்வப்போது துணைபோன ஒரு மிதவாத அரசியலையும் (கோக்லே முதல் காந்தி வரை) மேலெழுகையில் இவன் கவிதையை, இப்படி தேர்வது தவிர்க்க முடியாததாகின்றது.
‘கருக்க திருவுளமோ’ அல்லது ‘மூலத்தை காட்டவோ’ என்றும் அவன் பாட நேர்ந்தது இச்சூழல் காரணமாகவே. மொத்தத்தில், கொடூர பிரிட்டிஷாரை எதிர் கொண்டு, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் இறுக்கமானதோர் கட்சி அமைப்பு அற்ற சூழ்நிலையில், அவன் அன்றைய போதாமைகளை ஆழமாகவே உணர்ந்தான்.
இதன் அடிப்படையிலேயே, அவன், ‘வையத் தலைமை கொள்’ என்ற கருத்தாக்கத்தினை நோக்கி மெதுவாக வந்து சேர்கின்றான். அதாவது, வெறுமனே ‘உணர்ச்சி பிழம்பானவன்’ என்பதை தாண்டி, சமயங்களில், சாணக்கிய நகர்வுகளையும் மேற்கொள்ளும் முதிர்ந்த அரசியல் ஞானியாகவும் தன்னைப் புடம் போட்டுக் கொள்வது அன்றைய காலத்தின் தேவையாகின்றது. ஒருபுறத்தில், திலகர் அரசியலின் போதாமைகள். (இயல்பானவை). மறுபுறத்தில் காந்தியின் ‘வழ வழா’ அரசியல். திலகர்-வ.உ.சி ஆகியோரின் தலைமைகள் அப்புறப்படுத்த இந்த ‘வழ வழா’ அரசியல் (பாரதியின் கூற்று) காந்தியின் தலைமையில் மேலோங்க இவன் கவிதைக்குள் ஆழ வேண்டிய நிர்பந்தம்.
புதிய ராகத்தை பாட விழைந்த இவன், அனைத்துமே இழந்து போன ஓர் நிலையில், அரசியலின் போதாமைகளை ஆழ உணர்ந்து, மேலே கூறியபடி ‘வைய தலைமை கொள்’ எனும் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்ந்த பொழுது, தொடர்ந்தும் இவன் ஓர் ‘உணர்ச்சி பிழம்பாக’ நிற்க மாட்டாமல், தன்னை கட்டுப்படுத்தியும், தன்னை மறைத்தலை கைகொள்வதும் இயல்பானதாகின்றது. இதன் காரணமாகவே, ‘மூலத்தினை பாடவோ’ என்ற அவனது அடிகளும் பிறப்பெடுப்பதாய் உள்ளது.
அதாவது அவனது நெஞ்சக்கனல், அடி ஆழத்தில் இடைவிடாது கனன்று நின்ற போதிலும், முகத்தில் வேறொரு பாவனையை அவன் ஏந்த, காலமும் சமூகமும் அவனை நிர்பந்திக்கின்றது.
இதனாலேயே, பாரதியை பற்றி ஓர் ஒட்டுமொத்தமான முடிவுக்கு வரும் முன்னர், அவன் இயல்பாக (மேற்படி கட்டுப்பாடுகள் இன்றி) பாடிய காலமான 1906-1907, மற்றும் அவனது செயற்பாடுகள் எமது மிகுந்த அக்கறையை கோருகின்றன. அதாவது, மூலத்தை காட்டாது மறைத்தலையும், வைய தலைமை கொள் என்று படிமப்படுத்தலையும், காளி ரஷ்யாவில் கடை கண் வைத்தாள் என்று அவன் கூறுவதையும், முற்றாய் தெளிவுற விளங்க, அவனது ஆரம்ப கால எழுத்துக்களை நுணித்து நோக்காமல் நாம் ஓர் முடிவுக்கு வர இயலாதிருக்கின்றது.
2
தனது 22-23ஆம் வயதில் சுப்ரமணிய ஐயரால் காங்கிரஸ் மாநாட்டுக்கு அழைத்து செல்லப்படும் இவன், அங்கே முகிழ்த்த தீவிரவாத அலைகளில் சங்கமிக்க துணிபவனாகின்றான். (சுப்ரமணிய ஐயரில் இருந்து வேறுபட்டு). நௌரோஜி, கோக்லே போன்ற பெரியாரின் பெயர்களை நிராகரித்து, திலகர்-விபின் சந்திரபாலர்- ஆகியோரை இவன் தலைவர்களாக கொள்வது ‘அக்கட்டத்தில்’ இயல்பாகின்றது.
அக்காலப்பகுதியிலேயே, காங்கிரஸ் கட்சியானது, மிதவாதிகள் எனவும் புதிய கட்சியினர் எனவும் பிரிகின்றது. புதிய கட்சியின் சென்னை பிரதிநிதியாக இவ்விளைஞன் நியமிக்கப்படுகின்றான். (தன் 24ஆம் வயதில்). பிபின் சந்திர பாலரை சென்னைக்கு அழைத்து வந்த குழுவில், இவ் இளைஞனான பாரதியாரும், அவருடன் சக்கரை செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, துரைசாமி ஐயர் மற்றும் ஹரி சர்வோத்தமராவ் ஆகிய இளைஞர்கள் பங்காற்றினர் என சுப்ரமணியம் அவர்கள் எழுதுவார். (பாரதி தரிசனம்: பாகம் 2: பக்கம் XV).
3
இருந்தும், இவை அவனது அரசியலின் ஒரு துளியே என்பதனை அவனது எழுத்துக்கள் புலப்படுத்துவதாய் உள்ளன. இந்தியாவின் சுதேசியமானது, இந்திய தொழிலாளியுடன் இணைய வேண்டும் என இவன் பிரார்த்திப்பதையே இவனது அரசியலும் கவிதையும் வெளிப்படுத்தி நின்றதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்நகர்வினை திலகர் போன்றோரின் அரசியல் கூட அன்று எட்டி பிடித்ததாக இல்லை. (காந்தி முன்னெடுத்த அரசியலை பற்றி கூறவே வேண்டிய அவசியமில்லை).
இருந்தும், காந்தி-திலகர் என்பவர்களில் இருந்து, மாறுபட்ட இத்தகைய அரசியலே பிரிட்டிஷாரின் ஆழ்ந்த வெறுப்புக்கு அவனை ஆளாக்கியிருக்க வேண்டும். பிரிட்டிஷாரின் பார்வையில் ரஷ்யாவுடன் கூட்டு சேர்வது அல்லது தொழிலாளரின் பாத்திரத்தை, சுதேச இயக்கத்துடன் இணைப்பது அல்லது அங்கீகரிப்பது என்பது சிறிதும் ஒத்து வராததாகின்றது. இதனாலேயே, காந்தியை அவர்கள் மறைமுகமாக (தந்ரோபாயமாக) முன்னிறுத்தியதற்கு எதிர்மறையாக இவன் போன்றோர் முன்னெடுக்க முயன்ற அரசியலை அவர்கள் வேருடன் களையத் தொடங்கினர்.
இத்தகைய ஒரு சூறாவளியை, இவ் இளைஞன் தனது 23-24ம் வயதில் (ஒப்பீட்டளவில், தனித்து) எதிர்கொள்ள நேர்ந்தது என்பதும் அவனது மொத்த பங்களிப்பை காட்டுவதாக உள்ளது.
4
சுருக்கமாக கூறினால், பாரதி, தன் இளம் வயதில், (23-24ஆம் வயதில்) பின்வரும் விடயங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவை குறித்து மக்களுக்கு கூற தொடங்கினான் எனலாம்:
i. தொழிலாளர்கள்-அவர்களது வேலை நிறுத்தங்கள் தொடர்பான இவ் இளைஞனின் அவதானிப்பு. (முக்கியமாக இவற்றின் வரலாற்று சிறப்புகளை அறிதல்).
ii. சோசலி~ சித்தாந்தம் தொடர்பிலான அவனது பார்வை.
iii. ரஷ்யா தொடர்பிலான அவனது நிலைப்பாடு.
இவை மூன்றுமே, ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தன என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், பிரிட்டிஷாரின் பார்வையில் இவை தீண்டத்தகாத விடயங்களாகின.
ரஷ்யா:
‘காளி கடைக்கண் வைத்தாள்’ என இவன் பின்னாளில் பாட நேர்ந்தாலும், இதற்கான, அழுத்தமான நடைமுறைகளை அவனது இள வயது காட்டி நின்றது எனலாம்.
மனுகுல வரலாற்றில், ரஷ்யாவில் நடக்கும் மாற்றங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை உள்வாங்கும் இவ் இளைஞன், அம்மாற்றங்களை போற்ற தயங்கவில்லை என்பதனை அவனது அன்றைய எழுத்துக்கள் புலப்படுத்துவதாயுள்ளன.
‘ரஷ்யாவில் ராஜாங்க புரட்சியின் சின்னங்கள்’ (30.06.1906) எனும் தனது கட்டுரையில், முன்னரே கூறியபடி, பொது சொத்துக்கள் தாக்கப்படுவதையும் நிலசேனைகாரர்களும், ராணுவமும் இணைந்து கலகம் புரிவதையும், தொழிலாளி கூட்டங்கள் இவர்களுடன் இணைந்து கொள்வதையும், வேலை நிறுத்தங்கள் ஆங்காங்கே தோன்றி விடுவதையும், இவன் மனதார வாழ்த்தி இவற்றை ‘புரட்சிக்குரிய சின்னங்கள்’ என்று வரையறுக்கின்றான்.
இதனை போன்றே, ஒரு மாதம் கழிந்த நிலையில் (28.07.1906) அவன் ரஷ்யா பொறுத்து பின்வரும் பொருள்பட எழுதுகின்றான்:
“அத்தேசத்தார் சிந்தியிருக்கும் ரத்தத்திற்கு அளவில்லை. அவர்கள் பட்டிருக்கும் பாட்டையெல்லாம் நினைக்கும் போது கற்சிலைக்கும் கூட நெஞ்சமுருகும்… நமது சிங்காதனம் சிதறி போய் விடும் என ருஷ்ய சக்கரவர்த்தி ஏற்பாடு செய்த ‘டூமா’ என்ற பார்ளிமெண்ட்… இப்போது கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மீது அரசேறும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரிகளும் நெடுங்காலம் தரித்திருக்கமாட்டார்கள். இவர்களின் இறுதி காலம் நெருங்கி விட்டதென்பதற்கு தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன…”.
இவை, இவ் இளைஞனது மன ஆர்ப்பரிப்பை தெளிவுற எடுத்துக்காட்டும் ஒரு பகுதியாகும். இதுபோலவே, மேலும் இரு மாதங்கள் கழிந்த நிலையில், ருஷ்ய ஜெனரல் ‘ட்ரேபாவின்’ மரணம் குறித்து பின்வருமாறு தன வாசகர்களுக்கு அறிவிக்கின்றான்:
“ருஷ்யாவில் ஜெனரல் ட்ரேபாவ் என்ற பாதகன் இறந்து போய்விட்டான். ஜன சுதந்திரங்களை காலின் கீழ் வைத்து தேய்த்துவிட வேண்டும் என்ற கெட்ட எண்ணம் படைத்த மகா பாதக உத்தியோகத்தர்களில் முதன்மைப்பட்ட ஜெனரல் ட்ரேபாவ் இறந்து போய்விட்டதை (ஏற்கனவே) பிரசுரித்திருந்தோம்…ஆனால், இவ் அசுரன் சிறிதேனும் நடுங்காத நெஞ்சுரம் கொண்டிருந்தமை ஆச்சர்யமான வி~யம்… இப்பாவி தனது சொந்த உயிரையும், ஒரு திரணத்திற்கு சமனாகவே பாவித்து வந்தான்… ஒருமுறை ஒரு வாலிப கன்னிகை… பழிவாங்க… இவனை 06 முறை சுட்டும் … இவ் வஞ்சகன்… (தப்பிவிட்டான்…). இவ் அசுரன்… (அதன் பிறகு) அவளை கைது செய்து மிக கொடுமையாக வதை செய்து கொன்று விட்டான். இவன் மரணித்தான் என்று கேள்வியுற்ற உடனே உலகம் முழுவதிலும் உள்ள சுயாதீன பிரியர்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி பூத்திருக்கும்…” (22.09.1906).
இது அவனது மனப்பூரிப்பினை மாத்திரம் எமக்கு எடுத்து காட்டவில்லை. ஆனால், ஓர் சாத்வீக நிலைப்பாட்டை அல்லது அகிம்சையை போற்றும் காந்திய நிலைப்பாட்டில் இருந்து இவன் எவ்வகையில் மாறுபட்டிருந்தான் என்ற ஒரு நிலைப்பாட்டை, இவ்வரிகள் காட்டுவதாய் இருக்கின்றன. (வன்செயல்களை அங்கீகரிக்கும் நிலையில் இருக்கின்றன).
பின்னாளில், அவன் பின்வருமாறு எழுதுபவனானான்:
“நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சியின் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக…”
(பாரதி தரிசனம்: பாகம் -1: பக்கம் 272).
இங்கே, ‘நமது’ என்ற வார்த்தை பிரயோகம் எமது கவனத்துக்குரியது. அதாவது, தனது நிலைப்பாட்டினை, இதை விட தெளிவாக கூற முடியாது எனலாம். இவற்றுடன் இணைந்தாற் போல் ‘வேலை நிறுத்தம்’ தொடர்பாக அவன் தனது 24 வயதில் எழுதியதையும் நினைத்து பார்த்தல் பயன்தரக்கூடியது.
தொழிலாளிகள் - வேலை நிறுத்தங்கள்:
‘ஈஸ்ட்-இந்தியா இரும்பு பாதையில் இந்திய வேலை ஆட்கள் தொழில் நிறுத்தி இருத்தல்’ என்ற தலைப்பின் கீழ், 28.07.1906 இல் அவன் எழுதிய கட்டுரையில் இவ்வேலை நிறுத்தத்தை காட்டிக் கொடுக்கும் முகமாக ஏனைய கம்பனி வேலையாட்கள் வரவழைக்கப்படுவதும் செயற்படுவதும் சரியாகாது என்ற தோரணையில் பின்வருமாறு அவன் எழுதுகின்றான்:
“மற்ற கம்பனி வேலையாட்கள் அற்ப ஆசைப்பட்டு போவது அத்தனை யுக்தமாக மாட்டாது”.
“இதுவரை தொழில் நிறுத்தாதிருப்பவர்கள் கூட தொழிலை நிறுத்தி விட வேண்டியது கடமையென விபின் சந்திரபாலர் உபதேசித்துள்ளார்”
“சென்னையில் இருந்து பல வாலிபர்கள் (அங்கே, வேலை செய்யும் பொருட்டு) போயிருப்பது… சுதேச துரோக செய்கை என்பதாகவே… நாம்…கருதுகின்றோம்…”
இச்செய்திகளில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவப்படுகின்றன.
ஒன்று, குறித்த காலக்கட்டத்தில், தொழிலாளர்கள் தொடர்பில் அவனுக்கு தொடர்ச்சியாக இருக்கும் அவதானமிக்க ஈடுபாடு.
இரண்டு, விபின் சந்திரபாலர் அன்று வங்காள தொழிலாளர் இயக்கங்களில் ஈடுபட்டதே, அவரை இவர்கள் தென்னிந்தியாவிற்கு வரவழைப்பதன் பின்னணி என்ற ஓர் சாத்தியப்பாடு.
அடுத்து, இவன், சுதேசியத்தை, தனித்து அரங்கேற்றாமல் அதனை இந்தியாவின் தொழிலாளர் இயக்கத்துடன் பின்னி பிணைப்பதை மேற்கொள்ளும் அரசியல்.
இதுபோலவே, ‘பம்பாயில் தபால்காரர் தொழில் நிறுத்தம்’ என்ற தலைப்பின் கீழ் 18.08.1906 இல் இவ் இளைஞன் பின்வருமாறு எழுதுகின்றான்.
“முதலாளிகள் தொழிலாளிகளின் லாபத்தையும் சுகத்தையும் சிறிதேனும் பொருட்படுத்தாமல் கழுகுபோல் தமது லாபத்தையே கருதி வேலையாட்களை வற்றடிக்கும் முறைமை இந்தியாவிலே அதிகரித்து விட்டது…”
“தொழிலாளியை கஞ்சிக்கு பறக்கவிட்டு விட்டு தனது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் ‘கொள்ளைக்காரரே’ ஒழிய வேறு ஒருவரில்லை…”.
“முதலாளிகளிடமிருந்து தனது குறைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாகுமானால் மேல்நாட்டு தொழிலாளிகள் கூட்டம் கூடி மொத்தமாக தொழில்நிறுத்தி விடுவது வழக்கம். ‘அதுபோலவே’ நமது தொழிலாளிகளும் செய்ய தலைப்பட்டு விட்டனர்…”
“பம்பாய் தபால் சேவகர்களுக்கும் பெங்காளத்தில் ரயில் நிறுத்தம் செய்துள்ள ரெயில்வேகாரர்களுக்கும் பல விதங்களில் ஒற்றுமை இருக்கின்றது…”.
“பெங்காளத்து ரயில்வே தொழில் நிறுத்தம் சுதேசிய முயற்சி சம்பந்தமுடையதாக கருதப்பட்டது. பம்பாயில் அச் சந்தேகத்திற்கு இடமில்லை…”
அதாவது, முதலாளி-தொழிலாளி எனும் பிரிவை இவன் அழுத்தமாக கோடிட முயல்வது அன்றைய தினத்தில், புதிய அரசியலாகின்றது.
மேலும், 08.09.1906 தலையங்கத்தில் இவ் இளைஞன் பின்வருமாறு வலியுறுத்துகின்றான்:
“ஈஸ்ட்-இண்டியா ரயில்வே வேலையாட்கள் இத்தனை நாள் தீரத்தன்மையுடன் நியாயம் நடக்கும் வரை வணங்க மாட்டோம் என நிற்பது மிகவும் சந்தோசத்திற்கு இடமாயிருக்கின்றது…”.
வேறு வார்த்தையில் கூறுவதானால், ‘பிரம்தேவன் கலையிங்கு நீரே’ என பின்நாளில் அவன் தொழிலாளியை போற்றி பாடியதன் முழு அர்த்தத்தையும் அவனது இந்த 23-24 வயது எழுத்துக்களே சரிவர வெளிகொணர்கின்றன. மேலும், உள்நாட்டு மற்றும் ரஷ்ய தொழிலாளிகளை இவன் தனது நுணுக்கமான பார்வையின் கீழ் கொணர்ந்தது போலவே சர்வதேசிய விவகாரங்களிலும்-முக்கியமாக சோ~லிச விவகாரங்களிலும் இவன் தன் இள வயதில், ஆழ்ந்த அக்கறை செலுத்துபவனாக இருந்திருக்கின்றான். அவனது ‘ஜப்பானில் சோஸலிஸ்ட் கட்சியார்’ எனும் தனது கட்டுரையில், (06.10.1906) இவ் இளைஞன், ஜப்பானின் சோஸலிசக் கட்சியினை அவதானித்து எழுதிய குறிப்பு காணக்கிட்டுகின்றது.
“இவர்கள் முதலாளிகளுக்கு விரோதமாகவும் மன்றாட தொடங்கி விட்டார்கள்… தொழில் நிறுத்தங்களை முதலியன ஏற்பாடு செய்து வருகின்றார்கள்” இக் குறிப்பு, அவனது பார்வை விசாலத்தை காட்டுவதாகவே உள்ளது.
இவ் அனைத்தையும் ஆழ நோக்கும் போது, ‘காளி கடைக் கண் வைத்தாள்’ என அவன் பின்னாளில் எழுதியது தற்செயலான, வரிகள் அல்ல என்பது தெளிவாகின்றது. இவ்வரிகள், எப்படி ஒரு தர்க்கபூர்வ வளர்ச்சியினை எட்டி பிடித்தனவோ, அதே போன்று அவனை புதுவைக்கு தப்பி ஓட செய்வதிலும் பிரிட்டிஷாரின் கை, அல்லது அவர்களது பயங்கரவாதம் காரணமாக அமைந்தது என்பதனையும் கூறியே ஆக வேண்டும்.
உசாத்துணை நூல்கள்:
1. சீனி.விஸ்வநாதன். காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி எழுத்துக்கள். தொகுப்பு 2, 3.
2. இளசை மனியன்-ஸி.எஸ்.சுப்ரமணியம் - பாரதி தரிசனம்- பாகம் 1 மற்றும் 2
3. சீனி.விஸ்வநாதன்: கால வரிசையில் பாரதி பாடல்கள்.
(தொடரும்)



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









