கம்பராமாயணத்தில் பாவிக அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.
பாவிக அணி
பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர் நிலைச் செய்யுள் திறந்துக் கவியால் கருதி செய்யப்படுவதொரு பாங்கு ஆகும்..அது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு செய்யுளால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது ஆகும்.
"பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
. பொறையில் சிறந்த கவசம் இல்லை
வாய்மையிற் கடியதோர் வாளி இல்லை"
(தண்டியலங்காரம் 64)
பிறர் மனைவியை விழைந்தவர் கிளையொடும் கெடுவர் என்று கம்பராமாயணத்திலிருந்து அறியலாம்.
திருக்குறளில் பிறன் இல் விழையாமை
பிறன் இல் விழைவினால் வரும் தீமைகளைச் சொல்லி அப்படிப்பட்ட தீமைகளைச் செய்யாதே என்று வள்ளுவர் பிறனில் விழையாமை என்று தனி அதிகாரமே வகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதளவு கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறர் மனைவியை விரும்புதல், பிறர் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயல்களைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவித பயனும் இல்லை. பிற எல்லா பெருமைகளும் பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன.