சிறுகதை: அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை -தேவகாந்தன்-
*ஓவியம் - AI
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை.
அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன.
அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது.
நடந்தது இதுதான்.
கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அனைவரும். ஜுன் கடைசியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறையென ஒரு விளம்பரத்தைக் கண்டு ஞாபகமாகும் கணநாதன், குதூகலத்தில் கிரீச்சிடுகிறான். ‘என்ன, அவ்வளவு சந்தோஷம்!’ என்றபடி அவனைப் பார்த்து சிரிக்கிறார் தோமா. ‘மிஷேலுக்கு இந்தமுறை மொன்றியலுக்குப் போகிற திட்டமிருக்கிறது. உனக்கு ஸ்கார்பரோதான். உன் ஆங்கில வகுப்பு கட்டாயம். அது முடிய நேரமிருக்குமென்றால், பக்கத்தில்தானே இருக்கிறது மிலிகன் பார்க், போய் ஏலுமானவரை சுற்றிக்கொண்டே இரு.’
அவர் வேடிக்கையாகத்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆனாலும் கணநாதன் மனம் தாங்குப்பட்டுப் போனான். பெறா மகன் – வளர்ப்புத் தந்தை ஆகிய உறவுகளுக்கிடையில் எப்போதாகிலும் ஒரு விரிசலின் கணம் சம்பவிக்கக்கூடுமோ?