'சின்னம்மாவின் 'அவர்' - - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.
வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா, இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் தடவையாவது தனது சின்னம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தனது கணவனிடம் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட்டாள்.
சிவா தனது குடும்பத்துடன் நீண்ட நாளைக்குப் பின் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறான். தனது இளவயதில் சின்னம்மா தன்னை அன்புடன் பார்த்துக் கொண்டதை, கலா பல தடவைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தங்கள் தகப்பன் லண்டனுக்கு வந்த காலத்தில் தங்களுடன் வாழ்ந்த தனது சின்னம்மா கலாவின் இளவயது ஞாபகங்களுடன் இணைந்திருப்பது சிவாவுக்குத் தெரியும்.
கலாவின் தாய் ஒரு ஆசிரியை, அப்போது தங்களைத் தங்கள் சின்னம்மா தனது குழந்தைகள் மாதிரிப் பராமரித்த விடயத்தைக் கலா சிவாவுக்குச் சொல்லும்போது அவள் கண்களின் நீர் கட்டும்.
கலா, இலங்கையின் போர் காலத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண வாழ்க்கைமுறை தெரியாத அசாதாரண வாழக்கையுடன் வளர்ந்த தமிழ்க் குழந்தைகளில் ஒருத்தி.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்த கால கட்டமது.போருக்காகப் பல இளவயதுத் தமிழ்க்; குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடப்பட்ட கொடிய நேரமது. உலகம் புரியாத வயதில், எதிரியுடன் போராட துப்பாக்கி தூக்கி இறப்பதை விட அன்னிய நாட்டில் கடினவேலை செய்து பிழைக்க ஓடிவந்தவர்கள் பலர்.