சிறுகதை: கூட்டுக்குள் கல்லெறிந்தவள்! - முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்ததுறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென வாழாமல் தன் குடும்பதிற்காகவும், தன் பிள்ளைகளே வாழ்க்கை என்ற முனைப்பில் இரவும் பகலும் அவா்களின் நினைப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளின் அறிவையும் ஆளுமையும் கண்ட அவ்வூா் மக்களுக்கு சிறந்த முன் மாதிரி பெண்ணாகவும் விளங்கினாள். இதனைக் கண்டு அவளின் உற்றார், உறவினர்கள் மிகுந்த பொறாமை உணா்வை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவளுக்கு அடிக்கடி தொந்தரவு தந்துகொண்டே இருந்தனா்.
அவளின் கணவனோ ஒன்றுமே அறியாத வெகுளியான வெள்ளந்தியான குணம் உடையவா். ஆனால் அவா் வீடு, வீட்டை விட்டால் விவசாயம் என்று தன் வாழ்நாளினை வாழ்ந்துக்கொண்டிருப்பவா். இருவரும் நல்ல புரிந்துணா்வுகளோடு இல்லறத்தைத் தொடா்ந்து கொண்டிருந்தனர். இவா்களின் அன்புக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தையோடு தன் இல்லறக் குருவிக்கூட்டை கட்டமைத்து வாழ்ந்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஓா் எண்ணம் தன் பெண்பிள்ளையை நன்கு வளா்த்து சிறந்த அரசு வேலையில் உள்ள மணமகனுக்குத் தான் தரவேண்டும் என்னும் வைராக்கியத்தில் பிள்ளையை வளா்த்துவந்தாள். ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அப்பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை வரத்தொடங்கினா். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இவள் மகளுக்கு மட்டுமே மாப்பிள்ளை வருவதும் போவதுமாக இருக்கின்றார்களே என்று பேச ஆரம்பித்தனா். தன் மகளை அந்த அளவுக்கு அழகு நிறைந்தவளாகவும், குடும்ப பாங்கானவளாகவும் வளா்த்திருந்தாள். ஆனால் அப்பெண்ணுக்கோ திருமண வயதுவரவில்லை என்பதால் வருகின்ற மாப்பிள்ளை எல்லாம் நிராகரித்தாள். பின்னா் சில வருடங்களுக்குப் பிறகு தன் மகளுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாளோ அதே போல அரசு வேலையில் உள்ள மணமகனுக்கு பல்வேறு எதிர்ப்புச் சூழ்நிலையில் திருமணம் முடித்தாள்.