ஆய்வு: வெறியாடலும்,நடுகல் வழிபாடும்! - முனைவர் க. செந்தில் குமார் -
முன்னுரை
பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் ஒன்றாக அமைந்தது முருக வழிபாடு குறிஞ்சி நில மக்களின் குல தெய்வமாக விளங்கியது. தலைவியானவள் காதலால் இன்புற்று தலைவன் பிரிந்த பிறகு துன்புற்று வாடும் போது வேலனை அழைத்து வெறியாடுட்டு நிகழ்த்தியமையும், பிறகு தலைவிக்கு நோய் தீர்ந்தமையும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வெறியாட்டில் முருகனுக்குப் பொருட்கள் படைத்தும், வெறியாட்டுக்களம், பண்ணமைந்த பாடல்கள் பாடியும், செவ்வரளிப் பூக்கள் சூட்டி வழிபாடு செய்தமையை எடுத்துரைக்கின்றது.
வழிபாடு
வழிபாடு என்னும் சொல் வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. பூசனை என்பது தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயலாகும். வழிபாடு என்பது வணக்கம், பூசை, வழக்கம் எனும் பொருள்படும் இறைவனைத் தேவைக்காக நாடுதலும், நன்றியுணர்வால் அணுகுவதும் உண்டு. மனிதனின் நோய்களைத் தீர்க்கவும் வழிபாடானது நிகழ்த்தப்பட்டது. மனிதன் இன்புற்று வாழவும், நீண்ட ஆயுளுக்காகவும் இறைவனை வழிபட்டுனர். மிகப் பழங்காலத்திலிருந்தே வழிபாடு என்பது இருந்தது என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பண்டைக் காலத்தில் மக்கள் மன்றங்களிலும், மரங்களிலும், கற்களிலும் தெய்வம் உறைந்ததாக நம்பி வழிபட்டனர் என்பதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. முருகன் வழிபாடு சங்க காலத்தில் இருந்தமையை மெய்ப்பிக்கும் பொருட்டு நக்கீரனார்
“அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் முருக“ 1
என்பதன் வாயிலாக இவர் காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு என்பது மரபாகப் போற்றப்படுகிறது. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வேல் போர்க் கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு விளங்கியதைக் காணமுடிகிறது.